Post Top Ad

ஈரோசின் கன்னித் தேர்தல்

1975 ஆம் ஆண்டு லண்டனில் கருக்கொண்டு தாயகத்தினுள் கால்பதித்த ஈரோஸ் அமைப்பு 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் பங்குபற்றியதோடு, அத்தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு வடகிழக்கில் 31 ஆசனங்களில் 12 ஆசனங்கள் மற்றும் தேசிய பட்டியல் ஆசனம் அடங்கலாக 13 ஆசனங்களை வெற்றிக்கொண்டது. 1989ஆம் ஆண்டு தேர்தலானது, 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் விகிதாசார முறையில் இடம்பெற்ற முதலாவது தேர்தலாகும். 1983 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தன தேர்தலை நடத்தாமல் பொதுகருத்துக்கணிப்பு மூலம் ஆட்சியை நீடித்துக்கொண்டதாலே, விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 11 வருடங்களின் பின் முதல் தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தல் நடைப்பெற்ற காலக்கட்டமானது அமைதிபடை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு படையின் அட்டூழியமும், ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் நடந்த காலக்கட்டமாகும். அதே நேரம், விடுதலைப்புலிகளும், ஜேவிபியும் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கோரியிருந்தார்கள்.

இக்காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையில் ஈபிஆர்எல்எப் அமைப்பு அடாவடி ஆட்சி நடத்தியது. மலையகத்தமிழர்கள் பலர் பிரசாஉரிமை அற்றவர்களாக இருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே ஈரோஸ் அமைப்பின் தேர்தல் பிரவேசம் இடம்பெற்றது. இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்எல்எப் ஆகியன கூட்டடுச்சேர்ந்தும், அகிலஇலங்கை தமிழ் காங்கிரசு, சிறிலங்கா முசுலிம் காங்கிரசு, புளோட் ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன. மேலும் ஐதேக சிறிலங்காக சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.

ஈரோஸ் அமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டது. அன்றைய காலகட்டத்தில் ஆழமாக தடம்பதித்திருந்த மலையகத்தில் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டும், அம்பாறை மாவட்டத்தில் இசுலாமியர்களின் தனித்துவத்துடன் போட்டி போடக்கூடாது என்பதாலும் ஈரோஸ் அமைப்பு போட்டித் தவிர்ப்பை செய்திருந்தது.

ஈரோஸ் அமைப்பு ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் வெகுசன அணியை உருவாக்கி இருந்தாலும், அப்போது கட்சி பதிவு செய்யபபட்டிராததால் சுயட்சை அணியாக தேர்தலில் பங்குபற்றியது. தேர்தலின் பின்னர் ஈழவர் சனநாயக முன்னணி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதிவுபெற்றது. மிககுறைந்த காலஅவகாசத்திலும், பல இடையூறுகளிற்கு மத்தியிலும், ஈரோஸ் தோழர்கள் வீடுவீடாகச்சென்று மக்களை அணுகி தம் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதின் மூலம் மக்களை சக்தி வாய்ந்த பிரச்சார ஊடகமாக மாற்றினார்கள். அதே போல் ஆடம்பரமான பிரச்சார விளம்பரங்களையும், பகட்டாரவாரமான அரசியல் பிரகடனங்களையும் நிராகரித்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நன்கு சிந்தித்து அவற்றை தீர்ப்பதற்கான ஒரு திட்டவட்டமான வழிமுறைகளை துண்டுபிரசுரம் மூலம் தேர்தல் பிரகடனமாக தெரியப்படுத்தினார்கள். 

1989 பெப்பரவரி 15, தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் ஆத்தரமடைந்த ஈபிஆர்எல்எப் அமைப்பினர் ஈரோஸ் தோழர்களையும், ஆதரவளித்த மக்களையும் ஆயுதம் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி கொலைசெய்தும், தாக்கிக் காயப்படுத்தியும் இருந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஈரோஸ் உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சீர்த்திருத்தத்தை நீக்கவேண்டும், அரசியல் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், தமிழ் தேசிய பிரச்சினைக்கு இராணுவ தீர்வை நாடக்கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து நான்கு மாதங்கள் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்திருந்தார்கள். பின்னர் அப்போதைய சனாதிபதி பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவாhத்தையில் எட்டிய இணக்கப்பாட்டின் பேரில் ஈரோஸ் உறுப்பினர்கள் பாராளுமன்ற பிரவேசம் செய்திருந்தார்கள். பாராளுமன்ற பிரவேசத்தின் பின் 1987 ஆம் ஆண்டு ஜீலை 21ஆம் நாள் அமைப்பின் ஸ்தாபகர் தோழர் இரத்தினசபாபதி விசேட பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார். எனினும் 1990 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறி இராணுவத்தீர்வில் அரசு நாட்டம் கொண்டதால், ஈரோஸ் உறுப்பினர்கள் நாடளுமன்ற பதவிளை துச்சமென துறந்திருந்தார்கள்

வேட்பாளர்கள் யார் என்ற விபரம் கூட சரியாக அறிவிக்கப்படாமல், விடுதலைப்புலிகளின் தேர்தல் பகிஸ்கரிப்பின் கோரிக்கையின மத்தியிலும், வடகிழக்கு மாகாணத்தில் ஆட்சி நடத்திய ஈபிஆர்எல்எப் அமைப்பு இந்திய ஆக்கிரமிப்பு படையுடன் இணைந்து நடத்திய அராஜகங்களுக்கு மத்தியிலும், மக்களின் அமோக ஆதரவை பெற்றமையானது அனைத்து தரப்பாலும் ஆச்சரியத்துடன் நோக்கப்பட்டது. வேட்பாளர்கள் யார் என்று அறியாத காரணத்தினால், பெரும்பாலான வாக்குகள் அமைப்பின் சின்னத்திற்கு மாத்திரம் அளிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.

மக்கள் விரும்பிய, மக்களை மதித்த, மக்களுடனும் ஏனைய அமைப்புக்களுடனும் சகோதரத்துவத்தை பாராட்டிய ஈரோசின் பண்பாடும், கொள்கை பற்றுமே மக்களின் அமோக ஆதரவை பெற்று தந்ததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

இத்தேர்தலில் தமிழ் சமூகத்தின் பாராம்பரிய சனநாயக தலைவர்கள் பலர் தோல்வியடைந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.  முன்னைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த ஏ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், வி.யோகேஸ்வரன், வி.ஆனந்தசங்கரி, ஆர்.சம்பந்தன், சூசைநாதன் ஆகியோரும், அமைச்சரவை அமைச்சராகவிருந்த தேவநாயகமும் மக்களால் தோற்கடிக்கபபட்டவர்கள் ஆவார்கள்.

தேர்தல் முடிவுகளின் படி யாழ் மாவட்டத்திலிருந்து முறையே இளையதம்பி இரட்னசபாபதி 40947 , இளையதம்பி பரராஜசிங்கம்36340, சின்னதம்பி சிவமகாராசா 22622, அருணாசலம் பொன்னையாசெல்லையா 20747, தம்பு லோகநாதபிள்ளை 17616, செபஸ்டியம்பிள்ளை எட்வர்ட் 17429, கணபதி செல்வநாயகம் 14440, ஜோசப்ஜோர்ஜ் ராஜேந்திரம் 13948 விருப்பு வாக்குகளுடனும், வன்னி மாவட்டத்திலிருந்து இன்னாசிமுத்து அல்பிரட் 935 விருப்பு வாக்குகளுடனும், மட்டக்களப்பிலிருந்து அழகுபொடி குணசீலன் 22889,  விருப்பு வாக்குகளுடனும், திருக்கோணமலையிலிருந்து முறையே சிவபிரகாசம் ரட்னராஜா 784, கோணமலை மாதவராஜா 575 விருப்பு வாக்குகளுடனும் வெற்றி பெற்றார்கள்.

ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்எல்எப் ,தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் வேட்புமனுதாக்கல் செய்யதிருந்தாலும், தனி த்தனியாகவே பிரச்சாரம் செய்தார்கள். கூட்டணி வெற்றிக்கொண்ட 11 ஆசனங்களில் 9 ஆசனங்களை ஈபிஆர்எல்எப் உம், ஒரு ஆசனத்தை ரெலோவும் வென்றது. கூட்டணியின் தேசிய பட்டியலில் அமிர்தலிங்கம் தெரிவாகியிருந்தார். இவரின் மரணத்தை தொடர்ந்து மாவைசேனாதிராசா  அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும் நான்கு மாத பகிஸ்கரிப்பின் பாராளுமன்றத்திற்கு சென்ற போது, மூன்று மாதகாலங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு வருகை தராததால் வெற்றி பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்து, புதியவர்களை அவ்விடத்திற்கு நியமிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியதற்கமைய, முன்னர் வெற்றி பெற்ற இரட்னசபாபதி, பரராஜசிங்கம், செபஸ்டியம்பிள்ளை எட்வர்ட், கணபதி செல்வநாயகம், சின்னதம்பி சிவமகாராசா, அழகுபொடி குணசீலன், சிவபிரகாசம் இரட்ணராசா ஆகியோருடன் முன்பு தெரிவாகாதவர்களான பசீர் சேகுதாவுத், அஸீஸ்அமீர், சௌந்தர்ராஜன் , புவனசுந்தர்ராஜா ஆகியோரும் மலையகத்தின் சார்பில் இராமலிங்கம் சந்திரசேகரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமானம் செய்துக்கொண்டார்கள்.

இதன் மூலம் அன்று பாராளுமன்றில் வடக்கு - கிழக்கு - மலையகத்தின் சார்பில் அதிக பிரதிநிதிகளை கொண்ட  தமி;ழ் பேசும் மக்களின் கட்சியாக திகழ்ந்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram