03) ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்த தொழிற்பாட்டுவாதக் கண்ணோட்டத்தின் முக்கிய அனுமானங்கள் மற்றும் விமர்சனங்களை கோடிட்டுக் காட்டுக.
அறிமுகம்
தொழிற்பாட்டுவாதம் எனப்படுவது சமூகத்தை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூறுகளின் பங்களிப்பின் மூலமாக நிலைத்திருப்பதும் இயங்குவதுமான முறைமையாக நோக்கும் சமூகவியல் கோட்பாட்டுக் கண்ணோட்டமாகும். இக்கண்ணோட்டத்தின் பிரகாரம் ஆரோக்கியமும், நோய் நிலையும் சமூகம் சிறப்பாக இயங்குவதில் தாக்கம் செலுத்தும் கூறுகளாகக் காணப்படுகின்றன.
தொழிற்பாட்டுவாத கண்ணோட்டத்தில், ஆரோக்கியமானது தனிநபர்கள் தங்களது சமூகப் பாத்திரங்களை நிறைவேற்றுவதற்குக் காரணமாகின்றது. மறுபுறம் நோய் நிலை சமூகத்தின் சீரான இயக்கப்பாட்டை சீர்குலைவுடைய செய்யும் கூறாக அமைகின்றது. எனவே, தொழிற்பாட்டுவாதம் சமூகத்தின் ஒழுங்கை நிலைநாட்ட மருத்துவ ஸ்தாபனங்கள் தொழிற்படுமாற்றை புரிந்துகொள்ளத் துணைபுரிகிறது. இருப்பினும், தொழிற்பாட்டுவாத கோட்பாடானது சமூகசமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூகத்தின் சிக்கலான தன்மை என்பவற்றை சரிவர விளங்கப்படுத்தாமை காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்த தொழிற்பாட்டு வாதத்தின் முக்கிய அனுமானங்கள்
ஆரோக்கியம் மற்றும் நோய் பற்றிய தொழிற்பாட்டுவாதிகளின் கண்ணோட்டமானது பிரதானமாக அமைப்பியல் தொழிற்பாட்டுவாதியான டால்கொட் பார்சனின் கோட்பாட்டை தழுவியதாகவே காணப்படுகின்றது. அவரது கேட்பாடானது கீழ்வரும் முக்கிய அனுமானங்களை முன்வைக்கிறது.
01. ஆரோக்கியமானது ஒரு சமூகத் தேவையாகும்.
ஒவ்வொரு தனிநபரும்; சமூகத்தில் தொழிலாளராக, பெற்றோராக, மாணவராக என பல்வேறுப்பட்ட தமது பங்களிப்புகளை ஆற்றுவதற்கு ஆரோக்கியமாக இருப்பது இன்றியமையாததாகும். எனவே, மக்கள் ஆரோக்கியமானவர்களாகக் காணப்படும் போதே சமூக முறைமை சுமுகமானதாக இயங்கும்.
02. நோய் நிலை சீர்குலைவாகும் (சமூக ஒழுங்கிலிருந்து விலகலடையும் நிலைமை)
நோய் நிலை மக்கள் தமது சமூக வகிபங்கை ஆற்றுவதற்குத் தடையை ஏற்படுத்துகின்றது. எனவே, தொழிற்பாட்டுவாதம் நோயை நிலையை சமூக சீர்குலைவாக அல்லது சமூக ஒழுங்கிலிருந்து விலகலடைந்து செல்லும் நிலைமையாகக் கருதுகின்றது. எனவே, சமூக ஒழுங்கை மீளமைக்கும் பொருட்டு நோய்நிலையை சரிவர முகாமை செய்தல் வேண்டும்.
03. நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் (Sick Role)
ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சமூகம் அதனை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றது என்பதை விளக்குவதற்கு ‘நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் - Sick Role’ எனும் கருத்தோட்டத்தை டால்கட் பார்சன் முன்வைத்துள்ளார். இக்கருத்தோட்டமானது ஒருவர் நோய்வாய்ப்படும் போது எவ்வாறு வினையாற்ற வேண்டும் என சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது என்பதைக் கூறுகின்றது.
இதன் பிரகாரம் ஒருவர் நோய்வாய்ப்படும் போது:
• நோய்வாய்ப்பட்ட நபர் தற்காலிகமாக அவரது வழக்கமான பொறுப்புகள் மற்றும் கடமைகளிலுமிருந்து விலக்கு அளிக்கப்படுவார்.• நோய்வாய்ப்பட்டமைக்காக அந்நபரைக் குறை கூறப்படுவதில்லை.• நோய்வாய்ப்பட்ட நபர்கள் நோயிலிருந்து குணமடைவதை விரும்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.• நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவியை நாடுவதும் சிகிச்சைக்காக ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயமானதாகும்.
இவ் வினையாற்றலுக்குத் துணைசெய்பவராக வைத்தியர் காணப்படுவார். அவரே ஒருவர் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கின்றாரா என்பதைத் தீர்மானித்து, அதிலிருந்து சாமான்ய நிலைக்கு திரும்புவதற்காக மேற்கொள்ள வேண்டியவற்றைப் பரிந்துரை செய்வார்.
04. மருத்துவத்துறையை சமூக ஸ்தாபனமாக ஃ நிறுவனமாக நோக்குதல்
தொழிற்பாட்டுவாதமானது சுகாதார பாராமரிப்பு முறைமையை அத்தியாவசியமான சமூக ஸ்தாபனமாக நோக்குகின்றது. இவ் ஸ்தாபன ஏற்பாடே நோய்நிலையை கையாள்வதற்கும், மக்களை நோய் நிலையிலிருந்து மீட்டு அவர்களது வழக்கமான சமூக வகிப்பாகத்தை முன்னெடுக்க வழிசெய்வதாகும்.
தொழிற்பாட்டுவாத அணுகுமுறையின் சாதகமான அம்சங்கள்
01. ஆரோக்கியத்தை சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இனங்காணுதல்.
தனிநபர்கள் சமூக வாழ்க்கையில் பங்கேற்க ஆரோக்கியம் அவசியம் என்பதையும், இடையூறுகளைத் தவிர்க்க நோயை நிர்வகிக்க வேண்டும் என்பதையும் தொழிற்பாட்டுவாதம் சரியாக வலியுறுத்துகிறது.
02. நோய்நிலையின் போதான நடத்தைகளை வழிப்படுத்துகின்றமை.
பார்சனின் ‘நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் - Sick Role கருத்தானது, தனிநபர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது என்பதை விளக்குகிறது, இது தனிநபருக்கும் சுகாதார பராமரிப்பு முறைமைகளுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது.
03. சமூக ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றமை
தொழிற்பாட்டுவாத அணுகுமுறையானது சமூகத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, மருத்துவமனைகள், மருத்துவ நிபுணர்கள் போன்றவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்தாபனமாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.
தொழிற்பாட்டுவாத கண்ணோட்டத்தின் மீதான விமர்சனங்கள்
தொழிற்பாட்டுவாத அணுகுமுறை பல சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை தொடர்பாக போதாமைகளையும், தன்னளவிலான வரம்புகளையும் கொண்டுள்ளது.
01. அதிகாரத்தின் தாக்கத்தையும் மற்றும் சமத்துவமின்மையையும் கருத்தில் கொள்ளாமை
தொழிற்பாட்டுவாதமானது சகல சமூக நிறுவனங்களும் சகலருக்கும் சமமான நலன்களை வழங்குவதாக அனுமானிக்கின்றது, அதாவது சுகாதார பாரமரிப்பு சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் வர்க்கம், பாலினம், இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்ற காரணிகள் தாக்கம் செலுத்தும் விதத்தினை கருத்தில் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, அநேகமான சந்தர்ப்பங்களில் வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் பணக்காரர்கள் பெறுவதைப் போன்ற சுகாதார பராமரிப்பு சேவைகளைப் பெறாமல் போகின்றார்கள்.
02. ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல்’ அனைவருக்கும் பொருத்தபாடு உடையதாக இல்லாமை
பார்சனின் ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல்’ கருத்தானது, குறுங்கால உடல்நலக் குறைவுகளுக்கு மாத்திரமே பொருந்துகின்றது. இதனை நாட்பட்ட நோய்கள் ( உதாரணம் - நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்) , மனநல பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கிய குறைபாட்டுடன் இருப்பதாகக் குற்றச்சாட்டப்படும் நிலைமைகளுக்கு (உதாரணம் - போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருத்தல்) பொருத்தப்பாடுடையாக இல்லை.
03. அனைவரும் மருத்துவ உதவியை நாடுவார்கள் என அனுமானிக்கின்றமை
நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல் கருத்தானது, தனிநபர்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்து குணமடைவதில் நாட்டம் கொண்டிருப்பார்கள் என அனுமானிக்கின்றது, எனினும், பொருளாதார நெருக்கடிகள், கலாச்சார நம்பிக்கைகள், மருத்துவர்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமாக மக்கள் மருத்துவ உதவியை நாடுவதைத் தவிர்க்கலாம்.
04. நோயாளியின் நிலைப்பாடுகளையும், சுயாதீன தன்மையையும் புறக்கணிக்கின்றமை.
தொழிற்பாட்டுவாதமானது நோயாளர்களை உணர்வுகள் கொண்டவர்களாகவும், நோயின் தாக்கத்தை அனுபவிப்பவர்களாகவும் கருதாமல் பராமரிப்பைப் பெற வேண்டியவர்களாக மாத்திரம் கருதுகின்றது.
இலங்கை சூழலிலிருந்தான எடுத்துக்காட்டுகள்
இலங்கையின் பல பகுதிகளில், பெண்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் பாரம்பரியமாகச் சுமத்தப்பட்டுள்ள பாலின கடமைகள் அல்லது திணிக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்புகள் காரணமாகத் தொழில் நடவடிக்கையில் அல்லது வீட்டுபாராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றார்கள். இது பார்சன் கூறிய ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றலை’ மீறுகின்றது.
பல சந்தர்ப்பங்களில் மனநல பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் ‘சட்டப்பூர்வமாக நோய்வாய்ப்பட்டவர்கள்" என கருதப்படுவதில்லை.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நோய்வாய்ப்பட்ட நபர்களும், தொற்றுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தை எதிர்கொண்டவர்களும் தம்மைத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலர் வருமானத்தில் ஏற்படும் இழப்பு, சமூகத்தில் நிராகரிப்படலாம் என்ற தயக்கம் காரணமாக அதனைச் செய்யத் தவறினார்கள்.
இவ் எடுத்துக்காட்டுகள் பார்சன் கருதுவது போலல்லாமல், யதார்த்த வாழ்க்கையின் போதான நோய் கால நடத்தை மிகவும் சிக்கலானது என்பதைக் காட்டுகின்றன.
முடிவுரை
தொழிற்பாட்டுவாத கண்ணோட்டமானது, குறிப்பாக டால்காட் பார்சன்ஸின் நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல் கருத்தின் மூலம், சமூக இயக்கப்பாட்டில் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும், நோய் நிலை சமூகத்தை எவ்வாறு சீர்குலைக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் பயன்மிக்கதான அடிப்படையை வழங்குவதுடன், சமூக ஒழுங்கிலும், இயக்கப்பாட்டிலும் சுகாதார பராமரிப்பின் முக்கியத்தை எடுத்துக் காட்டுகின்றது, இருப்பினும், தொழிற்பாட்டு அணுகுமுறை குறிப்பிடத்தக்க வரம்புகளையும் தன்னளவிலான மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார வேறுபாடுகள், நாள்பட்ட மற்றும் மனநோய்களின் சிக்கலான தன்மை என்பவற்றைச் சரியான முறையில் அணுகவில்லை. எனவே, தொழிற்பாட்டுவாதமானது, சுகாதாரம் சார் நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பப் புள்ளியை வழங்கும் அதே வேளையில், சமூகத்தில் சுகாதாரத்தின் வகிபாகம் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதற்குப் பிற சமூகவியல் கண்ணோட்டங்களுடன் இணைத்து அணுகப்படல் அவசியமானதாகும்.
No comments:
Post a Comment