Post Top Ad

பண்பாட்டு சிறையும் பெண்ணடிமை தனமும்

முதல் படம் நாய்களுக்கு வாயில் போடும் பட்டியாகும், யரையும் கடிக்க கூடாது, குரைத்து சத்தம் போட கூடாது என்பதற்காக போடப்படுவதாகும். இரண்டாவது படம் சில பழங்குடியினர் பெண்களின் இடுப்பு பகுதியில் அணிவித்த பட்டியாகும்.
பெண்கள் கண்டபடி யாருடனும் பாலியல் தொடர்புகளை வைத்திருக்க கூடாது என்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆண்கள் வெளியே செல்லும் போது பூட்டி திறப்பை எடுத்து சென்று விடுவார்கள். பின் தனக்கு தேவையான போது திறந்து கொள்வார்கள். சில சமூகங்களில் நிலவிய பெண்கள் மீதான ஆண்களின் தனிப்பட்ட அடக்கு முறையாகும். இந்த பட்டி அணிவிக்கும் முறை மனித நாகரிகத்தில் அருவருக்க தக்க விடயமாக பார்க்கப்பட்டது. இன்று இப்படியான பட்டிகள் ஆபிரிக்காவின் ஒரிரண்டு பழங்குடியினரிடம் இருந்தாலும் பொதுவாக இல்லை.  ஆனால் இந்த பட்டிகள் செய்த வேலையை கலாசாரம் செய்கின்றது.

சமூகத்தில் தனி தனி ஆண்களால் முன்னெடுக்கப்பட்ட விடயத்தை இன்று ஒவ்வொரு சமூகமும் செய்கின்றது. கலாசாரம் என்பது இன்று பெண்களின் பாலியல்சார் நடத்தையை கட்டுபடுத்துவதாகவும், மேற்பார்வை செய்வதாகவுமே இருக்கின்றது. இவை ஆண்களை பாதிப்பதில்லை. கலாசாரத்தை கடைபிடிக்க வேண்டியவர்களாக பெண்களே காணப்படுகின்றனர்.

இதற்கு பின்னால் ஆண்களின் அருவருக்க தக்க இரண்டு மனோபாவங்களும் ஆதிக்க மனோபாவமும் இருக்கின்றன. அவை, பெண்களை மனிதர்களாக அன்றி பாலியல் போக பொருளாக நோக்கல். அமைதியான முறையலோ அல்லது அடக்குமுறை மூலமோ பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை மேற்கொள்ளல் அல்லது மேற்கொள்ள எத்தனித்தல் மற்றும் பெண்களை ஆண்களுக்கு கட்டுபட வேண்டிய ஆண்கள் ஏகபோக சொந்தம் கொண்டாட கூடிய இரண்டாம் தரமானவர்களாக கருதும் ஆதிக்க மனோபாவம். சமூகத்தில் எப்போதும் நிலவும் ஆண்களின் பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை மேற்கொள்ளும் எண்ணம் காரணமாக தான் குடும்பம் என்ற கட்டமைப்பில் தன் ஆளுகைக்குள் வரும் பெண்களை சக தன் ஆண் சமூகத்திடமிருந்து காப்பாற்றி கொள்ளும் வகையில் அன்று இடுப்பு பட்டி அணிவித்தது போல் இன்று கலாசாரம் என்ற போர்வையில் கட்டுபடுத்தி வைக்க செய்கிறது.

வெளிப்படையாக சொல்வதென்றால் கலாசாரம் என்பது இன்று ஆண்களின் பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை மூடிமறைத்து, பெண்களை கண்டபடி சோரம் போவர்களாக சித்தரித்து அவர்களுக்கு விலங்கு மாட்டும் ஆண்களின் பொது உடன்பாடு ஆகும். பெண்களின் மீதான இந்த, கட்டுபாடு விதிக்கும் விடயங்களை தவிர பண்பாட்டு வாழ்வியலின் ஏனைய அம்சங்களை எல்லோரும் உலகமயமாக்கலினுள் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். இங்கே பிரச்சினை இருப்பது, உண்மையில் ஆண்களிடம் தான், தான் எப்படி பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் மனோபாவத்தில் இருக்கின்றோமோ அதே மனோபாவத்திலிருக்கும் சக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு பெண்கள் ஆளாகலாம் என்பதை ஆண்கள் அறிவார்கள். பெண்களின் தாய்மையாகும் உயிரியல் அம்சத்தை பயன்படுத்தி அவர்கள் மீது தன் ஆதிகத்தை ஆண் இலகுவாக திணித்துவிட்டான். அதன் காரணமாக தன் குற்றங்களை அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை குற்றவாளியாக்கி விட்டான். இங்கே பெண்கள் தொடர்பான ஆண்களின் மனோபாவம் தான் சகலவற்றிற்கும் காரணம். ஆண்கள் பெண்களை பாலியல் போகபொருளாக நோக்காமல் பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை நடத்தும் மனோபாவத்தை இல்லாதொழித்தவர்களாக இருந்தால் ஏனைய ஆண்கள் எங்கே தனக்கு சொந்தமான பெண்களை தவறாக அனுகவோ, பயன்படுத்தவோ எத்தனிப்பார்கள் என்று அஞ்ச தேவையில்லை. 

விடயம் என்னவென்றால் ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தினை பயன்படுத்தி கருத்தியலை கட்டமைத்து பெண்களையும் இந்த அடக்குமுறையை கலாசாரம் என்ற பெயரில் ஏற்றுகொள்ள செய்துவிட்டனர். இது தான் பெண் அடக்கு முறையாக உருவெடுத்து இன்று மனித குலத்தின் அரைவாசி பேரை அடிமையாக்கி வைத்திருக்கின்றது. 

இந்த நிலை மாறவேண்டுமென்றால் ஆண்களின் இந்த மனோ நிலை மாற வேண்டும். ஆண்,பெண் என்ற பேதமில்லாமல் ஆண்களின் இந்த மனோபாவத்தை இல்லாதொழிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இடதுசாரிகளே இதனை முன்னெடுக்க வேண்டியவர்கள். இந்த விடயத்தில் இடதுசாரிகளுக்கு கருத்து வேறுபாடு இருக்காது என்றே நினைக்கின்றேன். முரண்பாடு இல்லாத இந்த போராட்டத்தை முன்னெடுக்க இடதுசாரிகள் இணைந்திட வேண்டும். இதன் வெற்றிகளை நிரந்தரமாக்கிட பெண்களை நுகர்வு பண்டமாக்கிடும் சமூக முறையை மாற்றிட செயலாற்ற வேண்டும்.

Post Top Ad

My Instagram