Post Top Ad

பொது பல சேனாவின் ஆதரவு தளம் எது?

பொதுபலசேனாவிற்கு நாட்டில் ஆதரவு அதிகமாக இருப்பது, கண்டியிலும் கொழும்பின் மகரகம மற்றும் ராஜகிரிய அதனை அண்டிய பகுதிகளில் ஆகும். கண்டியில் அவர்களுக்கு எஸ்.பி. திசாநாயக்க தடையாக இருக்கின்றார். காரணம், கண்டியில் கணிசமான முஸ்லிம்களின் ஆதரவு அவருக்குண்டு அதனை இழக்க விரும்ப மாட்டார் அவர்.
மகரகம, இராஜகிரிய பகுதிகளில் நிலைமை வேறு.
இதற்கு இந்த பகுதிகளில் அதிகமாக வசிப்பவர்களின் வர்க்க நிலையை அறிய வேண்டும். கிராங்களில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றதன் மூலம் தன் நுகர்வு மட்டத்தினை உயர்த்தி கொண்டு தொழில் நிமித்தம் கொழும்பில் குடியேறியவர்கள். சன அடர்த்தி கூடிய கொழும்பு நகரிலே ஒரளவு சனநெரிசல் குறைந்ததும் கிராமிய சூழல் போன்று ஒரளவு வீடமைவு கொண்ட பிரதேசங்களாகும். இந்த பிரதேசத்தில் தான் மேற்குறிப்பிட்ட மத்திய தரவர்க்கமாக தன்னை உயர்த்தி கொண்டு வாழும் பிரிவினர் இருக்கின்றனர். கிராமிய வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு அதிலிருந்து வெளியேறி நகர்புற வாழ்க்கையில் அந்நியமாகியுள்ளவர்கள் இவர்கள். இவர்கள் மத்தியில் இருந்து தான் குணதாச அமரசேகர, நலிந்த சில்வா  போன்ற பழமைவாதத்தினை தூக்கி பிடிக்கும் தேசிய வாதிகள் உருவெடுக்கின்றார்கள். ரம்மியமான கிராமம் பற்றிய அதீத கற்பனையுடன் வாழ்பவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் சிறு பகுதியாக இருக்கலாம். ஆனால் இவர்களின் செல்வாக்கு சமூகத்திலே அதிகமானதாகும். நுகர்வு பொருட்கள் பல இவர்களை இலக்காக கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன. தொலைக்காட்சி விளம்பரங்கள் இதற்கு நல்ல உதாரணம். அநேகமான விளம்பரங்கள் ரம்மியமான கிராமம் என்பதினை தொனிபொருளாக வைத்து தான் தயாரிக்கப்படுகின்றன. ஊர்கடைகள் என்ற பெயரில் கிராமிய பாணியில் உணவு பரிமாறும் உணவகங்களை தேடி செல்லும் இவர்களிடம் இது நன்றாகவே விலை போகும். இவர்கள் கூறுவது போன்று ரம்மியமான கிராமங்கள் இருக்கின்றனவா? என்பது கேள்வி தான். காணிச்சண்டை, சாதிச்சண்டை, போக்குவரத்து சுகாதார அடிப்படை வசதிகள் இன்மை வறுமை இப்படியான கிராமங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
2000 ஆண்டு கால பகுதியில் ஜே.வி.பி க்கு அதிக செல்வாக்கு இருந்த பிரதேசம் இதுவாகும். பிரதேச சபை தேர்தலில் 20ம% அதிகமான வாக்குகள் கிடைத்த இடம்.  காரணம் ஜே.வி.பி இவர்களின் வர்க்க நிலைக்கு தக்க வகையில் தேர்தல் கோசங்களை முன்வைத்தது. ' ஜே.வி.பி உள்ளே, குப்பைகள் வெளியே' என்பதே ஜே.வி.பி யின் கோசமாக இருந்தது.
என்ன தான் நகர் புற வாழ்க்கைக்கு இவர்கள் வந்திருந்தாலும் கிராமத்திலே இவர்களுக்கு கிடைத்த சமூக வாழ்க்கை இவர்களுக்கு இல்லாது போயுள்ளது. நகர் புற வாழ்வில் அந்நியமாகியுள்ளனர். அத்துடன் கிராமிய வாழ்க்கை குறித்த அதீத கற்பனையுடன் வாழ்பவர்கள். இவர்களின் இந்த நெருக்கடி தான் பொதுபல சேனாவிற்கு ஆதரவு தளமாக உள்ளது. அந்நியமாதல் ஏற்படுத்தியுள்ள சமூகசெயற்பாட்டிற்கான தேவையையும் கிராமியம் குறித்த அதீத கற்பனை ஏற்படுத்தியிருக்கும் பிரமையும் ஒரே நேரத்தில் ஈடுசெய்யப்படும் இடமாக அமைகின்றது பொதுபல சேனா. ஆகவே தான் பொது பல சேனாவினால் இப்பிரதேசங்களில் அதிகமாக கோலோச்ச முடிகிறது. சமூகத்தில் எல்லோருக்கும் ரோல் மொடலாக இருக்கும் இவர்களின் இந்த போக்கு ஏனையவர்களிடம் அதிகமான செல்வாக்கினை செலுத்துவதும் தவிர்க்க முடியாததாகும். 

Post Top Ad

My Instagram