Post Top Ad

ஈரோஸ் கலைவு - கற்றுத்தரும் பாடம்



தமிழ் மக்களின் விடுதலைபோராட்ட வரலாற்றில் ஆரம்பகாலங்களில் தாபிக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பு அதன் 15 வருட தீர்க்கமான பயணத்தின் பின் 1990 ஆம் கலைக்கப்பட்டது. போராட்ட வரலாற்றில் போராட்டத்தின் போக்குகளையும், நலன்களையும் கருத்தில் கொண்டு தன்னிச்சையாக கலைந்த ஒரே அமைப்பு ஈழப்புரட்சி அமைப்பு என்ற வகையில் 25 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த முக்கிய நிகழ்வை நினைவு கூறுவது, இன்று அதிகார போட்டியில், ஆசையில், வெறியில் போராட்ட சிந்தனையை சிதைத்து, வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி திட்டங்களுக்கு அமைய அறிந்தோ அறியாமலோ, மக்களின் போில், மக்கள் நலன்களை துச்சமாக  நினைத்து செயற்படுபவர்களிற்காக மீண்டும்  நினைவு படுத்துவது பொருத்தமானதாகும். 

அமைப்பு கலைக்கப்படும் அறிவிப்பை தோழர் பாலகுமார் யாழ்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் 15- 08 - 1990 ஆம் ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடும் போதுஅவரினதும் அருகிலிருந்த சக தோழர்களினதும் உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்று தெரியவில்லை. நிச்சியம் அவர்கள் வாழ்வில் சந்தித்த மிக கடினமான நிமிடங்களாக அந்த நிமிடங்கள் கரைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

“ஈரோஸ் அமைப்பின் பிரதிநிதிகள் என்ற முறையில் பொது மக்களையோ, மக்கள் பிரதிநிதிகளையோ, ஊடக பிரதிநிதிகளையோ நாம் சந்திப்பது இதுவே இறுதியானதாகும்”

என்று 1990 ஆகஸ்ட் 15 ஆம் திகதி யாழ்பாணத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களை
பார்த்து கூறுகின்றார் பாலகுமார். அது ஈரோஸ் அமைப்பு கலைக்கப்படும் உத்தியோக பூர்வமான அறிவிப்பாகும். அந்த இறுக்கமான நிலைமையிலும் அதுவரை காலமும் ஒத்துழைப்பு நல்கிய பத்திரிக்கையாளர்களுக்கு அமைப்பின் சார்பில் நன்றி கூற தோழர் பாலக்குமார் மறக்கவில்லை. தொடர்ந்து ஈரோஸ் கலைக்கப்பட்டமை தொடர்பான விளக்கங்கங்களை வழங்கினார் தோழர் பாலக்குமார்.

'ஈரோஸ் எனப்படுகின்ற ஈழப்புரட்சி அமைப்பு 1975ம் ஆண்டு சனவரி 3ம் திகதி உருவாக்கப்பட்டது. விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில் மார்க்கிச லெனினிச கொள்கைகளை கடைபிடித்ததின் மூலமாக வடக்கு, கிழக்கு, மலையக மக்களை இணைத்த போராட்ட வடிவத்தினையே ஈரோஸ் கொண்டிருந்தது. குறிப்பாக  மலையக மக்களை முதுகெழும்பாக கொண்டிருந்தது. ஈழப் போராட்டத்தில்ஈரோசின் பங்களிப்பு ஓர் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. 

75 இல் இருந்து 83 வரை முக்கியமான பரிசோதனை கால கட்டமாகவே எமது இயக்க செயல்பாடுகள் இருந்தன. வவுனியா கண்ணாட்டி என்னுமிடத்தில் பண்ணையொன்று அமைக்கப்பட்டு மக்களை திரட்டி முதல் முறையாக அரசியல், பொருளாதார, போராட்ட பயிற்சிகளை அளித்தோம். வர்க்க ரீதியாக போராட்ட ஆயத்தங்களும் அப்போது எம்மால், மேற்கொள்ளப்பட்டன.83ம்  ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்திற்குப் பின் ஏற்பட்ட புதிய பரிமாணத்தில்  தேசிய விடுதலை என்பதே கூர்மையடைந்தது. எனவே போராட்டம் 87 வரை இன்னொரு வடிவத்தை பெற்றது எனலாம்.தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியத்தை உருவாக்க அக்காலங்களில் ஈரோஸ் தீவிர முயற்சிகளை எடுத்தது. இந்த ஜக்கிய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. 87 ஆம்  ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்பு உருவான காலச் சூழ்நிலைகளினால் எமது இயக்கச் செயல்பாடுகளில் குறிப்பிடத் தக்க பின்னடைவு ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே அடிப்படை, போராட்டத்தில்  தீவிரத்துடன் செயல்பட்டது. மற்றைய பல குழுக்கள் தங்கள் தலைமைகளைத் தக்கவைக்க போராட்டத்தை அடகு வைத்தன. தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் துரோகத்தனத்தில் ஈடுப்பட்டன. நாம் எமது தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். பரந்து பட்ட தேசியத்  தலைமையின் கீழ் சகல தமிழ் இளைஞர்களும் ஒன்றுபட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு அதன் முன் மாதிரியாகவே ஈரோஸ் இயக்கம் கலைக்கப்படுகிறது. ஈரோசின் பல தோழர்கள் விடுதலைப்புலிகளோடு இணைந்து வருகின்றனர். நாம் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தவும் முடியாது. போராடும் உணர்வு இயல்பாகவே வரவேண்டும்.

விடுதலைப்புலிகளின் நிர்பந்தத்தினாலேயே ஈரோஸ் கலைக்கப்பட்டது என்கிற பிரச்சாரம் பொய்யானதாகும். ஜந்து மாதங்களிற்கு முன்பிருந்தே இந்த முடிவை நாம் ஆராய ஆரம்பித்துவிட்டோம். உண்மையில் மக்களுக்கு பயந்து,  மக்கள்  மத்தியில்   நாம்   துரோகிகளாகிவிடக் கூடாது     என்பதற்காகவே இயக்கத்தைக் கலைத்தோம். ஈரோசின் சகல சொத்துக்களும் விடுதலைப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டன. வெளிநாட்டுக் கிளைகள் யாவும் மூடப்பட்டு விட்டன.தலைமைக்காக இயக்கம் நடத்தி அரசியல் வியாபாரம் செய்யும் மற்றைய இயக்கங்களோடு எம்மையும் சேர்த்துக் கொள்ள நாம் விரும்பவில்லை. தமிழர் பாதுகாப்பு என்பதன் குறியீடாக விடுதலைப்   புலிகளே  உள்ளனர் என்பதை நாம் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளுகிறோம். புலிகளின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதிலும் நாம் முனைப்பாக இருக்கின்றோம். இயக்கம் கலைந்து விட்டபோதும் போராட வேண்டும் என்ற உணர்வு கலைந்து விடவில்லை. இயக்கத்தனம்என்பது அற்றுப் போய்  போராட வேண்டும் என்கிற உணர்வே இப்போது மனதில் மிஞ்சி  நிற்கிறது."

 தோழர் பாலக்குமார் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம் இது. மேலும் அவர்  தனது உரையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி ஆகியன கொழும்பில் இருந்து கொண்டு செயல்படுவதையும் கண்டித்தார். புலிகளின் போராட்டத்தின் விளைவே, கொழும்பில் இந்த ஆறு கூட்டமைப்பும் அரசியல் இலாபம்  தேடுவதற்கு ஏற்பட்ட துணிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

எப்போதும் இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் இயங்கியல் தொடர்பு நிலைபெற்றிருக்கும். இங்கும் அந்த தொடர்பு புலப்படுகிறது. அதிலிருந்து பாடம் கற்போமாயின் இயக்கத்தனங்களோ கட்சி தனங்களோ  இல்லாமல் போராட்ட உணர்வால் நாம் ஒன்றுபடுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram