Post Top Ad

இலங்கையைக் குப்பைத் தொட்டியாக்கும் ஆட்சியாளர்கள் #பகுதி 11

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று பாடபுத்தகத்தில் படித்திருப்போம். நம் ஆட்சியாளர்களும், பிரபு வர்க்கத்தினரும் விரைவில் குப்பைத்தொட்டி எனச் சொல்லவைத்துவிடுவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கொழும்பு துறைமுகத்திலும், கட்டு நாயக்கா ஏற்றுமதி வலயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கழிவுப் பொருட் கொள்கலன்கள் அண்மைக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விடயம் வெறும் பரபரப்பாகப் பார்த்துவிட்டுக் கடந்து போகவேண்டிய விடயமல்ல. இலங்கையின் அரச இயந்திரமும், ஆட்சியாளர்களும் யாருக்காக? யாரின் நலன்களுக்காகச் செயல்படுகின்றார்கள் என்பதை அம்பலப்படுத்தும் நிகழ்வாகும்.

இதற்காகக் கழிவுப் பொருட் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தனி நிகழ்வாக அல்லாது, தொடர்பு பட்ட அனைத்து விடயங்களையும் தொகுப்பாக ஆராய வேண்டும்.

சூலை மாதம் கொழும்பு துறைமுகத்திலும், கட்டு நாயக்கா ஏற்றுமதி வலயத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் கழிவுப் பொருட்கள் அடங்கிய 241 கொள்கலன்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இவை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

குப்பை கொள்கலன்கள் 2017 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. இரண்டு வருடங்களாக இந்த விடயம் வெளியில் வராதது ஏன் என்ற கேள்வியை ஊடகங்கள் பெரிதாக எழுப்பவில்லை. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிச் சமாளித்திருந்தது.

குப்பை கொள்கலன்களை இறக்குமதி செய்திருந்தவர் இலங்கையின் அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் தனிநபரான தம்மிக்க பெரேரா. இவரை 2019வது சனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ரணில் விக்ரம சிங்க அழைப்புவிடுத்திருந்தார். ஜேவிபினர் தம்மிக்க பெரேராவை கொண்டு கருத்தரங்குகளை நடத்தியிருந்தனர். தம்மிக்க பெரேராவும் கடந்த மே மாதமளவில் சனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்.
மறுபுறம் சஜீத் பிரேமதாசா நீண்ட நாட்களாகவே சனாதிபதி வேட்பாளராவதற்குக் காய்களை நகர்த்தி வந்திருந்தார். ரணில் விக்ரம சிங்க அவர்கள் தம்மிக்க பெரேராவை பொது வேட்பாளராக முயற்சி செய்தது, சஜீத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. எனவே தான், தம்மிக்க பெரேராவை ஓரங்கட்டுவதற்காக சஜீத்துக்குச் சார்பான தரப்பால் குப்பை கொள்கலன் விடயம் வெளியில் கசியவிடப்பட்டது.

சனாதிபதவி போட்டியிருந்திராவிட்டால், இந்த விடயம் இன்றைக்கும் வெளியில் வந்திருக்காது.

இலங்கை சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் பிரகாரம் குப்பைகளை இறக்குமதி செய்யமுடியாது. 1989 ஆம் ஆண்டு சில மூன்றாம் உலக நாடுகளின் முயற்சியின் பலனாக ஆபத்தான கழிவுப் பொருட்களை நாடுகளின் எல்லைகளைக் கடந்து கொண்டு செல்வதைத் தடுக்கும் பாசல் சமவாயம் எனும் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. பாசல் சமவாயத்தில் 1992-93 காலப்பகுதியில் இலங்கையும், பிரித்தானியாவும் கைச்சாத்திட்டிருந்தது.
எனவே, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு ஆபத்தான குப்பைகள் கொண்டுவரப்பட்டது குற்றமாகும்.

இலங்கையின் சுங்க கட்டளைச் சட்டம், சுற்றாடல் சட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி சட்டங்களின் பிரகாரமும் வெளிநாடுகளிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்ய முடியாது. இலங்கையின் சூழல் தொடர்பான சட்டங்களும், தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களும் ஏனைய நாடுகளை விடச் சற்று இறுக்கமானவை. இந்த சட்டங்களைத் தளர்த்தி விட வேண்டும் என்பது உலக முதலாளிகளினதும், அவர்களுக்கு இலங்கையில் தரகு வேலை செய்பவர்களின் நீண்டநாள் பிரத்தமாக இருக்கின்றது.

2012 ஆம் ஆண்டு இலங்கையின் இறக்குமதி தொடர்பான சட்டங்கள் கட்டுப்படுத்தாத வகையில் இறக்குமதி நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய வகையில் நிதி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. குறித்த திருத்தங்களுக்கு அமைய 2013 ஆம் ஆண்டு இலங்கை துறைமுகங்கள், விமானநிலையங்கள், சுதந்திர வர்த்தக வலயங்களை ஒன்றிணைத்து விசேட சுதந்திர வர்த்தக வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டது.

விசேட சுதந்திர வர்த்தக வலய பகுதிகளில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி வலயங்களில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை இலங்கை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது. உள்ளூர் திணைக்களங்களினால் சோதனையிடவும் முடியாது.

ஆட்சியாளர்கள் சட்டத்தில் போட்டுக் கொடுத்த ஓட்டையைப் பயன்படுத்தித் தான் தம்மிக்க பெரேரா வெளிநாட்டின் குப்பைகளைக் கொண்டுவந்துள்ளார்.

சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்த 2013 ஆம் ஆண்டில் தான் தம்மிக்க பெரேரா ஹெயிலிஸ் ப்ரீ சோன் நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். இராஜபக்ச ஆட்சி அதிகாரத்திலிருந்த இந்த காலப்பகுதியில் தம்மிக்க பெரேரா போக்குவரத்து அமைச்சு உட்படப் பல அரசாங்க திணைக்களங்களில் முக்கிய பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் கெசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகளை நடத்தி பணக்காரரானதன் காரணமாக கெசினோ தம்மிக்க என்று அழைக்கப்படுகின்றார். இராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாரிய கெசினோ சூதாட்ட மையங்களுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களும் கொண்டுவரப்பட்டது.

குப்பைகளை மீள் சுழற்சி செய்வதாகவும், மீள் ஏற்றுமதி செய்வதாகவும் கூறியே இறக்குமதி செய்திருக்கின்றார்கள்.

இவை துறைமுகத்தில் சோதனை இடப்பட்டிருக்க வேண்டும். அச்சமயம் துறைமுக அதிகாரசபையின் தலைவராக ஜதேகவின் அமைச்சரும், ரணில் விக்ரமசிங்கவின் உறவினருமான சாகல ரட்ணாயக்கவின் சகோரரர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையிலிருந்து சான்றிதழ் பெறாமல் மீள் சுழற்சி நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அச்சமயத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக இருந்தவர் ஹெயிலிஸ் கம்பனியின் பணிப்பாளராகவும் இருந்தார்.

குப்பைகளை மீள் ஏற்றுமதி செய்வதாக முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் செய்து கட்டு நாயக்கா சுதந்திர ஏற்றுமதி வலயத்தில் களஞ்சிய படுத்தலுக்காக இடத்தை பெற்றுள்ளார்கள். அனுமதி பெற்றுக் கொண்ட தொழில் நடவடிக்கையை முன்னெடுக்கவிட்டாலோ, அனுமதி பெறப்படாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ முதலீட்டுச் சபை ஒப்பந்தத்தை இரத்து செய்து விடும். ஆனால், குப்பைகளை இறக்குமதி செய்து இரண்டு வருடங்களாகத் திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்தும் முதலீட்டுச் சபை எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. இந்த காலப்பகுதிகளில் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் மகன் முதலீட்டுச் சபையின் தலைவராக இருந்தார். இவரும் ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஆவார்.

எனவே, குப்பை கொள்கலன் இறக்குமதி நடவடிக்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனே திட்டமிட்டு நடந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

மேலும், குப்பைகளை இங்கிலாந்திலிருந்து ஏற்றுமதி செய்த வெங்கடாட்ஸ் கம்பனி 2017 ஆம் ஆண்டில் தான் பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த கம்பனியின் உரிமையாளர் வெங்கடேஸ்வரன் முத்துக்குமார் என்பவராவார். இவரின் சகோதரரான சசிகுமார் முத்துக்குமார் என்பவரே ஹெயிலிக்ஸ் ப்ரீ சோன் கம்பனி சார்பாகக் குப்பைகளை இறக்குமதி செய்த சிலோன் மெட்டல் புரோசசிங் கம்பனியின் உரிமையாளர் ஆவார். இந்த கம்பனி தற்சமயம் நட்டத்தில் இயங்கியதால் இழுத்து மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த கம்பனிகள் குப்பைகளை மோசடியாக இறக்குமதி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளமை வெளிச்சம்.
அதே போல் கொள்கலன்களை விநியோகம் செய்த இ.ரி.எல் கொழும்பு நிறுவனமான நாட்டின் பிரதமர், சனாதிபதி வரை செல்வாக்கைக் கொண்டிருக்கும் நிறுவனம். மேலும், இலங்கையின் மிகப் பெரிய கடல் மார்க்க சரக்கு பரிமாற்ற கம்பனியான சிறிலங்கா சிப்பிங் கம்பனியை தம்மிக்க பெரேரா 2017 ஆம் ஆண்டில் வாங்கியிருந்தார்.

இப்படியான அரசியல் பின்புலங்கள், மோசடி வழிமுறைகளுடன் குப்பை இறக்குமதி நடந்திருக்குமென்றால் இத்தொழிலில் மிகப்பெரிய பணபுரள்வு இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் தொகுதி ஒன்றுக்கு 5 இலட்சம் பவுன்கள் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை பணத்துக்குக் குப்பைகளை ஏற்றுமதி செய்வதற்கான காரணம் என்ன?

செல்வந்த நாடுகள் அவர்கள் நாட்டின் குப்பைகளை முகாமை செய்வதில் பெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். உதாரணமாக பிரித்தானியாவில் வருடாந்தம் 2300 இலட்சம் டொன் குப்பைகள் நிறைகின்றது. இதில் கிட்டத்தட்ட அரைவாசி அளவுக் குப்பைகள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றது. மிகுதிக் குப்பைகளை நிலத்தில் புதைத்து அல்லது நிலத்தின் மேல் கொட்டி வைப்பதன் மூலம் முகாமை செய்ய வேண்டும். ஆனாயுல், குப்பைத் தொட்டிகளை பாராமரிப்தற்கு ஆகும் செலவுகளையும், சூழல் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளும் போது பணம் கொடுத்து வேறு நாடுகளுக்கு அனுப்பி விடுவது இலாபகரமானது. எனவே தான், நீண்டகாலமாகச் செல்வந்த நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் குப்பைகளைக் கொட்டி வருகின்றது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் பிளாஸ்ரிக், தொழிற்சாலை கழிவுகள், இரசாயன கழிவுகள், வீட்டுக் கழிவுகள், வைத்தியசாலை கழிவுகள், மனித உடல் பாகங்கள், கதிர்வீச்சை வெளியிடும் கழிவுகள் என ஆபத்தானதாகும். இந்த கழிகவுளில் நோய் பரப்பும் கிருமிகள் பாதுகாப்பாக உறங்கு நிலையில் இருக்க முடியும். பொருத்தமான வெப்பநிலையும், காலநிலையும் கிடைக்கும் போது இக்கிருமிகளால் பரம்பலடைய முடியும். வைத்தியசாலை கழிவுகளும், இரசாயன ககழிவுகளும் பாரிய சுகாதார கேடுகளை உருவாக்கும்.

ஆபிரிக்காவின் ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா போன்ற நாடுகள் சொல்லி முடிக்க முடியாத வகையில் சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இதுபோல் அண்மைக்காலமாக கிழக்காசிய, தெற்காசிய நாடுகளுக்கும் குப்பைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
குறிப்பாக பங்களாதேஸ் நாடு இவ்வாறான குப்பைகளால் பெரிதும் பாதிக்கப்படும் நாடாகி இருக்கின்றது. தற்போது கிழக்காசிய நாடுகள் குப்பை இறக்குமதிக்குத் தடை போட்டு வருகின்றன.

இருந்த போதும் செல்வந்த நாடுகள் எம் போன்ற நாடுகளுக்குக் கடன் வழங்கும் போது நிபந்தனைகளை விதித்து சட்டங்களைத் திருத்துவதன் மூலம் அவர்கள் நாட்டுக் குப்பைகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றார்கள்.

இக்குப்பைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு, குப்பைகளிலிருந்து பயன்படுத்தக் கூடிய இரும்பு போன்ற பொருட்களைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். இந்த பிரித்தெடுக்கும் வேலைகளை மனிதர்களைப் பயன்படுத்தித் தான் செய்ய முடியும். செல்வந்த நாடுகளில் இந்த வேலையைச் செய்வதற்காகக் கூலி மிக அதிகம். எனவே, பங்களாதேஸ் போன்ற உழைப்புக்கான கூலி குறைந்த நாடுகளுக்குக் குப்பைகளை ஏற்றுமதி செய்து பிரித்தெடுப்பது இலாபகரமானது. இவ்வாறு பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்தாலும், பெருமளவு கழிவுகள் எஞ்சும். இவற்றை ஒன்றும் செய்ய முடியாது.

ஹெயிலிஸ் கம்பனி இங்கிலாந்து வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகளிலிருந்து இரும்பு துண்டுகளைப் பிரித்தெடுத்த ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளது.

எனினும், பிரித்தெடுக்கப்படுவதன் பின்னர் எஞ்சும் கழிவுகளை இலங்கையில் தான் கொட்ட வேண்டும். கடந்த சில வருடங்களாக அரசாங்கம் கொழும்பு,கண்டி பகுதிகளிலும், புத்தளம் அருவக்காடு பகுதியிலும் பாரிய குப்பைத் தொட்டிகளை அமைத்து வருகின்றது. இதன் நோக்கம் வெளிநாட்டுக் குப்பைகளை இறக்குமதி செய்து கொட்டுவதற்காகவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அண்மையில் ரணில் - மைத்திரி கூட்டரசாங்கம் சிங்கப்பூருடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் உலக நாடுகளிலிருந்து எல்லா வகையான குப்பைகளையும் இலங்கைக்குள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செய்த பின்னர் அரசாங்கத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஏற்றுமதி வலயங்களில் களஞ்சிய படுத்தலுக்காக இட ஒதுக்கீடுகளைப் பதிவு செய்து கொண்டுள்ளார்கள்.

எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கைக்குள் வெளிநாட்டுக் குப்பைகள் அதிகளவில் கொண்டு வரப்படும் அபாயம் உள்ளது. தற்போதும் கூட சஜீத் , தம்மிக்க பெரேரா இடையிலான சனாதிபதி வேட்பாளராகும் போட்டியின் காரணமாகத் தான் வெளிநாட்டுக் குப்பைகள் கொண்டு வரப்பட்ட விடயம் வெளியே தெரிய வந்துள்ளது. வெளியே தெரியாமல் குப்பைகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

காரணம், இலங்கை பிளாஸ்ரிக் கழிவுகளை அதிகளவில் வெளியேற்றும் முதல் 10 நாடுகளுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நம் நாடு செல்வந்த நாடுகளின் அளவுக்குக் கழிவுகளை வெளியேற்றும் நாடல்ல. எனவே, வெளிநாடுகளிலிருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

எதை விற்றும் பணம் தேடலாம் என்று சிந்திக்கும் பிரபு வர்க்கத்தினரினதும், வர்த்தகர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்கட்சிகளைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி வருவோமானால், இனிவரும் காலங்களில் ஐவரிகோஸ்ட், கானா நாடுகளைப் போல் குப்பை மேடுகளில் வாழும் அவல நிலை ஏற்படுவதைத் தவிர்க முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram