Post Top Ad

ஈரோசின் 5வது திட்டபிரகடன மாநாடு

சமூக மாற்றத்தை சமூக விடுதலையை இட்சியமாக கொண்டுள்ள எந்த அமைப்பும் தனது கொள்கையையும் பாதையையும் அவ்வப்போது சுயவிமர்சனத்திற்கும், சுய ஆய்விற்கும் உட்படுத்தி திடப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இலட்சியத்துடன் கைக்கோர்த்த சகலரையும் இணைத்துக்கொண்டு அதனை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க இலட்சியம் கொண்டு உருவெடுத்த அமைப்புக்கள் அனைத்தும் இதனை செய்தனவா அல்லது செய்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் ஈழவரின் விடுதலைக்காக மிகவும் முன்னேறிய தத்துவத்தின் வழிக்காட்டலில் புரட்சிகர மக்கள் சார் பாதையை தேர்ந்தெடுத்து பயணித்த ஈழப்புரட்சி அமைப்பு அதனை செய்து ஏனையவர்களுக்கு முன்னூதாரணமானது. இவ்வாறு முன்னுதாரணமாய் 1988 ஆம் ஆண்டு நடந்த ஈழப்புரட்சி அமைப்பின் ஐந்தாவது திட்ட பிரகடன மாநாட்டை நாம் அனைவரும் நினைவுபடுத்துவது இந்த காலக்கட்டத்தில் மிக பொருத்தமான விடயமாகும்.

ஈழப்புரட்சி அமைப்பு 1975 சனவரி 3ம் திகதி கருக்கொண்டு 1975 நவம்பர் 23 இல் முதல் பிரகடனத்தையும், 1977 ஏப்ரலில் இரண்டாவது பிரகடனத்தையும், 1980 ஏப்ரலில் மூன்றாவது பிரகடனத்தையும் 1984 இல் நான்காவது பிரகடணத்தையும் வெளியிட்டு தனது செயல்பாட்டை நெறிப்படுத்திக் கொண்ட ஈழப்புரட்சி அமைப்பு இறுதியாக 1988 ஆம் ஆண்டு ஐந்தாவது தடவையும் திட்ட பிரகடன மாநாட்டை நடாத்தி திட்ட பிரகடனத்தை வெளியிட்டு தன் பாதையை காலநிலைமைகளுக்கு ஏற்ப சீர்படுத்திக் கொண்டது.  

1988 ஆம் ஆண்டின் மிகவும் சிக்கல் மிகுந்தச் சூழ்நிலையிலும் ஈரோஸ் தன் வழியை தெளிவு படுத்த நெறிபடுத்த திட்டப்பிரகடன மாநாட்டைக் கூட்டி, வெற்றிகரமாக முடித்தது. திட்ட பிரகடன மாநாடு ஐந்து அரங்குகளாக நடைப்பெற்றது. முதலாவது அரங்கு கருத்தரங்காக இடம்பெற்றது. கருத்தரங்கில் 'தமிழ் பேசும் மக்களின் சமகால நிலைமைகளையும் எதிர்நோக்கிய பிரச்சினைகளும், வர்க்க பாகுபாடும் தமிழ் பேசும் மக்களும்" எனும் தலைப்பின் கீழ் மலையக மக்கள், இசுலாமிய மக்கள்,பெண்கள், மாணவர் இளைஞர் ஆகிய உட் தலைப்பிலும், தொழிற் சங்க அமைப்பின் சாத்தியம், போராட்டத்தில் கலை இலக்கியம், தேசிய இனப் போராட்ட நிலை, இலங்கை-இந்திய ஒப்பந்தமும் எதிர்காலமும் எனும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இப்பொருள்கள் பற்றி பல்வேறு அறிவுத் துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் முன்கூட்டியே ஆய்வு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு, அவற்றில் பதியப்பட்ட கருத்துக்கள் திட்ட பிரகடன மாநாட்டில் பரீசீலித்து விவாதிகப்பட்டன.ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்வகைக் குழுநிலை விவாதக் கருத்தரங்குகளில் சபாஜெயராசா, சண்முகதாஸ், செம்பியன் செல்வன், நீர்வை பொன்னையன், அண்ணாமலை, சிவா சுப்ரமணியம், குகதாசன், ஐ.தி. சம்பந்தன், இரா.சிவச்சந்திரன், திருமதி. சிவச்சந்திரன், சண்முகலிங்கம்,பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி சோ. கிருஸ்ணராஜா, பேராசிரியர் பாலகிருஸ்னன், நேசன், எம்.ஏ.நுமான், இக்பால், திவகலாலா, சுந்தர், பார்வதி கந்தசாமி, செல்வி சுமங்கலா கைலாசபதி, திருமதி கைலாசபதி, செல்வி நாளாயினி, செல்வி அருந்ததி, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

ஈரோசின் 5வது திட்ட பிரகடன மாநாடு 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 20 ம் திகதி வரை நடைபெற்றது. இந்த திட்டப்பிரகடன மாநாட்டில் மலையகம், அம்பாறை, மட்டு நகர், மூதூர், திருமலை, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் என பகுதி வாரியாக அதுவரைக்காலமும் நடைபெற்ற இயக்க செயற்பாடுகள் விமர்சனத்திற்கு ட்படுத்தப்பட்டன. 

இந்த திட்டப் பிரகடன மாநாட்டிற்கு ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அப்போதைய வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து முறையே சிங்கம், குகன், அழகிரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். திட்டப் பிரகடன மாநாட்டில் 'அமைப்பின் உறுப்பினர்களும் அமைப்பும் அது வரை வர்க்கச் சார்பற்ற சமூகப் பிரதிநிதிகளால் சூழப்பெற்றதாக இருந்தமைக்கு சுயப் பொறுப்பேற்றுக் கொண்டு இனி வர்க்கச் சார்பு நிலைக்கு மாற வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதனை உரைத்து புதிய அணுகுமுறை தெளிவுபடுத்தப்பட்டது. 

அத்தகைய சுயவிமர்சனத்தின் மூலம், போர்க் குணாம்சத்தோடு கூடிய மலையகத் தோட்டத் தொழிலாளர்களே போராட்டத்தின் முன்னணி சக்தி என்றும், வடக்கு கிழக்கில் விவசாயத்துறை சார்ந்த கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து, நிலவுடமையாளர்pன் மறைமுக ஒடுக்கு முறைக்குட்பட்டு, தொழில் வாய்ப்புக்களுக்காக இடத்துக்கிடம் மாறி கிராமத்தன்மையோடு பரந்து பட்டு வாழும் இவர்கள் போராட்டத்தின் மறைமுக சக்தி என்றும், இனப்பிரச்சினைகளிலும்,வர்க்கப் பிரச்சனைகளிலும் நிகழ்வுறும் போராட்டத்திற்கு ஆதரவு நல்கிடும் இளைஞர்கள் குட்டிமுதலாளித்துவ பகுதியிலிருந்து வருபவர்கள். குடாநாட்டிலும் ஏனைய நகர்புறங்களிலும் வாழும் இந்த இளைஞர்கள் போராட்டத்தின் ஆதரவு சக்தி என்றும் பிரகடனபடுத்தியது.

போராட்டத்திற்குரிய முன்னணி சக்தி, மறைமுக சக்தி, ஆதரவு சக்தி எனும் மூவகையினருடைய பிரதிநிதிகளையும் ஈழப்புரட்சி அமைப்பு செயல்படும் சக்தியாக தன்னுள் இணைத்து இளைஞர் இயக்கமாக இருந்த ஈரோஸ் மக்கள் இயக்கமாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தது.

தமிழ் மக்களின் பாராம்பரிய பிரதேசத்தில் நில அபகரிப்பு நோக்கில் கேந்திரத்தன்மை பார்த்து நிறுவப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதானப் பிரச்சினையாக முன்மொழிவது, தமிழ்பேசும் மக்களை வலுவிழக்கச் செய்யும் நடைமுறைகளைக் கையாளும், சிங்கள மேலாதிக்கச் சக்திகளையே பொது எதிரியாக இனங்காட்டுவது என்று அரசியல் கொள்கை நிலையை ஈரோஸ் எடுத்துரைத்தது. பெருந்தோட்டப் பொருளாதாரம் கிராமியப் பொருளாதாரம், நகர்ப்புறப் பொருளாதாரம் என்று பொருளியல் கட்டமைப்பை வகைப்படுத்தி பெருந்தோட்டப் பொருளாதாரம் நிலவும் மலையகப் பகுதிகள் போராட்டத் தளமாகவும், கிராமியப் பொருளாதாரம் நிலவும் வடக்கு கிழக்குப் பகுதிகள் ஆதரவுத்தளமாகவும், நகர்ப்புற பொருளாதாரத்தைச் சார்ந்த பகுதிகள்  தேசிய  அரசியலை  கையாளும் புலமாகவும் கருதிச் செயல்படும் கொள்கை அரசியலை ஈழப்புரட்சி அமைப்பு முன்வைத்தது. சமத்துவ சமதர்ம ஆட்சி முறை கொண்ட கட்டமைப்பே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வாகவும் இந்தத் தீர்வை அடைய பல படி நிலைப் போராட்ட முன்னெடுப்புக்களையும் ஈரோஸ் அறிவித்தது.வடக்குக் கிழக்கில் அரசியல் அதிகாரத்தை கையாளுவதன் மூலம் மலையக மக்களின் ஆதரவுத் தளத்தை அமைத்தல், வடக்கு கிழக்கு மலையக இணைப்பிற்குரிய உள்ளகக் கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு வகை செய்தல் என்ற படி நிலை போராட்ட அறிவிப்பையும் முன்வைத்தது.

மாநாட்டிற்கு பிரதிநிதிகளாக வந்தவர்கள் 'ஈழப் புரட்சி அமைப்ப முன்மொழியும் கொள்கை கோட்பாடுகளுக்கும், செயல் திட்டங்களுக்கும் அவற்றுக்கான அமைப்பு வடிவத்திற்கும் திரிகரண சுத்தியாய் இருப்பேன் என்றும் அதன் முடிவுகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் உளப் பூர்வமாக ஏற்பேன் என்றும் ஈழப் புரட்சி  அமைப்பின் பணிகளை ஆற்றும் தோழராக உங்கள் முன்னிலையில் உறுதி ஏற்கிறேன்" எனும் உறுதி மொழிகளை ஏற்றனர்.ஈழப்புரட்சி அமைப்பின் நிறுவனர் தோழர் இ.இரத்தினசபாபதி முதன் முதலில் உறுதி மொழி ஏற்றார். உறுதி மொழி ஏற்ற ஏனைய பிரதிநிதிகளுக்கு மாநாட்டுப் பதக்கங்களை இரத்தின சபாபதி அணிவித்தார்.

அதனை தொடர்ந்து புதிய முப்பது பேர் கொண்ட பொதுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. கொள்கைத் தீர்மானம் ஆகிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு கொண்டதாக புதிய பொதுக் குழு விளங்கும்.பொதுக் குழுவிலிருந்து ஒரு நிறைவேற்றுச் செயலாளர் உட்பட 11 பேர் கொண்ட மத்தியக் குழுவும் தேர்வு செய்யப்படும் எனும் அறிவிப்போடு மாநாடு நிறைவு பெற்றது. ஆம்! அன்று நடந்த வெற்றிகர மாநாடு அன்று போல் இன்றும் எமக்கு சில வரிகளை உரக்க ஒலிக்க செய்கிறது.
  
பிரம்மாண்டமான உலகங்களை உனது தியாகத்திலிருந்து எழுப்புகிறாய். கொடியை ஏற்று அறைகூவல் விட்டு அது பறக்கட்டும் !

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram