வினா - 03/15 : புவியியலின் துணைப் பிரிவுகளில் ஒன்றாகப் பிராந்திய புவியியல் பரிணமிப்பதற்குப் போல் விடல் டி லா பிளாச் மற்றும் கார்ல் ரிட்டர் அளித்த பங்களிப்பை ஆராயுங்கள்.
அறிமுகம்
பிராந்திய புவியியலானது புவி மேற்பரப்பின் பரப்பியல் வேறுபாடுகளை; புரிந்துக் கொள்வதில் கவனம் செலுத்தி ஆராயும் புவியியலின் துணைப் பிரிவுகளில்; ஒன்றாகும். பிராந்திய புவியியல் ஒவ்வொரு பிராந்தியத்தையும் தனித்தனியே வேறுபடுத்தி ஆராய்கின்றது. அதாவது, வெவ்வேறு பிராந்தியங்களை வரையறுத்து அடையாளப்படுத்தும் அவற்றின் தனித்துவமான பௌதீக, கலாச்சார, சமூக-பொருளாதார பண்புகளைப் பகுப்பாய்வு செய்கிறது. இப் பிராந்திய புவியியலிற்கு அடித்தளமிட்டவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் ரிட்டர் மற்றும் பிரான்சைச் சேர்ந்த பால் விடல் டி லா பிளாச ஆகியோர் முன்னோடிகளாவர். இருவரும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தாலும், பிராந்திய புவியியலின் ஆரம்பக்கால வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கியவர்கள் ஆவர்.
கார்ல் ரிட்டர் (1779–1859): ஜெர்மனிய சிந்தனைப் பள்ளியின் முன்னோடி
கார்ல் ரிட்டர் நவீன புவியியலின் ஸ்தாபக தந்தைகளில் ஒருவராக அறியப்படுபவர் ஆவார். இவர் பிராந்தியங்கள் தொடர்பான தத்துவார்த்த ஆய்வுகளுக்கும், வழிமுறை முறைசார் ஆய்வுகளுக்கும் அடித்தளத்தை உருவாக்கினார். கார்ல் ரிட்டர் புவியியலை இயற்கை உலகை மனிதர்களின் வாழ்வியலுடன் இணைக்கும் அறிவியலாகக் நோக்கினார். இவர் மனித சமூகங்களை வடிவமைப்பதில் சுற்றுச்சூழல் மையமான காரணியாக இருப்பதாகக் கருதினார்.
ரீட்டர் அவர்கள், இயற்கை நிலப்பரப்பின் ஒவ்வொரு கூறுகளும் ஏதேனும் ஒரு நோக்கத்திற்குச் சேவை செய்கின்றது எனும் ஆன்மீக வழிப்பட்ட கருத்தை வலியுறுத்தும் டெலியோலிஜி சிந்தனை முறையை புவியியலில் அறிமுகப்படுத்தினார். அதாவது, இயற்கை நிலப்பரப்பின் மலைகள், ஆறுகள், குன்றுகள், பாலை வனங்கள் போன்ற ஒவ்வொரு கூறுகளும் இயல்பாகவோ, சந்தர்ப்பவசத்தாலோ ஏற்பட்டு விட்டவை அல்ல, அவை ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தொழிற்பாட்டை ஆற்றுவதற்காகக் காணப்படுகின்றன என்று கூறினார். இது பெரும்பாலும் பூமி இறைவனால் படைக்கப்பட்டது எனும் கருத்தை ஆதரிப்பதாக அமைந்தது. மேலும், புவியியல் வெளிப்பாடுகளை அவற்றின் தொழிற்பாடு மற்றும் மனித வரலாறு, கலாச்சாரம் என்பவற்றுடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் ஆராய வேண்டுமென்பதையும் வலியுறுத்தினார். ரிட்டர் அறிமுகப்படுத்திய ஒப்பீட்டு முறை, பிராந்தியங்களை அவற்றின் பௌதீக மற்றும் கலாச்சார அமைப்பு வடிவத்தின் கண்கொண்டு மதிப்பிடுவதை ஊக்குவித்தது.
ரிட்டர் தனது படைப்புக்களில் ஒன்றான ‘டை எர்ட்குண்டே’யில், இயற்கை கூறுகள் மனித நாகரிகங்களின் வளர்ச்சியில் எவ்வாறான செல்வாக்கை கொண்டிருந்தன என்பதினை ஆராய்ந்துள்ளார்.
கார்ல் ரிட்டர் அவர்கள் இடங்களின் பரப்பியல் ரீதியான தொடர்பினை ஆராயும் கோரோலஜியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தமையானது, பின்வந்தக்காலங்களில் பிராந்தியங்களை வகைப்படுத்தி அறிவதற்கான அறிவுசார் அடித்தளத்தை இட்டது. இவ்வாறாக கார்ல் ரிட்டர் தனது படைப்புகள் பிராந்தியங்களை வெறுமனே இயற்கை கூறுகளாக மாத்திரம் நோக்காமல், அவற்றினை இயற்கையும் மனித சமூகமும் தொடர்பு கொண்டு ஊடாடும் முறைமையாக நோக்கும் அணுகுமுறையை ஊக்குவித்தார்.
கார்ல் ரிட்டர் இவ்வாறான தனது பங்களிப்புக்கள் வாயிலாக அதுவரை காலமும் வரைபடங்களை உருவாக்கும் அளவில் எல்லைப்படுத்தப்பட்டிருந்த புவியியல் துறையை மனித நாகரிகங்கள் ஏன், எவ்வாறு வளர்ச்சியடைந்தன என்பது தொடர்பாக அர்தப்பாடுள்ள பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் துறையாக வளர்ச்சி மாற்றத்தை அடைய வழிகோலினார். இவ் மாற்றமே நவீனக்கால மானிட புவியியலுக்கு அடித்தளமாக அமைந்தது.
பால் விடல் டி லா பிளாச் (1845–1918): பிரெஞ்சு சிந்தனை மரபின் ஆரம்பகர்த்தா
பால் விடல் டி லா பிளாச் நவீன பிராந்திய புவியியலின் தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் பிராந்தியங்கள் பற்றிய கற்கைகளில் மானிடர்களை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தினார். லாபிளாச் அவர்கள் சுற்றுச்சூழல் மனிதர்களுக்குக் குறிப்பிட்ட வாய்ப்புக்களைத் தருவதோடு, மட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது, இவ் நிலைமைகளில் தாம் இயைபாக்கமடைய வேண்டிய நிலைமைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதர்கள் கொண்டிருக்கின்றார்கள் என்ற பார்வையை வலியுறுத்தும் வாய்ப்பு வாதம் - posibalism எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
அவர் முன்வைத்த "genre
de vie" – ஜெனரே டி வியே - (வாழ்க்கை முறை) எனும் பிரபலமான கருத்தாக்கத்தின் மூலம் மக்களின் நாளாந்த வாழ்வு, அவர்களது மரபுகள், நடத்தைகள், கலாச்சார பழக்க வழக்கங்கள் அவர்கள் வாழும் புவியியல் சூழலின் காலநிலை, மண்வளம், நில அமைப்பு, வளங்கள், இயற்கை அமைப்பு போன்ற அம்சங்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டு வடிவமைக்கப் படுகின்றன என்பதை விளக்கினார். இதன்மூலமாக, பிராந்தியங்கள் தொடர்பாக கற்கும் போது அவற்றின் தனித்துவமான மனித - சுற்றுச்சூழல் உறவுகளை ஆராய்வதன் மூலமே சிறப்பாகப் புரிந்து கொள்ளமுடியும் என்பதினை வலியுறுத்தினார். அதாவது, இவ் உறவின் அடிப்படையிலேயே ஒவ்வொரு பிராந்தியமும் பிரத்தியேகமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்கின்றது எனக் கூறினார்.
விடல் அவர்கள் இடம் ஒன்றினை பற்றி ஐயமுறப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் சகல இடங்கள் மீதும் பொதுவான விதிமுறைகளைப் பிரயோகிக்காது ஆழமான, விரிவான வழிமுறைகளில் ஆராய வேண்டுமென நம்பினார். இதன் காரணமாக புவியியலாளர்கள் களத்திற்குச் சென்று மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, இயற்கையும் மனிதர்களும் எவ்வாறான இடைத்தொடர்பை கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றிய ஆய்வுகளை நடத்தி, அவற்றை விளக்கமாகக் கூறும் பிராந்திய மொனோகிராப் அறிக்கைகளை எழுத வேண்டும் என வலியுறுத்தினார். அவர் பிராந்தியங்களை உலகம் தழுவிய பொது கோட்பாடுகளைக் கொண்டு ஆராய்வதை மறுத்து, ஒவ்வொரு பிராந்தியங்களும் அவற்றுக்கேயுரிய விதிமுறைகளின் அடிப்படையில், அவற்றின் சொந்த சூழல் நிலைமைகளில் இருந்து பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்பதினை ஆதரித்தார்.
விடலின் பங்களிப்பு, புவியியலில் ஒவ்வொரு இடங்களையும் தனித்துவமானவையாக நோக்கி அவற்றினை பிரத்தியேகமாகக் கவனம் செலுத்தி ஆராயும் ஐடியோகிராபிக் மரபிற்கு அடித்தளமிட்டது. இவ்வாறு மக்களுக்கும் அவர்கள் வாழும் சூழலுக்கும் இடையிலான உறவையும், கலாச்சாரம் மற்றும் சமூக காரணிகளில் அதன் தாக்கத்தையும் ஆராய்ந்ததின் மூலம் புவியியல் துறையை மனிதர்களையும் தேசிய அல்லது உள்ளூர் அறிவியலை மையப்படுத்திய துறையாக மாற்றமடையப் பங்களித்ததோடு, மானிட புவியியலின் வளர்ச்சிக்கும் வழிகோலினார்.
கார்ல் ரிட்டர் , விடல் லாப்ச் - ஒப்பீடும் பிராந்திய புவியியலில் ஏற்படுத்திய தாக்கமும்
கார்ல் ரிட்டர் விடல் லாப்ச் ஆகிய இரு அறிஞர்களும் பிராந்திய புவியியலின் பரிணாம வளர்ச்சிக்கு இருவேறு அணுகுமுறைகளில் பங்களித்துள்ளார்கள். ரிட்டரின் பங்களிப்புகள் தத்துவார்த்த ரீதியானதாகவும்; உலகளாவியதாகவும் காணப்பட்டது. அவர் இயற்கை அமைப்புக்கு ஆன்மீக நோக்கம் இருக்கின்றது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இயற்கை கூறுகள் மனித வரலாற்றிலும், நாகரீகங்களின் வளர்ச்சியிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை புவியியல் ஆராய வேண்டுமெனக் கருதினார். கார்ல் ரிட்டரின் பங்களிப்புகள் பிராந்தியங்கள் தொடர்பான ததத்துவார்த ரீதியானதும் முறையியல் சார்ந்ததுமான சிந்தனை மரபுக்கு அடித்தளமிட்டது.
அதேசமயம் விடல் டி லா பிளாச் அனுபவ களப்பணியில் வேரூன்றிய அறிவியல் மற்றும் உள்ளூர் மயமாக்கப்பட்ட அணுகுமுறையை எடுத்தார். கார்ல் ரிட்டரை போல எல்லா பிராந்தியங்களுக்கும் பொதூன உலகளாவிய அணுகுமுறையைக் கையாளாமல், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதன் தனித்துவமான அம்சங்களுகளின் அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
எனினும், இருவரும் அறிஞர்களும் கூட்டாகப் பிராந்தியங்களை வெறும் அரசியல், நிர்வாக பிரதேசங்களாக வரையறை செய்யும் மரபுக்கு அப்பால் சென்று மறுவரையறை செய்தார்கள். இருவரும், பிராந்தியங்கள் இயற்கை அம்சங்களாலும், மனித வாழ்வியலாலும் வடிவமைக்கப்படும் சிறப்பிடங்கள் என்பதினை எடுத்துக் காட்டினார்கள். அவ்வகையில் இருவரினதும் பங்களிப்புக்கள் பின்வந்த காலங்களில் புவியியலாளர்கள் இடங்கள் மற்றும் பிராந்தியங்கள் பற்றி ஆராயும் விதத்தில் அர்பாடுள்ள நடைமுறை ரீதியான தாக்கத்தையும், செல்வாக்கையும் ஏற்படுத்தியதாக அமைந்தது.
முடிவுரை
புவியியலின் முக்கியமானதொரு துணைப் பிரிவாகப் பிராந்திய புவியியலை நிறுவி வளர்த்தெடுப்பதில் கார்ல் ரிட்டர் மற்றும் பால் விடல் டி லா பிளாச்சின் ஆகிய இருவரினதும் பங்களிப்புகள் மிகக் காத்திரமான வகிபாகத்தை கொண்டிருக்கின்றன. ரிட்டர் தத்துவார்த்த மற்றும் முறைசார் அடித்தளத்தை அமைத்த அதேவேளை,; விடல் டி லா பிளாச்சி மனிதநேய மற்றும் அனுபவவாத அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக கார்ல் ரிட்டர், விடல் டி லா பிளாச்சின் ஆகிய இருவரும் பிராந்திய புவியியலில் கட்டியெழுப்பிய மரபு, நவீன புவியியலில், குறிப்பாகப் பிராந்தியங்களைச் சுற்றுச்சூழல் மற்றும் மனித காரணிகளின் சிக்கலான முறைமைகளாகப் பகுப்பாய்வு செய்வதில் தொடர்ந்து செல்வாக்குடையதாக விளங்குகின்றது.
No comments:
Post a Comment