Post Top Ad

5:38 AM

பண்புமாற்றம் மாற்றங்களை ஏற்படுத்துமா அல்லது மாற்றமடையுமா?

by , in

யார் என்ன மறுத்தாலும் மாற்றம் ஒன்று நிகழந்திருக்கிறது. நான் முன்பே எதிர்வு கூறியது போல் தனி ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியாக இல்லாமல், ஒரு அழுத்த குழுவின் செயற்பாட்டின் பிரதிபலனாக, மாற்றம் நிகழ்திருக்கின்றது.  47 கட்சிகளும், அமைப்புக்களும் இந்த மாற்றத்திற்காக பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் கைகோர்த்திருந்தனர். சிலர், குறிப்பாக சிறுபான்மை மக்களின் கட்சிகள் அப்படி எதுவும் இல்லாது, எதிர்கால அரசியல் இருப்பிற்காக கைகோர்த்திருக்கின்றமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


1956 ஆம் ஆண்டின் பின்னர் சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட ஒர் பண்பு ரீதியிலான மாற்றம் இதுவாகும். அதனுடன் ஒரு விடயத்தையும் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த மாற்றம் அனைத்து மக்களுக்கமான பொதுவான விடயம் சார்ந்தது, இது அனைவருக்கும் பொதுவான விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமை பிரச்சினை தொடர்பான விடயத்தில் மாற்றம் எதனையும் கொண்டு வருமா என்பது எதிர்காலத்தின் முன்னிருக்கும், கடந்தகாலம் இல்லை என்று பதிலளித்த கேள்வி.
முதல் முறையாக மோசடிகளில் ஈடுபடாமல், நேர்மையான முறையில் பிரச்சாரம் செய்த அதுவும் இனவாத பிரச்சாரங்களை மேற்கொள்ளாத ஒரு தரப்பு வெற்றி பெற்றிருக்கின்றது. வழமையான அடிதடி வன்முறை அழுகிய அரசியல் கலாசாரத்திற்கு பதிலாக சனநாயக பண்புகளையும், சகிப்பு தன்மையையும் வெற்றி பெற்ற தரப்பு வெளிக்காட்டியிருந்தது, இது ஒரு முக்கியமான மாற்றம். புதிய ஒரு அரசியல் பண்பாடு தோற்றம் பெறுவதற்கான ஒரு ஆரம்பம். படித்தவர்களும், பெண்களும் அரசியலை அருவருக்க தக்க ஒன்றாக நோக்கி ஒதுங்கியிருக்க காரணமான வன்முறை, சகிப்பு தன்மையின்மை, சேறுபுசல் போன்ற கலாசாரங்களை ஒழிப்பதற்கான எத்தனிப்பு. இந்த மாற்றம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதே ஆகும். நிச்சயம் இந்த மாற்றம் அரச இயந்திரத்தில் நடத்தப்படும் ஊழல்களை குறைத்து, அது தொடர்பாக பொதுமக்களை செயற்பாட்டுடையவர்களாக மாற்றும். மனிதனின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சி தொடர்பாகவும் முன்னேற்றகரமான நிலையை இந்த மாற்றம் உருவாக்கும். இந்த மாற்றமும் சீர்த்திருத்தமும், பொருளாதாரத்தில் சாதகமான முன்னேற்றங்களை உருவாக்கும். உலகத்துடன் போட்டி போடுவதற்கான ஒரு கதவை இந்த மாற்றம் நீண்டகாலத்தில் எமக்கு திறந்துவிடும். இவை அனைத்திற்குமான பண்பு ரீதியிலான மாற்றம் இன்று ஏற்ப்பட்டுள்ளது.
உண்மையில் பொதுவேட்பாளரின் தரப்பு ஆரம்பத்தில் இந்த மாற்றம் நோக்கி ஆர்வமில்லாமலேனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊழலிற்கு எதிரதாக முன்வைத்த நல்லாட்சி கோசம், தேர்தல் வெற்றியை உறுதிபடுத்திக்கொள்ளல் போன்ற காரணிகள் பொது எதிரணியை இந்த பண்பு மாற்றம் நோக்கி தள்ளியது. கட்டாயத்தின் பேரில் ஏற்பட்ட இந்த பண்பு மாற்றம் அதில்  தொடுக்கப்பட்டிருந்தவர்களை வேகமாகவே மாற்றமடைய செய்தது.
குறிப்பாக ஹெல உறுமயவில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிட தக்கதாகும். அந்த கட்சியையும், சம்பிக்க ரணவக்கவையும் நீண்ட காலமாக அவதானித்து வருகின்றேன். குறுகிய காலத்தில் அவர்களிடத்தில் ஒரு பண்பு ரீதியிலான மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. அவர்களின் தமிழர் விரோத போக்குகளிலும் மாற்றம் நிகழ்திருக்கின்றது. இந்த படித்த மேட்டுக்குடி தன்மைக் கொண்ட சிங்கள தேசிய கடும்போக்களார்களை சாதாரண சிங்கள மக்கள் என்றும் நம்பியதில்லை. இவர்கள் பாரம்பரிய சிங்கள தேசியவாதிகளுடன் சேர்ந்து பயணிக்கும் போது மாத்திரமே அவர்களை மக்கள் பெருமளவில் ஆதரித்திருக்கின்றார்கள். அவர்கள் தனியாக நிற்கும் போது அவர்களின் கதைகளை கேட்டு சிங்கள மக்கள் கொந்தளிப்பார்களே ஒழிய ஒரு போதும் அவர்களின் பின்னால் அணித்திரளமாட்டார்கள். அது இந்த தேர்தலில் நிதர்சனமாகியிருக்கின்றது. மேட்டுக்குடி இயல்பு கொண்ட இந்த சிங்கள கடும்போக்காளர்கள் இன்று மேலைத்தேய முதலாளித்துவ ஆதரவு சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டுள்ளார்கள். இந்த சக்திகள் தமிழரா சிங்களவரா என்பது அவர்களுக்கு ஒரு விடயமாக இருக்காது. இந்த சமரசம் அவர்களிற்குள்ளும் பண்புரீதியிலான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றம் குறித்து மேட்டுகுடிசாரத பாரம்பரிய சிங்கள மரபை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் முரண்பட்டனர். இந்த முரண்பாட்டை பயன்படுத்தியே உதயகம்மன்பில தனியாக பிரிந்து சென்றார். இதன் உண்மை தன்மையை ஹெல உறுமய எதிர்வரும் தேர்தல்களில் தனியாக போட்டியிட்டால் அனைத்து பெறுபேறுகளிலும் அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் பெறுபேறுகளில் கண்கூடாக கண்டுகொள்ளலாம்.
ஆகமொத்தம் அனைத்து தரப்பினரிடமும் இந்த நல்லாட்சி கோசம் ஒரு பண்புரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலர் புதிய அரசியல் பண்பாடு குறித்து இதற்கு முன் வாக்குறுதி அளித்திருந்தாலும், முதல் முறையாக தேர்தல் காலத்தில் பொது எதிரணி இதனை நடைமுறையில் காட்டியது. அதற்கே பெரும்பாலான சிங்கள மக்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் ஒரு முறை வெறும் ஏட்டு தத்துவம் எந்தவகையில் பயன்தராது என்பதும் நடைமுறையுடனான தத்துவமே பயன்தரும் என்பதும் இங்கு நிரூபணமாகியிருக்கின்றது. இந்த மாற்றமும் நடைமுறையும் கட்சிகளின் கீழ் அமைப்புகளிலும் சமூகத்தினுள்ளும் தொடர்ந்து செல்லுமா என பொருத்திருந்தே அவதானிக்க வேண்டும். ஆனால், இந்த மாற்றம் எதுவும் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளிடம் நிகழவில்லை என்பது கவலை தரும் விடயமே !
இந்த மாற்றம் ஏதோ தங்கதட்டில் வைத்து தரப்பட்டடது போல் செய்திகள் வெளிவருகின்றன. பாசிச ஆட்சி , சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி என பலவரைாக விமர்சிக்கப்பட்ட ஒரு ஆட்சியை இத்தனை இலகுவாக ஒரு தேர்தலில் வீழ்த்திட தான் முடியுமா?
பயம் பீதியை உருவாக்கி, மக்கள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியளார்கள் என அனைவரையும் அடக்கி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தையும், சட்ட ரீதியாக எல்லாவிதமான அதிகாரத்தையும் கொண்டிருந்த, இனவாதம், யுத்தவெற்றி என வலிமையான கவசத்திற்குள்ளிருந்த ஒரு பாசிச அல்லது சர்வாதிகார ஆட்சியாளரை ஒரு இரவிற்குள் இவ்வளவு அமையதியான முறையில் தூக்கி எறிந்திடமுடியுமா என்ன?
உண்மையில் இங்குள்ள புத்திசீவி அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் வசதிக்காக கூறியது போல் மகிந்த ஒரு பாசிசவாதியோ, சர்வாதிகாரியோ அல்ல. அத்துடன் 2003 ற்கு முற்பட்ட மகிந்த பதவி மீது வெறிகொண்ட நபரும் அல்ல. புலிகள் இயக்கத்தின் தலைவர் கூட மகிந்தவை யதார்த்தவாதி என்று குறிப்பிட்டதை நினைவு படுத்திட விரும்புகின்றேன். குடும்ப மரபு. பணப்பலம், அல்லது அதீத விடய நிபுணத்துவம் காரணமாக அன்றி போராட்ட அரசியல் மூலம் பலரின் ஆதவையும் அபிமானத்தையும் பெற்று முன்னுக்கு வந்தவர் மகிந்த. பலஸ்தீன ஆதரவு போராட்டம், தொழிற்சங்க ஆதரவு போராட்டம், ஜேவிபி உறுப்பினர்களின் படுகொலைக்கு எதிரான போரட்டம் என்பன மகிந்தவிற்க தென்பகுதி சிங்களவர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கியிருந்தது. பின் யுத்தவெற்றியையும் இவர் சேர்த்துக் கொண்டார்.
பதவிக்கு வந்த பின் மகிந்தவின் அத்தனை இயல்புகளும் மாறின. அவரை சுற்றியிருந்தவர்கள் மகிந்தவை என்றும் தவறாகவே வழிநடத்தினார்கள்.
புலிகளுடன் உள்நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவேன், புலிகளின் தலைவரை நேரில் சந்தித்து கதைப்பேன் என தேர்தலில் கூறிய மகிந்தவை யுத்தம் நோக்கி தைரியமூட்டி தள்ளியவர்கள் இப்போது முன்னிலை சோசலிச கட்சி. தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி என மூன்றாக பிரிந்திருக்கும் அன்றைய ஜேவிபியினர் ஆவர்.
மாவிலாறில் யுத்தத்தை ஆரம்பிக்க பின் நின்ற மகிந்தவை யுத்தமுனைக்கு அழைத்து சென்றவர்கள் ஹெல உறுமயவினர். அதன் ஆரம்ப கர்த்தா ஹெல உறுமயவின் ரத்தன தேரர்.
யுத்தத்தில் பெயர் பட்டியல் தயாரித்து மக்களையும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும் கொலை செய்தது முதல் பாரிய மனித அழிவை அவரின் குடும்பத்தினர் நடத்தினர்.
யுத்ததின் பின்னரும் சரி அதன் பின்னரும் சரி முழுமையாக குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு அமைய ஆட்சி செய்ய ஆரம்பித்தார் மகிந்த.  அவரின் குடும்ப உறுப்பினர்களிற்கு நெருங்கியவர்களும் கைகோர்த்து கொண்டனர். அதன் பிறகு தான் உச்சகட்ட அடக்குமுறைகளும் மோசடிகளும் அரங்கேறின. மகிந்த பதவி வெறி பிடித்தவராக மாறினார். அதீத அதிகாரம் எந்த மனிதனையும் நல்லவனாக இருக்க செய்ததில்லை. யதார்த்தவாதி மகிந்த இந்த நூற்றாண்டின் மோசமான படுகொலை செய்தவராகவும், பெரும் மோசடி அடுக்குமுறையில் ஈடுப்பட்ட தலைவராகவும் மாறினார்.
எப்படி ஜேவிபி, தடைசெய்யப்பட்ட கட்சியை, ஒருவரை தவிர அனைத்து தலைவர்களும் 60000 உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட கட்சியை தலைமறைவாக இயங்கி கட்டியெழுப்பிய விமல்வீரவன்ச என்ற செயற்திறன்மிக்க இளம் புரட்சியாளரை, தலைக்கு ஜெல் தடவி, தாடியை வட்டடிமடித்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி இனவாதத்தை கக்க வைத்து மிக மோசமான இனவாதியாகவும், அரசியல் பிறழ்வாகவும் மாற்றியதோ, அதே போன்ற பிறழ்வே மகிந்தவின் விடயத்திலும் நிகழ்ந்தது.
ஆனால், இங்கு அடக்கு முறை என்பது மகிந்தவிற்கும் அவரின் குடும்பத்திற்கு பங்கம் ஏற்படும் இடங்களில் மாத்திரமே அரங்கேறியது. மகிந்தவின் நலனிற்கு பாதிப்பு ஏற்படாமல் அவரை கொலை கூட செய்ய முடியும். ஆனால். மகிந்தவின் நலனிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவரின் பரிவாரம் கருதும் ஒரு துரும்பை கூட அசைத்திட முடியாது. எந்த விமர்சனங்களையும் தவறுகளையும் எத்தனை காரசாரமாகவேனும் மகிந்தவிடம் நேரடியாக தெரிவிக்கலாம், ஆனால் அவை தொடர்பாக வெளியில் எந்த நடவடிக்கை எடுக்கவோ, அல்லது அவை மகிந்தவால் கருத்திலெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கவோ கூடாது. மகிந்த இப்படியான போக்கில் செல்ல பெருச்சாளிகளுடன் சுண்டெலிகள் கூட்டு சேர்வது போல் பலர் சேர்ந்து அட்டகாசம் புரிந்தார்கள். பாடசாலை ஆசிரியரை மண்டியிட வைத்தது , அரச ஊழியர்களை கட்டி வைத்து அடித்தது, வைத்தியர்களுக்கு கன்னத்தில் அறைந்தது, நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது முதல் அரசியல் வாதிகள் பாலியல் வல்லுறவிற்கு என தனியான அறைகளை வைத்திருந்தது வரை அட்டூழியங்கள் நடந்தன. மகிந்த இது எதனையும் கண்டு கொள்ளவில்லை. அவரின் நோக்கமெல்லாம் பதவியை தக்க வைத்து கொள்வதும், தனது பெயரை புகழ்மிக்கதாக மக்களிடம் கொண்டு செல்வதிலுமே இருந்தது. முன்னையகால அரசர்களும் இதனையே செய்தார்கள். அவர்களின் பெயர்கள் நிலைக்க வேண்டும் என்பதற்காக அடிமைகளை கொண்டு பெரும் கோயில்கள் நினைவு மண்டபங்கள் கட்டினார்கள், அரச செல்வத்தை பயன்படுத்தி யாகங்கள் நடத்தினார்கள்,யுத்தங்களை நடத்தி வெற்றிகளை பிரச்சாரம் செய்தார்கள். மகிந்தவோ அதிக வட்டிக்கு கடன் வாங்கி மக்களை பொருளாதார அடிமையாக்கி பெரும் கட்டுமானங்களை மேற்கொண்டு சகலதுக்கும் தன் பெயரை சூட்டினார். யுத்த வெற்றியை தனது வெற்றியாக மாற்றிக் கொண்டார். அரச செலவில் சர்வதேச நிகழ்வுகளையும் மாநாடுகளையும் நடத்தினார். முன்னைய அரசர்கள் தங்கள் ஆட்சிக்கு பங்கம் எற்படும் போது, நெருக்கடிகள் தோன்றும் போது, சவால்கள் ஏற்படும் போது அடக்கி ஆண்டு நிலைமையை கட்டுபடுத்துவார்கள். இதன் போது அரசர்கள் ஏதேச்சதிகாரிகளை போல் செயற்படுவார்கள். இதன் போது இவர்களின் அதிகாரம் அதன் பிரயோகம் நிச்சியமற்ற எல்லைகளை கொண்டதாக இருக்கும். இவ்வாறான ஆட்சியாளர்களிடம் உறுதியான இலக்குகளோ அதற்கான கட்டுமானங்களோ அடித்தளங்களோ இருக்காது. வெறும் ஆசையினால், சுயவிருப்பினால் உருவான செயற்பாடுகளே இருக்கும். இவர்கள் இருப்பதை கொண்டு தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார்களே ஒழிய, அதிகாரத்தை தக்கவைக்க முறையான தொடர்ச்சியான பொறிமுறைகள் இருக்காது. இவர்களின் பின்னால் எப்படியும் ஒரு வால் பிடிக்கும் கூட்டம் இருக்கும் ஆனால் அதிகாரம் பறிபோக போகின்றது என தெரிந்தால் இந்த கூட்டம் காணாமல் போய்விடும். இவர்களின் அதிகாரம் பாசிசத்தில் போன்று பக்தியினால் கட்டியெழுப்பபட்டிருக்காது, பயத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும். இவர்களை totalitarian  என்பார்கள். அரசாட்சியில் இவ்வாறான போக்குகளை ஆசிய சமூகத்தில் அவதானிக்காலம். குறிப்பாக நீர் தொடர்பான பிரச்சினைகள், ஆட்சி அதிகார பிரச்சினைகளின் போது இந்த போக்கு வெளிக்கிளம்பியது. அந்த வகையில் மகிந்த, பலர் குறிப்பிட்டது போல்  ஒரு சர்வாதிகாரியோ, பாசிச வாதியோ அல்ல. மகிந்த ஒரு totalitarian ஆவார். மகிந்தவின் செயற்பாடுகளில் சில இடங்களில் சர்வாதிகார போக்கும், சில இடங்களில் பாசிச போக்கும் வெளிப்பட்டமையினால், சர்வாதிகாரி அல்லது பாசிசவாதி என குறிப்பிட்டது தவறு. ஏதேனும் நிர்வாகத்தில் சோசலிசத்தின் அம்சங்கள் வெளிப்படுவதால் அந்த நிர்வாகத்தை சோசலிச நிர்வாகம் என்று குறிப்பிடுவது எவ்வளவு தவறோ அது போல் இதுவும் தவறே.
இந்த totalitarian களின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பான காலமாகும், அல்லது அந்த எண்ணத்தில் பலர் உருவாகும் காலமாகும். முன்னைய அரசாட்சி காலங்களில் நிறை சம்பவங்கள் இவ்வாறு நடந்திருக்கின்றன. மகிந்தவின் ஆட்சி காலத்திலும் இடதுசாரிகளுக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அவர்கள் மகிந்தவை பாசசவாதியாக, சர்வாதிகாரியாக விளங்கி கொண்டு சந்தர்ப்பத்தை பலவீனமான நிலையிலிருந்த ரணிலிடம் தாரை வார்த்து விட்டார்கள்.
ஆக, மகிந்த ஒரு சர்வாதிகாரியாவோ அல்லது பாசிசவாதியாகவோ இருந்திருந்தால் அல்லது அவ்வாறு உருவாகியிருந்தால்,  இத்தனை வேகமாக இழப்புக்கள் எதுவுமின்றி சாதாரண நடைமுறைகள் ஊடாக தூக்கி எறிந்திருக்க முடியாது.
அரசாட்சி கால totalitarian களை எவ்வாறு சதி, கலகம் என அன்றிருந்த சாதாரண முறைகளினூடாக அதிகாரத்திலிருந்து அகற்றினார்களோ, அதுபோலவே மகிந்தவையும் சாதாரண தேர்தல் முறைகளினூடாக அதிகாரத்திலிருந்து அகற்றியிருக்கின்றார்கள்.
ஆனால் தற்போது குறிப்பிடுவது போல், அது அத்தனை இலகுவாக நடந்திடவில்லை. அரச பணத்தில் 250 பில்லியன் ரூபாய் பணம், முழு அரச ஊடகத்துறை, அரசபடைகள், அரச ஊழியர்கள், அரச தினைக்களங்கள் வளங்கள் என அனைத்தும் தேர்தல் வெற்றிக்காக மகிந்தவால் பயன்படுத்தபட்டன. என்றுமில்லாதவாறு ஊடகங்கள் மூலம் மிக தீவிரமான இனவாதம் பிரச்சார நடத்தப்பட்டது. இத்தனையையும் மீறி வெற்றிக்கொண்டால் அதை இல்லாதொழிக்கும் திட்டங்களும், அப்படியும் முடியாவிட்டால் இராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தக்கவைக்கும் திட்டங்களும் இருந்தன. ஐக்கிய தேசிய கட்சிக்கு இது தொடர்பில் நல்ல அனுபவம் இருந்தது. 2005 இல் அவர்கள் அதிகாலையில் நித்திரைக் கொண்ட வேளையில் மகிந்த மோசடிகளை நிகழ்த்தியிருந்தார். 2010 யிலும் அப்படி தான்.
ஆனால் இம்முறை அத்தனை திட்டங்களையும் எதிரணியினர் இலாவகமாக முன்கூட்டியே கணித்து முறியடித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த போது அதிகாலை நான்கு மணிவரை மகிந்த உச்சக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் தோற்றுக் கொண்டிருந்த மகிந்தவிடமிருந்து அவரின் சகாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒடிக்கொண்டிருந்தனர். பலர் கை விரித்தனர். இராணுவத்தின் கணிசமாக பகுதியும் காலை வாரியது. அதிகாலை 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதை நிறுத்தி வைத்த மகிந்த, இராணுவத்தை ஆங்காங்கே நகர செய்து தன் தம்பி ஊடாக அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி செய்தார். சில இடங்களில் இராணுவம் ஒத்துழைக்கவில்லை.
அப்படியிருந்தும் ஒரு இராணுவ புரட்சியை செய்யும் வாய்ப்புக்களும் திட்டங்களும் மகிந்தவிடம் அதிகாலை 4 மணி வரை இருந்தன. உடனடியாக இந்தியாவும் அமெரிக்காவும் இந்த விடயத்தில் தலையிட்டன. இந்தியா ஆரம்பத்திலேயே மகிந்தவிற்கு ஒரு அடியை கொடுத்தது, இந்திய வெளியுறவு துறை ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவாகவும், புலனாய்வு துறை மகிந்தவிற்கு ஆதரவாகவும் செயற்பட்டனர். அதன் காரணமாக தான் இந்தியா ”றோ” அதிகாரிகளை தேர்தல் சமயத்தில் நாட்டிற்கு திருப்பியழைத்தது. இதுவே மகிந்தவிற்கு பெரும் அடியாக இருந்தது. “றோ“ இருந்திருந்தால் சிலவேளை நிலைமை மாறியிருக்கும். மகிந்த பரிவாரம் றோ வின் ஆலோசனை படி பல முன்னால் தமிழ் ஆயுத குழுக்களின் உறுப்பினர்களை களமிறக்கியிருந்தது. இவர்களை நாட்டிற்கு அழைத்து வந்தவர் பசில். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே குமார் குணரத்தினம் கூட நாட்டிற்கு வந்தார். ஆகவே நாட்டில் கலவரம் ஒன்றை உருவாக்கி தேசிய பாதுகாப்பை முன்னிருத்தி அதிகாரத்தை தக்க வைக்கும் செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்திருந்தன.
அப்படியிருந்தும் மகிந்த இறுதி நேரத்தில் எடுத்த முயற்சியை அமெரிக்காவும் இந்தியாவும் நேரடியாக தலையிட்டு தடுத்தன. அவர்கள் மகிந்தவிற்கு ஒரு உறுதிமொழியை வழங்கியிருக்கின்றார்கள். அந்த உறுதிமொழி ரணிலின் ஊடாக வழங்கப்பட்டது. அந்த உறுதி மொழியை தெரிவிக்கவே ரணில் அலரி மாளிகைக்கு சென்றார் . ஊடகங்களில் சொல்வது போல் மகிந்தவை வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவோ, மகிந்தவின் அழைப்பின் பேரிலோ அவர் செல்லவில்லை. வழங்கப்பட்ட உறுதி மொழி என்ன என்பது விரைவில் அரங்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கின்றேன்.
ஆக, திரைமறைவில் நடந்த இழுப்பறிகள், காய்நகர்த்தல்கள், பகீரத பிரயத்தனங்கள், மோசடிகள், அட்டூழியங்களின் பின்னர் மகிந்த தோற்கடிக்கப்பட்டே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தேர்தலில் மக்கள் தோற்கடித்திருந்தாலும் அதற்கு பின் எதிரணி ஒரு பெரும் நடவடிக்கையை மேற் கொண்டே மகிந்தவை தோற்கடித்திருந்தார்கள். அதிகாரங்கள் பறிபோன நிலையில் மகிந்த ஏதோ அமைதியாக வெளியேறியது போல் நடந்துகொண்டு விட்டார். மனிதர் போகும் போது அலரிமாளிகையில் துண்டை போட்டு விட்டுதான் போயிருக்கின்றார். தமிர்களின் இரத்தத்தினால் நனைந்த அந்த இனவாத துண்டை எடுக்க மகிந்த மெல்ல மெல்ல மீண்டும் வருவார்.
புதிய ஆட்சியாளர்கள் இனிவரும் காலத்தில் ஏதேனும் வகையிலான அதிகார பகிர்விற்கு செல்ல நேரிடும். அது அவர்களின் சுயவிருப்பதினால் அன்றி சர்வதேச அழுத்தங்கள் காரணத்தினாலே நடக்கும். இந்த சமயத்தில் மகிந்தவின் பரிவாரம் தூய இனவாதத்தை கையிலெடுத்து மீண்டும் களத்திற்கு வருவார்கள். ஜேவியும் அதிகார கனவில் இவர்களுடன் கைகோர்ப்பார்கள்.
எனவு புதிய ஆட்சியாளர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட பண்பு ரீதியிலான மாற்றத்தை சமூகத்திற்குள் கொண்டு செல்வதிலும், தமிழர் பிரச்சினையை நியாயமான ரீதியில் அரசியல் ரீதியாக தீர்பதும், அதற்கு சிங்கள சமூகத்தை தயார்படுத்திலுமே மகிந்த என்ற பேய் மீண்டும்  அலரிமாளிகைக்கு வருவதை தடுத்து நிறுத்தும். அந்த பேய் விட்டு சென்ற இனவாத துண்டை மீண்டும் கையிலெடுப்பதை தடுக்கும். இதற்காக செயற்பட வேண்டியது அனைவரினதும் தற்போதைய பொறுப்பாகும். அப்போது தான் மாற்றத்தை உண்மையான மாற்றமாக மாற்றிட முடியும்.
தமிழ் தரப்பிற்கும் இடதுசாரிகளுக்கும் இங்கு முக்கிய பொறுப்பிருக்கிறது. குறுகிய சிந்தனையில் அகப்பட்டு குழப்பங்களை ஏற்படுத்தாமல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தியை வென்றெப்பதற்காக தமிழ் தரப்பும், இடதுசாரிகள்  போலி இடதுசாரிய பம்மாத்துகளுக்கு பதிலாக உண்மையான இடதுசாரிய அரசியலை வளர்த்தெடுக்கவும் முயல வேண்டும்.




5:35 AM

மனித நேயமா? மோகமா?

by , in
ஏற்றுக்கொள்ள கடினமான முறையில் ,எதிர்பாராமல் நடந்த பிலிப் ஹியுக்ஸின் மரணத்திற்காக உலகம் முழுவதிலிருந்தும், அநேகமானோர் அனுதாபத்தையும், துயரத்தையும் வெளியிட்ட வண்ணமிருக்கின்றனர். இந்த மரணத்திற்கு எந்த பகைமையோ, முன்குரோதமோ, உள்நோக்கமோ, திட்டமிடலோ, பழிவாங்கலோ, சதிசெயலோ பின்னனியாக இருக்கவில்லை. இவ்வாறு, ஒரு உயிர் ஏற்றுக்கொள்ள கடினமான முறையில் விளையாடும் போது ஏற்பட்ட ஒரு விபத்தால் பறிக்கப்பட்டமை உலகெங்கிலுமுள்ள அநேகமானவர்களின் மனதை கவலையடைய செய்தமைக்கும், இனி இப்படி ஒரு மரணம் நிகழ கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கும் உண்மையான காரணம் மனிதநேயம் தானா???? அல்லது, நியாயமற்ற முறையில் ஒரு உயிர் பறிக்கபட்டமைக்கு எதிரான எதிர்ப்புணர்வா? 

அப்படியானால், திட்டமிட்ட முறையில், சதிசெயல்களாலும், மானுட விழுமியங்களை மீறியும், பகைமையும் காழ்புணர்ச்சியையும் வெளிபடுத்தி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்ட போது இந்த மனிதநேயம் சுவிற்சலாந்திற்கு சுற்றுலா சென்றிருந்ததா??? ஒரே ஒரு ஹியுக்ஸின் கோமா மௌனம் உலகை உலுக்கும் என்றால் கொத்து கொத்தாக கொத்து குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் கதறல்கள் இவர்களுக்கு எப்படி கேட்காமல் போனது???? ஒருவேளை மனித நேயத்திற்கும் சந்தர்ப்பவாதம் தெரியுமோ????



நாடுகளின் கிரிக்கெட்டுக்கள் அதிகம் தாக்கம் ஏற்படுத்துவன ஆகும். ஹியுக்சிற்கு பின்பு இஸ்ரேலிய நாட்டு கிரிக்கெட் நடுவர் ஒருவரும் பந்து தாக்கியதால் மரணமானார். அவர் குறித்து இவ்வாறு எந்த அனுதாப அலையும் ஏற்படவில்லை. மூலதனதுவ சமூகத்தில் மனிதநேயத்தை கூட சந்தையும் அதனுடனான எமது பிணைப்பும் தான் தீர்மானிக்கிறது. அப்படி இல்லை என்றால் நம் தேசத்தில் கொத்து கொத்தாய் மனிதர்கள் கொல்லப்பட்ட போதும் இந்த அனுதாபமும் கவலையும் ஏற்பட்டிருக்கும். ஹியுக்சின் மரணம் கிரிக்கெட் உலகின் அசைவுகளை பாதித்தது போல் அன்றைய காலகட்டத்தில் எமது சமூக அசைவுகளையும் பாதித்திருக்கும். தற்போது இடதுசாரிகள் மனிதநேயம் குறித்து கருத்தரங்கு நடத்துவது போல் ( ) எல்லோருக்கும் கருத்தரங்கு நடத்தி கற்பிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

Post Top Ad

My Instagram