Post Top Ad

ரயாகரனின் சமஉரிமை கள்ள குதிரை சவாரி

'வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி நானும் ரவுடி என்று பொலிஸ் வண்டியில் ஏறுவார்..' அது போல தான் இருக்கின்றன தோழர் ரயயாகரனின் சமஉரிமை தொடர்பான விளக்கங்களும். இது மார்க்சிய அடிப்படையானது என்று நிருபிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றார் அவர். சமஉரிமை எனும் கோசம் மார்க்சிய அடிப்படையிலானதா? அல்ல சுயநிர்ணயத்தின் அடிப்படையிலானதா? வர்க்கபுரட்சியின் திறவுகோலா என்பதல்ல எனது பிரச்சினை. சமஉரிமை என்ற கோசத்தை முன்வைத்த பல இயக்கங்களை கண்டிருக்கின்றோம். லெனின் வலியுறுத்திய சமஉரிமையையும் அறிந்திருக்கின்றோம்.
அந்த சமஉரிமை கோசம் குறித்து நான் கேள்வி ஏதுவும் கேட்கவில்லை. எனது கேள்வி முன்னிலை சோசலிச கட்சி கட்டிய சமஉரிமை இயக்கத்தின் நேர்மை தன்மை உண்மையான இலக்கு தொடர்பான கேள்வி. இந்த கேள்விகளின் அடிப்படை என்னவென்றால் சமஉரிமை இயக்கத்தின் அடி நுனியையும் அதை உருவாக்கியவர்களின் வண்டவாளங்களையும் அறிந்தவன் என்ற வகையில் தோழர் ரயாகரன் சமஉரிமை இயக்கம் தொடர்பாக சொல்வதற்கும் நான் அறிந்த சமஉரிமை இயக்கத்திற்கும் எந்த தொடர்புபையும் நான் காணவில்லை. தோழர் ரயாகரனின் சமஉரிமை தொடர்பான கட்டுரைகள் எல்லாம் சமஉரிமையை மார்க்சிய அடிப்படையானது என்று நிறுவும் ஓரே உள்ளடக்கத்தை கொண்டதாகும். இங்கே எழும் சந்தேகம் என்னவென்றால், சமஉரிமை என்ற அரச குதிரையில் திருடன் ஏறி தப்பி ஒடுவது போல் நீங்கள் ஒடுகின்றீர்களா என்பது தான்? இதை கேட்டால் சமஉரிமை இயக்கம் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகி வருகின்றது என கட்டுகதைகளை பரப்பாதீர்கள். நீங்கள் சமஉரிமை என்பதை பகிரங்கமாக வலியுறுத்துவீர்கள் என்றால் அதுகுறித்து கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். எந்த கேள்வி கேட்டாலும் தலைப்பை மாற்றி கட்டுரைகளை பிரசுரிக்காதீர்கள். மிகவும் இலகுவாக ஒவ்வொரு கேள்வியாக முன்வைக்கின்றேன். தெளிவாக பதில் கூறுங்கள். அதாவது உங்கள் நேர்மை தன்மையையும், இலக்கின் உண்மை தன்மையையும் வெளிக்காட்டுங்கள்.

முன்னிலை சோசலிச கட்சி சிறிலங்காவில் தேசிய இனங்கள் இருப்பதினை மறுக்கின்றது. சமஉரிமை இயக்கமும் அதனை தான் வலியுறுத்துகின்றது. சிறிலங்காவிலே தேசியபிரசைகள் தான் இருக்கின்றார்கள் என்கிறது? இதனை புதிய சனநாயக மக்கள் முன்னனி ஏற்றுகொள்கிறதா? ஏற்றுகொள்கின்றதா? முன்னிலை சோசலிச கட்சியினதும் சமஉரிமை இயக்கத்தினதும் சிறிலங்காவில் தேசியபிரசைகள் தொடர்பான புதிய சனநாயக மக்கள் முன்னனியின் அதாவது ரயாகரனின் நிலைப்பாடு என்ன?
ஜேவிபியின் தொடர்ச்சியாக இயங்கும் முன்னிலை சோசலிச கட்சிக்கு தமிழ் மக்களிள் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பதில் 48 வருட வரலாறு உண்டு. சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாக கொண்ட ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆரம்பம் முதலே மறுத்து வருகின்றது. ஜேவிபி இதற்காக காலம் காலமாக பல காரணங்களை கூறிவந்துள்ளது. தமிழ் மக்களின் போராட்டங்களை தொடர்ச்சியாக மறுத்ததோடு தமிழ் மக்களின் பிரச்சினை தேசியம் தொடர்பான பிரச்சினை அல்ல அது பிரபாகரனின் பிரச்சினை மாத்திரமே என்றது. வடகிழக்கு மக்களுக்கு மட்டும் தனியாக தீர்வு எதனையும் வழங்க முடியாது என்றது. அதனையே இன்று முன்னிலை சோசலிச கட்சியும் தொடர்கிறது. இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஒரு தேசியம் என்பதை மறுக்காத இன்றைய முன்னிலை சோசலிச கட்சியின் தலைமைத்துவம் இன்று தீடிரென்று தேசியம் என்று ஒன்றில்லை என்கிறது. அதற்கான காரணம் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் அடிப்படை தேசியவாத போக்குதான். தேசியம் என்பதை மறுப்பது மூலம் இலகுவாக சுயநிர்ணய உரிமை என்பதை மறுத்து வருகின்றார்கள். இவ்வாறு 48 வருடங்களாக சுயநிர்ணய உரிமை என்பதை மறுத்து வருபவர்கள் வலியுறுத்தும் சமஉரிமையை எப்படி சுயநிர்ணயத்தின் அடிப்படையிலானது என ஏற்றுக்கொள்வது?
முன்னிலை சோசலிச கட்சியும், ஜேவிபியும் தமிழ் மக்களின் பிரச்சினையை நிர்வாக பிரச்சினையாக அடையாளம் காட்டி வருகின்றன. அதாவது தமிழ் மக்களுக்கு மூன்று வேலை உணவு கிடைத்தால், விவசாயம் செய்ய டெக்டர் இருந்தால், தண்ணீர் இறைக்க மோட்டார்பம்பி கிடைத்தால், அரச நிறுவனங்களில் தமிழ் மூலம் தொடர்புகளை மேற்கொள்ள முடிந்தால், கடிதங்கள் தமிழில் கிடைத்தால், இன்னும் தெற்கு மக்கள் அனுபவிக்கும் வசதிகள் கிடைத்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பது தான் இவர்கள் கூறும் தீர்வு. சோசலிசத்திற்குள் தான் இது சாத்தியம் ஆகவே அதற்காக போராடுவோம் என்று தான் கூறி வருகின்றார்கள். இதை தான் சமஉரிமை இயக்கமும் சொல்கிறது. ஜேவிபி யின் சகோதரத்திற்கான அரணும் சொல்கிறது. ஏன் இதை தான் கருணா, டக்ளஸ் போன்றவர்களும் சொல்கின்றார்கள்.
Nஐவிபி யின் சகோதரத்திற்கான அரண் எந்த வகையில் சமஉரிமை இயக்கத்திலிருந்து வேறுப்படுகிறது. சகோதரத்திற்கான அரண் அமைப்பு சிறிலங்காவில் தமிழர்கள் ஒரு தேசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறது. சமஉரிமை இயக்கம் அதனை மறுத்து தேசிய பிரசைகள் என்கிறது. மற்றபடி இவ்விரண்டு அமைப்புக்களும் இணைந்தே செயற்படலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினை என்பது, அடையாளம் தொடர்பான பிரச்சினை. தமிழ் இனம் தன்னை கட்டியெழுப்புவது தொடர்பான பிரச்சினை. சிங்கள இனத்திற்கு அதற்கான அதிகாரமும் வாய்ப்புக்களும் கிடைத்து விட்டன. ஆனால் தமிழ் இனத்திற்கு அந்த வாய்பை கொடுக்காமல் சிங்கள இனம் தடையாக இருந்து வருகின்றது. தமிழ் இனத்தின் மீது தன் மேலாதிக்கத்தினை செலுத்தி வருகின்றது. அதன் காரணமாக தான் சிங்கள இனத்தின் தலையீடு இல்லாமல் தமிழனத்தை கட்டியெழுப்பும் உரிமையை கோருகின்றது. அதை தான் தனி நாடாக கோரியது. சிங்கள இனம் தன் அடையாளத்தை உறுதி செய்து ஒர் தேசியமாக எழுந்து நிற்க இருக்கும் உரிமை, தமிழ் மக்களுக்கும் சம அளவில் இருக்கின்றது. இந்த சமஉரிமையை தான் தமிழர்கள் கோருகின்றார்கள். சிங்கள இனத்தின் தலையீடும் மேலாதிக்கமும் இல்லாத , தமிழ் இனத்தை கட்டியெழுப்புவதற்கான எந்த வாய்ப்பையும் தமிழர்கள் மறுக்கவில்லை. அது ஒற்றை ஆட்சியின் பெயரிலோ அல்லது சமஸ்டியின் பெயரிலோ, அல்லது வெற்றிலை பாக்கு என எந்த பெயரிலோ வழங்கப்பட்டாலும் சரிதான். ஆனால் முன்னிலை சோசலிச கட்சி அதை மறுத்து தமிழர்களை சிறிலாங்கியர்களாக இருக்குமாரு கோருகின்றது. அதை தான் தேசியபிரசைகள் என்ற பதத்தின் மூலம் முன்னிலை சோசலிச கட்சி முன்மொழிந்துள்ளது. இன்று சமஉரிமை இயக்கம் மூலம் அதனை தானே வழிமொழிய முயற்சிக்கின்றது. புதிய சனநாயக மக்கள் முன்னணி அதனை தாரக மந்திரமாக பிரச்சார படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு  இருக்கும் தன் அடையாளத்தை கட்டியெழுப்பும் உரிமை வலியுறுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கருத்தியல் போராட்டம் நடத்த இருந்த சிறிய வாய்ப்பையும் நீங்கள் உங்கள் சொந்த வங்குரோத்தை சரி செய்ய சீர்குலைத்து வருகின்றீர்கள். சமஉரிமை இயக்கத்தின் உண்மையான நோக்கமாக இருந்த இனவாதத்திற்கு எதிராக சிங்கள சமூகத்திலும் கட்சிக்குள்ளும்  கருத்தியல் போராட்டம் நடத்தும் திட்டத்தை திசை திருப்பி, நிர்வாக பிரச்சினைக்கான வெகுசன போராட்டமாக சமஉரிமை இயக்கம் சீர்குலைக்கப்பட்டுவிட்டது.
இன்று ரயாகரன் முன்னிலை சோசலிச கட்சியை இனவாத கட்சி அல்ல என்று இனங்காட்டுகின்றார். இரண்டு வருடங்களாக என் உணவுபழக்க வழக்கங்கள் உட்பட சகல விடயங்களையும் மாற்றிகொண்டு எல்லா விடயங்களிலும் இணைந்து செயற்பட்ட எனக்கு தெரியாததை, 10000 மைல்களுக்கு அப்பால் இருந்து மாதத்திற்கு ஒரு முறை ஸ்கைப்பில் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கதைக்கும் ரயாகரன் கண்டுபிடித்தது தான் நகைச்சுவையான விடயம். இனவாதம் என்று தமிழ் மக்கள் மீது ஆயுததாக்குதல் நடத்துவதையோ அவர்களுக்கு எதிராக கடும் சொற்களை பிரயோகித்து உரிமைகளை மறுப்பதையோ தான் சொல்வீர்கள் என்றால், முன்னிலை சோசலிச கட்சி இனவாத அடிப்படையை கொண்ட கட்சி அல்ல தான். சம்பிக்க ரணவக்க கத்தியை காட்டி செய்வதை முன்னிலை சோசலிச கட்சியினர் சொக்லேட்டை காட்டி செய்ய முற்படுகின்றனர். சிந்தனையும் நோக்கமும் ஒன்று தான் அணுகுமுறை தான் வேறுப்பட்டது. அந்த நிலைப்பாட்டை கட்சிக்குள்ளேனும் தோற்கடிக்க இருந்த சிறிய வாய்ப்பை இல்லாத செய்த பெருமை புதிய சனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் வங்குரோத்து தனத்தினையே சாரும். இந்த பஸ் லண்டன் போகும் லண்டன் போகும் என்கின்றீர்கள்... அதுகுறித்த சில கேள்விகளை வெகுசனங்களின் சார்பில் எழுப்பியுள்ளேன். அதற்கு பதிலளியுங்கள். இல்லாவிட்டாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. வெள்ளைதோல் போர்த்த நரி தானே அம்பலமாகும். உங்கள் நிலைப்பாடுகளும் வலியுறுத்தல்களும் நேர்மையானது என்றால் , சமஉரிமை இயக்கம் என்றதன் பேரில் நீங்கள் கள்ள சவாரி செய்ய வில்லை என்றால், பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என அழைக்கின்றேன் உங்களை.

Post Top Ad

My Instagram