Post Top Ad

புவியியலில் ‘பிராந்தியம்" என்ற எண்ணக்கருவின் பரிணாமம்

வினா 01/15 : புவியியலில் ‘பிராந்தியம்" என்ற எண்ணக்கருவின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் கலந்துரையாடுக




அறிமுகம்
புவியியலில், "பிராந்தியம்" எனப்படுவது பௌதீக அமைப்பிலும், அரசியல், கலாச்சார, பொருளாதார ரீதியிலும் ஒருமித்த பண்புகளைக் கொண்ட புவி மேற்பரப்பின் குறித்தவொரு பகுதியைக் குறிக்கிறது. மேலும், பிராந்தியம் என்ற எண்ணக்கரு புவியின் பரந்த பிரதேசங்களைச் சிறிய பகுதிகளாகச் சிறப்பியல்புகளின் அடிப்படையில் பிரிக்கின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு வெவ்வேறு இடங்களை ஒப்பீடு செய்தும், பகுப்பாய்வு செய்தும் புவியின் சிக்கலான அமைப்பைக் கற்க முடிகிறது. இவ் எண்ணக்கரு காலவோட்டத்துடன் பல்வேறு பரிமாணங்களை அடைந்து புவியியல் துறையில் பரந்தளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இம் மாற்றமானது ஆரம்பக் காலங்களில் இயற்கை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு பிராந்தியம் வரையறுக்கப் பட்டதிலிருந்து தற்காலத்தில் அரசியல் - சமூக காரணிகளையும் கருத்திலெடுத்து வரையறை செய்யும் விமர்சன ரீதியான அணுகுமுறை (Critical approaches) தொடர்ச்சியான பரிமாணத்தை உள்ளடக்கியதாகும். இப் பரிமாணமானது புவியியலில் ஏற்பட்ட விவரண (description) மரபிலிருந்து, பகுப்பாய்வு (analysis) மற்றும் விமர்சன (critique) மரபு மாற்றத்தின் பிரதிபலிப்பாகும். எனவே, பிராந்தியம் எனும் எண்ணக்கருவின் பரிணாமத்தை வெவ்வேறு காலகட்ட புவியியல் மரபுகளின் பின்னணியில் கூறுவது சாலப்பொருத்தமாக அமையும்.


புராதன புவியியல் (பண்டைய காலம் முதல் நவீனக் காலம் வரை)
பிராந்தியம் என்ற கருத்தாக்கத்தின் வேரானது, ஸ்ட்ராபோ, தொலமி போன்ற அறிஞர்களால் ஆளுமை செய்யப்பட்ட புராதன புவியியல் மரபில் காணப்படுகின்றது. ஸ்ட்ராபோ ஜியோகிராஃபிகா - Geographica
எனும் அவரது படைப்பில் பிராந்தியங்களை அவற்றின் இயற்கை அம்சங்களுடன் கலாச்சார மற்றும் வரலாற்றுச் சூழல்களின் பின்புலங்களுடன் புரிந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும், பௌதீக நில அமைப்பு மனித நாகரீகங்களில் தாக்கம் செலுத்தும் விதத்தையும் விளங்கப்படுத்தினார். வரைபட வியல் துறைக்கு பெரும் பங்காற்றிய தொலமி பிராந்தியங்களை பரப்பியல் / இடம் சார்ந்து (spatially) குறிக்கும் ஆள்கூற்று முறையை உருவாக்கினார்.


இவ்வாறாக ஸ்ட்ராபோ, தொலமி ஆகியோரால் அடித்தளமிடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட புராதன புவியியல் மரபில் பிராந்தியங்கள் மலைகள், ஆறுகள், காலநிலை போன்ற அவற்றின் இயற்கை அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டு வரையறுக்கப்பட்டன. மேலும், அவை நிலையான புறநிலை கட்டமைப்புகளாகக் கருதப்பட்டன. இதன் காரணமாகப் புராதன புவியியல் மனித நடவடிக்கைகளில் சூழலின் செல்வாக்கை முக்கியப்படுத்தியதாகக் காணப்பட்டது. புவியியலின் இவ்விவரண அணுகுமுறையானது புவியியலின் பிற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டாலும், மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான உறவைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குவதிலும், முறைசார் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதிலும் போதாமைகளைக் கொண்டிருந்தது.


பிராந்திய புவியியல் (19 முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை)
புராதன புவியியலின் அடித்தளத்திலிருந்து, கார்ல் ரிட்டர், விடால் டி லாப்பிளாச் போன்றோரின் முக்கிய பங்களிப்புடன் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலப்பகுதியில் பிராந்திய புவியியல் பிரதானமானதொரு துறையாக வளர்ச்சி கண்டது. கார்ல் ரிட்டர் இயற்கையும், கலாச்சாரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகக் கருதினார். மேலும், பிராந்தியத்தை மானிட அபிவிருத்தியை வடிவமைக்கும் சுற்றாடல் கூறு என்ற பார்வையை முன்வைத்தார். 

விடால் டி லாப்ளாச்சின் இடவிவரணவியல் எண்ணக்கரு பிராந்தியம் என்பதினை இயற்கை அம்சங்கள் மற்றும் மனித சமூகத்தின் இயல்புகளின் சேர்கையினால் வரையறை செய்யப்படும் தனித்துவமான பகுதிகளாக எடுத்துக்காட்டியது. மேலும், விடால் டி லாப்ச் அறிமுகப்படுத்திய வாய்ப்புவாதம் (possibilism) எனும் எண்ணக்கருவின் மூலம், சூழல் மனித நடவடிக்கைகளைச் சிலவகைகளில் கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தலாம், எனினும், மனிதர்கள் அவர்களது சூழல்களுக்கு இயைபாக்கம் அடைவது மற்றும், அதற்கேற்ப தம்மை வடிவமைப்பது எப்படி என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை கொண்டிருக்கின்றார்கள் என்றார். அதாவது பிராந்திய ரீதியான விளைவுகளை வடிவமைப்பதில் மனிதர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றார்கள். எனவே, விடால் டி லாச்சப்பின் கருத்தின் பிரகாரம் பிராந்தியங்கள், பௌதீக பிரதேசங்களாகவும், மக்களின் தனித்துவமான வாழ்வு, தொழில்கள், இயற்கையான இடைத்தொடர்புகள் போன்றவற்றால் உருவான கலாச்சார அலகுகள் ஆகவும் காணப்படுகின்றது.

இவ்வகையில் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு பிராந்தியங்களும் அவற்றின் இயற்கை அம்சங்களுடன், கலாச்சார நடைமுறைகளும் கருத்திலெடுக்கப்பட்ட வெவ்வேறானவையாகப் புரிந்து கொள்ளப் பட்டன. இவ்வாறு, வெவ்வேறு பிராந்தியங்களின் பன்முகத் தன்மையையும், சிக்கல் தன்மையும் கருத்திலெடுக்கப்பட்டு ஒவ்வொரு பிராந்தியமும் தனித்தன்மையானவையாகப் பிராந்திய புவியியல் யுகத்தில் இனங்காணப்பட்டது.

எனினும், பிராந்தியங்கள் தொடர்பான காரணிகளையும் (Factors), சிறப்பம்சங்களையும் (features) பட்டியலிட்டு விவரிப்பதுடன் நிறுத்தி, அவை ஏன், எவ்வாறு ஏற்பட்டன என்பது தொடர்பான விளக்கங்களைத் தராமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், பரப்பியல் அல்லது இடம் சார்ந்த அமைப்பு கோலங்கள் ஏன் எவ்வாறு அமைகின்றன என்பதினை விளக்கவும், அவை எதிர்காலங்களில் எவ்வாறான மாற்றங்களுக்கு உள்ளாகும் என எதிர்வு கூறவும் முறைசார் பகுப்பாய்வு முறைகளையோ, அல்லது மாதிரிகளையோ முன்வைக்காமை இதன் குறையாக விமர்சனத்திற்குள்ளாகப்பட்டது.

அளவுசார் புரட்சி (1950கள்-1960கள்) காலம்
பிராந்திய புவியியல் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பிராந்தியங்களை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வுக்குட்படுத்தி விவரிக்கும் மரபு தோன்றியது. இதனை புவியியலில் ஏற்பட்ட அளவு சார் புரட்சி என்பர். இப்புரட்சி காலகட்டத்தில் புவியியலாளர்கள் கணிதம், புள்ளிவிபரவியல், மற்றும் பிற மாதிரிகளைப் பயன்படுத்தி பிராந்தியங்களை ஆய்வுக்குட்படுத்தினார்கள், அதாவது சனத்தொகை விபரம், காணிப்பயன்பாடு, பொருளாதார நடவடிக்கைகள் போன்ற தரவுகளும், புவியியல் தகவல் முறைமை, அமைவிடக் விதிகள் போன்ற நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு பிராந்தியம் எனும் எண்ணக்கரு விளங்கப்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக அதுவரைக்காலமும் பிராந்தியம் என அடையாளப்படுத்தப்பட்டு வந்தவை முறைசார் பிராந்தியங்கள், தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள் என இருவகையானவையாக அடையாளப்படுத்தப்பட்டன.

பாலைவன பிரதேசம், குறித்த மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் போன்ற பொதுவான பண்புகளைக் கொண்ட பிரதேசங்கள் முறைசார் பிராந்தியங்கள் எனப்பட்டன. ஏதேனும் ஒரு மையத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட (உதாரணம் - பெரு நகரங்கள் ) பிரதேசங்கள் தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள் எனப்பட்டன.

எனினும், இவ் அணுகுமுறை இடங்களில் நிலவும் மக்களின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பிராந்தியங்களை வடிவமைப்பதில் சமூக ஆதிக்கத்தின் பங்கையும் புறக்கணித்து, அதிகப்படியான வகையில் புள்ளி விபரங்களுக்குள் மட்டுப்படுத்தியமை தொடர்பில்  விமர்சனத்திற்குள்ளாகப்பட்டது.

மனித நேய மற்றும் விமர்சன புவியியல் (1970கள்–தற்போது) காலம்
அளவுசார் புரட்சி காலகட்டத்தின் வாய்ப்புவாத ஆய்வுகளுக்கு எதிர்வினையாக, மனிதநேய மற்றும் தர்க்க புவியியல் தோற்றம் பெற்றது. இப்புவியியலாளர்கள் பிராந்தியங்கள் எவ்வாறு, எதன்பொருட்டு வரையறை செய்யப்பட்டன எனக் கேள்வி எழுப்பினார்கள். இக்கேள்விகளுக்கு விடையாக பிராந்தியங்கள் இடம்சார் அல்லது பரப்பியல் அலகுகள் என்பதுடன், அவை மனிதர்களின் கருத்தோட்டங்கள், அனுபவங்கள் மற்றும் ஆதிக்கத்தினால் வடிவமைக்கப்படும் சமூக கட்டுமானங்கள் எனும் பார்வையை முன்வைத்தனர்.

மனிதநேய புவியியல் மக்கள் இடங்களுடன் உணர்வு ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் கொண்டுள்ள பிணைப்பு மற்றும் ஞாபங்களையும், அவ்விடங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள அகவுணர்வுகளையும் கருத்திலெடுத்து பிராந்தியங்களை உணர்வு ரீதியானதும் குறியீட்டு ரீதியானதும் நிலப்பரப்புகள் என வலியுறுத்தியது. அதேவேளை மார்க்சியம், பெண்ணியம் மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளில் இருந்து தோற்றம் பெற்ற விமர்சன புவியியல் பிராந்தியம் தொடர்பான மரபுரீதியான வரையறைகள் ஆதிக்கத்தின் இருப்பவர்களின் நலன்களை நிறைவேற்றும் நோக்கத்தில் அமைந்தது எனவும், பிராந்திய எல்லைகள் சமத்துவமின்மை, சமூக புறக்கணிப்பு, மற்றும் மேலாதிக்கம் என்பவற்றுக்கான கருவிகளாகக் காணப்படுகின்றன எனவும் விமர்சனங்களை முன்வைத்தது.

இதற்கு உதாரணமாக, பின் காலனித்துவ வாதிகள், காலனித்துவ ஆதிக்கம் கீழைத்தேயப் பகுதிகளில் தமது நலன்களுக்குச் சேவை செய்யும் பிராந்தியங்களை கட்டமைத்த விதத்தினை எடுத்துக்காட்டுவதினை குறிப்பிடலாம்.

இம்மாற்றங்கள், பிராந்தியம் எனப்படுவது கொள்கைகள், தடைகள், கருத்தாக்கங்களால் ஏற்படுத்தப்படும் மாறுதல்களுக்கு உட்படக் கூடியன என்பதை அங்கீகரித்தது. அதேவேளை இவ் அங்கீகாரம் பிராந்தியங்களை வரையறுப்பது யார்? அவ்வாறு வரையறுப்பதன் நோக்கம் என்ன? இதில் எத்தரப்பினர் பிரதான பங்கு வகிக்கின்றார்கள்? எத்தரப்பினர் புறக்கணிக்கப்படுகின்றார்கள் எனும் முக்கியமான கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கின்றது

முடிவுரை
புவியியலில் பிராந்தியம் என்ற எண்ணக்கருவின் பரிமாணமானது இத்துறையின் பரந்த அறிவுசார் விருத்தியைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் புராதன புவியியலும், பிராந்திய புவியியலும் முன்வைத்த இயற்கைசார் விவரணப்பார்வை, அதனைத் தொடர்ந்து புவியியலில் ஏற்பட்ட அளவுசார் புரட்சி முன்வைத்த பகுப்பாய்வு மாதிரி, இறுதியாகத் தற்காலத்தின் விமர்சன பார்வை என ஒவ்வொரு கண்ணோட்டமும் பிராந்தியம் குறித்த புரிதலையும் தெளிவையும் வளப்படுத்தி உள்ளன. இன்றை புவியியலாளர்கள் பிராந்தியம் எனப்படுவது பௌதீக பண்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிலையான கட்டமைப்புகள் மாத்திரமல்ல, அவை கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், மற்றும் அடையாளம் என்பவற்றினால் வடிவமைக்கப்படும் பல பல்பரிமான வெளிகளைக் கொண்டவை என்பதை அங்கீகரிக்கின்றார்கள். எனினும் புவியியல் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்குப் பல அணுகுமுறைகள் மற்றும் கண்ணோட்டங்களை ஒன்றிணைத்து ஆராய வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில், காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, எண்ணிம இணைப்பு போன்ற உலகளாவிய விடயங்கள் புவியில் இடங்கள் நோக்கப்படும் விதத்தினையும், ஆளுகை செய்யப்படும் விதத்தினையும் மறுவடிவம் செய்து வரும் சமகாலத்தில், பிராந்தியம் எனும் எண்ணக்கரு கல்வி சிந்தனைகளிலும், சமகால உலக பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் முயற்சிகளிலும் மையப்பொருளாக காணப்படுகின்றது.

4 comments:

Post Top Ad

My Instagram