வினா 14 / 15: எண்ணெய் வளங்களும் அரசியல் முரண்பாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவை (MENA – Middle East & North Africa ) ஒரு தொழிற்பாட்டுப் பகுதியாக எவ்வாறு வரையறுக்கின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்க.
அறிமுகம்
MENA என்றழைக்கப்படும் வடஆபிரிக்க – மத்திய கிழக்கு பிராந்தியமானது, ஆபிரிக்க கண்டத்தின் மேற்கே மொராக்கோ விலிருந்து கிழக்கு ஆசியாவின் ஈரான் வரை பரவியுள்ள பிராந்தியமாகும். இப்பிராந்தியம் அதன், எண்ணெய் மற்றும் எரிவாயு வள இருப்பு மற்றும் தொடர்ச்சியான அரசியல் முரண்பாடுகள் காரணமாகத் தனித்துவமான தொழிற்பாட்டுப் பிராந்தியமாக வகைப்படுத்தப்படுகின்றது. தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள் பிரதானமாக அரசியல், சமூக, பொருளாதார இடைத்தொடர்புகளின் பரவுகை அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. ஆநுNயு பொறுத்தவரையில், ஹைட்ரோகார்பனை பிரித்தெடுத்து வர்த்தகம் செய்தல், மற்றும் அது சார்ந்த புவிசார் அரசியல் என்பவற்றுடன், வரலாற்று ரீதியாகத் தொடரும் சமகால முரண்பாடுகளும் இணைந்து ஒன்றொடொன்று பிணைந்த சிக்கல் தன்மையுள்ள கூட்டுறவு, பகை, சார்ந்திருத்தல் என்பவற்றை ஏற்படுத்தியுள்ளது. இவை இப்பிராந்தியத்தை முழுமையான ஒத்திசைவான தொழிற்பாட்டைக் கொண்ட பிராந்தியமாகப் பிணைத்துள்ளது.
பிராந்தியமாக ஒருங்கிணைக்கும் முதன்மை காரணியாக எண்ணெய் வளம்
மெனா பிராந்தியம் ஒத்த தன்மையான வளப்பரவல், மக்கள், கருத்துகள், நிறுவனங்கள் என்பவற்றால் வடிவமைக்கப்பட்ட பிராந்தியமாகத் தொழிற்படுகின்றது. புவியியல் காரணிகளுக்கு அப்பாற் பட்ட பொருளாதார, கலாச்சார, அரசியல் ஊடாட்டங்கள் இப்பிராந்தியத்தை இணைப்பதாகக் காணப்படுவதால் இது ஓர் தொழிற்பாட்டுப் பிராந்தியமாக வடிவம் கொள்கின்றது. அவற்றினை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மெனா பிராந்தியத்தை ஒருங்கிணைக்கும் முதன்மை காரணியாகக் காணப்படுகின்றது. இதுவே இப்பிராந்தியத்தின் பொருளாதாரம், புவிசார் அரசியல் , பிராந்திய ஒத்துழைப்பு, சமூக பொருளாதார கட்டமைப்பு என்பவற்றை ஒத்த தன்மை உடையதாக வடிவமைக்கின்றது.
1. வளச்செறிவும் அதன் பரவுகையின் ஒத்த தன்மையும்
இதுவரையான கணிப்புகளின் பிரகாரம் உலக எண்ணெய் வள இருப்பில் 48 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு இருப்பில் 43 சதவீதத்தையும் MENA பிராந்திய நாடுகள் கொண்டிருக்கின்றன. இதில் வளைகுடா நாடுகளான சவுதி அராபியா, ஈராக், ஈரான், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளும், லிபியா, அல்ஜீரியா ஆகிய வட ஆப்பிரிக்க நாடுகளும் பிரதானமானவையாகக் காணப்படுகின்றன. இவ் வளப் படிவுகள் ஒரே காலகட்டத்தில் உருவான வண்டல் படுகைகளிலிருந்து தோன்றியதாகும். எனவே, இவ் வண்டல் படுகை பரவிக் காணப்படும் இப்பிராந்தியத்தில் ஒத்த இயற்கை சூழல் தன்மை ஏற்பட்டுள்ளதுடன், அது வள அகழ்வு தொழிற்துறையையும் தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக இப்பிராந்தியம் உலகின் பிரதான சக்தி வள மையமாகியுள்ளது.
2. பொருளாதார ரீதியாகவும், உட்கட்டமைப்பு வசதிக்காகவும் சார்ந்திருத்தல்
MENA பிராந்திய நாடுகள் பிரதானமாக ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதியைச் செய்கின்றன. இதற்கு விரிவான விநியோக குழாய் தொகுதி ( எ.கா : ட்ரான்ஸ் - அரேபியன் குழாய் வழி), மூலோபாய கடற்பாதைகள் (எ.கா : ஹார்மூஸ் ஜலசந்தி), துறைமுகங்கள் (எ.கா: ராஸ் டனுரா மற்றும் மினா-அல்-பகர்) என்பன அவசியமானதாகும். எனவே, MENA நாடுகள் உட்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்து கொள்வதோடு, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றார்கள்.
எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருவாய், அரசுகளுக்குச் சொந்தமான நிதியங்களுக்கு (எ.கா : சவுதி அரேபியாவின் பொதுத்துறை முதலீட்டு நிதியம், அபுதாபியின் முதலீட்டு ஆணையம்) அளிக்கப்படுகின்றன. இந்நிதி சர்வதேச முதலீடுகளுக்காகவும், உள்ளூர் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது MENA எண்ணெய் ஏற்றுமதியாளர்களிடையே ஒத்த இயல்புடைய பொருளாதார முறைமையை உருவாக்கி உள்ளது.
3. பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புகளை ஏற்படுத்தல்
பெற்றோலிய ஏற்றுமதியாளர்களின் நாடுகளின் ஒன்றியமான ஒபெக் அமைப்பு, மெனா நாடுகளுக்கும், MENA உறுப்பு நாடுகளுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் எனச் சந்தையைப் பங்கீட்டு கொடுத்துள்ளமையானது, பிராந்திய ஒத்துழைப்பையும் கூட்டமைப்பையும் ஸ்தாபன ரீதியானதாக்கி உள்ளது.
மேலும், ஆறு வளைகுடா முடியாட்சி நாடுகள் இணைந்து தமக்கிடையே எரிசக்தி கொள்கை, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய விடயங்களை ஒருங்கிணைக்கின்றது. இது ஹட்ரோகாபன் வளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பாட்டு பிராந்தியவாதத்துக்கு எடுத்துக் காட்டாகின்றது.
4. சமூக-பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தல்
எண்ணெய் ஏற்றுமதி மூலமான வருவாய் ஈட்டல் காரணமாக இப்பிராந்தியம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இப்பிராந்தியம் அதிக தனிநபர் வருமானம் கொண்டதாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. இப்பிராந்திய மக்கள் நகரமயமாகிய, உயர் தரத்திலான வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். அதே வேளை தொழிலாளர் இடப்பெயர்வு, ஏற்றுமதிக்காக இறக்குமதி நாடுகளைச் சார்ந்திருத்தல் போன்ற நிலைமைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ஹைட்ரோகாபன் சார் பொருளாதாரம் பொதுத்தன்மை உடைய சமூக – பொருளாதார நிலைமைகளை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தை வரையறுக்கும்; அம்சமாக அரசியல் முரண்பாடுகள்
நீண்டகால அரசியல் முரண்பாடுகள் மெனா பிராந்தியத்தின் கட்டமைப்பையும், அதன் அரசியல் உறவுமுறைகளையும் வடிவமைப்பதாகக் காணப்படுகின்றது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வகுக்கப்பட்ட எல்லைகள், குறிப்பாக முதலாம் உலகப் போரின் பின்னர் காலனிகளை பங்கிட்டுக் கொள்வதற்காகத் தன்னிச்சையாக வகுக்கப்பட்ட எல்லைகள் இப்பிராந்தியத்தில் நீண்டகால நிலத்தகராறுகளை தோற்றுவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பாலஸ்தீன - இஸ்ரேல் முரண்பாடு இதற்கு எடுத்துக் காட்டாகும்.
வளங்களுக்கான போட்டியும் இப்பிராந்தியத்தில் அரசியல் முரண்பாடுகளை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக எண்ணெய் வயல்களின் மீதான கட்டுப்பாட்டை இலக்காகக் கொண்டு 1990 ஆம் ஆண்டு குவைத் மீது ஈராக் படையெடுத்தமை வளைகுடா யுத்தத்துக்குக் காரணமாக அமைந்ததுடன், நீண்டகால அரசியல் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஷியா-சுன்னி மதப்பிரிவுகளுக்கு இடையிலான மோதல் இப்பிராந்தியத்தில் அமைதியின்மையையும், பதட்ட நிலைமையையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகச் சவுதி அரேபியாவும், ஈரானும் எதிர் எதிர்த் தரப்புகளை ஆதரித்து மறைமுக மோதல்களிலும், போர்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
இம்மோதல்கள் பிராந்திய நாடுகளினதும், சர்வதேச சக்திகளினதும் மூலோபாய நலன்களுடன் பிணைக்கப்பட்டு, தொடர் அரசியல் பதட்டங்களையும், இராணுவ மூலோபாய கூட்டணிகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இது அமெரிக்க இராணுவ கூட்டுறவுகளையும், அமெரிக்க இராணுவ பிரசன்னத்தையும் பிராந்திய பாதுகாப்ப கட்டமைப்புக்குள் வரச் செய்துள்ளது.
இம்மோதல்கள் பிராந்தியம் முழுவதும் தொடர்புடைய அரசியல் நிலைமைகளையும், பதட்டத்தையும் ஏற்படுத்துவதுடன், பரந்தளவிலான பிராந்திய கூட்டுறவுக்குத் தடையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பிராந்திய நாடுகள் தேர்ந்தெடுத்த வகையில் கூட்டணிகளை அமைத்துக் கொண்டிருக்கின்றது. இம் முரண்பாடுகள் MENA நாடுகளைப் பிரித்தும் - இணைத்தும் வைப்பதோடு, இராணுவ மூலோபாய திட்டங்கள், கூட்டணிகள், இராஜதந்திர நடவடிக்கைகள் என்பவற்றையும் வடிவமைக்கின்றன. இவ்வாறு இப்பிராந்தியத்தின் பிரத்தியேக அரசியல் பிணக்குகள் இதனைத் தனித்த தொழிற்பாட்டுப் பிராந்தியமாக அiடாயாளப்படுத்த ஏதுவாகின்றது.
தொழிற்பாட்டுப் பிராந்தியமாக MENA
ஒத்த வளங்கள், மக்கள், கருத்துக்கள் மற்றும் நிறுவனங்களால் வடிவமைக்கப்படும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாக MENA பிராந்தியம் தொழிற்படுகிறது. இது புவியியலுக்கு அப்பாற்பட்ட, பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ஊடாட்டங்களால் வடிவமைக்கப்படுகின்றது. அவற்றைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. மூலதனம் மற்றும் பண்டங்களின் ஊடாட்டம்
எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தொடர்ச்சியான ஏற்றுமதி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருளாதாரங்களை உருவாக்குகிறது. உலகளாவிய சந்தைகளில் விலை ஏற்ற இறக்கங்கள் MENA முழுவதும் அலைமோதுகின்றன, இது தேசிய பாதீடுகள், மானியங்கள் மற்றும்; சமூக ஸ்திரத்தன்மையைப் பாதிக்கிறது.
2. தொழிலாளர் மற்றும் மக்களின் ஊடாட்டம்
தெற்காசிய மற்றும் அரபு நாடுகளின் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்தலும், அரசியல் முரண்பாடுகள் காரணமாக சிரியா, யேமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏதிலிகளாக தஞ்சமடைதல் போன்றவற்றின் காரணமாகவும் MENA பிராந்தியத்தில் பல்வேறு மக்களையும் இணைக்கும் சமூக வலைப்பின்னல் உருவாக்கி உள்ளது. .
3. கலாச்சார மற்றும் கருத்தியல் வலையமைப்புகள்
ஒன்றிணைந்த அரேபியம், அரசியல் இசுலாம் போன்ற கலாச்சார முன்னெடுப்புகளும், அல்-ஜசீர போன்ற நாடு கடந்த ஊடகங்களும் இப்பிராந்தியத்தில் பொதுவான பொதுக் கருத்தை ஏற்படுத்துகின்றன. இது கருத்துவேறுபாடுகள், முரண்பாடுகளைக் கடந்து மக்களிடையே பிராந்திய உணர்வை வலுப்படுத்துகின்றது.
4. நிறுவன அடுக்குகள்
MENA பிராந்தியம் பல்வேறு நிறுவனங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றது.. அரபு லீக், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பிராந்தியத்தில் செயற்படுகின்றன. ஒபெக் மற்றும் ஜிசிசி அமைப்புக்கள் எண்ணெய் வர்த்தகம், பிராந்திய ஒத்துழைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. இவ் பல் மட்ட நிறுவனங்கள் பிராந்தியம் முழுவதும் சிக்கலான உறவுமுறைகளையும் இடைத்தொடர்புகளையும் ஏற்படுத்துகின்றது.
முடிவுரை
MENA பிராந்தியம் எண்ணெய் வளம் மற்றும் அரசியல் முரண்பாடுகளால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்பாட்டுப் பிராந்தியமாகக் காணப்படுகின்றது. எண்ணெய் வளம் வலுவான பொருளாதார பிணைப்பையும், பொதுவான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் ஏற்படுத்தும் அதே வேளை, கடந்தகால மற்றும் சமகால முரண்பாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் , அரசியல் பிரிவினைகளையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறாக மெனா பிராந்தியம் ஒரு பிராந்தியம் வளங்களால் இணைக்கப்பட்டு, அரசியலால் பிளவுபட்டிருப்பதற்கு எடுத்துக் காட்டாகவும், சக்தி வளமும், ஆதிக்கமும் நெருக்கமாக தொடர்பு பட்டவை என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைகின்றது.
No comments:
Post a Comment