Post Top Ad

மாணவர் போராட்டங்களின் இயல்பு - தமிழக மாணவர்களின் போராட்டம் 04

மாணவர்கள் வர்க்க பிரிவில் ஒரு நிலைக்குத்து கூறாவார்கள். முதலாளித்துவ பொருளாதார முறை சமூகத்தை தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், மத்தியதர வர்க்கம், முதலாளிவர்க்கம் என பிரமிட் முறையில் அடுக்கடுக்காக பிரித்து வைக்கும். இந்த பிரமிட் அடுக்குகளில் மாணவர்கள் சகல அடுக்குகளிலும் உள்ளடங்கும் நிலைக்குத்து கூறாவார்கள். மாணவர்களின் இவ் வர்க்க இயல்பின் காரணமாக புரட்சியின் பிரதான பிரிவாக மாணவர்கள் முன்நிறுத்தப்படுவதில்லை. மாணவர்கள் புரட்சிகர சக்திகள் தான் ஆனால், புரட்சியை நடத்தக் கூடியவர்கள் அல்ல.
புரட்சியுடன் நிற்கக் கூடியவர்கள். மாணவர்கள் மட்டும் நடத்தும் புரட்சிகர போராட்டங்கள் எப்போதும் புரட்சிகரமாக இருக்குமே ஒழிய அதன் இறுதி இலக்கை அடைந்ததாக இருக்காது. மாணவர்களின் புரட்சிகரப் போராட்டங்கள் இறுதி இலக்கை அடையவேண்டுமெனில் புரட்சியின் முதனிலை வர்க்கமான உழைக்கும் வர்க்கத்தினை போராட்டக்களத்திற்கு அழைத்துவரல் வேண்டும். இதனைச் செய்திட வேண்டுமாயின் மாணவர்கள் அமைப்புரீதியாக ஒன்றிணைய வேண்டும். நிறுவனமயப்படல் வேண்டும். அமைப்புரீதியாக ஒன்றிணையும் மாணவர்களினால் தான் சரியான இலக்கையும் எதிரியையும் இனங்கண்டு சரியான கோட்பாடுகளுடன் போராட முடியும். இவ்வாறான போராட்டங்களே புரட்சியின் உண்மையான சக்திகளான மக்களை அரசியல் மயப்படுத்தி களத்திற்கு அழைத்து வரும். போராட்டக்களத்தில் குதித்துள்ள தமிழக மாணவர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய சவால் அமைப்புரீதியாக ஒன்றிணைவது. இதன் போது எழும் முரண்பாடுகளை கண்மூடித்தனமாக தமிழின உணர்வை முன் வைத்தும் துரோகிப் பட்டங்களை வாரிவழங்கியும் இன்னும் பிறவற்றினை செய்தும் கடந்து செல்ல எத்தனிக்கக் கூடாது. முரண்பாடுகளை கோட்பாட்டுரீதியாக அணுகி தீர்ப்பதன் மூலம் ஐக்கியத்தை நிலைநாட்டிட வேண்டும். அந்தச் சரியான கோட்பாட்டினை மாணவர்களுக்கு அவர்கள் நடத்தும் போராட்டம் கற்றுத்தரும்.
 

Post Top Ad

My Instagram