Post Top Ad

மருத்துவ தொழில்முறை மயமாக்கல்

கேள்வி 9: சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொழில்முறை மயமாக்கல் என்பதை விளக்கி, அதன் பிரதான அம்சங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவை வழங்கலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்க.



அறிமுகம்
தொழில்முறை மயமாக்கல் எனப்படுவது வேலையொன்று துறைசார் அறிவு விருத்தி, முறையான துறைசார் பயிற்சிகள், சட்டரீதியான அதிகார கட்டமைப்பு, தொழில் அறநெறி முறைகள், தரநிர்ணயங்கள், சமூக கௌரவம் என்பவற்றை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக வளர்ச்சியடையும் செயன்முறையை குறிக்கின்றது. சுகாதார பராமரிப்பு சார் வேலைகளில், மிகத் தெளிவானதொரு தொழில்முறை மயமாக்கலை மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ளதைக் காண முடியும். குறிப்பாக, உயிர் மருத்துவ அல்லது அலோபதி மருத்துவர்கள் இன்றைய நவீன சுகாதார முறைமையில் பிரதான பாத்திரம் வகிப்பவர்களாக ஆகியுள்ளமையில் இதனை அவதானிக்கலாம். இவ் தொழில்முறை மயமாக்கல் செயற்பாடு சுகாதார பராமரிப்பு சேவைகள் கட்டமைப்பு செய்யப்படும் மற்றும் வழங்கப்படும் விதத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. அவ்வகையில் தொழில்முறை மயமாக்கல் காரணமாகச் சுகாதாரத் துறையில் தரநிர்ணய ஏற்பாடுகள், அறிவியல் வளர்ச்சி, பொதுமக்களின் நம்பகத்தன்மை என்பன ஏற்பட்டுள்ள போதும், மறுபுறம் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகார படிநிலைகளையும் உருவாக்கி விட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பில் தொழில்முறையின் அம்சங்கள்
எலியட் ஃப்ரீட்சன,; டால்காட் பார்சன்ஸ் போன்ற சமூகவியலாளர்கள் ஒரு தொழிலை வரையறுக்கும் முக்கிய அம்சங்கள் எவை எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். அதனடிப்படையில் தொழில் என்ற வகையில் சுகாதார பராமரிப்பு சேவை, குறிப்பாக மருத்துவப் தொழில் கொண்டுள்ள முக்கிய அம்சங்களாகப் பின்வருவன அமையும்.
சிறப்பு அறிவு விருத்தியும் நிபுணத்துவமும்
மருத்துவ வல்லுநர்கள் உடற்கூறியல், நோயியல், மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான துறைகளில் பயிற்சி பெற்றவர்கள். இவ் பிரத்தியேக அறிவுத் தளம் அவர்களைச் சாதாரண மக்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

முறைசார்ந்த கல்வியும் உரிமம் வழங்குதலும்
மருத்துவர்களுக்கு மருத்துவப் கல்விநிறுவனங்கள் மூலமாக முறையான தரப்படுத்தப்பட்ட கல்வி வழங்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டே மருத்து தொழில் உரிமம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு தேர்ச்சி பெறுபவர்கள் மாத்திரமே சட்டப்பூர்வமாக மருத்துவ தொழில் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.

நெறிமுறை விதிகளும் பொறுப்புக்கூறலும்
தொழில்முறை நிறுவனங்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் நெறிமுறைகளையும் சட்டத் தன்மையையும்; பின்பற்றுவதை உறுதி செய்கின்றன.

தொழில்முறையில் தன்னாட்சி
நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களின் முடிவுகள் நோயாளர்கள் அல்லது பிற சுகாதார ஊழியர்களால் மிக அரிதாகவே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.

தொழில்முறை அமைப்புகளினால் ஒழுங்குபடுத்தப்படல்
மருத்துவ தொழில்முறையாளர்களின் அமைப்புகளினால் தொழில்முறை சார்ந்த விடயங்கள் ஆளப்படுகின்றன. மருத்துவ தொழிலில் தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமச் சான்றிதழ் வழங்குதல், ஒழுங்கு நடவடிக்கைகளை இவ் அமைப்புகளே மேற்கொள்கின்றன. இலங்கை மருத்துவ சபை, இந்திய மருத்துவ சங்கம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சமூக அந்தஸ்தும் கௌரவமும்
மருத்துவர்கள் குறிப்பாக தெற்காசியச் சமூகங்களில் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் தொழில்முறையாளர்களில் முக்கிய தரப்பினராகும். இதன் காரணமாக அதிகாரம், செல்வாக்கு என்பவற்றுடன் பொருளாதார நன்மைகளையும் அனுபவிக்கின்றார்கள்.

சேவை வழங்கலில் ஏகபோகம்
உரிமம் பெற்ற மருத்துவர்களால் மாத்திரமே அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியும், மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும் நோய்கள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்திச் சான்றளிக்க முடியும். இவ் ஏகபோக உரிமையானது அவர்களிற்கான தொழில்முறை அடையாளத்தை வடிவமைத்து, வருமான மார்க்கங்களை வலுப்படுத்துகின்றது.

சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்கலில் தொழில்முறை மயமாக்கல் ஏற்படுத்தும் தாக்கம்

நேர்மறையான தாக்கங்கள்
மருத்துவ தொழிலின் தரமும், சேவை பாதுகாப்பு தன்மையும் உயர்வடைதல்
ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிகள், மருத்துவ தொழிலுக்கான உரிமம் வழங்கும் முறைமை காரணமாக மருத்துவர்கள் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களாகவும், நோயாளர்களால் நம்பகத்தன்மையுடன் நோக்கப்படுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

அறிவியல் முன்னேற்றம் ஏற்படுகின்றமை
மருத்துவ தொழில்முறை மயமாக்கமானது புதிய சிகிச்சைகள், தடுப்பூசிகள், மருத்துவ தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. இதன் காரணமாக மக்களின் ஆரோக்கியம் மேம்பாடு அடைகின்றது.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளமை
மருத்துவர்களுக்குக் கிடைத்திருக்கும் சமூக அந்தஸ்தும், உயர்ந்த மதிப்பும் , பொதுமக்களுக்கும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கும் இடையிலான நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப முக்கிய காரணமாகின்றது. இதன் காரணமாக, அவசியப்படும் போதெல்லாம் தயக்கமின்றி மருத்துவ உதவிகளை நாடும் வகையிலான நம்பகத்தன்மை பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

எதிர்மறையான தாக்கங்கள்
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் அதிகார படிநிலைகளை ஏற்படுத்துகின்றமை
சுகாதார பராமரிப்பு தொடர்பிலான முடிவெடுத்தல்களில் மருத்துவர்களே அதிகாரமும் ஆதிக்கமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதன் காரணமாக தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவச்சிகள், பாரம்பரிய வைத்தியர்களுக்கு சிறிய மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே கிட்டுகின்றது. இது சுகாதார பராமரிப்பில் கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கின்றது.

மருத்துவ ஆதிக்கம் தோன்றக் காரணமாகின்றமை
மருத்துவ தொழில்முறைமயமாக்கம் காரணமாக மருத்துவர்கள் அடையும் சிறப்பிடம், நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளையும், பிற சுகாதார பணியாளர்களின் கருத்துகளையோ புறக்கணித்துச் செயற்படுவதற்கு வழிகோலுகின்றது. இதன் காரணமாகச் சுகாதார பராமரிப்பு சேவை வழங்கலில் அதிகார சமத்துவமின்மை மேலும் வலுவடைகின்றது.

பாரம்பரிய மருத்துவமுறைகள் ஓரங்கட்டப்படுகின்றமை
மருத்துவ தொழில்முறை மயமாக்கல் காரணமாக தெற்காசிய நாடுகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறைமைகள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பொருத்த பாடுடையதாகக் காணப்பட்ட போதிலும் கூட குறைமதிப்புடையதாகவும், ஓரங்கட்டப்படுவதாகவும் காணப்படுகின்றது.

அன்றாட வாழ்வை அதிகப்படியாக மருத்துவமயமாக்கின்றமை
தொழில்முறை மயமாக்கல் காரணமாக மருத்துவர்களுக்குக் கிடைத்துள்ள அதிகாரமும் கட்டுப்பாடும் பிரசவம், முதுமையடைதல், மனவுணர்வு மாறுதல்கள் போன்ற சாமான்ய வாழ்க்கை நிகழ்வுகள் கூட மருத்துவப் பிரச்சினைகளாகக் கருதப்பட வழிவகுக்கின்றது. இதன் காரணமாக அன்றாட வாழ்வில் தேவையற்ற மிதமிஞ்சிய மருத்துவ ரீதியான தலையீடுகள் ஏற்படுகின்றது.

எடுத்துக்காட்டுகள்
இலங்கை சூழலில் மருத்துவர்கள் சமூகத்தில் அதிகாரமிக்க நபர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் பரிந்துரைகள் மிக அரிதாகவே கேள்விகளுக்கும், சவால்களுக்கும் உட்படுத்தப்படுகின்றன. மேலும், சுகாதாரத் துறை தொடர்புடைய கொள்கை வகுப்பாக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், நோயாளர் பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் தாதிமார்கள் சுகாதார துறை தொடர்பான முடிவெடுத்தல்களில் ஒரம்கட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்தியாவில், இந்திய மருத்துவ சங்கம் போன்ற மருத்துவ தொழில்முறை அமைப்புகள் சுகாதாரக் கொள்கை வகுப்பாக்கத்தில் குறிப்பிடத்தக்கதான செல்வாக்கைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக ஆயுஸ் மருத்துவர்கள் என்றழைக்கப்படும் ஆயுர்வேத, சித்த, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களும், இதர சமுதாய சுகாதார பணியாளர்களும் தேவை அதிகமாக உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் கூட அதிகபடியான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதை எதிர்த்தும், மட்டுப்படுத்தியும் வருகின்றார்கள்.

நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் , தொலைதூரப் பின்தங்கிய பிரதேசங்களில் கடுமையான மருத்துவர்; பற்றாக்குறை காணபடுகின்ற நிலையில் கூட, சட்டங்கள் வாயிலாக மருந்தாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற சுகாதார தன்னார்வலர்கள் மருத்துவர்களின் மேற்பார்வை இன்றி அத்தியாவசிய ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவதிலிருந்து தடுக்கப்படுகின்றார்கள்.

விமர்சன ரீதியான கண்ணோட்டம்
மருத்துவ தொழில்முறை மயமாக்கலான சமூக முன்னேற்றமாகவும், அதிகார பொறிமுறையாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக நிபுணத்துவ வளர்ச்சியும், நம்பகத்தன்மையையும் ஏற்படுகின்றது. அதேவேளை, இதன் காரணமாக அதிகார மையப் போக்கும் ஏற்படுகின்றது. மாற்றுக் கருத்துகளும், சமூக பங்களிப்பும் புறக்கணிக்கப்படுகின்றது.

முரண்பாட்டுவாத கோட்பாட்டுப் பார்வையில் நோக்கும் போது, மருத்துவ தொழில்முறை மயமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ ஆதிக்கம் சுகாதார முறைமைக்குள் சமத்துவமின்மைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது சுகாதார பராமரிப்பு சேவை முறைமைக்குள் மருத்துவரின்; அறிவும், வகிப்பாகமும் மாத்திரமே மதிப்புடையதாக அல்லது உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

பெண்நிலைவாத நோக்கில், தொழில்முறைமயமாக்கமானது வரலாற்று ரீதியாக ஆண்மையவாத மருத்துவ நிறுவன கட்டமைப்பிலிருந்து, மருத்துவச்சி போன்ற பெண்களின் வகிபாகத்தை நீக்கம் செய்துள்ளமையை விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படுகின்றது.

தொழில்முறை மயமாக்கல் வரலாற்று ரீதியாகப் பெண்களை, குறிப்பாக மருத்துவச்சி போன்ற பாத்திரங்களில், ஆண் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆதரவாக எவ்வாறு விலக்கியுள்ளது என்பதையும் பெண்ணிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முடிவுரை
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் தொழில்முறை மயமாக்கலானது, சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது. அதேவேளை சுகாதாரத்துறையில் அதிகார அசமத்துவம் ஏற்படுவதற்கும், தொழில்ரீதியான படிநிலைகளை உருவாக்குவதற்கும், மருத்துவம் சாராத சுகாதார பணியாளர்களை ஓரங்கட்டப்படுவதற்கும் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. எனவே, பாரம்பரியமாகவே பல நோய் சிகிச்சை முறைமைகளைக் கொண்ட சமூக கட்டமைப்பில், குறிப்பாகத் தெற்காசியா போன்ற சமூகங்களில், தொழில்முறை வரம்புகளையும், எல்லைகளையும் கடந்து பல்வேறு நோய் சிகிச்சை முறைமைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பு சேவைகளை வளர்த்தெடுப்பது முன்னேற்றமான சுகாதார பாரமரிப்பு சேவையை வளர்த்தெடுக்கத் துணை செய்யும். அவ்வகையில் சுகாதார பராமரிப்பு சேவை கட்டமைப்பினுள் உண்மையான சமத்துவம் ஒட்டுமொத்த பணியாளர்களையும் அங்கீகரித்து, கூட்டுப்பொறுப்பை நிலைநாட்டுவதினூடாக ஏற்படுத்த இயலும்.




No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram