Post Top Ad

10:54 AM

இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும்

by , in
பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்களுக்கு  மட்டுமல்ல ஆண்களுக்கும் இதே நிலை தான்.

சிறிலங்கா பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கெடற் பயிற்சிகள் கூட, தற்போது தமிழ் இணையத்தளங்களில் வெளியிடப்படும் காணொளியில் காண்பிக்கப்படுவதை விட கடினமானதாக
இருக்கும். கப்டன்களாக இருக்கும் உயர்தர வகுப்பு படிக்கும் அண்ணாமார்களுக்கு வணக்கம் சொல்ல சில நொடிகள் தாமதித்தாலும், மைதானத்தை சுற்றி 10 முறை ஒட வேண்டும். இல்லாவிட்டால் 10 அடிகள் பின்புறத்தில் விழும். 

இராணுவ பயிற்சிகள் என்பது இதை விட கொடுமையானவை. எதிரில் யார் எதற்காக நின்றாலும் சரி ஆயுதாரியோ நிராயுதபாணியோ கவலைபடாமல், சுடு என்று உத்தரவிட்டால் சுட வேண்டும். துப்பாக்கி ரவை தசையை துளைக்கும் போது தெறிக்கும் இரத்தத்தை கண்டு வெற்றி பிரமிதம் கொள்ள வேண்டும். சுடப்பட்டவனின் மரண கதறலை வாழ்த்து ஒலியாக ஏற்று மேலும் முன்னேற வேண்டும். அது வெலிவேரியாவில் தண்ணீர் கேட்ட சிங்களவராக இருந்தாலும் சரி வன்னியில் தனிநாடு கேட்பவராக இருந்தாலும் சரி....  இதற்கு தயார் படுத்த வேண்டும் என்றால் பயிற்கள் அதற்கேற்ற வகையில் தான் இருக்கும்.

இப்படியிருந்தும் இராணுவத்திற்கு ஆள்கிடைப்பது குறைவதில்லை. காரணம்... 13 வருட பாடசாலை கல்வி, 4 வருட பட்ட படிப்பின் பின் 2 வருடங்கள் பயிற்சி என்ற பெயரில் 8000 ரூபாவிற்கு நேர காலம் இல்லாமல் குப்பை கொட்டிய பின் கிடைப்பதை விட அதிகமாக குறைந்த கல்வி தகமையுடன் கிடைக்கும் சம்பளம். கல்வி தகைமை குறிக்கப்பட்டாலும்... அது வெறும் கண்துடைப்புக்கு தான் ... அதன் காரணமாக தான் அனுராதபுரம் குருணாகல் மற்றும் சிங்கள சமூகத்தின் கீழ் சாதியினர் என்று  குறிப்பிடப்படும் மக்கள் வாழும் கேகாலை ஆகிய பின்தங்கிய இடங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இராணுவத்தில் இணைகின்றார்கள். 

சம்பளம் சலுகைக்கு அப்பால் இராணுவ பயிற்சி, கட்டுபாடுகள் ஏற்படுத்தும் விரக்தி தேசப்பற்றின் பெயரால் மூடி மறைக்கப்படும். ஒரு நாளும் படித்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியவர்களோ, பன்னாட்டு தனியார் தனியார் கம்பனிகளில் வேலைசெய்பவர்களோ இந்த இராணுவத்தில் இணைவதில்லை. சிப்பாய்களாக இணைபவர்கள் சமூகத்தில் அடித்தட்டை சேர்ந்தவர்கள்.

தமிழ் சமூகத்திலிருந்து இராணுவத்திற்கு சிலரை இணைத்து கொள்ள அரசு தீர்மானித்த போது, தேசப்பற்று எனும் ஏமாற்று தந்திரம் கைகொடுக்க வில்லை. ஏற்கனவே பொலிஸ் பயிற்சிக்கு இணைத்துகொள்ளப்பட்ட தமிழ் இளைஞர்கள் இடையிலேயே தப்பியோடி அவுஸ்திரேலியாவிற்கு படகேறிய  அனுபவங்கள் அரசிற்கு உண்டு. ஆகவே தான் பெண்களை இலக்கு வைத்தார்கள். இன்றை சூழலில் 30000 சம்பளம் என்பது வறுமையில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிர்பார்க்க முடியாததாகும். முன்பு இவர்களை இலக்கு வைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் படையெடுத்து ஆசை காட்டி கணிசமானவர்களை சுதந்திரவர்த்தக வலயத்திற்கு அழைத்து சென்று விட்டன. 

பண்டிகை கால விடுமுறைகளின்  போது கொழும்பிலிருந்து பளை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படும் புகை வண்டியில் பயணித்தீர்கள் என்றால், புறக்கோட்டையில் வாங்கிய ஆப்பிள் ஒரஞ் பழங்கள் தன் தம்பி தங்கையர்க்கு வாங்கி விளையாட்டு பொருட்களுடன் கையில் சீன தயாரிப்பு தொலைபேசி மற்றும் தளும்புகளுடன் பயணிக்கும் இவ்வாறான பெண்களை தாராளமாக காணலாம். ( இவர்கள் வாங்கி செல்லும் விளையாட்டு பொருட்களில் பிரதானமானது விளையாட்டு துப்பாக்கியாகும்). ஆசனம் பதிவு செய்து உறங்களிருக்கையில் பயணிப்பவர்களின் கண்களுக்கு இவர்கள் தென்படுவதில்லை.  

குடும்ப வாழ்வாதாரத்தை  இழந்து தொழில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கும் இப்பெண்கள் வேறு வழியின்றி இராணுவத்தில் இணைந்திருக்க வேண்டும். இதன் பின்னால் இராணுவத்தின் நிர்ப்பந்தமும் நிச்சயம் இருந்திருக்கும்.

உலகின் எந்த இராணுவமாக இருந்தாலும் சித்திரவதைகள் என்பது இல்லாது இருக்காது. சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் எண்ணிக்கை இதற்கு சாட்சி. பெண்களும் ஆண்களும் அதிக மன அழுத்தங்களுக்கும் பாலியல் சார் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பது எங்கும் நடப்பது தான். இப்படியிருக்கும் போது தான் இராணும் தமிழ் பெண்களை கொடுமை படுத்துகின்றது என்ற குற்றசாட்டு முன் வைக்கப்படுகிறது. இதற்கு சர்வதேச சமூகத்திடம் நீதியும் கோருகின்றார்கள்.

நீதி கோரப்படும், சர்வதேச சமூகத்திற்கஞ தலைமை அரசின் இராணுவம் என்ன செய்தது...? குவாட்டமாலா சிறைசாலையில் பெண்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தது... குதவாயிலில் பிளாஸ்டிக் குழாயை நுழைத்து அதற்குள் முட்கம்பிகளை செலுத்தி பின் மிளாய் தூளையும் விட்டு குழாயை வெளியே எடுத்துவிடுவார்கள்... முட்டையை அவிய விட்டு யோனிக்குள் விட்டுவிடுவார்கள்.. வீட்டில் முட்டை அவித்திருந்தால் ஒடு உரிக்க படாத முட்டை எவ்வளவு சுடும் என்பதும் எவ்வளவு நேரம் சூடாக இருக்கும் என்றும் தெரிந்திருக்கும்... இப்படி கொடுமை படுத்திய அமெரிக்க அரசின் தலைமையிலான சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என்று எப்படி கணக்கு போடுகின்றார்களோ தெரியவில்லை.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்து கொள்ளப்பட்டார்கள் என்று செய்தி வெளிவந்த கணத்திலேயே அவர்களை இந்த சமூகமும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மானபங்க படுத்தி விட்டார்கள். வெளிநாட்டு பெண்கள் என்றாலே பலபேருடன் சுற்றி திரிபவர்கள் என்று கணக்கு போடும் சமூகம் தானே இது... இராணுவத்தில் பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஆருடம் கூறும் அல்லது கற்பிதம் செய்யுமளவிற்கு மனவிகாரம் கொண்டவர்கள் இங்கு இருக்கின்றார்கள். விடுதலை புலிகள் குனியவைத்து சுட்டிருக்காவிட்டலால் பெண் போராளிகளை பற்றியும் இப்படி தான் கதைத்திருக்கும் சமூகம். தென்னிலங்கையில் விடுதலை புலிகளின் முகாம்களில் நடந்தவை என ஆபாச பட இறுவெட்டுகள் சிங்கள மொழி குரல் பதிகளுடன் உலாவியும் இருந்தன.

உண்மையில் பெண்கள் இராணுவத்தில் பாலியல் தேவைக்காக வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தி இராணுவ முகாம்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசை அடிப்பணிய வைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விடயம் அல்ல. ஆனால் ஒரு பரபரப்பை கிளப்பி இலாபம் தேட முனையும் ஊடகங்களின் செயற்பாடுகள் கடுமையாக கண்டிக்க தக்கது. வெட்கி தலை குனிய வேண்டியது. ஒரு வேளை அவ்வாறான வன்புணர்வு சம்பவங்கள் நடந்திருக்கா விட்டால் என்ன செய்யும் இந்த ஊடகங்கள். அந்த பெண்களின் நிலை என்ன? இப்படி செய்தி பரப்பி விடுவதால் அந்த பெண்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் மானபங்க படுத்தி வருவதற்கு என்ன தண்டனை? இப்படி ஈனதனமாக போராட வேண்டிய நிலையிலா தமிழ் சமூகம் இருக்கின்றது. 

இன்று குமுறும் இந்த ஊடகங்கள் யுத்தம் முடிந்த காலத்தில் எங்கு இருந்தன.... 2009 காலப்பகுயில் இருந்து இன்று வரை நான் வவுனியா பேருந்து நிலையத்தில் நிற்பதில்லை.

அந்த காலப்பகுதியில் தடுப்பு முகாமகளிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வவுனியா அநுராதபுர வைத்திய சாலைக்கு வந்து செல்பவர்கள் கணாமல் போனவர்களை தேடி ஜோசப் முகாம்க்கு வருபவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்கள் என வவுனியா பேருந்து நிலையம் நிறைந்திருக்கும். பெரும்பாலும் உறவுகளை தொலைத்துவிட்டு நிர்கதியான நிலையில் இருக்கும் பெண்கள் தான் நிறைந்திருப்பார்கள். இவ்வாறு நலிவடைந்த நிலையில் பலவீனமான பெண்களை குறி வைத்து பல்சர்களில் பேருந்து நிலையத்திற்கு ஆண்கள் கூட்டம் காலை முதல் படையெடுக்கும். வன்னி அயிட்டம் என்பது தான் இந்த பெண்களை குறிக்கும் சொல். பணத்தை காட்டி உதவுவதாக ஏமாற்றி கெஞ்சி என பலவழி முறைகளை கையாண்டு இந்த பெண்களை தங்கள் பாலியல் தேவைக்கு பயன்படுத்த வயது வித்தியாசமின்றி முனைந்தவர்கள் எத்தனை பேர். என்றுமே யுத்த களத்திற்கு சென்றிராத ஞாயிறு வீரகேசரியில் யுத்த செய்தி வாசித்து பெருமிதம் பேசிய இந்த நடுத்தர வர்க்கத்தை யாரும் அன்று கண்டு கொள்ளாதது  ஏன்? இந்த விடயம் வவுனியா நகரத்தில் வசிப்பவர்கள் உட்பட பலருக்கு நன்கு தெரியும்.... வேடிக்கை என்னவென்றால் வன்னி அயிட்டத்தை மடக்குவம் என்ற வெளிமாவட்டங்களிலிருந்து கூட பலர் படையெடுத்திருந்தார்கள். இவ்வாறான விடயத்திற்கு என்றே பல வீடுகள் இருந்தன. பல இசுலாமிய தமிழ் இளைஞர்கள் புலானாய்வாளர்கள் என்ற போர்வையில் பேருந்து நிலையத்தில் பெண்களை அச்சுறுத்தி பாலியல் தேவைக்கு அழைத்து சென்ற போது ஏன் இந்த ஊடகங்கள் வாய் மூடியிருந்தன?

வவுனியா பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னாள் ஏ9 வீதியில் தரனி ரெஸ்ட் என்ற விடுதி இருக்கின்றது. இங்கு தான் முகாம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டது.அச்சுறுத்தி அழைத்துவரப்பட்டவர்களை விட ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த ஏமாற்று வேலையை அதிகம் செய்தவர்கள் மறத்தமிழர்கள் தான். பொலிஸ் இராணுவ ஆசிர்வாதம் இன்றி இந்த விடயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விடயங்கள் சில தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

ஒட்டு மொத்தத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற பெண்களை வன்னி அயிட்டங்கள் என்று கொச்சைபடுத்தி தமிழ் சமூகம் மானபங்கபடுத்திய போது யாரும் கண்டு கொள்ளாதது ஏன்? வன்னியில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அந்த சூழலில் வாடகை அறைகளில் தங்கியிருந்த மாணவிகளை அறை உரிமையாளர்களும் சுற்று வட்டாரமும் எண்ணத்தினாலும் பார்வையினாலும் மானபங்க படுத்தியதை யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?

ஒட்டுமொத்தமாக யுத்தத்திற்கு பின் தமிழ் பெண்களை இராணுவத்தை விட தமிழ் சமூகம் தான் அதிகமாக மானபங்கபடுத்தியது. மிக கேவலமான முறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை மானபங்க படுத்திய தமிழ் சமூகம் அதனை கண்டுகொள்ளாத ஊடகங்கள் அரசியல் தலைமைகள் இன்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை மானபங்கபடுத்தி குறுக்கு வழியில் இலாபம் தேட முனைகின்றார்கள்.

யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள் தான். இன்று யுத்தத்திற்கு பிந்திய 5 ஆண்களில் புதிய நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. இவர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை அதிகம் இருக்கின்றது. ஆனால் அதை மறந்து வெளிநாடுகளில் குடியேறுவது தொடர்பாக தான் அவர்கள் சிந்திக்கின்றார்கள். அவர்களை தட்டியெழுப்பி சமூக கடமையை ஆற்ற நிர்பந்தம் செய்ய வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உண்டு. அதை செய்வதை விடுத்து அப்பாவி அடிதட்டு மக்களை மானபங்க படுத்தி வெற்றி பெற எத்தணிக்க கூடாது.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைந்ததிற்கு விசனம் வெளியிடுபவர்கள், இதே இராணுவம் தங்கள் முகாம்களில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் பெண்  மாணவிகளுக்கு பயிற்சி வழங்கும் போதோ அல்லது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி இராணுவ பதவி வழங்கும் போதோ அல்லது அவர்கள் பயிற்சிகளில் காயமுறும் போதோ மனஉளைச்சலுக்கு ஆளாகும் போதோ இவ்வாறான செய்திகள் வருவதில்லை. ஏனென்றால் இந்த நடுத்தரவர்க்க சிந்தனையாளர்களுக்கு தான் மானமும் கற்பும் உரியது. அடித்தட்டை சேர்ந்தவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. எதை சொல்லியும் அவர்களை கொச்சை படுத்தலாம். 

உண்மையில் இராணுவத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது ஊர்ஜிதம் என்றால் மக்கள் பிரதிநிதிகள் என்று நூற்று கணக்கில் இருப்பவர்கள் நியாயம் கிடைக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் ஒன்றை இராணுவ முகாமின் முன்னாள் ஆரம்பிக்கட்டும். நீங்கள் தைரியமாக இறங்கினால் மக்கள் பின் தொடர்வார்கள். அதற்குரிய வேலைகளை செய்வதை விடுத்து விட்டு ஊடகங்கள் இவ்வாறு செய்தி பரப்பி இலாபம் தேடும் ஈனபிழைப்பை நடத்த கூடாது. 
10:13 PM

பெண்களின் உலகில், அரசியல் பொன்னையர்களாகும் ஆண்கள் அனைத்துலக பெண்கள் நாள் செய்தி

by , in
சிறிலங்காவில் இடதுசாரிக் கட்சிகள் உட்பட பலர் பெண்கள் தினம் தொடர்பாக அளவு கணக்கின்றி எழுதி தள்ளியிருக்கின்றார்கள். அவையனைத்தும் சிறிலங்காவில் பெண்கள் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருப்பதாகவே கூறுகின்றன. இவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வழிவகைகள் குறித்து பலர் பக்கம் பக்கமாக எழுதியிருக்கின்றார்கள்.
நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது முதலாளித்துவ சமூகத்தில் என்பதை இலகுவாக மறந்துவிடும் பலர் சம்பிரதாய முறையில் முதலாளித்துவ அமைப்புகளினால் கற்பனையாக உருவாக்கப்பட்ட நாட்காட்டி தினங்களின் சதியில் சிக்கி மார்க்சிய புரட்சிகர கோசங்களை விட்டு விலகி பெண்களின் உரிமைகளிற்காக போராட கிளம்பி விடுகின்றார்கள். இவ்வாறானவர்கள் பெண்கள் தினத்தில் பெண்னுரிமை தொடர்பாகவும்,
தந்தையர் தினத்தில் தந்தையர்களின் உரிமை தொடர்பாகவும், எயிட்ஸ் தினத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் உரிமைகள் குறித்தும், மேதினத்தில் தொழிலாளர்களின் உரிமை குறித்தும் கதைக்கின்றார்கள். இந்த புரட்சிகர இடதுசாரிகள் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தன்னையும் ஏமாற்றி, ஏனையவர்களையும் ஏமாற்றுகின்றார்கள். சிறிலங்காவில் தற்போதைய நிலையில் பெண்கள், தற்போது சந்தை காரணிகளிற்கு அமைய பரிமாற்று பண்டம் என்பதை தெரிந்திருந்தும், தெரியாதது போல் அயோக்கிய தனமாக இவர்கள் செயற்படுவது மர்மம் தான். அந்தவகையில் இவ் சம்பிரதாய புரட்சியாளர்கள் மனநோயாளர்களே ஆவார்கள். (உண்மைநிலை என்பது தனது மனதில் உருவாக்கப்பட்டதே ஒழிய நடைமுறையில் இருக்கும் உண்மைநிலை அல்ல). 


இந்த உண்மை நிலையை புலபுடுத்துவதற்காக அண்மைய உதாரணம்;, சில காலங்களுக்கு முன் மிக பிரபல்யமாகவிருந்த ஒரு பாம்பு பெண் ஆவார். அவர் குறித்து தெரியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு பிரபல்யமானவர் அவர். பாம்பொன்றை கழுத்தில் தாங்கியவாறு நீதிமன்றத்திற்கு வந்த அவர் அப்பாம்புடனே பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். சிறிலங்காவில் பெண்கள் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருப்பதாக கூறும் பழைய பெண்ணியவாதிகளிற்கும் பழைய மார்க்சியவாதிகளிற்கும் தவறவிட்ட அல்லது கண்டுகொள்ளாத உண்மைநிலை இதுவாகும். உண்மையில் தற்போது  ஆண்கள் பெண்களின் ஆதிக்க நிலைக்குள் தான் இருக்கின்றார்கள். இவ்வாறு அரசியல் ரீதியாக ஆண்கள் பொன்னையர்கள் ஆகி இருப்பதினால் தான் கழுத்தில் பாம்புடன் பெண்களால் வலம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பு பெண் கழுத்தில் பாம்புடன் நடமாடும் போது எந்த ஒரு மிருக வதை எதிர்பாளர்களும் எதிர்த்து குரல் கொடுக்காமை தற்செயல் நிகழ்வா என தெரியவில்லை. இறுதியில் பெண்களின் முன்னால் பாம்பும் ஒடுக்கப்படும் நிலைக்கு நிலை சென்றுள்ளது.
சிறிலங்காவில் ஆணாதிக்கத்தினால் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் தொடர்பாக பழைய பெண்ணியவாதத்தின் பிரதான கருப்பொருள,; ஆண் பாலினரால் பெண்கள் வலுவற்றவர்களாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதாகும். ஆனால் தற்போது ஆண்கள் இருந்த அந்த இடத்திற்கு கையடக்க தொலைப்பேசிகள் வந்துள்ளன. இது தொடர்பாக அவதானம் செலுத்தும் பெண்ணியவாதிகள் அல்லது இடதுசாரிகள் சிறிலங்காவில் இல்லை என்பதுடன் அவ்வாறு யாரேனும் இருப்பார்களாயின் அது தொடர்பாக கலந்துரையாடலுக்கு வரவேண்டும். 
அன்றாட வாழ்வில் நாம் காணும் உண்மையாகவே பெண்கள் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறை என்ன? பெண்களினால் வர்த்தக சந்தை ஆட்கொள்ளப்பட்டிருப்பதுடன் , சந்தையினால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் பெண்களை இலக்கு வைத்தே ஆகும்.;. கார்கில்ஸ் புட்சிட்டி, கீர்ஸ் சுபர் மார்க்கட், பல்லங்காடிகள் தொடக்கம் வங்கி காப்புறுதி நிறுவனங்கள், ஓடேல், மக்டொனால்ட், கே எப் சி .... என எல்லா நிறுவனங்களிலும் பெண்களின் வகிபாகம்; தொடர்பாக சற்று சுயசிந்தனையுடன் நோக்கி ஆராய்ந்து பாருங்கள். ஆகவே பெண்கள் தினத்தில் துன்பபடும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக கதைப்பவர்கள் நிச்சியமாக சுய சிந்தனை அற்றவர்களாகவே இருக்க வேண்டும். முதலில் நாட்காட்டியிலிருந்து பெண்கள் தினம் என்பதை நீக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு. 
கடந்த 30 வருட காலம் நடந்த தமிழ் தேசிய விடுதலை போராட்டம் யுத்தம் மூலம் தோற்கடிக்கப்படும் வகையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை வளர்த்துவிட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் ஆவார்கள். குறிப்பாக முள்ளிவாய்க்காலில் பேரானந்தம் கண்டு , தமிழர்களின் இரத்தமும் சதையும் கலந்த பாற்சோற்றை சுவைபார்த்து மகிழ்ந்த போது அதிகம் பங்களிப்பு செய்தவர்கள் பெண்கள் ஆவார்கள். (இதே போல் சில மாதங்களிற்கு முன் ஹியுகோஸ் சாவேசின் மரணத்தை பிரச்சாரபடுத்தி பெரிதாக தூக்கி பிடித்தவர்கள் சாவேசை லெனினிற்கு நிகரானவராக்கினார்கள். ஆனால் தேசிய விடுதலை போராட்டத்திற்கு தலைமை வகித்த சாவேஸ் மார்க்சியவாதி இல்லை என்பதை சிறிலங்காவில் மார்க்சியவாதிகளாக வலம் வருபவர்களிற்கு தெரியவில்லை. சாவேஸ் இனவாதத்திற்கு எதிராக போராடியவர். இனவாதத்தை தோற்கடித்தவர். ஆனால் சிறிலங்காவில் சாவேஸ் குறித்து அதிகமாக கதைப்பவர்களும் அவருக்கு மரியாதை செலுத்துபவர்களும் மோசமான இனவாதிகள் ஆவார்கள்).
இன்றும் வேலைத்தளங்களில், தொழிற்சாலைகளில் கண்ணீர் சிந்தும் பெண்களிற்காக குரல் கொடுப்பவர்கள், உண்மையில் பெண்களை சந்திக்க நேருவது நவீன வியாபார சந்தையில் தான். நாம் வாழ்வது முதலாளித்துவம் எனும் மனிதர்களையும் மனிதத்தையும் படுபாதாள குழிக்குள் தள்ளிவிடும் ஆபத்தான சமூக முறை என்பதனை ஒருபோதும் ஏற்க விரும்பாதவர்களாக இருப்பதும் பெண்கள் தான். அநேக பெண்களிற்கு நடைமுறையிலிருக்கும் சமூக முறை பிரச்சினையே இல்லை. அதன் அடுத்த நகைப்பிற்குரிய நிகழ்வு என்னவெனில் முதலாளித்துவ சமூகத்தை விட உயர்ந்த சமூகத்தை உருவாக்கிட போவதாக கூறி புரட்சிகர அரசியல் செய்ய வரும் பலரை இறுதியில் சேலைமடிப்புகளில் சிதற வைத்து, வடிவேலுவின் அரசியலிற்கு தள்ளி அரசியல் பொன்னையர்களாக்கிட   பெண்களால் முடியும்.
உண்மையில் பெண்கள் தினத்தில் நாம் உண்மையில் போராட வேண்டியது பெண்களின் உரிமைக்ககாகவா? அல்லது பெண்களினால் பெரும் அழுத்தத்திற்கும் மனவிகாரத்திற்கும்  ஆளாகியிருக்கும் ஆண்களி;ன் உரிமைகளிற்காகவா?   பெண்கள் தினம், சிறுவர் தினம் என 365 நாட்களையும் ஏதோ ஒன்றிற்கான முக்கியமான நாளாக மாற்றியிருப்பது யார்?  இந்த தினங்களில் புரட்சியாளர்கள் சிக்குண்டு முன்வைக்கும் கோசங்களினால் முதலாளித்துவத்தை மாற்றிட முடியுமா? முதலாளித்துவத்தை மாற்றிடுவது இவ்வளவு இலகு என்றால் எதற்கு புரட்சிகர இயக்கம்? இதை மார்க்சியவாதிகள் புரட்சியாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களிற்கு வீட்டுபாட வேலையாக கையளிக்கின்றேன். இதை பொய் என நிருபிக்க முடியுமானால்.....

Post Top Ad

My Instagram