வினா-05/15: ‘பிராந்திய புவியியல் தொடர்ந்தும் புவியியலின் தனித்த கற்கை துறையாக இல்லை’ எனும் கருத்துடன் நீர் உடன்படுகின்றீரா? உமது நிலைப்பாட்டை புவியியலில் ஏற்பட்டுள்ள சமகால சிந்தனை வளர்ச்சியின் துணையுடன் நியாயப்படுத்துக.
அறிமுகம்
பிராந்திய புவியியலானது பாரம்பரியமாக உலகின் குறிப்பிட்ட பிரதேசத்தின் பௌதீக அம்சங்களுக்கும் மானிடர்களும் இடையிலான இடைத்தொடர்பின் புலப்பாடுகளை ஆராய்வதில் கவனம் செலுத்தும் புவியியலின் உப பிரிவாக காணப்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டுகளின் நடுப்பகுதி வரை புவியியல் கற்கையின் மையப்பகுதியாகப் பிராந்திய புவியியலே காணப்பட்டது. எனினும், காலவோட்டத்தில் தரவுகளையும், வரைபடவியலையும் புவியியல் கற்கைகளில் பயன்படுத்தி பரப்பியல் பகுப்பாய்வு அணுகுமுறை மற்றும், ஆதிக்கம் மற்றும் சமத்துவமின்மை தொடர்பாகவும் கேள்விகளை முன்வைத்து புவியியல் கற்கையை அணுகிய விமர்சன அணுகுமுறை போன்ற புதிய அணுகுமுறைகள் முக்கியத்துவம் பெற்றன. இதன் காரணமாகப் பிராந்திய புவியியலில் தனியான கற்கை துறையாக நீடிக்கின்றதா அல்லது பரந்த புவியியல் சிந்தனை மரபிற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டதா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.
பிராந்திய புவியியலின் வரலாற்றுப் பின்னணி
பிராந்திய புவியியல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில், பிரான்சைச் சேர்ந்த விடல் டி லாபிளாச் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்ட்ரோன் போன்ற அறிஞர்களின் பங்களிப்புகளின் மூலமாக ஆதிக்கம் பெற்ற துறையாகக் காணப்பட்டது. இது பிராந்தியங்கள் தொடர்பில் சுற்றுச்சூழலினதும், கலாச்சாரத்தினதும் தாக்கங்களை உள்வாங்கிய முழுமைமையான விளக்கத்தை தருவதை நோக்கத்தைக் கொண்டிருந்தது. பிராந்தியங்கள் தொடர்பான இவ்வாறான விளக்கம் காலனித்துவ நிர்வாகம்,கல்வி, மற்றும் ஏனைய திட்டமிடல் முயற்சிகளுக்கு பயனுள்ள வழிக்காட்டல்களை வழங்கியது.
விமர்சனங்களும் பின்னடைவும்
1950கள் மற்றும் 60களில், புவியியலில் ஏற்பட்ட அளவுசார் புரட்சி பிராந்திய புவியியல் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது. இவ்விமர்சனங்களை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.
• மிகை விவரணம்
பிராந்திய புவியியல் பிரதானமாகக் குறிப்பிட்ட இடங்களையும், பிராந்தியங்களையும் விவரணம் (எ.கா – பௌதீக அம்சங்கள், கலாச்சார பண்புகள்)செய்வதிலேயே கவனம் செலுத்தியது. எனவே, விவரணங்களுக்கு அப்பால் சென்று விளக்கங்களை முன்வைக்காமை தொடர்பிலும், பிரதேசங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை விளக்குவதற்கு பொதுவான கோட்பாடுகளை கொண்டிராமை தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
• விஞ்ஞாபூர்வ தன்மை இன்மை
பிராந்திய புவியியலானது பிராந்தியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட புவியியலாளர்களின் தனிப்பட்ட கண்ணோட்டங்கள் மற்றும் பொருள் விளக்கங்களையும் அதிகமாகச் சார்ந்திருந்தது. எனவே, அதன் விஞ்ஞான பூர்வ தன்மை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
• புவியியலின் ஏனைய பரந்த கோட்பாட்டுகளுடன் இணைப்பில்லாமல் தனித்திருந்தமை
பிராந்திய புவியியல் புவியியல் மற்றும் ஏனைய துறைகளில் வளர்ச்சிகண்டு வந்த விஞ்ஞான பூர்வமான கோட்பாடுகளுடன் இணைப்பைக் கொண்டிருக்கவில்லை. இது பிரதானமாக இடங்களின் தனித்தன்மையில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியமையால், புவியியலில் பிரபலமடைந்து வந்த ஏனைய கோட்பாட்டு வளர்ச்சிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, பரந்தளவிலான ஏனைய கோட்பாடுகளுடன் துண்டிக்கப்பட்ட வகையில் இருந்தமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ் விமர்சனங்களின் எதிர்விளைவாக, புள்ளிவிபரங்கள், அளவீடுகள், கருதுகோள்கள், மாதிரிகள் போன்ற அளவுசார் முறைகளைப் பின்பற்றிய பரப்பியல் விஞ்ஞானம் புவியியலில் முன்னுரிமை பெறத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக ஆராய்ச்சியாளர்கள் கணிதவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி பரப்பியல் கோலங்களை விளங்கப்படுத்த ஆரம்பித்தார்கள்.
சமகால பொருத்தப்பாடும்; மறுமலர்ச்சியும்
பிராந்திய புவியியல் அதன் ஆரம்பக்கால செல்வாக்கைப் பறிகொடுத்து, பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அண்மைய தசாப்தத்தில் கோட்பாட்டு ரீதியான மறுமலர்ச்சியை அடைந்து வருகின்றது. பிராந்திய புவியியலின் இவ் மறுமலர்ச்சி வடிவத்தை ‘புதிய பிராந்திய புவியியல்’ என நாமமிட்டுக் குறிக்கப்படுகின்றது. அன்சி பாசி, ஜான் அக்னியூ போன்ற சமகால அறிஞர்கள் பிராந்தியங்கள் ‘சமூகத்தால் கட்டமைக்கப்படும், அரசியல் செல்வாக்கிட்குட்பட்ட மாறும் தன்மையுடையவை’ என வலியுறுத்துகின்றார்கள். இக்கண்ணோட்டம் பிராந்தியங்களை உலகமயமாக்கல், அடையாளம் மட்டும் பொருளாதார மீளுருவாக்கம் போன்ற காரணிகளால் தாக்கத்திற்குள்ளாகும் இயங்கியல் தன்மை வாய்ந்தவையாக நோக்கின்றது. மேலும், டோரின் மாஸி எனும் அறிஞர் உலகமயமாக்கல் சூழலில் பிராந்தியங்கள் ஒன்றொடொன் இணைந்தவையாக காணபடுகின்றமையை கோடிட்டு காட்டியுள்ளார். இவ்வாறாக விமர்சன (critical) கோட்பாடு, பரப்பியல் (spatial) மற்றும் தொடர்பியல் (relational) சிந்தனை மரபுகளை உள்ளடக்கியுள்ள சமகால அணுகுமுறைகள் இன்றையசிக்கலான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலக அமைப்பைப் புரிந்து கொள்ளத் துணை புரிவதாகக் காணப்படுகின்றது.
பிராந்திய புவியியல் தொடர்ந்து தனித்த துறையா?
பிராந்திய புவியியலானது புவிசார் அரசியல், பிராந்திய திட்டமிடல் போன்ற பிரயோக புவியியலில் முக்கிய வகிப்பாகத்தை கொண்டிருக்கின்ற போதிலும், பெரும்பாலான கல்விமுறைகளில் தனியான துணை துறையாக கருத்திலெடுக்கப்படுவதில்லை. பிராந்திய புவியியலின் அணுகுமுறைகளும், விடயப்பரப்புகளும் பரந்த புவியியல் அணுகுமுறைகளில் உள்வாங்கப்பட்டு விட்டன. சமகால புவியியலாளர்கள் வெறுமனே இடங்;களை பற்றி ஆராய்வதோடு நின்றுவிடாமல், வெவ்வேறு துறைகளைக் கூட்டாகப் பிரயோகித்து, சமகால பிரச்சினைகள் குறித்து ஆராய்கின்றனர். எனவே, பிராந்திய புவியியல் தோற்றுவித்த நுட்பங்கள், மாதிரிகள் மற்றும் அறிவு பரப்பு தொடர்ந்து தனியே பிராந்தியங்கள் பற்றி கற்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படாமல் பரந்தளவில் புவியியல் துறையில் உள்வாங்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றது. பாடத்திட்டங்களில் பிராந்திய புவியியல் பெரும்பாலும் மானிட புவியியல், அபிவிருத்தி புவியியல் அல்லது இடம்சார் கற்கைகளில் உள்ளடக்கப்பட்டு கற்கப்படுகின்றது.
இத்தகைய மாற்றத்தைச் சந்தித்துள்ள போதும், பிராந்திய பகுப்பாய்வானது பரப்பியல் வேறுப்பாடுகள், அரசியல் எல்லைகள், உலகளாவிய பிரச்சினைகளின் போதான பிராந்தியங்களின் எதிர்வினைகள் என்பவற்றைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாததாகவே காணப்படுகின்றiமானது. இந்து சிக்கல் தன்மை வாய்ந்த பிராந்திய மயப்பட்ட பிரச்சினைகளை கற்பதில் பிராந்திய புவியியல் தொடர்ந்தும் பொருத்தப்பாடுடையதாகக் காணப்படுவதை நிரூபிக்கின்றது.
சமகால பிராந்திய பகுப்பாய்வுகளுக்கு எடுத்துக்காட்டுகள்
• ஐரோப்பிய ஒன்றியம் தனது பிராந்தியத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த கொள்கைகளைச் செயற்படுத்தி வருகின்றது. இதன் மூலம் சமூக பொருளாதார மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு என்பன மேம்பாடைய செய்து வருகின்றமை.
• சார்க் அமைப்பு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பிராந்திய பாதுகாப்பு போன்ற தேசிய எல்லைகளை தாண்டிய பிரச்சினைகளை கையாண்டு, பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றமை.
• சிங்கப்பூர் அதன் மூலோபாய அமைவிடம் மற்றும் மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் காரணமாக, உலகளாவிய நிதி மற்றும் பெயர்ச்சியியல் (Logistic) மையமாகவும், துபாய் நகரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வர்த்தகம், நிதி, சுற்றுலா விடயங்களுக்கான மையமாகத் தொழிற்படுகின்றமை.
முடிவுரை
மேற்கூறிய விடயங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் வாயிலாக, புவியியல் சிந்தனைகளில் ஏற்பட்டுள்ள சமகால மாற்றங்கள் பிராந்திய புவியியலை 20 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் இருந்தது போல், தொடர்ந்தும் தனித்த சுயாதீனமான புவியியலின் துணை பிரிவாகத் தொடரும் வாய்ப்புகளை இல்லாது செய்துள்ளமை தெளிவாகின்றது. பிராந்திய புவியியலின் விவரண (னுநளஉசipவiஎந) அணுகுமுறை மாற்றம் நிர்வாகம், திட்டமிடல் விடயங்களில் அதன் பயன்பாடு என்பவற்றின் காரணமாக புவியியலில் ஆதிக்கம் பெற்ற துறையாகக் காணப்பட்டாலும், அதன் விஞ்ஞானபூர்வ தன்மையின் குறைபாடு, கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை இன்மை, குறிப்பிட்ட அவதானிப்புகளில் தங்கியிருக்கின்றமை போன்ற காரணங்களுக்காக விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது.
பரப்பியல் விஞ்ஞானம், விமர்சன புவியியல், மற்றும் வெவ்வேறு துறைகளை ஒருங்கிணைத்த அணுகுமுறைகளின் தோற்றமும் வளர்ச்சியும், புவியியல் அதுவரை காலமும் ஆய்வுக்குட்படுத்தி விடயங்களிலும் பரிமாண வளர்சியயை ஏற்படுத்தின. இதன் விளைவாகப் பிராந்திய புவியியலின் அணுகுமுறைகளை விரிவான புவியியல் பாடப்பரப்பில் உள்வாங்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. எனினும், இம்மாற்றம் பிராந்திய புவியியலின் பொருத்தப்பாடின்மையையோ, அழிவையோ குறிக்கவில்லை.
மாறாகப் பிராந்தியங்கள் தொடர்பான பகுப்பாய்வும், புரிதலும், சீரற்ற அபிவிருத்தி, அடையாளம் சார் அரசியல், பூகோள மயமாக்கல், சுற்றுச்சூழல் சவால்கள் போன்ற சிக்கல் தன்மை வாய்ந்த உலகளாவிய பிரச்சினைகளை அணுகுவதற்கும் புரிந்து கொள்வதற்குமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முக்கியமான பங்களிப்பை ஆற்றுவதாக பரிணாமம் கண்டது.
மேலும், பிராந்திய புவியியலானது, பிராந்தியங்கள் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு, அரசியல் காரணிகளால் மாற்றத்திற்கு உள்ளாகுவை போன்ற புதிய பிராந்திய புவியியல் சிந்தனைகள் காரணமாக, புவியியல் கற்கைகளில் உள்வாங்கப்பட்டதாகத் தன்னை மறுவடிவம் செய்து கொண்டுள்ளது. இவற்றின் அடிப்படையில், பிராந்திய புவியியலானது ஒரு முழுமையான தனித்த துறையாக நீடிக்காமல், புவியியலின் பரந்த விடயப்பரப்புக்கள் பொருத்தபாடான வகையில் உள்வாங்கப்பட்டுத் தொடர்வதாகவே காணப்படுகின்றது.
No comments:
Post a Comment