Post Top Ad

அரச கல்வி மீது திட்டமிட்டு நம்பிக்கையின்மையை உருவாக்கும் ஆட்சியாளர்கள் #பகுதி 09


எங்களது வீட்டுக்கு வழமையாக வந்த செல்லும் யாரையும், தவிர்க்க வேண்டுமென்றால் அவர்கள் வீட்டுக்கு வரும் போது சரியாக உபசரிக்காமல் விட வேண்டும், கண்டும் காணாமல் விட வேண்டும். காலப்போக்கில் அவர்கள் வருவதை நிறுத்தி விடுவார்கள். 

இதே  தந்திரத்தைத் தான், இலவசக் கல்வியைச் சீரழித்து தனியார் மயப்படுத்துவதற்கும் நம் ரணில் - மைத்திரி மயப்படுத்த பயன்படுத்துகின்றது. ஆட்சியாளர்கள் பாடசாலைகளையும், பல்கலைக்கழகங்களையும் தனியார்மயமாக்கி உள்ளடங்கப் நடைமுறைப்படுத்த எல்லா   திருகுதாளங்களையும் செய்து தோல்வி கண்டிருக்கின்றார்கள்.  மக்களினதும், மாணவர் அமைப்புக்களினதும் கடுமையான எதிர்ப்பு காரணமாகக் கல்வியைத் தனியார்மயமாக்க முடியவில்லை.

எனவே, மக்களை அரச கல்வி நிலையங்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்து, தனியார் கல்வி நிலையங்களை நாட செய்யவதன் மூலம், மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள்.  கல்வித் துறையில் தனியாரை அனுமதித்தால், பொது போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதித்த பின் அரச போக்குவரத்து சேவைக்கு நடந்ததை விட மோசனமான நிலை இலவச கல்விக்கு ஏற்படும்.

ஏலவே, உயர்தர வகுப்பு கல்விக்காகத் தனியார் வகுப்புகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரச பாடசாலைக் கல்வியைச் சீரழிப்பதன் மூலம், மக்களைத் தனியார் பாடசாலைகள் நல்லது எனச் சிந்திக்கும் நிலைக்குத் தள்ள முடியும். 

கூட்டாட்சி அரசாங்கமும் உயர்தர வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கும் திட்டங்கள் பாடசாலை கல்வியைச் சீரழிக்க ஆரம்பித்துள்ளதைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மருத்துவ சேவையையும். மருத்துவ கல்வியையும் தனியார் மயப்படுத்த பகீரத பிரயத்தனம் செய்து வரும் அரசாங்கம், மருத்துவ கல்விக்கான அனுமதிக்கு அடிப்படையான உயர்தர வகுப்பு உயிரியல் பாடத்திலிருந்து அவர்களது கபட திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.  உயிரியல் பாடத்துக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தால் இனி குறித்துச் போவது தெளிவாகப் புரியும்.

2015 இல் ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், 2016 டிசம்பர் மாதம் சாதாரண வழித்தேன் பரீட்சைக்குத் தோற்றி, 2017  ஏப்ரல் மாதத்தில் உயர்தர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது.

ஆனால், 2017 மே மாதம் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போது எந்த பாடத்திட்ட உள்ளடக்கமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. புதிய பாடத்திட்டங்களில் உள்ளடங்க போகும் அலகுகளின் தலைப்புகள் என்ன என்ற விடயம் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. அலகுகளின் உபதலைப்புகள் என்ன என்பது கூட கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆசிரியர்களுக்கான பயிற்சிகளோ, வளநூல்களோ வழங்கப்பட்டிருக்கவில்லை.

வகுப்புகள் ஆரம்பித்த பின்னர் தேசிய கல்வி நிறுவனம் ஆங்கில மொழியில் மாத்திரம் சில அலகுகளுக்கு மாத்திரம் பாடத்திட்டத்தை இணையத்தில் தரவேற்றியது. அதுவும் 2018 ஜனவரி மாதமளவில் வெறும் 5 அலகுகளின் பாடத்திட்டம் மாத்திரம் இணையத்தில் தரவேற்றியிருந்தது. இவையும் அடிக்கடி மாற்றப்பட்டது. சில அலகுகளுக்கான பாடத்திட்டம் 6 தடவைகள் வரை மாற்றத்துக்குள்ளானது. இவை எதுவும் சிங்களத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

2018 ஆம் ஆண்டில் முதல் அலகுக்கு மாத்திரமே பாடத்திட்டம் வெளியிடப்பட்டிருந்தது. ஏனைய அலகுகளுக்குத் தமிழ், சிங்கள மொழி மூல உத்தியோகப்பூர்வமான பாடத்திட்டங்கள் வெளியிடப்படவில்லை. தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றைத் தனிப்பட்ட முறையில் வெளியிட்டிருந்தார். எனினும், அதில் ஏராளமாகப் பிழைகள் இருந்தன. 

2019 ஆகஸ்ட்டில் பரீட்சை எழுதவிருந்த மாணவர்களுக்கு, மே மாதத்தின் பின்னர் தான் பாடத்திட்டங்களும், வளநூல்களும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டன. வழமையாக ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாடத்திட்டங்கள் படிப்பிக்கப்பட்டு மீட்டல் வகுப்புகள் ஆரம்பமாகிவிடும். ஆனால், 8 அலகுகளுக்கான பாடத்திட்டங்கள், வளநூல்கள் மே மாதத்துக்குப் பின்னர் தான் வழங்கப்பட்டது. 

உயிரியல் பாடத்தின் பத்தாவது அலகுகளுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படவே இல்லை. கடைசியில் கல்வி அமைச்சு 10வது அலகிலிருந்து பரீட்சையில் கேள்விகள் வராது என சுற்று நிரூபம்( இல. 23/2019) வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படவில்லை. உயிரியல் பாடத்திட்டம் கெம்பல் என்பவரின் பயோலோஜி எனும் ஆங்கில நூலின் 10வது பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. ஆனால்,  அந்த நூலின் 11வது பதிப்பும் வெளிவந்து விட்டது. கடைகளில் 11வது பதிப்பே கிடைக்கின்றது. 10வது பதிப்புக்கும், 11வது பதிப்புக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடுகள் உள்ளது. இந்த நூலின் விலை 20000 ரூபாய் ஆகும்.

4 வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டும் பகுதி பகுதியாக வழங்கப்பட்ட பாடத்திட்டங்களிலும், நூற்றுக்கணக்கான பிழைகள் இருக்கின்றன.
உதாரணமாக…  மனிதனின் குருதி சுற்றோட்ட தொகுதியில் சுவாசப்பையிலிருந்து  இதயத்தின் இடதுபக்க சோனையறைக்கு நான்கு நாளங்களின் மூலம் குருதி கொண்டுவரப்படும். ஆனால், அரசின் பாடத்திட்ட நூல்களில் இது இரண்டு நாளங்கள் மூலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் என சிபிலசு நோயின் அறிகுறிகள் தரப்பட்டுள்ளது. சிபிலசு நோய் வந்த யாரும் எயிட்ஸ் நோய் வந்திருப்பதாக தான் நினைப்பர்.

இலங்கையில் பாலைவனங்கள் இல்லை. எனவே, பாலைவனங்கள் தொடர்பாக மாணவர்கள் புத்தகங்களிலிருந்து தான் படிக்க முடியும். உயிரியல் பாடத்திட்டத்தில் பாலை வனங்கள் 3000 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியை பெரும் பிரதேசங்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் 2000 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெரும் இடங்களே ஈரவலய பிரதேசம் எனப்படும்.

மேலும் பாலைவனங்கள் ஆழமான கிணறுகளும், நீரை கடத்தும் தொகுதிகளும் விருத்தி செய்யப்படுவதால், மனித குடியேற்றங்கள் நடந்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், உலகில் அப்படி நடப்பதில்லை. கடாபியின் ஆட்சிக்காலத்தில் லிபியாவில் இப்படியான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவன பிரதேசம் ஒன்றில் பூமியை மிக ஆழமாகத் துளைத்தும், கால்வாய்கள் மூலமும் நீரைப் பெற்றும், குளிரூட்டப்பட்ட வீடுகளை அமைத்தும் நகர் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த நகர் இல்லை. இது மிகச் செலவு கூடிய நடவடிக்கை ஆகும். ஆனால், உலகில் இது பரவலாக நடப்பது போல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரில் பாடத்தின் அடிப்படை தெரிந்தவர்கள் கூட நூற்றுக் கணக்கான பிழைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. துறைசார் நிபுணர்கள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகளை இனம் காண்கின்றார்கள்.

இது குறித்து பாராளுமன்றத்திலும், கல்வி அமைச்சரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் உதாசீனமான பதில்கள் தான் வழங்கப்பட்டது. உயர்தரம் உயிரியல் பாடம் கற்பிக்கும் 350 ஆசிரியர்கள் கையொப்பம் இட்டு இந்த விடயம் குறித்து சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்துமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விட்டிருந்தார்கள். ஆனால், கல்வி அமைச்சர் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டங்களைக் கொண்டு வருவதில் அதிக முனைப்புடன் செயல்படுகின்றது அரசாங்கம். உயர்தரம் சித்தியடையும் மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க வேண்டும் என்ற சட்டத்திலும் மாற்றம் கொண்டு வர முயல்கிறது அரசாங்கம். 

கல்வியையும், வைத்திய சேவைகளையும் தனியார் மயமாக்கும் முயற்சிகளைச் செய்து கொண்டே, இன்னுமொரு புறம் பாடசாலைக் கல்வியைச் சீர்குலைப்பதானது மக்களை தனியார்மயமாக்கல் நோக்கி வலுக்கட்டாயமாகத் தள்ளி விடும் வேலையாகும். 

ஐதேகவோ, கல்வியைத் தனியார் மயமாக்கி முதலாளி வர்க்கத்துக்கு இலாபம் தேட வழித்தேடி கொடுக்க கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களோ அதிகாரத்துக்கு வந்தால் சாதாரண மக்களும் உரிமையாகப் பெறும் கல்வியைக் காசுக் கொடுத்துப் பெறவேண்டிய வரப்பிரசாதமாக மாற்றிவிடுவார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram