Post Top Ad

புல்மோட்டை கனிய மணல் வளத்தை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கும் கூட்டாட்சி #பகுதி 10

இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வளங்களையும், பொருளாதார கேந்திர ஸ்தானங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை கொள்கையாக கொண்டிருக்கிறது ஐதேக. இது தங்கமுட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து அனைத்து முட்டைகளையும் எடுப்பது போன்ற செயலாகும். கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் ரணில் - மைத்திரி கூட்டரசாங்கமும் இது போன்று நாட்டின் பொருளாதார வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது.

இப்படியாக அவர்கள் விற்பனை செய்ய முயற்சிக்கும் வளங்களில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியில் கிடைக்கும் கனிய மணல் வளத்தையும் வெளிநாடுக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றார்கள்.

திருகோணமலை துறைமுகத்தை போல எமக்கு இயற்கையாகக் கிடைத்திருக்கும் பெரும் வளமே முல்லைத் தீவிலிருந்து திருகோணமலையின் நிலாவெளி வரையிலான கடற்கரை பகுதியில் இருக்கும் கனியமணல் வளமாகும்.  புல்மோட்டை பகுதியிலே  இவ்வளம் செறிந்து காணப்படுகின்றது.

சுமார்  நான்கு கிலோமீற்றர் நீளமான கடற்கரை பிரதேசத்தில் 200 மீற்றர் அகலத்திற்குக் கனிய மணல் செறிந்து காணப்படுகிறது. வங்காள கடலிலிருந்து அலையால் கொண்டு வந்து சேர்க்கப்படும் இக்கனிய மணலை சேகரிக்காவிட்டால்,  மொன்சூன் மழைக் காலத்தில் மீண்டும் கடலுக்கே அலைகளால் எடுத்து செல்லப்படும்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வங்காள கடலிலிருந்து  புதிய கனியமணல் வந்து சேர்ந்துவிடும். சுமார் நான்கு மில்லியன் தொன் அளவான கனிய மணல் ஒவ்வொரு வருடமும் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றது.

இந்த கனிய மணலில் இல்மனைற் 70%, சேர்கோன் 8%, ரூற்றைல் 8%, மொனசைட் 0.3%, சில்லிமனைட் 1% என உலகின் அரிதான கனிய வளங்கள் காணப்படுகின்றன.

இல்மனைற், ரூற்றைல் ஆகிய கனிமங்களிலிருந்து டைட்டேனியம் எனும் உலோகம் பிரித்தெடுக்கப்படும். டைட்டேனியம் உலகிலேயே விலைக் கூடிய உலோகம் ஆகும். டைட்டேனியம்  விமானம் தயாரிக்கப் பயன்படுகின்றது.  இதன் காரணமாகவே டைட்டேனியம் கறுப்பு தங்கம் என அழைக்கின்றார்கள். உலகிலே  டைட்டேனியம் பெறக் கூடிய உயர்  தரமான கனிய மணல் கிடைப்பது இலங்கையில் தான். மேலும், இக் கனிய மணலில் அடங்கியுள்ள கனிமங்கள் பிளாஸ்ரிக், உலோகம், பீங்கான், கடதாசி, மை, இறப்பர், விமான தயாரிப்பு தொழிற்துறையிலும், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

பருவந்தோறும்  புதுப்பிக்கப்படும் வற்றாத கனிய மணல் வளம் இருப்பதானது, அராபிய நாடுகளுக்கு  எண்ணெய் இருப்பது போன்றதாகும். இதன் மூலமே   இலங்கையைச் செல்வந்த நாடாக்க முடியும்.
1992ம் ஆண்டு உருவாக்கப்பட்ட லங்கா கனிய மணல் நிறுவனம் எனும் அரசுக்குச் சொந்தமான கம்பனி மூலம் கனிய மணல் அகழ்ந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  இதன் மூலம் வருடாந்தம் 1500 - 2000 மில்லியன் ரூபாய் இலங்கைக்கு வருமானம் கிடைக்கின்றது.மீண்டும் மீண்டும் இவ்வளம் இயற்கையாக புதுப்பிக்கப்பட்டாலும் சூழலுக்குத் தீங்கில்லாமல் பாதுகாப்பான முறையிலேயே  மணல் அகழ்வு நடந்து வருகின்றது.

எனினும், இலங்கையில் இக் கனிய மணலில் உள்ள கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதோ, அல்லது உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதோ இல்லை. மிக குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

எமக்கிருக்கும் இந்த வளத்தை எகோர்ட் எனும் இந்திய கம்பனிக்கு இலவசமாக வழங்கும் அமைச்சரவை பத்திரமொன்று 2016 ஆம் ஆண்டு அமைச்சர் ரிசாட் பதியுதீனால் சமப்பிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அமைச்சரவை பத்திரத்தை மீள பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

குறித்த கம்பனிக்கு முதலில் இலவசமாக வழங்கி, அவர்கள் விற்பனை செய்து வருமானம் ஈட்டிய பின் விலையைப் பெற்றுக் கொள்ளும் வகையிலேயே பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மீண்டும் அதே அமைச்சரினால் அரேபிய நிறுவனம் ஒன்றுக்கு ஒரு கியுப் கனிய மணலை 145 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டது.  கட்டிட வேலைகளுக்கு   பயன்
படுத்தப்படும் மணலின் விலை இதை விட அதிகம்.

எமது அரிய வளத்தை வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கும் முயற்சிகள் ஒரு புறமிருக்க, இன்னுமொரு புறத்தில் பிரதேச அரசியல்வாதிகளின் பின்புல ஆதரவுடன், சட்டவிரோதமான முறையில் கனியமணல் அகழ்ந்து விற்பனை செய்யப்படுவதும் நடந்து வருகின்றது. இவ்வாறு சட்ட விரோதமாக அகழப்படும் மணல் கிழக்கு கடற்பகுதியில் பன்னாட்டு கம்பனிகளுக்கு சட்ட விரோதமாக விற்கப்படுகின்றது.

இந்த சட்டவிரோத அகழ்வைத் தடுக்கும் வகையில் வேலி அமைக்கச் சென்ற கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகளைப் பிரதேச அரசியல்வாதிகள் மக்களைத் திரட்டி தாக்கியுள்ளார்கள். பெப்ரவரி  மாதமும், மார்ச் மாதமும் இவ்வாறு அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இந்த விடயம் மறைக்கப்பட்டு,  காணிகளை அபகரிக்கச் சென்றவர்கள் தாக்கப்பட்டதாகச் செய்தி பரப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொலிசார் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திலிருக்கும் அரசியல்வாதிகளின்  அழுத்தமே இதற்குக் காரணம்.

எமது வளங்கள் எங்கள் அபிவிருத்திக்காக  வினைத்திறனான விதத்தில் பயன்படுத்தப்படாமல் அரசியல் வாதிகளின் சுயநலன்களுக்காக வீணடிக்கப்படுவதும், தாரைவார்க்கப்படுவதும், சுரண்டப்படுவதும் துரதிஸ்ட வசமானதாகும்.

பன்னாட்டு கம்பனிகளுக்கு இந்த வளம் தாரை வார்க்கப்பட்டால், சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் அளவு கணக்கின்றி  அகழ்ந்து நாசம் செய்து விடுவார்கள்.

சூழலை பற்றி, மக்களை பற்றி, பண்பாடு கலாசாரங்களை பற்றி கவலைப்படாத, இவற்றில் ஏற்படும் தாக்கங்ளால் பாதிக்கப்படாத பிரபு வர்க்கத்தின் நலன்களை முதன்மைபடுத்தி வேலை செய்யும் ஐதேக தொடர்ந்து பொருளாதார, கலாசார, சமூக  மேற்குலகுக்கு தாரை வார்க்கும் கொள்கையை கடைப்பிடித்து வருதின் விளைவே இதுவாகும்.

எனவே, தான் பிரபுவர்க்க நலன்களை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றி சாதாரண மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

இல்லையெனில் புல்மோட்டை கனிய மணலை மாத்திரமல்ல, இதுவரை காலமும் உருவாக்கியுள்ள பாராம்பரியமான அம்சங்களையும், இயற்கையாக பெற்றிருக்கும் வளங்களையும் தாரைவார்க்க நேரிடும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram