Post Top Ad

தோழர் ரயாகரனின் சம உரிமை போராட்டம் மீது சில கேள்விகள்?

முன்னிலை சோசலிச கட்சியினால் உருவாக்கப்பட்ட சம உரிமை இயக்கத்தில் , புதிய சனநாயக மக்கள்; முன்னணியை சேர்ந்தவர்களும் இணைந்து செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சமஉரிமை இயக்கம் வெளியிட்ட பிரசுரத்திற்கு வெளியே சமஉரிமை இயக்கத்தின் தேவையை வலியுறுத்தி வருபவர்களாக புதிய சனநாயக மக்கள் முன்னனியினர் செயற்பட்டு வருகின்றனர். அதிலும் தோழர் ரயாகரன் சமஉரிமையை வலியுறுத்தி பல கட்டுரைகளை அவரின் கட்சி தளத்திலே வெளியிட்டு வருகின்றார். அதிகமாக தாக்கம் செலுத்தாது ஆயினும் அவரிற்கும் அவரை நம்பி சமஉரிமையை கோட்பாட்டை ஏற்று பிரச்சார படுத்தி வருபவர்களுக்கும் சில விடயங்களை சுட்டிகாட்ட விரும்புகின்றேன்.

முதலில் தோழர் ரயாகரன் சமஉரிமை இயக்கத்தினை பிழையான புரிதலுடன் சமஉரிமையாக வலியுறுத்தி வருகின்றார். இங்கு தோழர் ரயாகரனின் தேவையை தமிழ் சமூகத்தின் தேவையாக வலியுறுத்தி, அதனை கேள்விக்குட்படுத்துபவர்களை தயவுதாட்யன்யமின்றி வர்க்க போராட்ட விரோதிகளாகவும் மகிந்தவின் கைக்கூலிகளாகவும் சித்தரிக்கின்றார். பொதுவாக அவர் சமஉரிமையை வலியுறுத்தி எழுதும் கட்டுரைகளில் ஆரம்பத்தில் சமஉரிமையை வலியுறுத்துவார் பின் அதற்கு சாட்சியாக லெனினை அழைத்து வருவார், லெனினை காட்டி சமஉரிமையை வர்க்க போராட்டத்தின் திறவுகோலாய் சித்தரிப்பார், இறுதியாக சமஉரிமையை கேள்விக்குட்படுத்துபவர்களை வர்க்க போராட்ட விரோதிகளாகவும் மகிந்தவின் கைகூலிகளாகவும் சித்தரித்து முடிப்பார். இடையிடையே மானே, தேனே, பொன்னே .......... என இன்னும் அவர்களுக்கே உரித்தான சில அர்ச்சிப்பு வசனங்களை சேர்த்து கேள்விக்குட்படுத்துபவர்களை புகழ்ந்திருப்பார்.
முதலில் அவரிற்கு  சமஉரிமை இயக்கத்தின் தோற்றம் குறித்து சில விடயங்களை அறிய தர விரும்புகின்றேன். சமஉரிமை இயக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப தற்காலிக செயற்குழுவிலிருந்து சமஉரிமை இயக்கத்தின் செயற்குழு, நிறைவேற்று குழு வரை அங்கம் வகித்ததோடு அவ்வியக்கத்தின் இணைஏற்பாட்டாளராக அவ்வியக்கம் கடந்த ஏப்பரல் மாதம் முடக்கப்படும் வரை செயற்பட்டவன் என்றவகையில் இந்த விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். கட்சியின் அடிப்படை வேலைத்திட்டத்தில் இனபிரச்சினை விவகாரம் தவிர்க்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த அழுத்தங்கள் விரைவாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையை கட்சிக்குள் உருவாக்கியது. குமார் குணரத்தினம் இனபிரச்சினை தொடர்பான கட்சியின் நிலைபாட்டை தெரிவிக்கும் நூலை எழுதும் பொறுப்பினை ஏற்றுகொண்டதோடு, அது தொடர்பான கலந்துரையாடல்கள் கட்சிக்குள் ஆரம்பித்தன. இதனிடையே கட்சியின் பால் தமிழ் மக்களை வென்றெடுக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. அதன் வழியே தான் சமஉரிமை இயக்கமும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நாம் இலங்கையர் அமைப்பும் உருவாக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இந்த வெகுசன இயக்கங்களின் பிரதான நோக்கமாகவிருந்தது கட்சிக்கு தமிழ் உறுப்பினர்களை வென்றெடுப்பதாகும். எந்த ஒரு வெகுசன இயக்கமும் கட்டப்படுவதன் நோக்கம் இதுவாகவே இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது என நினைக்கின்றேன். கட்சியில் தமிழ் உறுப்பினர்கள் இணைவது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் தோழமை உணர்வை ஏற்படுத்துவதிலே தங்கி இருக்கின்றது. அந்ந வகையில் சமஉரிமை இயக்கம் உருவாக்கப்பட்டது அந்ந தோழமை உணர்வை ஏற்படுத்துவதின் ஊடாக கட்சிக்கு தமிழ் உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கு, சிறிலங்காவில் சிங்களவர்கள் முழுமையடையாதவர்;களாகவிருப்பதற்கு தமிழர்கள் காரணமாக்கப்பட்டு வளர்த்துவிடப்பட்டு சமூக அசைவை தீர்மானிக்கும் காரணியாகவிருக்கும் பேரினவாதம் தடையாக இருக்கின்றது. ஆகவே அந்த இனவாதத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு உருவானதே சமஉரிமை இயக்கம் ஆகும்.  சிங்கள மக்களை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டத்திற்கு இழுத்துவருவதன் மூலம் பரஸ்பர தோழமை உணர்வை ஏற்படுத்தி இனவாதத்தை களைய முடியும். மறுபுறம் சிங்கள இனவாதத்திற்கு தத்துவார்த்த வடிவம் வழங்கும் குனதாச அமரசேகர, நலிந்த சில்வா போன்றவர்களுக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தையும் நடத்தல் வேண்டும். இதற்கமைவாகவே இனவொடுக்கு முறையை எதிர்ப்போம் எனும் கோசத்தை தொனிபொருளாக கொண்டு சமஉரிமை இயக்கம் கட்டியெழுப்ப பட்டது. இணைந்ததொரு போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட முதலாளித்துவ சீர்த்திருத்த கோரிக்கைகளின் திரட்டிற்கு வைத்த பெயரே சமஉரிமை ஆகும். இதற்காகவே ஒரு வேலைத்திட்டத்தினை தயாரித்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரையும் இணைத்து செயற்பட்டோம். தனியே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை விட எவ்வழியிலேனும் சமூக நீதியை விரும்புகின்றவர்களை போராட்டத்திற்கு அழைத்துவருவதே எமது நோக்கமாகவிருந்தது. அதன் காரணமாகவே  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ற அமைபப்பினூடாக கொழும்பிலும் வவுனியாவிலும் கையெழுத்து போராட்டங்களை நடத்தியிருந்தோம். இந்த போராட்டங்களில் மனோகனேசன், விநோனோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மற்றும் மதகுருமார்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடதக்கது. 

சமஉரிமை ஆரம்பிக்கப்பட்ட பின் இயக்கத்தினை மக்களுக்கு அறிமுகபடுத்தும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டோம். அதற்காகவே நாடெங்கிலும் கையெலுத்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த கால சமயத்தில்; யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் தாக்ப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட விடயம், பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத அரசியல் போன்ற சமகால நிகழ்வுகள் நடந்தேற அவ்விடயங்களிலும் நாம் எமது எதிர்ப்பை வெளிக்காட்டி சில நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அதே நேரம் மகாராஐh நிறுவனத்திற்கு ரனில்விக்ரமசிங்க உடன் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அவர்கள் முன்னெடுத்த அரசியல் வேலைதிட்டத்திற்கு சமஉரிமை இயக்கத்தின் வேலைத்திட்டம் கைகொடுப்பதாக அமைந்திருந்தமையினால் தொலைகாட்சி மூலமும் சமஉரிமை இயக்கம் அறிமுகமானது. 

ஆனால் 2012 நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட சமஉரிமை இயக்கம் 2013 மார்ச் மாதமளவில் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக உருவெடுத்திருந்த சமயத்திலே அமைப்பிற்குள் நாம் எமது நோக்கத்திலிருந்து வெளிசென்றிருக்கும் விடயம் முன்வைக்கப்பட்டதோடு நாம் தோல்வி நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பது சுட்டிகாட்டப்பட்டது. அதே நேரம் மத்தியகுழுழுவை தவிர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு சமஉரிமை இயக்கம் தொடர்பான தெளிவான கருத்து இருக்கவில்லை. ஆகவே சற்று பின்வாங்கி சமஉரிமை இயக்கத்தை அதன் இறுதி இலக்கு நோக்கிய பாதைக்கு கொண்டு செல்லவும், கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் பாசறைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதுவரை இயக்கத்தின் வெகுசன வேலைகளை பின்போடும் தீர்மானம் எடுக்கப்பட்டது.  அந்த காலபகுதியில் கட்சிக்குள் தாபன முரண்பாடுகள் எழுந்ததினால் கட்யின் சகல வெகுசன பணிகளும் நிறுத்தப்பட்டதோடு சமஉரிமை இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சமஉரிமை இயக்கம் தன் செயற்பாடுகளை நிறுத்தியே வைத்துள்ளது. ஆனால் இன்று வேறுபல அரசியல் நிகழ்ச்சி திட்டங்களின் வழியே சமஉரிமை இயக்கத்தின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது. இந்த நிலைக்குள்ளே சமஉரிமை இயக்கத்தினை வலியுறுத்தி வரும் தோழர் ரயாகரனுக்கும் அதற்கு தலையாட்டும் புதிய சனநாயக மக்கள் முன்னணிக்கும் சில விடயங்களை சுட்டிகாட்டி உங்களிடம் சில கேள்விகளை எழுப்புகின்றேன். 

தோழர் ரயாகரனின் சம உரிமை குறித்த வலியுறுத்தல்களை நோக்கினால், அவரே அதை கண்டுபிடித்து தொடர்ந்து வலியுறுத்தி வருபது போன்ற தோரனை தான் தெரிகிறது. அவரும் அவரது கட்சியும் இதுவரை காலமும் வெளிப்படுத்தி வந்த நிலைப்பாடுகளை ஏன் எப்படி மாற்றி கொண்டு சமஉரிமையை வலியுறுத்துகின்றார் என்பதை அவரே விளக்கிட வேண்டும். ஆனால் தோழர் ரயாகரனின் கட்சியானது எந்த விதமான கள செயற்பாடுகளையும் கொண்ட கட்சியல்ல. அவர்கள் இலங்கையில் அவ்வாறானதொரு வெகுசன செயற்பாடுகளை ஆரம்பிக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வந்தார்கள். அவை எவையும் கைகூடாத நிலையில் சமஉரிமை இயக்கமானது அவர்களுக்கு தனிதீவில் நிற்பனுக்கு தண்ணீரில் மிதந்துவரும் மரக்கட்டை போல் அமைந்தது. அவர்களது அரசியல் வெறுமையை நிரப்பிட சமஉரிமை இயக்கத்தினை பயன்படுத்தினர். சமஉரிமை இயக்கத்தின் செயற்பாடுகளை பிழையாக வழிநடத்தியதில் பிரதான பங்கு தோழர் ரயாகரனுடையது ஆகும். தனது அரசியல் வெறுமையை நிரப்பிட சமஉரிமை இயக்கத்தை சமஉரிமைக்கான போராட்டமாக்கி அதை திணித்திட முயற்சித்து வருகின்றார். உள்நாட்டில் சமஉரிமை இயக்கத்தின் நிறைவேற்று குழு ஒரு தடைவ கூட கூட்டப்படாத நிலையில் வெளிநாடுகளில் அவரஅவசரமாக சமஉரிமை இயக்க கிளைகளை உருவாக்கியிருந்தீர்கள். அமைப்பின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலும் கூட சமஉரிமை இயக்கத்தின் பெயரில் மே தினம் நடத்தி கேலி கூத்தாடியிருந்தீர்கள். சுருக்கமாக சொல்வதானால் தோழர் ரயாகரனும் அவருடைய கட்சியும் தங்கள் அரசியல் வெறுமையை நிரப்பிட சமஉரிமை இயக்கத்தினை பயன்படுத்தியதோடு குமார்குணரத்தினம் எனும் ஏதேச்சதிகாரவாதி இனபிரச்சினை விவகாரத்தில் தன் சொந்த கருத்துகளை கட்சியின் கொள்கையாக ஸ்தாபிப்பதற்கு, அதனை நிருபிப்பதற்கு துணை நின்று சமஉரிமை இயக்கத்தின் உண்மையான நோக்கத்தினை சிதறடித்துள்ளீர்கள். தற்போது உள்ளீடற்ற ஒரு வெற்று இயக்கமாகவே சம உரிமை இயக்கம் தோழர் ரயாகரன் மற்றும் அவரது கட்சியினரின் அழுத்தத்தினால் இயக்கப்படுகிறது.

ஆகமொத்தம் சமஉரிமை இயக்கமானது உள்ளீடற்ற உண்மையான நோக்கத்திலிருந்து விலகியுள்ள நிலையில் சமஉரிமையையும் சமஉரிமை இயக்கத்தையும் வலியுறுத்தி வரும் தோழர் ரயாகரனிடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்.

1.சமஉரிமை இயக்கமானது சிறிலங்காவில் பல தேசியங்கள் இருப்பதினை மறுப்பதோடு, சிறிலங்கா தேசியத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் தேசிய பிரசைகள் மாத்திரமே இருப்பதாக கூறுகின்றது? அதனை நீங்கள் ஏற்றுகொள்கின்றீர்களா? மக்கள் அனைவருக்குமான சம உரிமையும், ஒரு தேசிய இனத்தின் உரிமையையும் வேறுபடுத்தி காண்கின்றீர்களா?

2. பேரினவாதம் என்பதினை மறுக்கும் சமஉரிமை இயக்கம், தமிழ் , சிங்கள் இனவாதம் என அடையாளப்படுத்துகின்றது. தமிழ் இனவாதம் சிங்கள இனவாதம் என்பதினை ஒரே தளத்தில் வைத்து நோக்குகின்றீர்களா? இனவாதத்தை எவ்வாறு அடையாளபடுத்துகின்றீர்கள்? ஒரு இனம் தன் உரிமைகளை கோரி நிற்பது இனவாதமா? அல்லது ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் உரிமைகளை மறுத்து அடக்கியாள்பதுடன் அடக்கப்டும் இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவது இனவாதமா?

3. மக்கள் விடுதலை முன்னனி முன்வைத்துள்ள தேசிய இன பிரச்சினைக்கான தீர்வை பெறுவதற்கான வேலைதிட்டத்தையும், சமஉரிமை இயக்கத்தின் வேலைத்திட்டத்தையும் எவ்வாறு வேறுபடுத்துகின்றீர்கள்?

4. சமஉரிமையை வர்க்கபுரட்சியின் திறவுக்கோள் என்கின்றீர்கள். மனோகனேசன், கூட்டமைப்புகாரர்கள், மததலைவர்களை உள்ளடக்கிய ஒரு போராட்டத்தை வர்க்கபுரட்சியின் திறவுக்கோலாக எவ்வாறு இனங்கான்கின்றீர்கள்?

5. சமஉரிமைக்கு சாட்சியாக லெனினை அழைத்துவருகின்றீர்கள். லெனின் ரோசலக்சம்பேர்க்கிற்கு வழங்கிய பதில்களில் முரணற்ற முதலாளிதுவ சனநாயகமே சமஉரிமையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிகாட்டியுள்ளார். அவ்வாறான முரணற்ற முதலாளித்துவ சனநாயகத்தினை சிறிலங்காவின் பின்தங்கிய முதலாளிதுவத்திற்குள் சாத்தியமாக்கிடும் போராட்டத்தை சமஉரிமை இயக்கம் கொண்டுள்ளதா?

6. மக்கள் விடுதலையின் இனபிரச்சினை குறித்த வேலைத்திட்டத்தை ஒத்தவகையிலான சமஉரிமை இயக்கத்தின் தமிழ் மக்களின் உரிமை பிரச்சினையை நிர்வாக பிரச்சினைகளாக்கும் வேலைத்திட்டத்தை எவ்வாறு மகிந்த ராசபக்சவின் சமஉரிமையிலிருந்து வேறுபடுத்துகின்றீர்கள்?

மேற்குறித்த கேள்விகளுக்கு தங்கள் பதில்களை முன்வைத்து தங்கள் சமஉரிமை வலியுறுத்தலின் தார்பரியத்தை வெளிபடுத்துங்கள். இதற்கான பதில்களை வெற்றிடத்தை தேசியவாதிகள், துரோகிகள், மகிந்தவின் கைகூலிகள், புரட்சியின் எதிரிகள் என்ற சொற்பதங்களினால் நிரப்பி நலுவாமல் தெளிவான பதில்களை முன்வைத்து தங்கள் சமஉரிமை போராட்டத்தை முன்னெடுங்கள். சமஉரிமையை யாரும் எதிர்க்கவில்லை, மறைமுக அரசியல் நிகழ்ச்சி திட்டங்களிற்காக சமஉரிமை திணிக்கப்படுவதையே எதிர்க்கின்றனர். அந்த எதிர்ப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது தங்கள் கடமையாகும்.

  

Post Top Ad

My Instagram