Post Top Ad

டால்காட் பார்சன்ஸின் "நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் (Sick Role) "

கேள்வி 4: டால்காட் பார்சன்ஸின் "நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் (Sick Role) " என்ற கருத்து நோய் நிலையின் சமூக பரிமாணத்தை எவ்வாறு விளக்கி, இலங்கை சூழலுக்குள் அக் கருத்து எதிர்கொள்ளும் சவால்களை/வரம்புகளை கூறுக.



அறிமுகம்
தொழில்பாட்டுவாத சமூகவியலின் முக்கியமானதொரு அறிஞரான டால்காட் பார்சன்ஸ், ‘நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல்" என்ற கருத்தைத் தனது ‘தி சோசியல் சிஸ்டம் (1951)’ எனும் படைப்பில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் நோய் நிலையை மருத்துவம் சார்ந்த விடயமாக மாத்திரம் பார்க்காமல், சமூகத்தால் நெறிப்படுத்தப்படும், சமூக ஒழுங்கிலிருந்தான விலகலாகவும் நோக்கினார். அவ்வகையில் “நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல்’ எனும் கருத்தானது, சமூகமானது தனது ஒழுங்கையும் உறுதித்தன்மையையும் தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் நோய்வாய்ப்பட்ட நிலையை எவ்வாறு கையாள்கின்றது என்பதை விளக்குகின்றது. பார்சனின் கருத்துப்படி நபரொருவர் நோய்வாய்ப்படும் போது, அந்நபர் பிரத்தியேகமான கடமைகளையும் பொறுப்புகளையும் கொண்ட சமூக வகி பாத்திரத்தை ஆற்ற வேண்டியவராகின்றார். இக்கருத்தானது உலகளாவிய செல்வாக்கைப் பெற்றிருப்பினும், இலங்கை போன்ற சூழல்களில் சமூக, பொருளாதார, கலாச்சார காரணிகள் நோய்வாய்ப்பட்ட போதான நடத்தைகளில் செல்வாக்கு செலுத்து காரணிகளாக அமைவதால் தன்னளவில் சவால்களை எதிர் கொள்வதாகக் காணப்படுகின்றது (வரம்புகளைக் கொண்டுள்ளது).

பார்சனின் ‘நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல்’ (Sick Role)  கருத்தின் முக்கிய கூறுகள்
பார்சனின் கருத்துப்படி நோய்வாய்ப்பட்டவரால் வழக்கமான தமது சமூக பாத்திரத்தை ஆற்ற முடியாது, இதன் காரணமாக, சமூகத்தின் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகிச் சீர்குலைகின்றது. இந்நிலைமையைச் சீர்செய்ய நோய்வாய்ப்பட்டவர்; எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சமூகம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நோய்வாய்ப்பட்ட நிலையிலுள்ள நபர் நடத்தை தொடர்பான வரையறைகளை விதித்து அவருக்குத் தற்காலிகமான சமூக கதாபாத்திரம் ஒன்றை வழங்குகின்றது. அவ்வரையறைகளை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

01. வழக்கமான கடமைகளிலிருந்து விலக்களிப்பு
நோய்வாய்ப்பட்ட நபர் அவரது வழக்கமான அன்றாட கடமைகளை ஆற்றும் இயல்பை கொண்டிராமையால், அவற்றிலிருந்து தற்காலிகமாக (எ.கா.- தொழில் செய்தல், பெற்றோர் கடமைகள்) விடுவிக்கப்படுகிறார்.

02. நோயாளர் மீது பொறுப்பு கூறல் சுமத்தப்படாமை
தனிநபர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்காகக் குற்றம் சாட்டப்படுவதோ, பொறுப்புக் கூற கோரப்படுவதோ இல்லை. நோய்வாய்ப்படலானது தனிநபர் ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகக் கருதப்படுகிறது, இதன் மூலம் எந்தவொரு நபரும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதோ, அல்லது சமூக புறக்கணிப்புக்கு ஆளாவதோ தவிர்க்கப்படுகிறது.

03. நோயாளர் நலமடைவதில் விருப்பு கொள்ளல்
நோய்வாய்ப்பட்ட நபர் குணமடைவதை விரும்ப வேண்டும் எனவும், நோய்வாய்ப்பட்ட நிலையில் நீடிக்கவோ, அந்நிலைமையைத் தொடர்ந்து அனுபவிக்கவோ கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது.

04. சுகாதார உதவியை நாடுவதைக் கடப்பாடாகக் கொள்ளல்
நோய்வாய்ப்பட்ட நபர் மருத்துவ ஆலோசனையைப் பெற்று, மருத்துவ நிபுணர்களின் பங்களிப்புடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும்

மேலும், மருத்துவர் இங்கு வாயிற்காப்பாளர் போன்றதொரு பணியை ஆற்றுவதையும் எடுத்துக் காட்டுகின்றார். அதாவது நபர்ரொருவர் உண்மையாகவே நோய்வாய்ப்பட்டுள்ளாரா என்பதைத் தீர்மானித்து, அவர் குணமடைந்து ஆரோக்கியமான நிலைக்கு மீள்வதற்கு வழிகாட்டுகின்றார். இதன் மூலம் சமூகத்தில் நீண்ட கால அடிப்படையிலான சீர்க்குலைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், சமூக சமநிலையை மீளமைக்கவும் இயலுமானதாக உள்ளது.

‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல்’ மாதிரியின் சாதகமான அம்சங்கள்
01. நோய்வாய்ப்பட்ட போதான நடத்தையை ஒரு சமூக செயல்முறையாக விளக்குகிறது
மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படும் சமூகம் அதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதினையும், நோய்வாய்ப்பட்டவர்களிடம் சமூகம் எவ்வாறான நடத்தைசார் எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றது என்பதினையும் விளக்கமாக முன்வைக்கின்றமை இதன் முக்கியமான சாதக அம்சமாகும்.

02. சமூக ஒழுங்கைப் பராமரிக்கிறது
நோய்வாய்ப்பட்ட போது நடந்து கொள்ள வேண்டிய விதம் மற்றும் குணமடைவதற்காகச் செய்ய வேண்டியவை பற்றியதுமான விதிமுறைகளை வகுப்பது மூலமாக, நோய்வாய்ப்பட்டவர் அந்நோய்க்குப் பலியாவதைத் தடுத்து, அவர் மீண்டும் தமது வழக்கமான சமூக வகிபாகத்தை ஆற்றும் நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்கின்றது. இதன் மூலம் சமூக ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது.

03. தீவிரமான நோய் நிலைமைகளில் பயனுள்ளதாக இருக்கின்றமை
தீதுண்மி காய்ச்சல், காயங்கள் போன்ற குறுகிய கால கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலைமைகளில் குறித்த நபர்கள் தற்காலிகமாக தமது சமூக வகிபாகத்திலிருந்து விடுப்பு பெற்று, குணமடைந்த பின்னர் வழமைக்குத் திரும்புவதற்கு ஏதுவானதாக ‘நோயுற்ற போதான வினையாற்றல்’ மாதிரி அமைவதால் பயனுடையதாகக் காணப்படுகின்றது.

‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல்’ மாதிரியின் பாதகமான அம்சங்கள்
01. தீவிரமான நோய்(Acute Illness) நிலையின் போது மாத்திரமே பிரயோகிக்கலாம்
‘நோய்வாய்ப்பட்ட போதனா வினையாற்றல்’ மாதிரியானது நோய்கள் குணமடையக் கூடிய குறுகிய காலத்து நிலைமை என அனுமானிக்கின்றது. எனவே, இதனைப் பாதிக்கப்பட்ட நபர்கள் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்ப இயலாத நீரிழிவு, புற்று நோய் போன்ற நாட்பட்ட நோய் நிலைகளுக்குப் பிரயோகிக்க முடியாது.

02. மனநலனையும், சமூக இழிவுபடுத்தலையும் புறக்கணிக்கின்றமை
பல சமூகங்களில் மனநலன் சார் பிரச்சினைகள் , உடல்ரீதியான நோய்களைப் போன்றதொரு பிரச்சினையாகக் கருதப்படுவதில்லை. மனவழுத்தம், மனக்கோளாறு போன்ற நிலைமைகளை அனுபவிப்பவர்கள் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களது நிலைமைக்காக குற்றம் சாட்ட படுகின்றமையானது, நோய்வாய்ப்பட்ட போது சமூக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனும்; நோக்கிற்கு முரணாக அமைகின்றது.

03. சகலரும் சுகாதார பராமரிப்பு சேவைகளை அணுகும் வாய்ப்பை கொண்டிருக்கின்றார்கள் எனக் கருதுகின்றமை
பார்சன் அவர்கள் சகலரும் மருத்துவரை நாடி சிகிச்சைகளை பெற இயலுமானதாக இருப்பர் என அனுமானிக்கின்றார். குறைவான வளங்கள் காணப்படும் இடங்களிலும், வறுமையில் இருப்பவர்களுக்கும் உரிய மருத்துவ வசதிகளை நாடி பெறுவது சாத்தியமற்றதாக காணப்படலாம்.

04. கலாச்சார வேற்றுமைகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கருத்திலெடுக்காமை
பார்சன் அவர்கள் மேலைத்தேய, மத்திய வர்க்கத்தினரை அடிப்படையாகக் கொண்டு தனது கோட்பாட்டை முன்வைத்துள்ளார். எனவே, நோய்வாய்ப்பட்ட போதான நடத்தைகளில் கலாச்சாரம், வர்க்க நிலை, பாலினம் என்பன ஏற்படுத்தும் தாக்கங்கள் கருத்திலெடுக்க தவறிவிட்டார். இதன் காரணமாக பார்சனின் மாதிரியானது, நோயாளர்களைத் தனிப்பட்ட எதிர்வினைகளையும், பிரத்தியேமான பின்னணிகளையும் கொண்டவர்களாக அணுகாமல், வெறுமனே பராமரிப்பை மட்டும் பெறும் நிலையிலிருப்பவர்களாகக் கருதுவதாக அமைவது பாதகமான அம்சமாகும்.

இலங்கை சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள்
01. பாலினம் சார் கலாச்சார நிர்ப்பந்தங்கள்
இலங்கை சமூகங்களில் பெண்கள் மீதிருக்கும் கலாச்சார ரீதியிலான அழுத்தங்களும், சுமத்தப்பட்டுள்ள கடமைகளும் காரணமாக அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்தாலும், அக்கடமைகளிலிருந்து விடுப்பு பெறும் வாய்ப்பை பெறுவதில்லை. அநேகமான சந்தர்ப்பங்களில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தாலும் கூட தங்களது வீட்டு பராமரிப்பு பணிகளைத் தொடர்கின்றார்கள்.

02. மனநல பிரச்சினைகள் சமூக இழிவாக நோக்கப்படல்
மனச்சோர்வு அல்லது மனப்பதற்றம்; போன்ற நிலைமைகள் பெரும்பாலும் முறையான நோய்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இவ்வாறான நிலைமைகளின் சமூகத்தால் அவமானப்படுத்தப்படல், அல்லது சமூகத்தை எதிர்கொள்ளத் தயக்கம் கொள்ளல் போன்ற காரணங்களால் சிகிச்சை பெறுவது தவிர்க்கின்றார்கள் அல்லது மதகுருமார்களிடம் தீர்வு தேடிச் செல்கின்றார்கள்.

03. பொருளாதார ரீதியான மட்டுப்பாடுகள்
முறைசாரா தொழில்களில் ஈடுபடுவார்கள், நாட் கூலித் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு, நோய்வாய்ப்பட்ட போது வேலையிலிருந்து விடுப்பு பெறவோ அல்லது மருத்துவ சேவையை நாடிச் செல்லவோ முடியாத நிலைமை ஏற்படலாம். இது ஓய்வெடுத்தல் மற்றும் உரிய நேரத்தில் மருத்துவ உதவியை நாடுதல் என பார்சனின் மாதிரி மூலம் நோயாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் விடயங்களைச் சாத்தியமற்றதாக்கி விடுகின்றது.

04. சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகுவதற்கான சமவாய்ப்பின்மை
பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் உரிய வகையில் மருத்துவமனை வசதிகளை அணுகுவதும், சிகிச்சைகளைப் பெறுவதும் இயலாததாக அமையலாம். எனவே, உண்மையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கூட, மருத்துவரின் உறுதிப்படுத்தல் இன்மையால் சமூகத்தால் அவர்களின் நோய் நிலைமை ஏற்றுக் கொள்ளப்படாமல் தவிர்க்கப்படலாம்.

05. சமூகத்தால் பழி சொல்லப்படல்
மது தொடர்பான கல்லீரல் நோய் அல்லது காசநோய் போன்ற சந்தர்ப்பங்களில், நோயாளி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்காக அவர்களே குற்றம் சாட்டப்படுகின்றார்கள். எனவே, நோயாளர்கள் இங்கு சமூக ஆதரவைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். இது ‘நோயுற்ற போதான வினையாற்றல்’ மாதிரி கூறும், நோயுற்ற நிலைமைக்குத் தனிநபர்கள் பொறுப்பாக மாட்டார்கள் எனும் கருத்தாக்கத்துக்கு முரண்பாடானதாகும்.

முடிவுரை
மனிதர்கள் நோய்வாய்ப்படும் போது அதனை சமூகங்கள் எவ்வாறு கையாண்டு சமூக ஒழுங்கை பராமரிக்கின்றன என்பதைப் விள்ங்கபடுத்துவதில் டால்காட் பார்சன்ஸின் முன்வைத்த;த ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல் (Sick Role)’ எனும் கோட்பாடானது பயன்மிக்கதாக காணப்படுகின்றது. இதன் மூலம் நோய் நிலை என்பது; வெறும் உயிரியல் சார்ந்த விடயம் மாத்திரமல்ல, அது சமூக பரிமாணம் கொண்ட நிலையாகவும் காணப்படுகின்றது என்பது எடுத்துக் காட்டப்படுகின்றது. எனினும், இக் கோட்பாடு அதன் அனுமானங்களிலும் நடைமுறை பொருத்தப்பாட்டிலும் வரம்புகளைக் கொண்டதாகவே உள்ளது. குறிப்பாக இலங்கை போன்ற பன்மைத்துவ சமூகங்களில், நோய்கால நடத்தையானது பொருளாதார நிலைமைகள், கலாச்சார நம்பிக்கைகள், பாலினம் சார்ந்த நெறிமுறைகள், சிடிக்மா என்பவற்றின் செல்வாக்கிற்கும், தாக்கத்திற்கும் உட்பட்டதாகக் காணப்படுகின்றது. எனவே, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலையின் சிக்கல் தன்மையைச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில், ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல் (Sick Role)’ மாதிரியானது, ஏனைய சமூகவியல் கண்ணோட்டங்களுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதோ அல்லது விமர்சன ரீதியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதோ அவசியமானதாகின்றது.


No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram