Post Top Ad

பின் நவீனத்துவ பிரச்சினைக்கான பதில்

பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என நான் எழுதிய குறிப்பிற்கு முகபுத்தகத்தில் பின்னூட்டமூடாக எதிர்வினையாற்றியிருந்த தோழர் சிறிரங்கன் அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து பதிலளிக்குமாரு கோரியிருந்தார். தமிழ் இடதுசாரிகளில் பரந்துபட்ட தேடல் உடையவரான தோழர் சிறிரங்கன் மீது சற்று பொறமை கலந்த மரியாதை எனக்குண்டு. அவரின் கேள்வியில் தொனிபொருளாக இருந்தது சிறிலங்காவின் சமூக போக்கின் வழியே பின்நவீனத்துவம் தேவையற்ற ஒரு கலந்துரையாடல், அதுகுறித்து கண்டுகொள்ள தேவையில்லை என்பதாகும். இதற்கு முன்பும் சில புலமையாளர்கள் இதே கருத்தை கூறியிருக்கின்றார்கள். ஆனால் அவையெல்லாம் சில தப்பிபிழைத்தலிற்காக மேற்கத்தைய மொழிபெயர்ப்பாக திணிக்க முயற்சிக்கப்ட்ட பின்நவீனத்திற்கான எதிர்வினைகளாகும்.

பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற கேள்விக்கு நான் வரையறுத்து விடையளிக்க போவதில்லை. என்னை விட கேள்வியை எழுப்பிய தோழர் சிறிரங்கனுக்கு அதனை பற்றி நன்கு தெரியும். அவரின் கேள்வியின் நோக்கம் பின்நவீனத்துவத்தை  நான் எவ்வாறு நோக்குகின்றேன் என்பதாகவே நான் கருதுகின்றேன். எதன் ஒன்றின் வரைவிலக்கனங்களும் எல்லா இடங்களிற்கும் பொருத்தமான விளக்கத்தை தரபோவதி;ல்லை. ஒரு சிறு புரிதலை மாத்திரமே தரும். அவை சமூகத்தில் கையாளப்படும் போக்கை ஆய்வு செய்தலே சரியானதாகும்.

பின்நவீனத்துவம் என்பதினை முதலாளித்துவத்தின் பண்பாட்டு கோலமாகவே நான் காண்கின்றேன். மரபுகளிற்கு எதிராக நவீனத்துவம் பிரான்சிலே கட்டமைக்கப்பட்டு மேலைநாடுகளில் பரவிய போது, அது முழுமையடையாத ஒன்றாகவே இருந்தது. நவீனத்துவ கோட்பாட்டாளரான டெக்கார்ட்ஸ் உலகை தேடியறிய முற்படும் போது தனக்கும் உலகிற்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படுவதாகவும், அதன் காரணமாக தன்னையும் உலகையும் தனிதனியே தேடியறிய நேரிட்டதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக இவர் வெற்றிடம் ஒன்றை உருவாக்கி சென்றார். இவ்வாறாக நவீனத்துவத்திலே ஏற்பட்ட வெற்றிடமே பாசிசத்தையும், பின் நவீனத்துவத்தையும் உருவாக்கி சென்றது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஒவ்வொரு தடவையும் எதிரி ஒருவன் உருவாக்கப்பட்டான் அல்லது தேவைப்பட்டான். நவீனத்துவத்தின் வெற்றிடத்திற்கு மாற்றொன்றை தேட முற்பட்டவர்கள் பாசிசம் நோக்கி சென்றனர். நவீனத்துவத்தின் வெற்றிடத்தை கடந்து செல்ல முற்பட்டவர்கள் பின்நவீனத்துவம் நோக்கி சென்றனர். 

இதனை அரசியல் ரீதியான உதாரணங்கள் மூலம் பார்போமாயின் இத்தாலியின் முசோலினியால் நவீனத்துவத்தின் வெற்றிடத்தை நிரப்ப கம்யுனிஸ்ட்டுக்களை எதிரியாக்கிப்பட்டனர். இதன் காரணமாக இத்தாலியில் ஆயிரக்கணக்கான கம்யுனிஸ்ட்டுக்கள் கொல்லப்பட்டதை அனைவரும் அறிவோம். ஜேர்மனியில் நிலைமை வேறு மாதிரியானதாகவிருந்தது. பாரிய பொருளாதார நெருக்கடிகளும், வேலைவாய்ப்பின்மையும் தலைவிரித்தாடியது. இந்த நெருக்கடிக்கு யூதர்கள் காரணமாக்கப்பட்;டார்கள்.
இவ்வாறான நவீனத்துவத்தின் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சிகள் தோல்வியடைந்தமையும் பாசிசத்தை நோக்கி சென்றமையும் மக்களின் தீரா வெறுப்பை பெற்று கொண்டமையும், நவீனத்துவத்தின் வெற்றிடத்தை கடந்து செல்ல முற்பட்டவர்களை பின் நவீனத்துவம் நோக்கி அழைத்து சென்றது. இந்த காலகட்டத்தில் பின்நவீனத்துவம் என்பது சந்தை நோக்கில் வலிந்து உருவாக்கப்பட்து என்று கூறினாலும் மிகையாகாது.
இந்த போக்கிற்கு எல்லாம் அடிப்படையாக அமைந்தது, நெருக்கடிகளை முதலாளித்துவத்தின் நெருக்கடிகளாக காணத்தவறியமையாகும் அல்லது முதலாளித்துவத்தின் நெருக்கடிகளாக காண்பதை திசை திருப்பும் நடவடிக்கைகளாகும். ஆக பின்நவீனத்துவம் என்பது முதலாளிதுவத்தின் நெருக்கடிகளிலிருந்து எதிர்ப்பலைகளை சமரசபடுத்தி திசைதிருப்பி பாதுகாப்பான இடத்தில் வைக்கும் நடவடிக்கைகளின் தொகுப்பும் அதனால் முதலாளிதுவ பண்பாட்டு கோலத்தில் ஏற்பட்ட மாற்றமும் ஆகும். பின்நவீனத்துவமானது முதலாளித்துவத்தின் நெருக்கடிகளை மூடிமறைப்பதாகவும் அதே வேளை கம்யுனிசத்தை எதிர்பதாகவும் அல்லாமல் இருப்பது பல மாயைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அதே வேலை முதலாளித்துவமானது இந்த பண்பாட்டு கோலத்தினால் தார்மீக பொறி ஒன்றிற்குள் சிக்கியும் உள்ளது. இந்த பொறியை உடைப்பதற்கான வழியாக இதுவரை பாசிசமும் ஏதேச்சதிகாரமும் மட்டுமே இருக்கின்றது. இந்த பொறி உடைக்கப்படாவிட்டால் முதலாளிதுவத்தின் இறுதி பண்பாட்டு கோலமாக பின்நவீனத்துவமே அமையும்.

இவ்வாறு நெருக்கடிக்குள்ளான நவீனத்துவத்திற்கு மாற்றொன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகெங்கும் நடந்தன. சீன நவீனத்துவம், இந்து நவீனத்துவம், இலத்தீன் நவீனத்துவம், சிங்கள நவீனத்துவம் என பலவற்றை அடையாளபடுத்தலாம். இவ்வாறாக உருவாகிய மாற்று நவீனத்துவங்கள் அனைத்தும் அங்கசம்பூர்னமானவைகளாக இருந்தன. நவீனத்துவம் அங்கசம்பூர்வமானதாக அடையாளப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிராளி ஒருவன் உருவாக்கப்பட்டான். எதிரியை கொல்லுவது அல்லது எதிரியின் இறப்பே மாற்று நவீனத்துவங்களை அங்கசம்பூர்வமானதாக்கியது. 

காலம் காலமாக சிறிலங்காவின் சிங்கள தேசியவாதிகள் சிங்கள மரபுகளை உடைத்து சிங்கள நவீனத்துவத்தை மேற்கத்தைய நவீனத்துவம் மீதான விமர்சனங்களை முன்வைத்தே உருவாக்கினர். இ;வ்வாறு உருவாகிய சிங்கள நவீனத்துவம் முழுமை பெறாமைக்கு காரணமாக தமிழர்கள் உருவக படுத்தப்பட்டார்கள். சிங்கள நவீனத்துவத்தின் முழுமை தமிழர்களின் அழிவிலிருக்கின்றது என்பதனையே சிங்கள நவீனவாதிகள் வலியுறுத்திவருகின்றனர். இந்த நவீனவாததின் முழுமையை தமிழர்களின் அழிவிலிருந்து உருவாக்க விரும்பாதவர்கள் பின்நவீனத்துவத்திற்குள் சென்றார்கள். இதற்கான வாய்ப்புக்களை போர்காலத்தில் உள்நுழைந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் தாராளமாக ஏற்படுத்தியிருந்தனர். அல்லது சுமூகமான சந்தை நிலவரங்களுக்காக உள்நுழைக்கப்பட்டார்கள்.

இந்த பின்நவீனத்துவாதிகளின் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான தீர்வாக அமைவது புதிய ஆத்மார்த்த  இயக்கங்கள் ( New Spiritual Movements)   ஆகும். இன்று தெருவிற்கு தெரு உருவாகும் தியான அமைப்புக்கள், சென் தத்துவம், தவோவாதம் என பலவகையான அசைவுகள் ஏற்பட்டிருப்பதும் இதனாலேயே ஆகும்.. இவை எல்லாம் பின் நவீனத்துவ இயக்கங்கள் ஆகும். இது பின் முதலாளித்துவத்தின் பண்பாட்டு கோலம். 

இவ்வகையான பல பின்நவீனத்துவ இயக்கங்கள் பலவற்றை தமிழ் சூழலிலும் காணலாம். ரவிசங்கரின் வாழும் கலைபயிற்சி, அம்மாபகவான் இன்னும் பல கிறிஸ்தவ உதிரி திருச்சபைகள் என பலவற்றை குறிப்பிட முடியும். இவை அனைத்தினதும் நோக்கம் முதலாளித்துவத்தின் நெருக்கடியை திசை திருப்பி பின்நவீன மாயைக்குள் சிக்க வைக்கும் நடவடிக்கைகளாகும். பின்நவீனத்துவம் என்பது சிறிலங்கா போன்ற நாடுகளில் முதலாளித்துவத்தின் நெருக்கடியை திசைதிருப்பி சந்தைகளை பிரச்சினையற்றதாக வைத்திருக்கும் முதலாளித்துவத்தின் முயற்சியாகும். மிகவும் சூட்சுமான முறையில் பின்நவீனத்துவம் , முதலாளித்துவத்தின் நெருக்கடிகளில் இருந்து மனிதர்களை திசைதிருப்பும் வகையில் குடும்பங்களிற்குள்ளும் உள்நுழைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சிறிலங்கா சமூகத்தில் கோட்பாடாக அல்லாமல் முதலாளித்துவத்தின் நெருக்கடியை மறைத்து சந்தையை பாதுகாக்கும் பின் முதலாளித்துவ பண்பாட்டு கோலமாக இயங்குகின்றது. 

சிறிலங்காவில் 90 களிற்கு பிறகு மார்க்சிய இயக்கங்கள் எழுந்து நிற்க முடியாவண்ணம் வலுந்விழந்தமைக்கான காரணங்களை ஆராயும் போது புலப்படும் விடயம் சம்பிரதாய மார்க்சிய தத்துவம் எம்நாட்டில் மக்களை அணித்திரட்டுவதில் குறைபாடுடையதாகவிருக்கின்றது என்பதாகும். மக்களுக்கு முதலாளிதுவத்தின் விமர்சனங்களை விளக்கி கூறும் போது அதனை அவர்கள் மறுக்கவில்லை, ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் நீங்கள் சொல்லும் சமவுடமையை அடைவது சாத்தியமில்லை என்று புறகணிக்கின்றார்கள். அதாவது சம்பிரதாய மார்க்சியம் முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களை அணித்திரட்டுவதற்கு போதுமான வாய்ப்புக்களை வழங்கிட வில்லை. இங்கு தான் பின்நவீனத்துவத்தின் அபாயகரமான தன்மை வெளிப்படுகிறது. பின்நவீனத்துவ வாழ்க்கை கோலம் மார்க்சியத்தை எதிர்க்கவில்லை. அரவனைத்து தனக்குள் உள்வாங்கிறது. ஏழாம் அறிவு திரைபடத்தில் டொங்லீ செய்வது போல் மார்க்சியம்; உள்வாங்கப்படுகிறது. இலங்கையின் பாரம்பரிய இடதுசாரிகளின் சரணாகதி அரசியலை இவ்வாறே நோக்க வேண்டும். இதிலிருந்து மீள்வதற்கு பின்நவீனத்துவ சமூக கோலத்தை விளங்குவதும் அதற்கேற்ற வகையில் மக்களை அணித்திரட்ட மார்க்சியத்தை தரவேற்றுவதும் அவசியமானதாகும். பின்நவீனத்துவ மாயையிலிருந்து மக்களை வெளிகொணர்ந்து அணித்திரட்ட மார்க்சியத்தில் தரவேற்றபட வேண்டிய விடயங்களை கொண்டதே பின் மார்க்சியம் ஆகும்.  

Post Top Ad

My Instagram