Post Top Ad

இலங்கையும் பிராந்திய வகைகளும்

வினா - 02 (அ) இலங்கையில் காணப்படும் இரண்டு முக்கிய வகைப் பிராந்தியங்களைப் பற்றி, பொருத்தமான உதாரணங்களைத் தந்து கலந்துரையாடவும்.

(ஆ) இலங்கையின் கடலோர மண்டலத்தை ஒரு தனி முறைசார் பிராந்தியமாகக் கருதுவதற்கான தர்க்க ரீதியான காரணங்களை வரைபடங்களைப் பயன்படுத்தி மதிப்பாய்வு செய்யவும்.

(அ)இலங்கையின் முக்கிய பிராந்திய வகைகள்

அறிமுகம்
பிராந்தியம் எனப்படுவது பௌதீக, கலாச்சார மற்றும் தொழிற்பாட்டு (functional) ரீதியான பொதுப் பண்புகளைக் கொண்டிருக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசமாகும். புவியியலில், பிராந்தியங்கள்; முறைசார் பிராந்தியம், தொழிற்பாட்டுப் பிராந்தியம் (functional) மற்றும் புலனுணர்வு (perceptual) பிராந்தியங்களாக வகைப்படுத்தப் படுகின்றன. இலங்கை, மிகச்சிறிய தீவாகக் காணப்பட்ட போதிலும், மூன்று பிராந்திய வகைகளையும் கொண்டிருக்கின்றது. இவற்றில் முறைசார் (formal) பிராந்தியமும், தொழிற்பாட்டு (functional) பிராந்தியமும் முக்கியமாக குறிப்பிட தக்கவையாக காணப்படுகின்றன.

1. முறைசார் பிராந்தியங்கள் - மத்திய மலைநாட்டுப் பிரதேசங்கள்
முறைசார் பிராந்தியம் எனப்படுவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த பௌதீக அல்லது கலாச்சார பண்புகளால் வரையறுக்கப்படும் பிரதேசம் ஆகும். இப்பண்புகள் பிராந்தியம் முழுவதும் காணப்படுவதுடன், அப்பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களிலிருந்து வேறுபடுத்தியும் காட்டும். இலங்கையில் கடல்மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கும் அதிக உயரமான மத்திய மலைநாட்டுப் பிரதேசங்கள் முறைசார் பிராந்தியங்களுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

இப்பிராந்தியம் கடல் மட்டத்திலிருந்தான உயரம், காலநிலை, நிலப் பயன்பாடு போன்ற ஒத்த பௌதீக அம்சங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றது. மத்திய பகுதியின் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்கள் இப்பிரதேசத்தில் உள்ளடக்கும். இப்பகுதி அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு, குளிர்ச்சியான காலநிலை, அதிகப்படியான மழைப்பொழிவு ஆகிய பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இவ் பௌதீக பண்புகள் தேயிலை பயிர்ச்செய்கை மற்றும் நீர் மின் உற்பத்திக்கு உகந்ததாக அமைகின்றன. மேலும் , பெருந்தோட்ட அடிப்படையிலான சமூகங்களின் கலாச்சார பண்புகளும் இந்த பிராந்தியத்தை வரையறை செய்வதாக காணப்படுகின்றது.

2. தொழிற்பாட்டுப் பிராந்தியம் - கொழும்பு பெருநகரப் பகுதி
தொழிற்பாட்டுப் பிராந்தியம் எனப்படுவது ஒரு மையப் பகுதியை அல்லது முனையைச் சூழ அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் போக்குவரத்து, தொடர்பாடல், வர்த்தகம், நிர்வாகம் போன்றவற்றால் தொடர்புப் படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்படும் பிரதேசத்தைக் குறிக்கும். இலங்கையில் இவ்வகை பிராந்தியத்திற்கு உதாரணமாக, தலைநகரான கொழும்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கொழும்பு பெருநகர பிராந்தியத்தினை காட்டலாம்.

இங்குக் கொழும்பு அரசியல், வணிக, நிர்வாக நடவடிக்கைகளின் மையமாகத் தொழிற்படுகிறது. அதனைச் சூழ அமைந்துள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள்; விரிவான தரை போக்குவரத்து பாதை வலையமைப்பு மற்றும் புகையிரத பாதைகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இப்பாதை வலையமைப்பு மூலமாக கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேச மக்கள் ஆயிரக்கணக்கில் அன்றாட தொழில், கல்வி, பிற அலுவல்கள் நிமித்தம் வந்து மையப்பகுதியான கொழும்பிற்கு வந்து செல்கின்றனர். கைத்தொழில் வலயங்கள், வர்த்தக மையங்கள், பெருநிறுவன தலைமையகங்கள் என்பன கொழும்பில் அமைந்திருப்பதால் சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் நிமித்தம் பலரும் தொடர்பு கொள்கின்றார்கள். கொழும்பு தொடர்ச்சியாக அடைந்து வரும் நகரமயமாக்கலும் அபிவிருத்தியும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் விரிவாக்கம் அடைந்து புறநகர்களையும், நகரங்களையும் தோற்றுவித்துள்ளது. இவை விரிந்த போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் முறைகளால் இணைக்கப்படுவதால் பாரியளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பெருநகர பகுதி உருவாகி உள்ளது.

முடிவுரை
முறைசார் பிராந்தியம், தொழிற்பாட்டுப் பிராந்தியம் எனும் இரண்டு முக்கிய பிராந்திய வகைப்பாடுகளுக்கு இலங்கையில் தெளிவான எடுத்துக்காட்டுகளாக முறையே த்திய மலைநாட்டுப் பிராந்தியமும், கொழும்பு பெருநகர பிராந்தியமும் அமைகின்றது. மத்திய மலைநாட்டுப் பிரதேசம் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் அமைந்த ஒத்த பௌதீக மற்றும் கலாச்சார அம்சங்களாலும், கொழும்பு பொருளாதார, போக்குவரத்து, நிர்வாக நடவடிக்கைகளின் மைய முனையாக அமைந்து, சூழவுள்ள பிரதேசங்களை அன்றாடம் வர்த்தகம் மற்றும் சேவை நடவடிக்கைகள் வாயிலாக இணைக்கும் தன்மையாலும் எடுத்துக்காட்டுக்கான பொருத்தப்பாட்டைப் பெறுகின்றது.


(ஆ) தனியான முறைசார் பிராந்தியமாகக் கடலோர வலயம்

அறிமுகம்:
இலங்கையின் கடலோர வலயம்; அதன் பௌதீக மற்றும் சமூக-பொருளாதார தனித் தன்மை காரணமாக ஒரு தனித்த முறைசார் பிராந்தியமாகக் கருதப்படலாம். இப் வலயம் ஒத்த புவியியல், கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்களைக் கொண்ட தீவின் வெளிப்புற விளிம்பு பகுதிகளில் தொடர்ச்சியாக அமைந்த படுகையாகக் காணப்படுகின்றது. இதன் தனித்தன்மை, இவ்வலம் தொடர்பான கல்வி ஆராய்ச்சிகள், சுற்றுச்சூழல் கொள்கை வகுப்பாக்கம்;, அபிவிருத்தி திட்டமிடல்கள் வாயிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1. பௌதீக பண்புகள்:
இலங்கையின் கடலோர வலயம் சுமார் 1340 கிலோமீற்றர் நீண்ட இயற்கையான எல்லையாகக் காணப்படுகின்றது. இவ்வலயம் மணற் கடற்கரைகள், பவளப்பாறை தொடர்கள், களப்புக்கள், கழிமுகங்கள், கண்டல் தாவர தொகுதி போன்ற தனித்துவமான நில அமைப்புகளைக் கொண்டிருக்கின்றது. மேலும், இப்பிராந்தியம் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமண்டல பருவமழை காலநிலையுடையதாகக் காணப்படுகின்றது. இப்பகுதி முழுவதும் கடல் மட்டத்திலிருந்து அதிக பட்சமாக 30 மீற்றர் உயரத்தைக் கொண்ட தாழ்வான பகுதிகளாகும். இவ்வாறு தொடர்ச்சியாகவும் பரவலாகவும் அமைந்த பௌதீக பண்புகள் ஏனைய உட்புற பிராந்தியங்களான உலர் வலய சமவெளிகள் மற்றும் மத்திய மலைநாட்டிலிருந்து கடலோர வலயத்தை வேறுபடுத்தி தனித்துவமான பிராந்தியங்களாகக் கருத வேண்டியதை வலுப்படுத்துகின்றன.

2. சமூக - பொருளாதார பண்புகள்:
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருக்கோணமலை போன்ற கடலோர மாவட்டங்கள், அவற்றின் வர்த்தக - போக்குவரத்து மூலோபாய அமைவிடம் காரணமாக அதிக சனத்தொகை அடர்த்தி கொண்டதாகக் காணப்படுகின்றது. இப்பிரதேசங்களில் மீன்பிடித்தல், சுற்றுலா கைத்தொழில், துறைமுகம் சார் தொழில்கள் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன. இவ்வலயத்தில் காணப்படும் பிரதான நகர மையங்களான நீர்கொழும்பு, மாத்தறை போன்ற நகரங்கள் கடலோரத்தில் அமைந்துள்ளதுடன் பொருளாதார மற்றும் சேவை மையங்களாகக் காணப்படுகின்றன. இவ்வாறு கடலோர சுற்றுச்சூழலுடன் நெருக்கமாகப் பிணைந்து காணப்படும் சமூக – பொருளாதார அமைப்பு முறைகள் தனித்துவமான பிராந்திய அடையாளப்படுத்தலை வலுப்படுத்தி, கடலோர வலயத்தைத் தனித்த வலயமாகக் கருத வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றன.

3. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் முகாமைத்துவமும்:
கடலோர பகுதிகள் கடலரிப்பு, சூறாவளி, சுனாமி, கடல்மட்ட உயர்வு போன்ற தனித்துவமான சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்கின்றன. இதனை எதிர்கொள்ளும் விதமான இலங்கை அரசு கடலோர பாதுகாப்புத் துறையை நிறுவி கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. பல கடலோர ஈரநிலங்கள், களப்புகள், பவளப்பாறை பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சுற்றாடல் வலயங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பிரத்தியேகமான கொள்கை வகுப்பாக்கங்களும், தனித்துவமுமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் , கடலோர வலயத்தைத் தனித்த பிராந்தியமாகக் கருத வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுகின்றன. ஏனெனில், இவ்வாறு தனித்த பிராந்தியமாகக் கருதும் போதே வினைத்திறனான திட்டமிடல்களையும், முகாமைத்துவத்தையும் முன்னெடுக்க இயலும்.

முடிவுரை
இலங்கையின் கடலோர வலயம் அதிகப் படியான பௌதீக மற்றும் சமூக-பொருளாதார ஒத்த தன்மையைக் காட்டுகிறது. இதன் காரணமாக இவ்வலயம் தனித்துவமான முறையான பிராந்தியமாக அடையாளப்படுத்தப் படுவதற்கான தகுதியைப் பெறுகிறது. இதன் தனித்துவமான இயற்கை அம்சங்கள், அடர்த்தியான மனித குடியேற்றங்கள், வாழ்வாதார முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் அதனை ஒரு தனி பிராந்திய அலகாகக் கருதி நிர்வகிப்பதை பொருத்தப்பாடுடையாக ஆக்குகின்றது. இவ்வாறு தனி பிராந்தியமாகக் கருதுவது வினைத்திறனான பிராந்திய திட்டமிடல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் அனர்த்த முகாமைத்துவதற்கு அவசியமானதும் ஆகின்றது.

1 comment:

Post Top Ad

My Instagram