Post Top Ad

11:03 AM

பெண்களை அவதூறு செய்யும் இணையத்தளங்களை வேரறுப்போம் !

by , in

தனிச்சொத்துரிமையை பாதுகாத்து வாரிசுகளிடம் விட்டுசெல்வதற்காக நிலைநாட்டப்பட்ட ஆணாதிக்கத்தின், ஆண் மனோபாவ பொதுபுத்தி ஏற்படுத்தியிருக்கும் அடக்குமுறைகளை, கட்டுப்பாடுகளை, வரையறைகளை கேள்விக்குட்படுத்தும், சவாலிற்குட்படுத்தும் பெண்களை முடங்கச்செய்ய, அவர்களின் பாலியல் ஒழுக்கம் குறித்த அவதூறுகளும் அவர்கள் மீதான பாலியல் வசவுகளும்  ஆயுதமாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இணைய பாவனையும் சமூகவலைத்தளங்களின் ஆதிக்கமும் அவை தந்திருக்கும் பெரும் நன்மைகளிற்கிடையே இவ்வாறான அவதூறுகளுக்கும் வசவுகளுக்கும் பரந்த வாய்ப்பை  ஏற்படுத்தியிருப்பதோடு அதன் சூத்திரதாரிகள் ஒழிந்துக்கொள்ளும் வசதியையும் தந்துள்ளது.

இந்த தொழில்நுட்ப வசதிகளின் பின்னால் ஒழிந்துக்கொண்டும், சில நேரங்களில் பகிரங்கமாகவும் பெண்கள் மீதான அவதூறுகளும் வசவுகளும் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. சமூக செயற்பாடுகளில் ஈடுப்படும் பெண்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள், ஆண்களின் பாலியல் நெறிபிறழ்வுகளை அம்பலப்படுத்தும் பெண்கள், ஆணாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் பெண்கள் தொடக்கம் ஆணாதிக்க மனோபாவம் ஆண்களிடத்தில் மனவியாதிகளாக ஏற்படுத்தியிருக்கும் பெண் ஒழுக்கம் குறித்த எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு நடவாத பெண்கள், ஏன் ஆண்களின் காதல் விருப்பத்தை(?)  ஏற்றுக்கொள்ளாத பெண்கள், தனிப்பட்ட முரண்பாடுகளிற்குள்ளான பெண்கள் என வெவ்வேறு தரப்பினர் மீதும் இந்த அவதூறுகள் பரப்படுகின்றன.  ஏன் பல்கலைக்கழக விழாவில் குழுவாக நடனமாட கூடாது என்ற என்ற ஆண் மனோபாவத்தின் அகம்பாவம் பிடித்த விதிமுறையை மீறியமைக்காக கூட இவ்வாறு அவதூறுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வசவுகளுகளையும் அவதூறுகளுகளையும் பரப்புவதையே தொழிலாக கொண்டிருக்கும் நிவ்ஜப்னா, அதிர்வு போன்ற இணையத்தளங்கள் சிலநாட்களாக கிருத்திகாக என்பவர் மீதும்  அவதூறுகளை வெளியிட்டு வருகின்றன. நீண்டகாலமான இவ்வாறான அவதூறுகளையும் வசவுகளையும் இவ்இணையத்தளங்கள் பிரசுரித்து வந்திருந்தாலும்  பாதிக்கப்பட்டவர்களையோ, செய்திபிரசுரித்தவர்களையோ அறிய முடியாமையும், இதற்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களை சம்பந்தப்பட்ட தளங்கள் அதே போன்ற அவதூறுகளால் எதிர்கொள்வதும் இவ்விடயம் குறித்து எதுவும் செய்யமுடியாத நிலையை உருவாக்கியிருந்தது. 

ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட கிருத்திகா இதற்கெதிராக செயற்பட முன்வந்திருப்பதும், அவதூறு செய்தி பரப்பியவர்கள் யார் என்பது தெரியவந்திருப்பதும் இவ்வாறான இணையத்தளங்கள், அவதூறு பரப்பும் நபர்கள், அவற்றின் நோக்கம்,பின்புலம் என்பவற்றிற்கு எதிராக செயற்பட உந்துதலை ஏற்படுத்தியிருக்கின்றது. 

கிருத்திகா தொடர்பாக அவதூறு செய்தியை உருவாக்கியவர்கள், தட்டச்சு செய்தவர்கள், தரவேற்றியவர்கள் அனைவரும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லது அதனுடன் தொடர்பு பட்டவர்கள். குறித்த பேரவையின் அலுவலகத்தில் அண்மையில் வேலைக்கு சோ்ந்த கிருத்திகா, குறித்த பேரவைக்காரர்களின் செயற்பாடுகளில் முரண்பட்டு கேள்வி எழுப்பியதன் காரணமாக அந்த அலுவலகத்தில் வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். அலுவலகத்தை விட்டு வெளியேறிய கிருத்திகாவை வாய்திறக்கவிடாமல் முடக்கும் நோக்கில் அவர்மீதான பாலியல் அவதூறு செய்தியை திட்டமிட்டு பரப்பி அவரை கட்டுபடுத்த எண்ணிய அவர்களின் எண்ணத்திற்கு தைரியமான எதிர்ப்பை வெளிப்படுத்தி கிருத்திகா முதலடியை கொடுத்துள்ளார். ஏனையவர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

கிருத்திகாவின் தைரியமான எதிர்ப்பை வலுப்படுத்தி பெண்கள் மீது இவ்வாறு திட்டமிட்ட முறையில் அவதூறு பரப்புவதற்கு எதிராகவும், அவதூறு பரப்புவர்களுக்கு  எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு அனைவரும் குரல் கொடுக்க முன்வரல் வேண்டும்.

பெண்கள் மீதான அவதூறுகளிற்கு எதிராக, அவதூறு பரப்புவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும். இணையம், சமூகவலைத்தளங்கள் ஊடாக பெண்கள் மீது பரப்பப்படும்  அவதூறுகிலிருந்து உடனடி பாதுகாப்பை வழங்கும் பொறிமுறையை உருவாக்கிடவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 அத்தகைய நடவடிக்கைகள் வழியாக கிருத்திகா மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீதும் இதற்கு முன் இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் இவ்வாறான அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். இதன் மூலம் இவ்வாறான அவதூறு பரப்பும் செயற்பாடுகளை நாம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியும். 

இன்றைய அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தும் கொள்ளைக்காரர்களினாலும் சமூக விரோதிகளாலுமே இயக்கப்படுகின்றது. ( உதாரணம் சூரியன் எப்எம் – துமிந்த சில்வா எனும் போதை பொருள் வியாபாரியின் குடும்பத்தினருக்கு சொந்தமானது, தமிழ் எப்எம் – மகிந்த ராசபக்ச குடும்பத்திற்கு சொந்தமானது). அவர்கள் அனுமதிக்கும் செய்திகளையே மக்கள் அறியலாம் என்ற நிலையில் சமூகவலைத்தளங்களும், இணையத்தளங்களும் மக்கள் ஊடகங்களாகியுள்ளன. மக்களிடமிருந்து அதிகாரவர்க்கத்தினரால் மறைக்கப்படும் செய்திகளை வெளிக்கொணரும் ஊடகங்களாகவும் இருக்கின்றன. எனவே இவ் மக்கள் ஊடகங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இவ் ஊடகங்களில் பெண்கள் மீது பரப்பப்படும் இவ்வாறான திட்டமிட்ட அவதூறுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும். 

இவ்வாறான அவதூறு பரப்புவது நிவ் ஜப்னா என்ற ஒரு இணையத்தளம் மாத்திரமோ அல்லது அதிர்வு என்ற இன்னுமொரு இணையத்தளம் மாத்திரமோ அல்ல.  இதற்கு பின் தெளிவாக ஒரு சிலநபர்களும் பலகுழுக்களும், திட்டவட்டமான நோக்கமும் அரசியல் வேலைத்திட்டமும் இருக்கின்றது.  பணம் கப்பம் பெறல், தனிப்பட்ட பகை தீர்ப்பு என்பதையெல்லாம் கடந்து பண்பாட்டை காப்பற்றுகின்றோம் என்ற பெயரில் பாலியல் அவதூறுகளை செய்திகளாக வெளியிடுவதன் மூலம் பண்பாட்டு கோலத்தில் தெளிவான குழப்பத்தை ஏற்படுத்தி நச்சை விதைக்கின்றார்கள், இவற்றின் பின்னாலிருக்கும் முதன்மை சூத்திரதாரிகள். இவ்வாறான பாலியல் அவதூறுகளை தொடர்ச்சியாக செய்திகளாக சமூகத்தினுள் கொண்டுச் செல்லப்படும் போது அச்சமூகம் இதனை ஏற்றுக்கொள்ள பழகிவிடுகின்றது. நிவ்ஜப்னா போன்ற இணையத்தளங்கள் இவ்வாறான மூன்றாம் தரமான செய்திகளை பரப்பி அதனை பண்பாடாக சமூகத்தில் திணித்துவிட எத்தணிக்கின்றது. இதன் தாக்கம் எந்தளவிற்கு என்றால் முன்பு பவ்வியமாக வெளிநாட்டிலிருந்து வந்து சென்ற பல பெருசுக்கள் இன்று வெளிப்படையாகவே “சரக்கு”, “ஜட்டம்” இருக்கா என்று கேட்கின்ற அளவிற்கு சென்றிருக்கிறது. 

ஒரு வகையில் நிவ்ஜப்னா இணையம் யாழ்பாணத்தின் முகமாக மாறியிருக்கின்றது. இவ்வாறான செய்திகளில், பலவற்றில் உண்மைகள் எதுவுமிருப்பதில்லை. 70 வயது மூதாட்டியை 15 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான் என்பதிலிருந்து இந்த செய்திகள் பல விதமான கற்பனைகளில் பரப்பி விடப்படுகின்றது. இவ்வாறான செய்திகளில் துளியளவும் உண்மைகள் இருப்பதில்லை. 

இவற்றின் பின்னாலிருப்பவர்களின் நோக்கம்,  இவர்கள் சோடித்து பிரசுரிக்கும் செய்திகள் உண்மையாக நடக்கவேண்டுமென்பதே.  இவ்வாறான செய்திகளின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் பேருந்திந்திற்காக காத்து நிற்கும் பெண்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு பக்கம் செய்திகள் ஊடாக பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை விபச்சாரிகளாக பட்டம் கட்டி விடுவதோடு, ஆண்களை, பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை விபச்சாரிகளாக சிந்திக்கவும் வைக்கின்றன, இந்த செய்திகள். இந்த செய்திகள் இவ்வாறே எல்லா பக்கமும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

பண்பாட்டு கோலத்தில் இவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்த வேண்டிய தேவை யாருக்கிருக்கும்? அந்த தேவை உடையவர்களே இந்த இணையத்தளங்களில் பின்னால் மறைந்திருக்கும் ஆரம்ப புள்ளிகள் ஆவார்கள். அவர்களுக்காக பல குழுக்கள் இயங்கலாம். உலகில் இவ்வாறான குழப்புதல்கள் திரித்தல்கள் எல்லாம் சூட்சுமமாக பல குழுக்கள், தரகர்கள் மூலமே நடத்தப்பட்டிருக்கின்றன. இதை செய்பவர்கள் சில வேளை தெரிந்தும் செய்யலாம். அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது எதற்காக கல் எறிகின்றோம் என்று தெரியாமலேயே கல்லெறிந்தவர்கள் போல் கல்லெறிபவர்களாகவும் இருக்கலாம்.

இவ்வாறான பாலியல் வதந்திகள் அவதூறு செய்திகள் தனியே கிருத்திக்காக்களின் பிரச்சினை மாத்திரம் அல்ல. எம் சமூகத்தின் பிரச்சினை. இன்றைய உலகமயமாக்கல் உலகில் எம் போன்ற சமூகங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை.  எனவே கிருத்திகா விடயத்தில் தொடர்புபட்ட தமிழ் பண்பாட்டு பேரவைக்கு நிதி வழங்குபவர்கள் , அப்பேரவையுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்வர்கள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், வடமாகாண முதலமைச்சர், யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி மதனி நெல்சன், அனந்தி சசிதரன் போன்றவர்கள் இந்த பேரவையுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பவர்கள் என்ற வகையில் இந்த விடயத்தில் தீவிரமான தலையீடுகளை செய்தல் வேண்டும்.

மேலும் இவ்வாறான பாலியல் அவதூறு இணையங்கள் எந்த தடையுமில்லாமல் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணமென்ன? எம் தமிழ் பேசும் மக்களில் இணைய பாவனையாளர்களில் பெரும்பாலானோர் நிவ்ஜப்னா இணையத்தின் வாசகர்கள். பெரும்பாலனாவர்கள் பாலியல் கிளுகிளுப்பிற்காக வாசிக்கும் இணையங்களாக இவை இருக்கின்றன. இங்கே பரப்பப்படும் அவதூறுகள் நியாயமானவை என்று இந்த சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆணாதிக்கம் நிலைநாட்டப்பட்ட சமூகத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆண்களின் எண்ணங்களிற்கு கட்டுப்படாத பெண்கள் இவ்வாறு தூற்றப்பட வேண்டியவர்கள் என்பதே பெரும்பாலானோரின் எண்ணம். பெண்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக பாலியல் வசையை எம் சமூகம் அங்கீகரித்திருப்பதும், பெண் பாலியல் பண்டமாக்கப்பட்ட மூலதனத்துவ சமூக அமைப்பில் பாலியல் கிளுகிளுப்பை தேடி அலையும் ஆண்களின் பாலியல் அறிவற்ற தன்மையும் இவ்வாறான இணையத்தளங்களின் வெற்றிகரமான இயக்கத்திற்கு சாதகமான காரணிகளாகும். சமூகத்தின் இந்த பொது மனோபாவத்தின் மீதும் நாம் தவிர்க்க முடியதா வகையில் தாக்குதல் நடத்தியாக வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் முன்னெடுக்கும் சிறிய சிறிய செயல்களும் பெரிய மாற்றங்களை தரவல்லது. இந்த விடயம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடப்பது அவசியமானதாகும். விவாதங்கள், கலந்துரையாடலுடன் நில்லாது, கருத்துக்களை மக்கள் இயக்கமாக  நடைமுறை படுத்தலும் அவசியம்.   எனவே நிவ்ஜப்னா போன்ற அவதூறு இணையத்தளங்களிற்கு எதிராக நாம் அனைவரும் எம் எதிர்ப்பை முன்வைப்போம்.  இந்த செயற்பாடுகளில் ஆர்வம் கொள்ளும் அனைத்து தரப்பையும் ஒன்றினைத்து எதிர்வரும் மாதங்களில் சந்திப்புக்களையும் ஒன்றுகூடல்களையும் நடத்திடுவோம். எமது எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றிடுவோம்.

Post Top Ad

My Instagram