Post Top Ad

சமூக மருத்துவமும் உயிர் மருத்துவமும் : ஒப்பீடு

(2) உயிர் மருத்துவம் மற்றும் சமூக மருத்துவத்தைச் சரியான எடுத்துக் காட்டுகளுடன் ஒப்பிடுக.


அறிமுகம்
உயிர் மருத்துவமும், சமூக மருத்துவமும் ஆரோக்கியம் மற்றும் நோய் நிலையை விளங்கிக் கொள்வதற்குக் கையாளப்படும் பிரதான இரு அணுகுமுறைகளாகும். இரு அணுகுமுறைகளும் மனிதர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அதன்பொருட்டு மேற்கொள்ளும் அனுமானங்களிலும், கவனம் செலுத்தும் விடயங்களிலும், வழிமுறைகளிலும் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. உயிர் மருத்துவமானது உயிரியல் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு, மனித உடலின் நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களை இனங்காண்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. சமூக மருத்துவமானது இதற்கு நேர்மாறாக, சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் நிலைமைகள் சுகாதாரத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை ஆராய்கிறது. இவ்விரு அணுகுமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதே சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய முழுமையானதொரு பார்வையை வளர்க்க உதவுகிறது.

உயிர் மருத்துவம்: வரையறையும் பண்புகளும்
மனித உடல் தொடர்பான விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வுக்கூட சோதனைகள், படிம தொழில்நுட்பங்கள், மருத்துவ அவதானிப்புகள் போன்றவற்றின் மூலம் நோயை இனங்காணும் மருத்துவ அணுகு முறையே உயிர் மருத்துவம் ஆகும்.

உயிர் மருத்துவத்தின் முக்கிய பண்புகள்
  • உடலை இயந்திரமாகவும், நோய் நிலையை அதில் ஏற்படும் உயிரியல் கோளாறாகவும் கருதுகின்றது.
  • நோய் என்பதை உடலின் பௌதீகத்தில் ஏற்படும், தொற்று, அங்க செயலிழப்பு, மரபணு திரிபுகள் போன்ற அசாதாரண நிலைமைகளாக நோக்குகின்றது.
  • சிகிச்சையளித்தலானது மருந்துகள், அறுவை சிகிச்சை, மருத்துவ தொழில்நுட்பங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படும்.
  • உடலை மனதிலிருந்து தனித்து இயங்குவதாகக் கருதுவதோடு, உணர்வுகளையும் சமூக செல்வாக்குகளையும் கவனத்தில் எடுப்பதில்லை.
  • நோயாளர்கள் செய்வினையற்ற பராமரிப்பு பெறுபவர்களாகப் பார்க்கப்படுவார்கள்.

சமூக மருத்துவம்: வரையறையும் முக்கிய பண்புகளும்
சமூக மருத்துவம் என்பது ஆரோக்கியத்தையும் நோய் நிலையையும் சமூக நிலைமைகளின் விளைவுகளாகக் கருதி, வறுமை, கல்வி, தொழில், சுற்றுச்சூழல், பாலினம், கலாச்சாரம் போன்ற காரணிகள் மக்களின் ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்தும் விதம் தொடர்பாகக் கவனம் செலுத்துகின்ற சமூகவியல் நோக்கிலான அணுகுமுறையாகும்.

சமூக மருத்துவத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
  • நோய் நிலையை சமூக காரணிகளால் ஏற்பட்டதும், வெவ்வேறு அளவுகளில் பரவிக் காணப்படுவதாகவும் நோக்குகின்றது. (நோய் நிலையை சமூக உற்பத்தியாகக் கருதுகின்றது).
  • நோய்த்தடுப்பு, சமூகத்தின் சுகாதாரம், பொதுக்கல்வி என்பவற்றை உள்ளடக்கி இருக்கும்.
  • ஆரோக்கிய பராமரிப்பதில் தனிநபர்களினதும், சமூகத்தினதும் செயல் ரீதியான பங்கெடுப்பை ஊக்குவிக்கின்றது.
  • ஆரோக்கியத்தை மனித உரிமையாகவும், சமூகநீதி மற்றும் சமூக சமத்துவத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் கருதுகின்றது.
  • பிரச்சினைகளின் வேரைத் தேடிச்சென்று தீர்வு தேடுவதன் மூலமாக நீண்டகால முன்னேற்றங்களில் கவனம் செலுத்துகின்றது.

ஒப்பீடு -  உயிர் மருத்துவம் மற்றும் சமூக மருத்துவம்


 விடயம்

 உயிர் மருத்துவம்

 சமூக மருத்துவம்

கவனப் பொருள்கள்

 தனிநபர்களின் உடலும் அதன் உயிரியல் செயல்முறைகளும்

சமூகம், சுற்றுச்சூழல், வாழ்க்கை நிலைமைகள்

நோய் நிலைக்கான காரணம் 

நோய்க்கிருமிகள், மரபணுக்கள், உறுப்பு செயலிழப்பு

வறுமை, மன அழுத்தம், சமூக விலக்கு, வேலை நிலைமைகள்

சிகிச்சை முறைகள் 

மருந்துகள், அறுவை சிகிச்சை, மருத்துவ ரீதியிலான தலையீடு மூலம் குணப்படுத்துதல்

தடுப்பு நடவடிக்கைகளும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் 

நோயாளியின் வகிபங்கு

செய்வினையற்ற பராமரிப்பைப் பெறுபவர்

சுகாதார பராமரிப்பில்; செயல் ரீதியாகப் பங்கேற்பவர்

சுகாதார நிபுணரின் பங்கு

நோயை இனங்காணுதலும் சிகிச்சையளித்தலும்

சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், அறிவூட்டுதல், வலுப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுத்தல் 



நடைமுறை எடுத்துக்காட்டுகள்

  1. கொவிட்-19 பெருந்தொற்று
    உயிர் மருத்துவம் - ஆய்வுக்கூட சோதனைகள், உயிர்வாயு (ஒக்சிசன்) மூலம் நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளித்தல், தீநுண்மி (வைரஸ்) எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

    சமூக மருத்துவம் - ஊரடங்கு காலத்தில் வேலையின்மை, மனநலன்சார் பிரச்சினைகள், மன அழுத்தம், இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் தடுப்பூசி தொடர்பாக நிலவிய தடங்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் காரணமாக விளிம்புநிலை சமூகங்களுக்குச் சுகாதார பாரமரிப்பு சேவைகளைப் பெறுவதில் ஏற்படுத்திய சிரமங்கள் போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் கவனம் செலுத்தியது.

  2. இலங்கை சூழலில் மனநலன் தொடர்பான நிலை
    உயிர் மருத்துவம் - மன அழுத்தைத் தடுக்கும் மருந்துகள், மயக்கநிலை ஏற்படுத்தும் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கிறது.

    சமூக மருத்துவம் - குடும்ப பிணக்குகள், பொருளாதார சிரமங்கள், போரின் தாக்கம், கலாச்சார நம்பிக்கை போன்ற விடயங்கள் மனநலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்ந்து தீர்வு தேடுகின்றது.

  3. கிராமப்புறங்களில் கர்ப்பகால ஆரோக்கியம்
    உயிர் மருத்துவம் - கர்ப்பக் காலத்திலும் பிரசவத்தின் போதும் ஏற்படும் சிக்கல்களைக் இனங்கண்டு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

    சமூக மருத்துவம் - போக்குவரத்து வசதி இல்லாமை, கலாச்சார நம்பிக்கைகள், பாகுபாடு காட்டப்படுதல் தொடர்பான அச்சம் காரணமாகப் பெண்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்கின்றது. மேலும், போசனைக் குறைபாட்டையும், இளவயது திருமணத்தையும், தாயின் ஆரோக்கியமின்மைக்கான சமூக காரணங்களாக இது கருதுகிறது.

சாதகமான அம்சங்கள்
உயிர் மருத்துவம் -
  • விஞ்ஞான ரீதியாக முன்னேற்றமடைந்ததும் மேம்பட்டதும் ஆகும். 
  • தொற்று நோய்கள், அறுவை சிகிச்சைகள், நாட்பட்ட நோய் நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் வினைதிறனுடையாகும்.
  • நவீன மருத்துவ வழிமுறைகள் மூலமாக ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கும் உதவியுள்ளது
சமூக மருத்துவம் -
  • நோய்த்தடுப்பிலும் சமூக நீதியிலும் கவனம் செலுத்துகிறது. 
  • சுகாதார விடயங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்திப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுகாதார மேம்பாட்டில் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கின்றது.
பாதகமான அம்சங்கள்
உயிர் மருத்துவம் -
  • உணர்வுகளையும், சமூக மற்றும் கலாச்சார தாக்கங்களையும் புறக்கணிக்கின்றது.
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயின் மூல வேரை இனம்கண்டு நிவர்த்தி செய்யாமல் அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கின்றது.
  • பிரசவம், முதுமை போன்ற சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளைக் கூட மருத்துவ மயமாக்கலுக்கு உட்படுத்துகின்றது.

சமூக மருத்துவம் -
  • சிக்கலான நோய்களை இனங்காண்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் விஞ்ஞான ரீதியான துல்லியத் தன்மை இன்மை. 
  • வலுவான பொதுத்துறை சுகாதார கட்டமைப்பும், சமூக பங்கேற்பும் அவசியப்படுகின்றது. 
  • வளப்பற்றாக்குறை நிலும் சூழல்களில் சமூக மருத்துவத்தின் நோக்கங்களை அடைவதும், நடைமுறைப்படுத்துவதும் சவாலாகும்.
முடிவுரை
ஆரோக்கியத்தையும் நோய் நிலையையும் புரிந்து கொள்வதற்கும் சரியான முறையில் எதிர்வினையாற்றுவதற்கும் உயிர் மருத்துவமும் சமூக மருத்துவமும் முக்கியமான அணுகுமுறைகளாகக் காணப்படுகின்றன. உயிர் மருத்துவமானது நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறப்பான அணுகு முறையாகும் அதே வேளை தன்னளவில் போதாமைகளையும் கொண்டுள்ளது. சமூக மருத்துவமானது நோய் நிலைக்கான சமூக காரணங்களை ஆராய்ந்து அதனைத் தடுப்பதில் கவனம் செலுத்துவது மூலம் அப்போதாமையை நிவர்த்திக்கின்றது, எனவே, வினைத்திறனானதும், நியாயமானதுமான சுகாதார முறைமையை உருவாக்குவதற்கு , உயிர் மருத்துவத்தின் விஞ்ஞான ரீதியிலான சாதக தன்மையையும், சமூக மருத்துவத்தின் சமூக நோக்கிலான அணுகுமுறையையும் இணைத்ததான அணுகுமுறையைக் கையாள்வது அவசியமானதாகும். குறிப்பாக சமூக ஏற்றத்தாழ்வுகள் சுகாதார விடயங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் சூழல்களில் இவ் ஒன்றிணைந்த அணுகுமுறை முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram