Post Top Ad

இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்

ஐ.எஸ் எனும் இசுலாமிய அமைப்பு இன்று உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பெரும் பலம் வாய்ந்த யானைக்கு எறும்பு தொல்லைக் கொடுப்பது போல் இந்த அமைப்பு ஏகாதிபத்திய அரசுகளுக்கு தலையிடி கொடுத்து வருகின்றது. அத்துடன் அந்த அமைப்பு அதிகாரம் செலுத்தும் இடங்களிலெல்லாம் மிலேச்சத்தனமான மனிதவுரிமை மீறல்களையும் நடத்தி வருகின்றது. வேறு மதங்களை பின்பற்றுபவர்களை படுகொலை செய்வது, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. 

அமெரிக்கா, உலக நாடுகளை இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்ற வருமாரு அழைப்பு விடுத்துள்ளது. எது எவ்வாறாயினும் உலக ஏகாதிபத்திய அரசுக்கள், மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் நாடுகளிலும் வகைதொகையின்றி தலையீடு செய்வதற்கு ஐ.எஸ் எனும் அமைப்பின் மூலம் பாதை அமைத்துக் கொண்டுள்ளன. ஐ.எஸ்  அமைப்பானது குர்ஆனின் வாசகங்களுக்கு அமைவாக செயற்படுவதாக கூறுகின்றது. மேற்கத்தைய சனநாயகவாதிகள் இவர்களை அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு குறித்த கால பகுதியின் மூலதர்மத்தை தீவிரமாக பலாத்காரமாக பின்பற்றி நடைமுறைபடுத்த முயல்பவர்களை அடிப்படை வாதிகள் எனலாம். அதன் அடிப்படையில் மார்க்சிய நூல்களின் தத்துவங்களை தீவிரமாக பின்பற்றி நடைமுறைபடுத்த முயல்பவர்களைக் கூட அடிப்படைவாதிகள் எனலாம். ஆனால், இங்கு இசுலாமிய அடிப்படைவாதமோ,தீவிரவாதமோ முக்கியமான விடயம் அல்ல. அடிப்படைவாதம் குறித்து கதைக்கும் மேற்கத்தைய சனநாயகவாதிகள்,அவர்கள் குறிப்பிடுவது போல இசுலாமிய அடிப்படைவாதத்தின் பிறப்பிடமான மத்திய கிழக்கு நாடுகளில் செயற்பட்ட சகல முற்போக்கு. இடதுசாரி, சனநாயக அமைப்புக்கள் அனைத்தையும் அழித்தொழித்து நடத்திய ஏகாதிபத்திய பயங்கரவாதமே சகலதுக்கும் அடிப்படையான பிரச்சினையாகும்.

மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை தடையின்றி சுரண்டும் நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதற்காக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசுக்கள், அந்நாடுகளில் செயற்பட்ட  ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை எதிர்த்து சொந்த மக்களின் தன்னாதிக்கத்தை வலியுறுத்திய சனநாயக, இடதுசாரிய, முற்போக்கு இயக்கங்கள் அனைத்தையும் அழித்தொழித்தார்கள். அதற்கும் மேலாக  அந் நாடுகளில் தனக்கு சார்பில்லாத அரசாங்கங்களை வீழ்த்தவும், தாம் தலையீடுவதற்கு வசதியாக குழப்பகரமான நிலைமைகளை உருவாக்கவும் அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களை, சர்வாதிகார ஆட்சியாளர்களை உருவாக்கி வளர்த்தெடுத்தார்கள். ஆப்கானிஸ்தான் சோவித் யூனியனில் இணைந்து சோசலிச பாதையில் செல்வதை பின்லாடன் தலைமையிலான ஆயுதக்குழுவை உருவாக்கி தடுத்தது அமெரிக்கா, என்பது பகிரங்கமான விடயம். பின்னர் பின்லாடன் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலிற்கு எதிராக அமெரிக்கா தனக்கு வழங்கிய  ஆயுதங்களை திருப்பினார்.

இன்று இயங்கும் பல அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கியவர்கள் இந்த மேற்கத்தைய சனநாயகவாதிகள் என்பதே உண்மையாகும். அவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் அவர்களின் சுரண்டலை எதிர்க்கும் போது பிரச்சினைகள் வெடிக்கின்றன. ஏகாதிபத்திய அரசுக்களின் சுரண்டல், கொள்ளையடிப்புக்கள் பற்றி கதைக்காமல் வெறும் இசுலாமிய   அடிப்படைவாதம்   குறித்து மாத்திரமே கதைக்கப்படுகின்றது. சகல மத தத்துவங்களும் அவை தோன்றிய காலத்தில் முற்போக்கு பாத்திரத்தையே வகித்தன. மத்திய கிழக்கு நாடுகளில் சீரழிந்த சமூகத்தை கட்டுகோப்பாக்குள் கொண்டுவந்து சீர்படுத்துவதில் நபிகள் நாயகம் மேற்கொண்ட நடடிக்கைகளே இசுலாமிய சமூகத்தை உருவாக்கியது. அதே போல் தான் இந்து மதமும், பௌத்த மதமும், கிறிஸ்தவமும். 

ஆனால், வரலாற்றின் வளர்ச்சியுடன் இந்த மததத்துவங்களும் பல நடைமுறைகளை கைவிட நேர்ந்தது. அது அத்தனை இலகுவாகவும் நடந்திடவில்லை. மத நிறுவனங்கள் மூலம் இலாபமடைந்த தரப்பிற்கும், மனித குலத்தின் சுதந்திர மகிழ்ச்சிகர வாழ்விற்கான நிலைமைகளை உருவாக்கிட முனைந்தவர்களுக்கும் இடையிலான போராட்டத்தின் பிரதிபலனாகவே ஏற்பட்டது. முன்னையவர்கள் வரலாற்று வளர்ச்சிகள் மனித சமூகத்தை முன்னோக்கி அழைத்து செல்வதற்கு தடையாக நின்று தனக்கு இலாபம் தரும் நடைமுறைகளை தொடர்ந்து நிலைநிறுத்த முற்பட்டதால் பிற்போக்குவாதிகள் என்றும், பின்னையவர்கள் மனித வாழ்வின் முன்னேற்றகரமாக நிலைமைகளுக்காக நடைமுறையில் இருந்த சீரழிவுகளை எதிர்த்து நின்றதால் முற்போக்குவாதிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள். சகல சமூகங்களிலும் உதித்தெழுந்த முற்போக்களார்களும், முற்போக்கு அமைப்புக்களுமே அந்த சமூகங்களிலிருந்த பிற்போக்கு தனங்களை எதிர்த்து நின்றது. ஹிட்டலரின் பாசிச தத்துவத்திற்கு வழிக்காட்டல்களை வழங்கிய இந்து தத்துவத்தின் பாசிச நடைமுறைகளை வழுவிழக்க செய்வது முதற்கொண்டு சகல சமூகங்களும் இந்த போராட்டங்களை நடத்தியிருக்கின்றன, நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், மத்தியகிழக்கில் இவ்வாறான போராட்டங்கள் நடந்திடா வண்ணம் அந்த நாடுகளில் உருவான சகல முற்போக்கு இயக்கங்களையும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் அழித்தொழித்தது. முற்போக்கு இயக்கங்கள் சொந்த சமூகத்தினுள் நடக்கும் சுரண்டலிற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்தின் சுரண்டலிற்கு எதிராகவும் குரல் கொடுத்தமை அல்லது ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்தமையே இதற்கான காரணம். அது வர்க்க அடிப்படையிலான எதிர்ப்பு இல்லை எனினும், ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு  எதிரானதாகவே அமைந்தது. இவ்வாறு ஒரு சமூகம் வரலாற்றுடன் வளர்ச்சியடைவதை நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதை அழித்தொழித்துவிட்டு இன்று அந்த சமூகங்களின்பிற்போக்குதனங்கள் குறித்து கதைப்பதோஅதற்கு எதிராக போராடுவதாக குறிப்பிடுவதோ போலியானதாகும். வளர்ச்சியடைவது என்பது இசுலாமிய சமூகத்தின் உரிமை. அந்த உரிமை மிலேச்சத்தனமாக பறிக்கப்பட்டு, இயங்கியல் விதிகளுக்கு முரணாக இசுலாமிய சமூகத்தில் மேற்கத்தைய நாடுகளின் சுரண்டலிற்கு தேவையான நிலைமைகள் மாத்திரம் தக்கவைக்கப் பட்டுள்ளமையானது, அந்த சமூகத்திற்கு உலகம் இழைத்த மாபெரும் துரோகமும் அநீதியுமாகும். 

எனவே, இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது உலக ஏகாதிபத்திய சுரண்டிலிற்கு எதிரான போராட்டத்திலிருந்தே ஆரம்பிக்கபடல் வேண்டும். இந்த போராட்டத்திற்கு மூன்றாம் உலகநாடுகளின் முற்போக்கு, இடதுசாரிய இயக்கங்கள் தலைமைதாங்க வேண்டும். இதற்காக மூன்றாம் உலக நாடுகளின் இடதுசாரிய அமைப்புக்களின் சர்வதேச அரங்கத்தை கட்டியெழுப்பி பகிரங்கமாக செயற்படுவது அத்தியாவசியமானதாகும். இந்த சர்வதேசிய அரங்கத்தின் மூலம் அந்த நாடுகளில் இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணியை அமைக்கவும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அதனை தக்கவைக்கவும் பரஸ்பர உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இடதுசாரிகள் சொந்த நாட்டில் தேசிய இனங்கள் அழிக்கப்படுதல், ஒடுக்கப்படல் என்பவற்றிற்கு அதிகார வர்கத்திற்கு ஒத்துழைப்ப வழங்கி வரும் நடவடிக்கைகள் உட்பட இடதுசாரிய அரசியலுக்கு மாறான போக்குகளை களைந்திடவும் இந்தக் கூட்டு அழுத்தம் கொடுக்கலாம். இரகசிய செயற்பாடுகளை மேற்கொண்டு இரகசியமாக அழிவதற்கு பதிலாக  பகிரங்க செயற்பாடுகளை முன்னெடுத்து மக்கள் சக்தியை மாபெரும் கருவிகளாக உருவாக்குவதே இங்கு சிறந்ததாகும்.

ஏகாதிபத்திய நடைமுறைக்கு எதிரான இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களுடன் இடதுசாரிகள் கூட்டு சேர்ந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்தல் வேண்டும். ஏனென்றால் இசுலாமிய அடிப்படைவாதம் என்பது மனிதகுலத்தின் தற்காலிக எதிரி  மாத்திரமே!

முதலாளித்துவ ஏகாதிபத்தியமே மனித குலத்தின் நிரந்தர எதிரி. நிரந்தர எதிரிக்கு எதிராக தற்காலிக எதிரியுடன் கூட்டு சேர்வதன் மூலம் தற்காலிக எதிரியை தன்போக்கில் வெல்லலாம். மாறாக தற்காலிக எதிரிக்கு எதிராக நிரந்தர எதிரியுடன் கூட்டு சேர்வது, நிலைமைகளை மோசமானதாக்கும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்த போராட்டம், மத்திய கிழக்கு நாடுகளில் முற்போக்கு இயக்கங்களை வளர்த்தெடுக்கும் என்பதுடன், அவர்களை ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்து விடுதலை பெறவும் வழிவகுக்கம். இந்த நிலைமையே இசுலாமிய சமூகத்தினுள் முற்போக்கு சக்திகள் பிற்போக்கு தனங்களிற்கு எதிரான சொந்த  போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைமையை உருவாக்கும். இந்த சொந்த போராட்டத்தின் வெற்றி உலகில் அடிமைத்தனத்தையம் பிற்போக்குதனத்தையும் உடைத்தெறிந்து , சுபீட்சமான மனித  வாழ்விற்கும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram