Post Top Ad

சுதந்திரம் ஓர் தந்திரம் !

ஆங்கிலத் திகதி முறையின் அடிப்படையில் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியானது
இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்டு 'சுதந்திரம்' பெற்ற தினமாக வர்ணிக்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசியற் கட்சியும் இத்தினத்தை சுதந்திர தினமாக எண்ணி நினைவு கூர்ந்து, கொண்டாட்டங்களிலும் இறங்கி வந்திருக்கின்றது. ஆனால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆங்கிலேயரிடமிருந்து சிங்களவரிடம் ஆட்சிக் கைமாற்றம் பெற்ற தினமென்ற கருத்தே விதைக்கப்பட்டிருக்கிறது. அநேக அரசியல் ஆய்வாளர்கள் இந்நாளை உயரிய நிலைக்குரிய தொன்றாக எண்ணுவதில்லை. இவ்வாறாக வேறுப்பட்ட கோணங்களுடாக பார்க்கப்படும், 1948ம் ஆண்டு சம்பவமானது, சுதந்திரம் என்பதன் பொருளையும், இன்று  வரை மக்கள் பெற்றதும் பெற்று வருவதுமான அனுபவங்களைத் திரட்டியும் பார்க்கப்படும் போது தான் உண்மையான பார்வைக்கு  இலக்காகும்.

சுதந்திரம் என்றால் என்ன?
ஒரு நாட்டினுள் மக்களின் உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலான மக்களின் எண்ண அபிலாசைகளின் அடிப்படையில் எழுந்த இலட்சியங்களை அடைவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது திறமைக்குட்பட்ட பங்களிப்புகளைச் செய்ய சகல வசதிகளும் அமையப்பெற்ற நிலையே விடுதலை பெற்ற நிலை ஆகும். இத்தகைய உயரிய நிலையை அடைவதற்கு தீட்டப்படும் திட்டங்களை சுதந்திரமாக செய்யப்படவைக்க அத்திவாரமிடப்பட்ட தினத்தையே சுதந்திர தினம் எனலாம். இங்கு வரையறுப்பை பின்னணியாகக் கொண்டே இலங்கை ஒரு சுதந்திர நாடா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

இலங்கையின் இரண்டு கோடி மக்களில் 40 சதவீதமானவர்களின் ஒரு நாள் வருவாய் 200 ரூபாவிற்கும் குறைவானதாகும். அண்மையில் மத்திய வங்கி 15 இலட்சம் பேரின் பெயரை கடனட்டைக்கான பணத்தினை செலுத்தாததினால் கறுப்பு பட்டியலில் சேர்;த்தது. இவ்வாறு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 99 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அன்றாட அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்களை கொள்வனவு செய்வதற்கான கடனட்டை பயன்படுத்துபவர்கள். அதாவது இலங்கையின் வயது வந்தவர்களில் பதினைந்தில் ஒருவர் தன் அன்றாட பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடனட்டை நிறுவனங்களை ஏமாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். கடந்த வருட நிலவரத்தின் படி நான்கு பேரை குடும்பமொன்றின் மாத செலவு 55000 ரூபாவாக இருக்க, மிக குறைவான அளவினருக்கு மாத்திரமே இதற்கு கி;ட்டிய அளவான வருமானத்தை பெறக் கூடியதாகவிருந்தது. பொருளாதாரம் இவ்வாறிருக்க மலையக பெருந்தோட்டங்களில் வாழும் நாட்டின் சனத்தொகையில் ஐந்து சத வீதமானவர்கள் சொந்த நிலமற்ற அடிமைகளாக வாழ வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களை நாடற்றவர்களாக்கி அழித்தொழிக்க மேற்கொண்ட பிரயத்தனங்களையும் அனைவரும் அறிவார்கள். தெற்கில் 60000 ற்கும் அதிகமான சிங்கள இளைஞர் யுவதிகள் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் மீது இனக்கலவரங்களும், படுகொலைகளும் நடத்தப்பட்டு இலட்ச கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆக மொத்தத்தில் தமிழ் தேசிய இனத்தை திட்டமிட்டு அடக்கி ஒடுக்கி அழிக்கும் நடவடிக்கைளும், ஒட்டுமொத்த சகல மக்கள் இனங்கள் மீதான பொருளாதார ஒடுக்கு முறைகளுமே, இச் 'சுதந்திர' தினத்தின் பின் மக்கள் பெற்று வந்ததும் வருவதுமான அனுபவங்களாகும். 1948 ஆம் ஆண்டு முதல் மக்கள் அனுபவித்து வந்தவற்றை துணையாக வைத்துப் பார்ப்பவர்களுக்கு சுதந்திரம் பற்றிய பேச்சு போலியானதொன்றுறென்று புரியும். இவ்வாறு இதனை புரிந்துக் கொள்ள மறுப்பவர்கள் சுதந்திரம் பெறாத மக்களைக் கொண்ட நாடே சுதந்திரம் பெற்ற நாடென்று போற்ற முயல்பவராவார்கள். ஆனால், இலங்கையை சுதந்திரம் பெற்ற நாடாக வலிந்து வர்ணிக்கும் இவர்களிடம் வேறு உள் நோக்கம் எதுவும் இல்லாமலுமில்லை. இவ் உள்நோக்கை 1948ம் ஆண்டுக்கு முன்னும் பின்னுமாக கடந்த சில சரித்திர நிகழ்வுகளை மீட்டுப்பார்க்கும் போது இனங்கண்டு கொள்ள முடியும்.

சொத்துடையவர்களுக்கு மாத்திரம் வாக்குரிமை?

ஆங்கிலேயர் ஆட்சிபுரிந்த காலத்தில் சீர்திருத்தப் போர்வையில் பல அரசியற் திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. அவற்றில் 1931 இல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியற்திட்டம் பிரதானமானது. இதுவே சர்வசன வாக்குரிமையை இலங்கையருக்கு வழங்கியது. இக்காலத்தில் இவ்வரகசிய திட்டம் அமுலுக்கு வருமுன் டொனமூர் குழுவினர் இலங்கையிலிருந்த பல கட்சிகளிடமிருந்தும் குழுக்களிடமிருந்தும் சீர்திருத்த ஆலோசனைகளைப் பெற்றனர். அச்சந்தர்ப்பத்தில் இங்கு பிரபலமடைந்திருந்த தேசிய காங்கிரசு டொனமூர் குழுவினர் முன்னிலையில் வருடத்துக்கு 600 ரூபாவுக்கு குறைந்த வருமானமுடையவருக்கு வாக்குரிமை வழங்க கூடாதென வாதிட்டது. சொத்துடையவருக்கே வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்றும், சொத்தற்றவர்கள் நாட்டுப் பற்றற்றவர்களென்றும், அவர்கள் வாக்குரிமையை தாறுமாறாக உபயோகப்படுத்துவரெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய எண்ணப்பாடு கொண்டிருந்த இலங்கை தேசிய காங்கிரசு தான் காலப்போக்கில் ஐக்கிய தேசியக் கட்சியாக 'பெயர்' மாற்றம் பெற்றது. 1948ம் ஆண்டு 10 இலட்சம் சொத்தற்ற தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து விட்டு 1981ம் ஆண்டு சர்வசன வாக்குரிமையைக்கான பொன் விழாவைக் கொண்டாடிய அற்புதமான கட்சியே இந்த கட்சியாகும்.

டொனமூர் அரசியற்திட்டத்தை அடுத்து 1947 இல் சோல்பரி அரசியல் திட்டம் அமுலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ், 1948ம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கை ஒர் 'சுதந்திரம்' பெற்ற நாடென பிரகடனம் செய்யப்பட்டது.

சுதந்திரம் பற்றிய பிரகடனத்துடனே பிரித்தானிய ராணி இலங்கைக்கும் ராணியாகப் பிரகடனப்படுத்தப்பட்டார். இந்த ராணியார் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை இலங்கையின் மகாதேசாதிபதியாக நியமிக்கும் அதிகாரத்தை பெற்றார். பிரித்தானிய ராணியாரிடமே இலங்கைக்கான யுத்தப்பிரகடனம் செய்யும் அதிகாரமும் இருந்தது. மகா தேசாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டவும், இடைநிறுத்தவும், கலைக்கவும் அதிகாரமிருந்தது. தனக்கிசைவான சில முக்கிய நியமனங்களை இவரால் செய்ய முடியும். அத்துடன் நீதி நிர்வாகத்தின் கடைசித் தீர்ப்பு பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்த பிரிவுக் கவுன்சிலிடம் தான் இருந்தது, பிரித்தானியாவிடமிருந்து 'சுதந்திரம்' பெற்ற இலங்கையில் திருகோணமலை கடற்படைத்தளமும், கட்டுநாயக்கா விமானத் தளமும் பிரித்தானியர் ஆதிக்கத்திலிருந்தது. 

பிரித்தானியாவிற்கும் இலங்கைக்குமிடையில் இருக்கும் ஆதிக்கத் தொடர்பை இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் காலப்போக்கில் துண்டிக்க பல வழிகளிலும் முயன்றும் அவர்களது வர்க்க நலன் சார்ந்த செயற்பாடுகள் முயற்சிக்குக் குந்தகம் விளைவித்தன. 1972 இல் ஏற்படுத்தப்பட்ட அரசமைப்புத் திட்டமும் இதற்குச் சான்று பகர்கின்றன. 

பிரித்தானியர் என்ன நோக்கை முக்கியமாகக் கொண்டு இலங்கையை தமது காலனித்துவ நாடாக்கினரோ அதே நோக்கை வேறு முகங்களைக் கொண்டு நிறைவேற்ற முற்பட்டனர். அதாவது நாட்டு வளத்தை கபட வழிகளில் தந்திரமாக அபகரிக்கும் நோக்கை 1948யின் பின் 'பல் நாட்டு நிறுவனம்' என்ற போர்வைக்குள் நுழைந்து கொண்டு நிறைவேற்றி வருகின்றனர். இந்நிறுவனங்கள் மூலம் இலங்கையை அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிலையமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இந்த பல்நாட்டு நிறுவனங்களினூடாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளும் இங்கு தலைகளை புதைத்துக் கொண்டன.

இம்முறiயில் தான் இலங்கையின் மீது ஏனைய நாடுகளின் ஆதிக்கத்தை 'துண்டிக்க' எடுத்த முயற்சி அமைகிறது. இதனால் தான் நாம் பெற்றதாகக் கூறப்படும் 'சுதந்திரம்' ஓர் தந்திரமென முடிவு கட்ட வேண்டியதாகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram