Post Top Ad

ஈழப்புரட்சி அமைப்பின் திட்ட பிரகடன மாநாடுகள்

1975ம் ஆண்டு லண்டனில் கருவெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை தேசிய இனப்பிரச்சினையின் கூர்மைக்குள் அமுங்கி பிற்போக்குத்தனங்களைக் கொண்ட புதிய அதிகாரவர்க்கங்களின் பிடிக்குள் ஈழவர்களின் விடுதலையானது சென்றுவிடக்கூடாது. மாறாக எம் சமூகத்தில் காணப்படும் தனியுடமை சமூக அமைப்பு தோற்றுவித்த சமூக ஒடுக்குமுறை,பெண் ஒடுக்குமுறை, ஏற்றதாழ்வு  போன்ற  உள்ளக  முரண்பாடுகளையும், அதன் போலித்தனங்களையும் களைந்து ஒரு புரட்சிகர தத்துவத்தை படைக்கவேண்டும் என்பதற்காக தனது அரசியல் பணிகளை ஸ்தாபகர் இரட்ணசபாபதி அவர்களின் கருத்திற்கமைய தாயகத்தினுள் ஆரம்பித்தது. அவ்வாறு செயற்பட ஆரம்பித்த ஈழப்புரட்சி அமைப்பு  தேவையான சந்தர்ப்பங்களில் திட்ட பிரகடன மாநாடுகளை கூட்டி தன் பாதையை செப்பனிட்டது. 1990 ஆம் ஆண்டு அமைப்பு கலைக்கப்படும் வரையில் ஐந்து திட்ட பிரகடன மாநாடுகள் நடத்தப்பட்டன. இங்கு முதல் நான்கு திட்ட பிரகடன மாநாடுகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.

முதலாவது திட்டபிரகடன மாநாடு 

இலட்சிய வேட்கையுடன் கருக்கொண்ட ஈழப்புரட்சி அமைப்பு அதே ஆண்டில் நவம்பர் 23 இல் தனது முதல் திட்டபிரகடனத்தை வெளியிட்டு தன் பாதையை தெளிவுப்படுத்தி அதன் வழியேதன் செயற்பாட்டைமேற்கொண்டது. ஈழவர்களின் இன்னலை சித்தாந்த அடிப்படையில் அனைத்துமக்களின் பிரச்சினையாக முன்வைத்து தீர்வுக்காண விழைந்த முதலாவது சரித்திர நிகழ்வின் முடிவில் வெளிவந்ததிட்டபிரகடனம் பிரதானமாக ஐந்து அம்சங்களை வெளிப்படுத்தி நின்றது. அப்பிரகடனங்கள் சுருக்கமாக கீழே...
1) தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அவர்கள் வாழும் பகுதிக்குள் தேசிய அந்தஸ்தை (State hood) நிறுவுல்.
2) அத்தேசிய அந்தஸ்தானது மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பருத்தித்துறை முதல் பதுளை வரை, பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசங்களாகும்.
3) பண்டைய பாட்டாளிகளென (Classical Proletariat) இனம் காணும் மலையக மக்களை உள்ளடக்கிய தீர்வினாலேயே ஈழம் நிதர்சனமாகும்.
4) ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே என்பதனை ஏற்றுக் கொண்டு அந்தவகையில் ஈழத்தின் போராட்டமும் வர்க்க அம்சத்தை உள்ளடக்கியது என்றும் அதன் காரணமாக மலையக மக்களை முன்னணியாகக் கொண்ட (Vanguard) போராட்டமாக அமைதல் வேண்டும்.
5) ஈழத்திற்கான போராட்டம் என்பது அனைத்து மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டமாக அமைதல் வேண்டும்.

இரண்டாவது திட்டபிரகடன மாநாடு

முதலாவது திட்டபிரகடனமாநாட்டின் பிரகடனங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து செயற்பாட்டை முன்னெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு இரண்டாவது தடவையாக 1977 ம் ஆண்டு ஏப்ரலில் தனது இரண்டாவது பிரகடனத்தை வெளியிட்டுதன் பாதையை செப்பனிட்டது. கருவெடுத்த காலம் தொட்டு கருத்து ரீதியாக கட்டியெழுப்பப்பட்ட  அமைப்பை மக்கள் மயப்படுத்தும் திட்டத்தை இரண்டாவது மாநாடு உறுதியாக முன்னிறுத்தியதை கீழ்வரும் அதன் பிரகடனங்கள் வெளிப்படுத்துகின்றன.
1) ஈரோசின் செயற்பாடுகள் ஈழத்திற்குள் நிலை நிறுத்தப்படல் வேண்டும்
2) செயற்பாடுகள் பொருளாதார,அரசியல் இணைந்த திட்டங்களினூடாக அமைதல் வேண்டும்.
3) செயற்திட்டங்களில் பணியாற்றி பயிற்சி முடித்த தோழர்கள் ஈரோஸ் செயற்பாட்டை முன்னெடுத்தல் வேண்டும்
4) அரசியல் பொருளாதார திட்டங்கள் போராட்டத்தளங்களாக மாற்றப்பட வேண்டும்
5) ஈழத்திற்குள் போராடும் இயக்கங்களை அமைப்பின் கருத்துக்கமைய இணைத்திடல் வேண்டும்.
6) மேற்கூறப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினூடாக தெரிவு செய்யப்படும் முதல் ஐம்பது தோழர்கள் பூரண இராணுவ பயிற்சி முடித்தபின் திட்டப் பிரகடன மாநாடு (Planary Session) நடத்தப்படும்.
7) ஈரோஸ் இயக்கமாக பரிணாமம் அடைந்து போராட்டத்தை முன்னெடுக்கும் என பிரகடனம் செய்யப்பட்டது.

மூன்றாவது திட்டபிரகடன மாநாடு 

1980 ஏப்ரலில் திருமலையில் நடந்த மூன்றாவது திட்டபிரகடன மாநாடு வெகுசன பணிகள் மூலமும் வெகுசனங்களிடையே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அமைப்பின் தோழர்களின் பொருளாதார நிலையை ஸ்தீரப்படுத்தல் என்பவற்றில் சிறப்பு கவனத்தை செலுத்தியது. இதன் பிரகடனங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
1) ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.
2) மட்டகளப்புப் பகுதியில் வேலை செய்வதற்காக அங்கு ஏற்பட்ட இயற்கைச் சீரழிவினைப் பயன்படுத்தி கூரைத் தகட்டுத் திட்டமொன்றை ஏற்படுத்தல்.
3) ஈழம் முழுவதற்குமான இயக்க ஊடகமாகவும், எமது பிரச்சினைகள் சம்பந்தமாக சித்தாந்த விளக்கமாகவும் 'தர்க்கீகம்" என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை வெளியிடுவதெனவும், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதற்கு எமது ஊடகமாக சென்னையிலிருந்து 'பொதுமை" என்ற இதழையும் வெளியிடல்.
4) தோழர்களின் அன்றாட சீவனப்பாட்டுக்காக சிறுபண்ணைத் திட்டங்களை செயற்படுத்தல்

நான்காவது திட்டபிரகடன மாநாடு 

கறுப்பு ஜீலைகலவரத்தின் பின் இனஒடுக்கலும், விடுதலைக்கான போராட்டமும் வளர்ந்த காலகட்டத்தில் சூழ்நிலைமைகளை கருத்திற் கொண்டு அமைப்பின் இலக்கு நோக்கிய செயற்பாடுகள் திட்டமிடப்பட்டதனை பின்வரும் நான்காவது மாநாட்டின் திட்டபிரகடனம்   வெளிப்படுத்துகின்றது. 1984  மார்ச்   22 இல்   ஈரோஸ் தனது நான்காவது பிரகடனத்தை வெளியிட்டது.
1) ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.ஈழவர் போராட்டத்திற்குரிய சூழல் கனிந்திருக்கும் நிலையில் போராட்டத்துக்காக மக்களை தயார்படுத்தி இறுதிப் போராட்டத்திற்கு இட்டுச் சென்று இம்மக்களின் விடிவாகிய ஈழத்தை நிதர்சனமாக்கும் வகையில் அகச் சூழ் நிலைகள் அமையவேண்டும் என்பதற்கிணங்க ஈரோஸ் தனது கட்டமைப்புகளை மேலும் இறுக்கமானதாகவும், மக்களை இணைத்துக் கொண்டு போராடக் கூடியவகையில் செயற்படல் வேண்டும்.
2) ஈழப்போராட்டமானது வர்க்க குணாம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த போதும் தேசிய இனப்போராட்ட வடிவமே கூர்மையடைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளும் இயக்கம் அப்போராட்ட முன்னெடுப்பில் முனைந்து செயலாற்றல் வேண்டும்.
3) கூர்மையடைந்து வரும் நெருக்கடிகளில் எதிரியின் அசுர முன்னேற்றத்தையும் தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் கருதி இன்றையநிலையில் மற்றைய இயக்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் இராணுவக் கூட்டணி அமைப்பதற்கும் இயக்கம் தயாராய் இருப்பதுடன் தனித்துவம் பேணி ஒதுங்கி நிற்கும் இயக்கங்களை இவ் இணைப்புக்குள் கொண்டு வர முயற்சித்தல் வேண்டும்.
4) ஈழவர் போராட்டத்தில் எதிரியின் பக்கம் ஏகாதிபத்தியம் துணை நிற்குமென்பதை கணக்கிலெடுக்கும் எமது இயக்கம் எம்மை பலப்படுத்தும் திறன் கருதி நேசசக்திகளின் உதவிகளையும்,வசதிகளையம் வகையாகப் பெற்று ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும்.

இவ்வாறு ஈழப் போராட்டத்தின் புரட்சிகர சக்தியாய் செயற்பட்டு வரும் ஈழப்புரட்சி அமைப்பு, ஐக்கியத்திற்கான போராட்டத்தில் ஆற்றியபங்கும், வெளிப்படுத்திய பண்பும் குறிப்பிடத்தக்கதும், இன்றைய செயற்பாட்டாளர்கள் யாவரும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியதும் ஆகும். ஈழப்புரட்சி அமைப்பு திட்டபிரகடன மாநாடுகளினூடாக தன் பாதையை தொடர்ச்சியாக நெறிப்படுத்தியதோடு அனைத்து சக்திகளின் இணைப்பையும் பொதுஎதிரிக்கு எதிரான போராட்டத்தையும் கோட்பாடாக வலியுத்தி வந்துள்ளது. இன்று ஆரோக்கியமற்ற சக்திகளால் போராட்டம் திசைதிருப்பப்படும் நிலைமைகளில், போராட்டத்தை ஒரு முகபடுத்தி நேர் வழிப்படுத்தி கடந்தகால அர்ப்பணிப்புகள் வீண் போகாவண்ணம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியபாட்டை உணர்ந்து செயற்பாட்டிற்கு வந்திருக்கும் ஈழப் புரட்சி அமைப்பின்  தோழர்கள் தடம் பதித்து வந்த பாதைகளில் மறையாது நிலைத்து நிற்கும் தடங்களை இன்றைய பயணத்திற்கு வழிக்காட்டியாக வழிப்படுத்தி கொள்வார்கள் என்பதும் திண்ணமே.


No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram