Post Top Ad

கார்கில்ஸ் கவனம் ! கவனம் !

ஒரு முறை சிலாபம் பகுதியிலுள்ள ஊர் ஒன்றிலிருக்கும் கட்சி தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க சென்றிருந்த போது, வகுப்பு முடிந்த பின் ஊரின் மக்கள் சிலருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊர் பிரதான நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. ஊரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கொழும்பில் தொழில் செய்பவர்கள். இவர்கள் கொழும்புக்கு பயணிக்க இருக்கும் ஒரே வழியும் இலகுவானவழியும் புகையிரதம் தான். ஆனால் ஊரிலிருந்து புகையிரத நிலையத்திற்கு வருவதற்கு 5 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும். வேலை முடிந்த பின்னும் வீடு செல்ல 5 கிலோமீற்றர் என தினமும் வேலைக்கு செல்பவர்கள் 10 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும். அலுவலக பயண நேரங்களில் கொழும்பு பகுதிகளில் புகையிரத பயணம் குறித்து கொழும்பில் வசிப்பவர்களிடம் கேட்டால் தெரியும். இதில் தினமும் 10 கிலோமீற்றர் நடை வேறு என்றால் வாழ்;க்கையே வெறுத்து விடும். அந்த ஊர்காரர்ளுக்கு தொழில் செய்ய வேண்டும் என்றால் கொழும்பு வந்தே ஆகவேண்டும். விவசாயம் செய்வதற்கு கூட வசதிகள் இல்லை. பலவருடங்களுக்கு முன் ஊரிற்கும் புகையிரத நிலையத்திற்கும்  நடைபெற்ற அரச போக்குவரத்து சேவை ஏதோ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது. அன்றிலிருந்து பேரூந்து சேவையை கோரி 5 வருடங்களுக்கு மேலாக போராடி வந்திருக்கின்றார்கள். போராட்டங்களை வழிநடத்த ஒரு கமிட்டி இருந்தது. விடுமுறை நாட்களில் ஆர்ப்பாட்டம் செய்தல், மகஜர் கையளித்தல், வீதி மறியல் என எல்லா விதமாகவும் போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். நான் சென்ற அந்த நாட்களில் பசில் ராசபக்சவின் பொருளாதார அமைச்சின் அலுவலகம் ஒன்று ஊரை அண்மித்த பகுதியில் திறப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த அலுவலகத்தை மையபடுத்தி போராட்டங்களை நடத்த போவதாகவும் கூடிய சீக்கிரம் நெடுநாள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என்றும் ஊர்மக்கள் அன்று என்னிடம் நம்பிக்கையுடன் கூறினார்கள். அவர்களுக்கு வாழ்த்தையும் போராட்டங்களில் முன்னிலை வகித்த நான் அரசியல் வகுப்பு நடத்திய கட்சி தோழர்களுக்கு சில ஆலோசனைகளையும் கூறிவிட்டு திரும்பி விட்டேன். அதன் பிறகு நேரச்சிக்கல் காரணமாக அமைப்பு ரீதியாக எனக்கு அந்த பகுதிகளில் இருந்த பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டதால், என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை.

சுமார் ஆறு மாதங்களின் பின் புத்தளம் பகுதியில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக பிரச்சார பயணம் ஒன்றை நடத்தி விட்டு  கொழும்பிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது, மேலே குறிப்பிட்ட ஊரில் இருக்கும் கட்சி கமிட்டிக்கு வரும் வழியில் கூடங்குளம் அணுஉலை ஆபத்துக்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தி விட்டு வர முடியுமா என்று கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பேரூந்து போராட்டத்திற்கு என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் உடனே சம்மதம் சொல்லி விட்டேன். ஊரிற்குள் செல்லும் போது இரவு 1 மணி இருக்கும்.; உந்துரொளியில் செல்லும் போது புதிதாக பொருத்தபட்டிருந்த இரவு வெளிச்ச மின் கம்பங்களையும், கொழும்பு பகுதிகள் போல் சதுரக்கல் பதிக்கப்பட்ட பாதையையும் காணமுடிந்தது. பேருந்து போராட்டம் ஊர் மக்கள் நினைத்தது போல் வெற்றி பெற்று விட்டது போலும் என எண்ணிக்கொண்டேன். அடுத்த நாள் காலை 7 மணிக்கு கலந்துரையாடலை ஆரம்பித்து முடித்துவிட்டு  எத்தனை மணிக்கு பேருந்து என்று தோழர்களிடம் வினவினேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு சிரித்தார்கள். மேற்கொண்டு விசாரித்த போது, இப்போது எல்லாம் யாரும் போராட வருவதில்லை. நாங்கள் மட்டும் தான் இருக்கின்றோம். போராட்ட கமிட்டியும் இல்லை என்றார்கள். முரண்பாடுகளால் கலைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள்.

என்ன நடந்தது என்று தீவிரமாக விசாரித்த போது தான் விடயம் தெரிய வந்தது. பசில் ராசபக்சவின் அலுவலகம் திறக்கப்பட்ட பின் ஊர் மக்கள் அலுவலகத்தில் மனுகொடுத்திருக்கின்றார்கள். ஏற்பாடு செய்கின்றேன் என்று சொல்லி அனுப்பியிருக்கின்றார் ராசபக்ச. நம்பிக்கையுடன் போராட்டங்களை நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் மக்கள். சில நாட்களின் பின் பொருளாதார அமைச்சின் திட்டத்தின் கீழ் அந்த ஊரிலிருந்து புகையிரத நிலையத்திற்கு அண்மை வரை செல்லும் வகையில் வோக்கிங் ட்ரெக் அமைத்திருக்கின்றார்கள். கொழும்பு பாராளுமன்ற பகுதியில் இருப்பது போல் . இரவில் சதுரக்கல் பதிக்கப்பட்ட பாதை என நான் நினைத்தது இதை தான். வோக்கிங் ட்ரெக் ஊரிற்கு செல்லும் பாதை வழியே அமைக்கப்பட்டதால் வேலை முடியும் வரை பேருந்து பயணிப்பது சிக்கல் என்று கூறப்பட்டிருக்கிறது. வோக்கிங் ட்ரெக் அமைக்கப்பட்டு பசில் ராசபக்சவினால் கோலாகலமாக திறக்கப்பட்டது முதல் ஊர் மக்கள் எல்லோரும் வோக்கிங் ட்ரெக்கில் தினமும் நடை பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களும் பெண்களும் நடைபயிற்சிக்கான சப்பாத்து(track shoes), ட்ரெக் பொட்டம் (track bottoms), எம்பி 3 பிளேயர்( mp3 player) , எட்செட் (headset) என மக்கள் ஒரே அமர்களமாகிவிட்டனர்.

முன்பு தினமும் 10 கிலோமீற்றர் நடந்தவர்கள், தற்போது வேலை முடிந்து வந்த பின் தினமும் வோக்கிங் ட்ரெக்கில் 10 கிலோமீற்றர் நடைபயிற்சி வேறு செய்கின்றார்கள். சிலர் காலைவேளையிலே நடைபயிற்சி செய்கின்றார்கள். பேருந்து போராட்டத்தை மறந்து விட்டார்கள். இப்போது அவர்களது எண்ணம் எல்லாம் வாகனம் ஒன்று வாங்குவது தொடர்பாக தான் இருக்கின்றது. சில இளைஞர்கள் ஏதோ வழியில் பைக் வாங்கியும் விட்டார்கள் என்றும் அறிய கிடைத்தது. பேருந்து போராட்டத்தை கைவிட்டு விட்டு மக்கள் சொந்த வாகனம் வாங்கும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

ஆட்சியாளர்களுக்கு சமூகத்தில் கருத்தியல் ஆதிக்கம் செலுத்தும் விதம் நன்கு தெரிகிறது. ஒரு வோர்க்கிங் ட்ரெக் அமைத்து பேருந்துக்காக 5 வருடங்களுக்கு மேல் போராடிய மக்களை மாற்றி விட்டனர். வோர்க்கிங் ட்ரெக் அமைக்கும் முன் அந்த ஊர் மக்கள் அனைவரும் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தற்போதும் அப்படி தான் ஆனால் தினமும் ட்ரெக் பொட்டம் (track bottoms), எம்பி 3 பிளேயர்( mp3 player) , எட்செட் (headset) சகிதம் வோர்க்கிங் போவதால், தாங்கள் தற்போது நடுத்தர வர்க்கத்தினராக மாறிவிட்டதாக எண்ணி கொள்கின்றார்கள். இதன் காரணமாக போராட்ட  உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. நடுத்தர வர்க்கம் என்று எண்ணிக்கொண்டிருப்பதை நிஜமாக்கிட சொந்தமான வாகனம் வாங்கும் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். மக்கள் போராடும் போது தீர்வை வழங்கினால் அவர்கள் மேலும் மேலும் போராட்டங்களில் இறங்கிவிடுவார்கள். அதை தடுக்க வேண்டுமென்றால் அதிகாரத்தை பயன்படுத்தி நசுக்கிட வேண்டும். அல்லது இது போன்ற நடவடிக்கைகளால் மக்களின் வர்க்க இயல்பை மாற்றி போராட்ட உணர்வை மழுங்கடிக்க செய்து நுகர்வு கலாசாரத்தை உட்புகுத்தி நுகர்வு பொருட்களை வாங்கிட ஒடிடும் சொந்த போராட்டத்தினுள் மக்களை தள்ளி விடவேண்டும். அப்போது தான் அறிய கிடைத்தது, அந்த ஊர் மக்கள் காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்றும் அதன் காரணமாக தான் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது எனவும் தற்போது அவர்களில் பலர் பசில் ராசபக்சவுடன் இணைந்துவிட்டார்கள் என்றும். கடைசியாக நடைபயிற்சி செய்யும் போது ஊர் நாய்கள் தொல்லை தருவதாகவும், சிலவேளை வோர்க்கிங் ட்ரெக்கில் நாய்கள் மலம் கழித்து வைப்பதாகவும் பசிலிடம் ஊர்மக்கள் புகார் கூறியிருக்கின்றார்கள். பசிலும் உடனே நாய் பிடிக்கும் வண்டிகளை அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

இது நடந்து ஒரு வருடம் ஆக போகின்றது. தற்போது யாழ்பாணத்தில் திறக்கப்பட்ட கார்க்கில்சின் படங்களை முகபுத்தகம் வழியே காணநேர்ந்த போது மீளவும் இச்சம்பவம் நினைவிற்கு வந்தது. ஊடகவியளாளர் தியாகராசா நிரோஸ் கார்கில்சை நிராகரிப்போம் என வலியுறுத்தி பிரச்சாரம் செய்யதிடவே, அவருக்கு துணையாக இந்த சம்பவத்தை வழமையான என் நான்கு மணித்தியாள நித்திரை நேரத்தில் ஒரு மணித்தியாலத்தை தியாகம் செய்துவிட்டு எழுதுதியிருக்கின்றேன். யாழ்பாண கார்க்கில்சை இந்த வோர்க்கிங் ட்ரெக் உடன் பொருத்தி பாருங்கள் சில நேரம் ஒரு கார்க்கில்ஸ் என்ன செய்ய போகிறது என்று தோன்றலாம். இது ஆரம்பம் தானே... இன்னும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள், கைத்தொழில் வலயங்கள், சர்வதேச விமான நிலையம், அதிவேக பாதை, இன்னும் பல இத்தியாதிகள் வரவிருக்கின்றன. 

Post Top Ad

My Instagram