Post Top Ad

சுன்னாகத்தில் மறைக்கப்படும் உண்மைகள்



சுன்னாகம் பிரதேசத்தில் நீர் மாசுப்படுத்தப்பட்டதின் பின்னால் மறைந்திருக்கும் விடயம் தொடர்பில் கடந்த பதிவில் அம்பலப்படுத்தியிருந்தேன். எனினும் நீண்டக்காலமாக பேசப்பட்டு வரும் இந்த பிரச்சினையின் உண்மை பின்னணியை யாரும் இது வரை வெளிப்படுத்தி போராடவோ கோரிக்கை விடுக்கவோ இல்லை. ஆனால், நீர் மாசு தொடர்பாக வடமாகாண சபையும், அரசாங்கமும் இருவேறு தகவல்களை வெளியிட்டன. வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழுவின் ஆய்வின்  பிரகாரம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் ஆபத்தான கழிவுகள் எதுவுமில்லை என வடமாகாண சபையின் சுகாதார அமைச்சரும், விவசாய அமைச்சரும் இணைந்து அறிவித்தனர்.

அரசாங்கதரப்பில் முன்னாள் சுற்றுசூழல் அமைச்சின் செயலளரும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய பஸ்நாயக்கவின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு ஆய்வை நடாத்தி சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் ஆபத்தான மாசுக்கள் கலந்திருப்பதாக அறிவித்தது. பஸ்நாயக்க என்பவர் மகிந்த ராசபக்சவின் ஆட்சி காலத்தில் கோட்டபாயவிற்கு மிக நெருக்கமானவராக செயற்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராசபக்சவை, தற்போதைய குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்றும் வகையில் செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்விடயம் தொடர்பாக ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி பாராளுமன்றத்தில் தனி அறிவித்தல் மூலம் விடய பொறுப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முன்னரும் கடந்தவருடம் செப்டம்பர் மாதம் அமைச்சரவை பத்திரம் ஊடாக இப்பிரச்சினையை ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்குமாறும், டிசம்பர் மாதம் சுன்னாகம் பகுதியை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறும் கோரியிருந்தார். 

பாராளுமன்ற உறுப்பினரின் வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர் சுன்னாகம் பகுதியில் 150 கிணறுகள் ஆய்விற்குட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் 73 சதவீதமான கிணறுகளில் (109) சமான்ய அளவை விட அதிக எண்ணைக் கழிவு காணப்பட்டதாகவும், 4 சதவீதமான கிணறுகளில் (7) சமான்ய மட்டத்தில் எண்ணைக் கழிவு காணப்பட்டதாகவும், 23 சதவீதமான கிணறுகளில் (34) எவ்விதமான கழிவுகளும் காணப்படவில்லை எனவும் அறிவித்தார். குறிப்பாக மின்சார நிலையத்திலிருந்து 2 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக நீர் வழங்குவதாகவும் அதற்கு மேலும் செல்ல தயாராய் இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார். மேலும் வடமாகாண சபை தங்களது அறிக்கையை தனது அமைச்சுக்கு வழங்காமல் மறைத்து வருவதாகவும், வடமாகாணசபையும் அரசாங்கமும் ஆய்விற்கு  இருவேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதனால் முடிவுகள் மாறியிருக்கலாம் என்றும், அரசாங்கத்தின் அறிக்கையே உண்மையானது என்றும் சுன்னாகம் பகுதி நீரில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையில் நீர் மாசடைந்திருப்பதாகவும் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  மேலும் 2012 ஆம் ஆண்டு நீர் பாசன திணைக்களத்தினால், சுன்னாகம் பகுதியில் குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவையாகும். முதலாவது சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணைக் கலந்திருப்பது வெள்ளிடை மலை ஆனாலும், பாதிப்பு தொடர்பாக இருவேறான அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. மாகாணசபை ஆபத்தான கழிவு இல்லை என்கின்றது, அரசாங்கம் நீர் அருந்த முடியாத வகையில் மாசடைந்திருப்பதாக கூறுகின்றது. இதற்கு தொழில்நுட்ப காரணங்கள் கூறப்பட்டாலும், அரசாங்க தரப்பில் ஆய்விற்கு தலைமை தாங்கியவர் பாதுகாப்பு தரப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்ட உயர் மட்ட பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே நீர் மாசு விடயத்தின் பின்னால் கடந்த வேறொரு மோசடி எண்ணம் இருப்பதற்கான சந்தேகம் வலுக்கின்றது (கடந்த இதழில் இதனை சுட்டிக்காட்டியிருந்தோம்).  சுன்னாகம் பகுதி நிலத்தடி நீர் ஏலவே, இரசாயன உரங்களாலும், ஊக்கிகளாலும் மாசடைந் திருப்பதாக 2012 ஆம் ஆண்டு அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எண்ணை கலந்ததினால் நீர் மாசடைந்திருந்தாலும் அப்பகுதியில் அது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது போன்ற பாரிய சுகாதார பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. மாகாண சபையின் நடவடிக்கைகளும் அவ்வாறே அமைந்தன. ஆனால், அரசாங்க தரப்பிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் இப் பிரச்சினை தொடர்பாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.

ஏலவே நோர்த்தன் பவர் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பிரமுகர்கள் துறை சார் நிபுணர்கள் நாட்டின் முன்னணி பெரும் நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பு பட்டவர்களாகவும், யாழ்பாணம் போன்ற நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்ட ஒரு பிரதேசத்தில் நீரை மாசடைய செய்வது எத்தகைய பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் என்பதும், அவ்வாறு நீரை மாசடைய செய்வதால் அவர்களுக்கு பெரிதாக இலாபம் எதுவுமில்லை என்பதும் உண்மையாகும். அத்துடன் கழிவு எண்ணையை விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபத்தை தேடிட முடியும். அத்துடன் சுன்னாகம் பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான நீர்பாசன திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் இதன் அனர்த்தம் குறித்து 2012 ஆம் ஆண்டிற்கு முன்னரே தெரிய வந்திருக்கும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள்.

மேலும், பாதிப்பும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் தெளிவாக தெரிந்த பின்னரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதன் உண்மை பின்னணி அம்பலப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக இதனை ஒரு மனிதாபிமான அறம் சார் பிரச்சினையாக விளம்பரப்படுத்தி, அரசாங்கம் உடனடி மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அத்துடன் தற்போது அரசாங்கத்துடன் வர்க்கநலன் சார் இணக்க அரசியல் நடத்துபவர்களும், பிழைப்பிற்காக கொழும்பு நகரை சார்ந்து இருப்பவர்களும், ஊடகங்களும் இதனை மனிதாபிமான பிரச்சினையாக உருவெடுக்க செய்து, இதன் பின்னாலிருக்கும் சதியை வெளிவராமல் செய்வதில் பெரும் பங்காற்றின. இந்த நடவடிக்கைகளை அரசு கண்டும் காணாமலும் அல்லது மறைமுகமாக ஊக்குவித்திருந்தது. இது போன்றே சில வருடங்களிற்கு முன் கீறிஸ் பூதம் எனும் மர்ம மனிதர்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பீதியை ஏற்படுத்தியிருந்தனர். பெண்களை அச்சுறுத்தி பீதி குள்ளாக்குவதே அந்த மர்மமனிதர்களின் நோக்கமாக இருந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பீதியையும் ஏற்படுத்துவதன் மூலம்  அவர்கள் எட்ட நினைத்த நோக்கம் ஒன்றும் மறைமுகமானதல்ல. திட்டமிட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் சனத்தொகை அமைவை  சீர்குலைக்கும் முயற்சியே காணப்பட்டது. இந்த மர்ம மனிதர்கள் விவகாரத்தில் அரசாங்கமும், பொலிசும், இராணுவமும் மக்களிற்கு எதிராகவே செயற்பட்டார்கள். அதனை போலவே அண்மை காலமாக மலையக பகுதிகளில் கல்வியில் அதீததிறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் எவ்வித காரணங்களுமின்றி மர்மமான முறையில் நீர் நிலைகளில் சடலங்களாகமிதந்தார்கள். 

2009 ஆம் ஆண்டிற்கு பின் அரசு தமிழ் மக்கள் இன்னுமொரு எழுச்சியை நோக்கி செல்லாத வண்ணம் சகுனியின் பாணியில் பல திட்டங்களை நாசூக்காக முன்னெடுத்து வருகின்றது. கட்டாய கருத்தடை, இராணுவம் மூலமே வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக இளைஞர்களை கொண்டு செல்லல், கலாசார பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்தியும் காடைத்தனங்களிற்கும் அராஜகங்களிற்கும் துணைநின்று சமூக கட்டமைப்பை சீர குலைத்தல். தமிழ் முதலாளிகள் வடகிழக்கில் முதலீடுகள் செய்வதை தடுத்தல், அரசு , தனியார் நிறுவனங்களில் திட்டமிட்ட முறையில் சிங்களவர்களை செயற்கையான முறையில் வேலைக்கமர்த்தல் என பல வடிவங்களில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் பேசும் மக்களின் தேசிய கோரிக்கைக்கும் எழுச்சிக்கும் ஆதாரமாக அமையும் குடித்தொகை அமைவை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டவை.  

எனவே, சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தின் உண்மையான பின்னணி அம்பலப்படுத்தபடுமானால், அரசின் இவ் கபட திட்டம் வெளிச்சத்திற்கு வருவதினை தடுத்திட முடியாது. அதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இத்தனை தடுமாற்றமும் மூடிமறைப்புக்கள், திசைதிருப்பல்கள் நடக்கின்றன. அதற்கு ஓத்தூதும் வகையில் கொழும்பு நலன்சார்ந்தவர்களால் இந்த பிரச்சினை பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சினையும் மர்ம மனிதர்கள் பிரச்சினை மர்மமானது போல் அதன்பின்னாலிருக்கும் சதி அம்பலப்படுத்தபடாமல் மர்மமாகும் நிலையே தெரிகிறது. அதற்கு நாமும் துணைநிற்பது தான் வேடிக்கை.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram