Post Top Ad

மருத்துவ சமூகவியலின் பரப்பெல்லையும் (Scope) முக்கியத்துவத்துவமும்

 01) மருத்துவ சமூகவியல் என்றால் என்ன என்பதைக் கூறி, அதன் நோக்கம் /  பாடப்பரப்பு/  பரப்பெல்லை (Scope) மற்றும் முக்கியத்துவத்தை விளக்கு



அறிமுகம்

மருத்துவ சமூகவியல் என்பது ஆரோக்கியம், நோய் நிலை, சுகாதார பராமரிப்பு ஆகியவற்றின் சமூக பரிமாணங்களை ஆராயும் துறையாகும். இத்துறை சமூகவியலின் சிறப்பு வாய்ந்த துணைப் பிரிவாகக் காணப்படுகின்றது. மருத்துவ சமூகவியலானது கலாச்சாரம், வர்க்கம், பாலினம், தொழில், இனம் போன்ற சமூகக் காரணிகள் ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை தொடர்பான தனிநபர்களின் அனுபவங்களில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், சுகாதார பராமரிப்பு சேவைகள் மக்களுக்கு கிடைக்குமாற்றையும் ஆராய்கிறது. மேலும், சுகாதாரம் என்பது உயிரியல் சார் விடயம் மாத்திரமல்ல, அது சமூக கட்டமைப்புகள் மற்றும் உறவுகளால் வடிவமைக்கப்படும் ஒரு சமூக புலப்பாடு என்பதையும் விளக்குகிறது.


வரைவிலக்கணம்

மருத்துவ சமூகவியலை ஆரோக்கியம், நோய் நிலை;, சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள், சுகாதார சேவை வழங்குநர்கள், நோயாளர்கள் ஆகியோரின் சமூக நடத்தை என்பன பற்றிய சமூகவியல் கற்கை என வரைவிலகனப்படுதலாம். இக்கற்கையானது சமூக காரணிகள் மருத்துவ நடவடிக்கைகளைப் பாதிக்கும் விதத்தையும்,   ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை தொடர்பாகத் தனிநபர்கள் கொண்டுள்ள பார்வையையும், சமூகத்தில் சுகாதார சேவைகள் ஓழுங்குப்படுத்தப்பட்டுள்ள மற்றும் அவை வழங்கப்படும் விதத்தையும் ஆராய்கின்றது. மேலும், சமூகவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துதல், ஆய்வுகளை நடத்துதல் போன்றவற்றின் வாயிலாக, சுகாதார சேவைகளுக்கான அணுகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளின் பிரதி விளைவுகள் என்பவற்றை ஆராய்ந்து மருத்துவத்திற்கும் சமூகத்திற்கும் இடையே தொடர்பு பாலத்தை ஏற்படுத்தும் துறையாகவும் அமைகின்றது. 


மருத்துவ சமூகவியலின் நோக்கம்

மருத்துவ சமூகவியல் துறையானது சமூகத்திற்கும் சுகாதாரத்திற்கும் இடையிலிருக்கும் சிக்கலான தொடர்புகளைப் பிரதிபலிக்கும்  வகையிலான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பரந்த மற்றும் பன்முகத்தன்மையான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் முக்கிய அம்சங்களைக் கீழ்வரும் 8 பகுதிகளாக எடுத்துரைக்க இயலும்.


01. ஆரோக்கியத்தையும் நோய் நிலையையும் சமூகக் கூறாக வெளிப்படுத்தல்
மருத்துவ சமூகவியலானது ஆரோக்கியத்தையும் நோய் நிலையையும் உயிரியல் காரணிகளாக மாத்திரம் கருதாது, அதனை சமூக, கலாச்சார நெறிமுறைகளால் வரையறை செய்யப்படும் நிலைமைகளாகவும் பார்க்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கலாச்சாரத்தில் நோயாகக் கருதப்படுவது மற்றொரு கலாச்சாரத்தில் சாதாரணமான நிலைமையாகக் காணப்படலாம்.


02. சுகாதார நிலைமைகளை நிர்ணயிக்கும் சமூக காரணிகளை இனம்காணல்
வருமானம், கல்வி, தொழில், பாலினம், இனம், சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் தனிநபர்களின் சுகாதார நிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது. இவ் அணுகுமுறையானது வெவ்வேறு சமூகக் குழுக்களிடையே சுகாதார நிலைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அடையாளம் காண உதவுகிறது.


03. சுகாதாரப் பராமரிப்பு முறைமைகளையும் கட்டமைப்புகளையும் ஆராய்தல்
மருத்துவ சமூகவியலானது சுகாதாரப் பராமரிப்பு முறைமைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தையும், அவற்றுக்கு நிதியளிக்கப்படும் வழிமுறைகளையும், அவற்றைத் தனிநபர்கள் அணுகக் கூடிய முறைகள் அல்லது மக்களுக்கு அவை கிட்டும் வழிவகைகளையும் ஆராய்கின்றது. மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் சுகாதார பராமரிப்பு சேவைகளையும், மருத்துவ காப்பீடுகள், சுகாதார சேவைகளை வழங்குவதில் அரசின் வகிபங்கு என்பவற்றையும் பகுப்பாய்வு செய்கின்றது.


04. மருத்துவர்க்கும் நோயாளிக்கும் இடையிலான உறவை ஆராய்தல்.
மருத்துவ சமூகவியல், சுகாதார சேவை வழங்குநர்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையிலான தொடர்பாடல் முறைகள், அங்கு நிலவும் ஆதிக்க நிலைமைகள் அல்லது போக்குகள், நம்பகத் தன்மை என்பவற்றை ஆராய்கிறது. இதன் மூலம் மருத்துவர் - நோயாளர் உறவின் தன்மையானது நோய்களை இனம்காணுதல், சிகிச்சையளித்தல், நோயாளரின் மனநிறைவு என்பவற்றில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதை மதிப்பிடுகிறது.


05. சுகாதாரம் சார் தொழில்களையும் நிறுவனங்களையும் ஆராய்தல்
மருத்து சமூகவியல் மருத்துவம் சார் தொழில்களின் வளர்ச்சி,  அவற்றுக்கான தொழில் நெறிமுறைகள், பயிற்றுவிப்புக்கள், அவற்றின் படிநிலைகள்,  மருத்துவ பணியாளர்கள் தொடர்பான அதிகாரம் பெற்ற அமைப்புகள் என்பவற்றையும், மருத்துவமனைகள், மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள், பிற சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. 


06. சுகாதாரம் சார் நம்பிக்கைகளையும் நடத்தைகளையும் ஆய்வுக்குட்படுத்தல்
சுகாதாரம், நோய்கள், சிகிச்சைகள் பற்றிய மக்களின் புரிதலானது அவர்களின் கலாச்சார பின்னணி, மதம், கல்வியறிவு என்பவற்றால் வழிப்படுத்தப்படுகின்றது. மருத்துவ சமூகவியலானது மேற்கூறியவற்றால் எழும் மக்களின் நம்பிக்கைகளும் நடத்தைகளும் சுகாதார சேவைகளை நாடுவதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் தாக்கம் செலுத்தும் விதத்தை ஆராய்கின்றது.


07. மனநலத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்தல்
மருத்துவ சமூகவியலானது வெவ்வேறு சமூகங்களில் மன நலம் சார் பிரச்சினைகள் புரிந்து கொள்ளப்படும் விதத்தையும் அவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படும் முறைகள் என்பவற்றுடன் மனநல சேவைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும் ஆராய்கிறது.


08. உலகளாவிய சுகாதார நிலைமைகளையும், புதிய நெருக்கடி நிலைமைகளையும் கையாளல்

மருத்துவ சமூகவியலானது தொற்றுநோய்கள் (எ.கா- கொவிட் - 19), மருத்துவ தொழில்நுட்பங்கள், மருந்து சார் கொள்கைகள், உலகமயமாக்கல் சுகாதார நிலைமைகளில் ஏற்படுத்தும் விளைவுகள் போன்ற விடயங்களையும் கவனத்தில் எடுத்துக் கையாள்கின்றது.


மருத்துவ சமூகவியலின் முக்கியத்துவம்
மருத்துவ சமூகவியலானது ஆரோக்கியம், நோய் நிலைமை, சுகாதார பராமரிப்பு என்பவற்றின் சமூக பரிமாணத்தை மேற்கூறிய வகைகளில் ஆராய்ந்து, சுகாதார நிலைமைகளில் சமூக நிர்ணய காரணிகளை எடுத்துக்காட்டுவதன் காரணமாக முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகின்றது. அவற்றில் முக்கியமானதாகக் கீழ்வரும் 7 விடயங்கள் அமைகின்றன.


01. சுகாதார நிலைமைகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்ளல்
மருத்துவ சமூகவியலானது சமூக கட்டமைப்புகளில் நிலவும் சமமின்மையும், சமூக அநீதிகளும் சுகாதார நிலைமைகளில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதில் பங்களிப்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்நிலைமைகளை ஆராய்வதன் மூலம் நியாயமானதும் ஏற்றத் தாழ்வுகள் அற்றதுமான சுகாதாரம் சார் கொள்கை வகுத்தலையும் அவற்றை நடைமுறைப்படுத்தலையும் ஊக்குவிக்கின்றது.


02. சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்கலை மேம்படுத்துதல்
சுகாதார சேவை வழங்கலின் போதான மருத்துவர் - நோயாளர் இடைவினைகள், நோயாளர்களின் பாலான இணக்கத் தன்மை, நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆகியவற்றை ஆராய்கிறது. இதன் மூலம் சுகாதார பராமரிப்பு சேவை வழங்கல் கட்டமைப்புகளில் அமைப்புகளில் தொடர்பாடல்களை மேம்படுத்தவும், அவற்றின் செயல்திறனை அதிகரிக்கவும் அவசியமான வழிகாட்டல்களை வழங்குகிறது.


03. கொள்கை சார் விடயங்களை மேம்படுத்தல்
மருத்துவ சமூகவியலானது சமூக ஆபத்து காரணிகளையும் மக்களின் சுகாதாரத் தேவைகளையும் அடையாளம் காண்பது மூலமாகத் தரவுகளும் சான்றுகளும் சார்ந்த சுகாதாரக் கொள்கை வகுப்பாக்கத்திற்கு பங்களிக்கிறது. இதன் மூலம் சமூகத்திற்கு மிக பொருத்தப்பாடனதும் வினைத் திறனுமானமான சுகாதார  கொள்கைகளை வகுக்க முடிகின்றது.


04. சமூகங்களை வலுப்படுத்தல்
மருத்துவ சமூகவியலானது சுகாதார பிரச்சினைகளின் சமூக வேர்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. இதன் மூலமாக வளங்களை அவசியமான இடங்களில் ஒன்று குவித்து, விழிப்புணர்வு கல்வி மற்றும் கூட்டு நடவடிக்கைகள் வாயிலாகச் சிறந்த சுகாதார நிலைமைகளை ஏற்படுத்தி சமூகங்களை வலுப்படுத்த முடிகின்றது. 


05. சுகாதாரத் துறையில் நிலவும் மேலாதிக்கத்தை சவாலுக்குப்படுத்தல்
மருத்துவ சமூகவியலானது உயிரியல் மருத்துவ முறைமைகளின் ஆதிக்க போக்கை விமர்சன ரீதியாக ஆராய்வதுடன்,; சுகாதாரம், சிகிச்சையளிப்பு சார் விடயங்களில் நோயாளரை மையமாகக் கொண்ட நோயாளர் நேய அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றது. மேலும் மருத்துவ ஆராய்ச்சிகளில் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல், அதிகப்படியான மருத்துவ மயமாக்கல், மருந்து உற்பத்தியாளர்களின் ஆதிக்கம்; போன்ற பிரச்சினைகளிலும் தலையீடுகளைச் செய்து நேர்மறையான அணுகுமுறைகளை ஏற்படுத்துகின்றது.


06. சமூக மாற்றத்திற்கு இயைபாதல்
சமூகங்களில்; நகரமயமாக்கல், உலகமயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்றவற்றின் காரணமாக மாற்றங்கள் ஏற்படுகின்றன. மருத்துவத்துறையானது, இம்மாற்றங்கள் ஏற்படுத்தும் புதிய சுகாதார நிலைமைகள், தோற்றுவிக்கும் புதிய சுகாதாரம் சார் நடத்தைகள் , கலாச்சார வாழ்வியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு  தம்மைத் தகவமைத்து கொள்ளவதற்கு மருத்துவ சமூகவியலானது உதவுகிறது.


07. விழிப்புணர்வும் சுகாதார கல்வியும்
மருத்துவ சமூகவியலானது சமூகம், சுகாதார விடயங்களில் தாக்கம் செலுத்தும் விதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் சுகாதாரம் தொடர்பான அறிவு விருத்தி, நோய்த் தடுப்புக்கான வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்தல், பொதுச் சுகாதார மேம்படுத்தல் பிரச்சாரங்கள் என்பவற்றுக்குப் பங்களிப்பை வழங்குகிறது.


முடிவுரை
மருத்துவ சமூகவியலானது, எந்தவொரு சமூகத்திலும் சுகாதாரம் மற்றும் நோய் பற்றிய முழுமையான புரிதலுக்கு அத்தியாவசியமானதாகும். சுகாதார நிலைமைகள் தொடர்பான உயிரியல் அடிப்படையிலான விளக்கங்களுக்கு அப்பால் சென்று, சமூக கட்டமைப்புகள், சமூக நிறுவனங்கள், சமூக உறவுகள் என்பன சுகாதாரம் சார் விடயங்களில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பாகவும்  முக்கியமான விளக்கங்களையும், தெளிவையும் மருத்துவ சமூகவியல் வழங்குகிறது. அதன் பரந்த நோக்கமும் நடைமுறை ரீதியான பொருத்தப்பாட்டுத் தன்மை காரணமாக, சுகாதாரத் துறை சார் பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களால் தவிர்த்து விட முடியாத துறையாக மருத்துவ சமூகவியல் அமைகிறது. பூகோள மயமாக்கல் சூழ்நிலைக்குள் உலகளாவிய சுகாதார நிலைமைகள் சிக்கலடைந்ததாக மாறிவரும் சவால்கள் நிறைந்த இக்காலகட்டத்தில், நியாயமான, ஏற்றத்தாழ்வற்ற, வினைத்திறனான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை ஊக்குவிப்பதில் மருத்துவ சமூகவியலின் முக்கியதுமானது முன்னெப்போதையும் விட அதிகமாகியுள்ளது. 

1 comment:

Post Top Ad

My Instagram