Post Top Ad

சுன்னாகம் - இலக்கு வைக்கப்படும் வலிகாமம்

இனிவரும் காலங்களில் ஏனைய நாடுகளை அடிமைபடுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆயுதமாக தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று சிலகாலங்களுக்கு முன்பே அறிஞர்கள் எதிர்வு கூறியிருந்தார்கள். அன்று இப்படியெல்லாம் நடக்குமா என்று எள்ளி நகையாடியாவர்கள் இன்று அப்படி நடந்து விடுமோ என்று அச்சம் கொண்டிருக்கின்றார்கள். 2015 ஆம் ஆண்டு 3 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த தண்ணீர் பிரச்சினையை பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் இலகுவாக அந்த நாடுகளில் தலையிடலாம். இதற்கேற்ப உலகின் ஏகாதிபத்திய தரகு வங்கியான உலகவங்கி மக்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதிலிருந்து அரசுக்கள் விலகி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது. 

தண்ணீர் மனித வாழ்வுக்கும் சமூக இருப்பிற்கும் அடிப்படையான விடயமாகும். அதன் காரணமாக தான் உலக நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையோரங்களில் தோன்றின. சிறிலங்காவை பொறுத்த வரையில் கூட புராதன குடியேற்றங்கள் அனைத்தும் நதிக்கரையோரங்களிலே தோன்றின.

இத்தைகய தனிநபர் வாழ்க்கைக்கும் சமூக இருப்புக்கும் வலுவான ஆதாரமாக காணப்படும் தண்ணீரை சிங்கள சோவனிச பேரினவாத அரசு தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு போராட்டத்தை நசுக்கும் ஆயுதமாக கையிலெடுத்துள்ளது. ஏலவே, தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பிற்கு உணவை இவர்கள் ஆயுதமாக பயன் படுத்தியதை உலகமறியும்.தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு போராட்டத்தை சகல வழிகளிலும் நசுக்கி அடக்கி தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்தி முழுத்தீவையும் சிங்களவர்களின் உடைமையாக்கிட கங்கணம் கட்டி செயற்படும், சிறிலங்கா அரசு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வை வழங்குவதை காலம் தாழ்த்தியே  வருகிறது. அவர்கள் காலம் தாழ்த்துவதன் அல்லது ஒன்றுக்கும் உதவாத தீர்வுத்திட்டங்களை முன்வைப்பதின் பின்னால் அவர்கள் முன்வைக்கும் உண்மையான தீர்வுதிட்டம் மறைந்துள்ளது. தமிழ்  மக்களின் உடைமைப்பாட்டு கோரிக்கைக்கு ஆதாரமாக இருக்கும் பாராம்பரிய வாழ்விட பிரதேசத்தையும், குடித்தொகை செறிவையும் சீர்குழைத்து சிங்களவர்களை குடியமர்த்தி, உமைப்பாட்டு கோரிக்கையை அழித்தொழிப்பதின் மூலமும், தமிழர்களை சிங்களவர்களுடன் இணங்கி வாழவேண்டிய  எதிர்க்க முடியாத வாழ்வியல் சூழலிற்குள் தள்ளிவிடுதன் மூலமும் சிங்கள பௌத்த ஐக்கிய இலங்கையே அவர்களின் மறைமுக தீர்வுதிட்டம். தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு போராட்டத்தை பொறுத்தவரையில் யாழ்ப்பாண மாவட்டம் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாத கேந்திர நிலையமாக இன்று வரை காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களிளெல்லாம் இலகுவாக குடியேற்றங்களை செய்து வரும் அரசால், யாழ்பாணத்தில சிங்கள் குடியேற்றங்களை செய்வதும், குடியேற்றம்செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் அங்கே நிலைக்க செய்வதும் பெரிதும் சிரமத்திற்குரிய விடயமாகவே இருக்கின்றது. யாழ்பாண மக்களின் சமூக,பொருளாதார வாழ்வியல் அம்சங்கள் அதற்கு பிரதான காரணமாகும். யாழ்பாணத்தில் ஏற்படுத்தும் குடித்தொகை சிதைப்பு தமிழர் போராட்டத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்துள்ள அரசு, அதற்கமைவாக தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பத்து லட்சம் மக்களை 2030 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தி என்ற போர்வையில் குடியமர்த்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளது. எனினும் மிக இறுக்கமான காணி ஒழுங்கமைப்பை கொண்டுள்ள வெறும் 1024 சதுரகிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பிரதேசத்தில் இதனை செய்வது கடினமான விடயமாகும். கைத்தொழில் அபிவிருத்திக்காகவும், குடியேற்றங்களிற்காகவும் காணிகளை உறுதிசெய்திடும், கையகப் படுத்திடும் வகையில் இராணுவ முகாம்களை அமைத்து தொடர்ந்து அரசு காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதில் முக்கியமாக பிரதேசம் வலிகாமமாகும். இங்கு தான் யாழ்பாணத்தின் நிலத்தடி நீர்வளம் நிறைந்துள்ளது.



இந்த வலிகாமம் பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகளை ஆக்கிரமித்துள்ள அரசால், அதை தக்க வைப்பதும், மேலும் காணிகளை சுவீகரிப்பதும்  மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சற்று கடினமான விடமே ஆகும். இந்த நோக்கத்தில் தான் அரசு யாழ்பாண இளைய சமூகம் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்வதை மறைமுகமாக ஊக்குவித்து வந்தது. எனினும் தற்போது அதற்கான உத்தியாக குடிநீரை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.

சுன்னாகம் பகுதியில் நோர்த்தன் பவர் நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசுப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் இந்த பின்னனியிலேயே நடத்தப்பட்டுள்ளது. நோர்த்தன் பவர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட முன்பும் அந்த பகுதியில் எண்ணை கழிவுகளை கொண்ட பாரிய கிணறுகள் இருந்துள்ளமை செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த கிணறுகளிற்கு தற்போது எண்ண நடந்தது என்று தெரியவில்லை.

மேலும்;,கடல் மட்டத்திலிருந்து 15 கிலோமீற்றருக்கு தொலைவில் அமைந்துள்ள எந்த பிரதேசத்தையும் கொண்டிராத, நிலத்தடி நீரை மாத்திரமே ஒரே நீர் மூலமாக கொண்டுள்ள யாழ்பாணத்தில், நிலத்தடி நீரை மாசப்படுத்தினால் அது எத்தகைய விளைவை தரும் என்பதை அறியாதவர்கள் அல்ல நோர்த்தன் பவர் நிறுவனத்தினர். அதனை விட எண்ணைக் கழிவுகளை நிலத்தில் கலந்துவிடுவதை விட விற்பனை செய்வதின் மூலம் அதிக இலாபத்தையும் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க எண்ணை நிலத்தடி நீரில் கலந்தின் பின்னால் அரசின் சதிதிட்டம் இருப்பது ஊர்ஜிதமாகிறது.


வலிகாம பகுதியில் அரசு ஏற்படுத்திவரும் கட்டுமானங்கள் குறித்து விளக்கும் செய்மதி படங்கள் (நன்றி - கூகிள்)




சுன்னாகத்தில் ஆரம்பித்த இந்த எண்ணை கலப்பு இன்று முழு வலிகாமம் பிரதேசத்தையும் ஆக்கிரமித்து வருகிறது. சீதன நடைமுறை மூலம் காணியுரிமை தக்கவைக்கப்படும் வழக்கம் கொண்ட யாழ்பாண சமூகத்தில் இந்த எண்ணை கலப்பு விவகாரம் முக்கிய பிரச்சினையாகியுள்ளது. தற்போதும் கூட சீதனமாக சுன்னாகம் பிரதேசத்தில் காணிகளை பெற்றுக்கொள்ள பலர் தயக்கம் காட்டி வருகின்றமையை அவதானிக்க கூடிய தாகவிருக்கிறது. நிலைமை இப்படியே தொடருமானால், பெண் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக ஒன்றில் காணிகளை விற்க நேரிடும் அல்லது காணிச்சீதனம் வாங்காத வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேட வேண்டும். இது நடந்தால் ஒரு தலைமுறையே வழரைவாக புலம் பெயரும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காணிகளை அரசு பொறுப்பேற்கலாம் அல்லது பினாமிகளைக் கொண்டு கொள்வனவு செய்யலாம். இதுவே அரசின் எதிர்ப்பார்ப்பாகும்.

இதே போன்ற ஒரு நடவடிக்கையே இரத்தினபுரி காவத்தை பிரதேசத்திலும் நடத்தப்பட்டது. காவத்தை பிரதேசத்தில் தொடர்ச்சியாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் காரணமின்றி கொலை செய்யப்பட்டார்கள். தொடர் கொலைகள் ஏற்படுத்திய பீதியினாலும், பெண்களை தனியாக விட்டு செல்ல முடியாத அச்சத்தினாலும் பலர் காணிகளை விற்று விட்டு வேறு இடங்கள் நோக்கி சென்றனர். இவற்றின் பின்னால் இருந்த விடயம், அப்பகுதி இலங்கையின் மாணிக்கல் அதிகம் காணப்படும் இடம் என்பதேயாகும். இந்த காணிகளை சிலர் சுவீகரிப்பதற்காகவும் மக்களை வெளியேற செய்வதற்காகவும் நடத்தப்பட்ட மோசடி திட்டமே காவத்தை கொலைகள் ஆகும். இது போன்ற ஒரு மிலேச்சத்தனமான திட்டமே வலிகாமத்திலும் நடத்தப்படுகிறது.

இந்த உண்மையை புரியமாலும், தெரிந்தும் மூடிமறைத்தும், வெறும் சுத்தமான குடிநீரை மட்டும் கோரி போராடுவதானது, அரசின் மறைமுக திட்டத்திற்கு ஆதரவளிக்கும் ஒன்றே ஆகும். குடிநீரை ஆயுதமாக பயன்படுத்தி தேசிய அந்தஸ்த்தை அழிக்க நினைக்கும் அரசின் சதியை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தும் போராட்டமே இந்த விடயத்தில் நிரந்தர தீர்வையும், பாதுகாப்பையும் பெற்று தரும். இந்த போராட்டத்தின் மூலமே வலிகாமம் மக்களின் இருப்பை தக்கவைக்க முடியும் என்பதோடு குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வை பெற முடியும். 

இதனை தவிர்த்து குடிநீரிற்காக மாத்திரம் போராடுவோம் ஆயின் அது இந்த விடயத்தில் மையபிரச்சினையில் இருந்து விலகி செல்வதாகவே இருக்கும். அத்துடன் சர்வதேச தண்ணீர் வியாபார முதலாளிகள் நுழைய இடம் ஏற்படுத்தி கொடுப்பதாகவே அதன் முடிவும் அமையும். இந்த பிரச்சினையில் கருவியாக இருக்கும் நோர்த்தன் பவர் நிறுவனத்துடன் இலங்கையை போர்குற்ற விசாரனையிலிருந்து காப்பாற்ற அயராது உழைக்கும் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் தேவா உட்பட, முக்கிய அரசியல் வாதிகளின் நெருங்கிய உறவினர்கள், நிதி   உதவியாளர்கள், வியாபார புள்ளிகள் தொடர்பு பட்டிருக்கும் நிலையில் இந்த பிரச்சினையில் உண்மையை அரங்கிற்கு கொண்டு வர உண்மையான மக்கள் சக்தியின் போராட்டம் மூலமே முடியுமானதாகவிருக்கும்.

இந்த பிரச்சினையில் பின்னாலிருக்கும் பேரினவாதமும், ஏகாதிபத்திய தரகுகளும் அவர்களின் கைக்கூலி ஊடகங்களும் உண்மையை திசைதிருப்பும் வகையில் இதனை குடிநீர் பிரச்சினையாக்கி தற்காலிக தீர்வை தந்து ஏமாற்றும் வகையில், போராட்டங்களை நடத்தியும், ஏற்பாடு செய்தும் ஊக்குவித்தும் வருகின்றனர். எனவே மக்கள் இந்த பிரச்சினையில் தெளிவடைவதோடு, அதன் தீவிரத்தை உணர்ந்து எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram