Post Top Ad

விஸ்வரூபம் வின்னர்களின் விளையாட்டு



முதலாளியத்திற்குள் சகலதிற்கும் விலை உண்டு. ஆனால் எதற்குமே மதிப்பில்லை. உணர்வுகள் கூட இங்கு காசிற்கு விற்கப்படுபவைதான். விலைபோகும் அளவிற்கே உணர்வுகள் இங்கு மதிப்பை பெறும். உழைக்கும் வர்க்கத்தின் கலையுணர்விற்கும் இதே நிலைதான். உழைக்கும் வர்க்கம் தன் உழைப்பால் உருவாக்கிய  ஒட்டுமொத்த கலைகளும் சினிமா என்ற  பொதிக்குள் அடக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பரபரப்பு கூட விற்பனைப் பண்டந்தான். இதன் காரணமாகத்தான் சினிமாத் துறையில் முதலீடு செய்யப்பட்டு பரபரப்பு உருவாக்கப்படுகின்றது. இப்படி பரபரப்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய திரைப் படங்களில் ஒன்றுதான் விஸ்வரூபம். விஸ்வரூபம் ஏற்படுத்திய பரபரப்பு பல பத்திரிகைகளிற்கு தீனி போட்டது. சில பத்திரிகைகள் வேண்டுமென்றே பரபரப்பாக்கின (அதிக பரபரப்பு அதிக இலாபத்தை தருமிங்கு) இப்படி பரபரப்பை ஏற்படுத்திய விஸ்வரூபம் திரைப் படத்தினைப் பற்றிய விமர்சனங்களைத் தனி நபர்களும் ஊடகங்களும் போட்டிபோட்டு எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். எமது நோக்கம் விஸ்வரூபம் திரைப் படத்தை விமர்சிப்பது அல்ல. இவ்வாறு விமர்சிப்பது எய்பவனுடன் மோதாமல் எய்யப்பட்ட பொருளுடன் மோதுவதற்கு சமனானதாகும். 
மனிதர்களின் உழைப்புடன் இணைந்து தோற்றம் பெற்று உழைக்கும் மக்களுக்காகவே பயன்பட்ட கலைகள் முதலாளித்துவத்தில் விற்பனைப் பண்டமாக்கப்பட்டு மனித உழைப்பிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் அந்நியப்பட்டவையாக ஆக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை அனுபவித்து சகல கலைகளிலிருந்தும் உழைப்பின் சாரத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு அதனை இன்று கூவிக் கூவி விற்கின்றனர். இருநூற்று முப்பதுகோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு அரசாலும் அதனைத் தொடர்ந்து இலங்கை அரசாலும் தடை செய்யப்பட்டன. குறிப்பாக தமிழ் நாட்டின் அரசாங்கத்தினால் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் விஸ்வரூபத்தில் அப்படி என்ன விஸ்வரூபமாக இருந்தது எனப் பார்க்க வேண்டியுள்ளது.

கமலஹாசன் காஷ்மீரி எனும் இஸ்லாமியராக நடித்துள்ளார். இந்திய உளவுத் துறையான றோவும் அமெரிக்க உளவு துறையான ஊஐயுயும் இஸ்லாமிய தமிழரான காஷ்மீரியை ஆப்கானிஸ்தான் தலிபான் அமைபிற்குள் உளவு பார்க்க அனுப்புகின்றன. குறிப்பாக தலிபான்களினால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க இராணுவம் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக அனுப்புகின்றன. காஷ்மீரி; ஒரு உளவாளி என்பது தலிபான்களிற்கு தெரியவர அங்கிருந்து தப்பிக்கும் காஷ்மீரி, அமெரிகாவிற்கு சென்று அங்கு கதக் நடன ஆசிரியராக வாழ்க்கை நடத்துகிறார். உளவுத் துறையினருடான தொடர்பும் அப்படியே இருக்கின்றது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலே அணுத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருக்கும் தலிபான் குழுவினரை காஷ்மீரி;; சந்திக்க நேர்கின்றது. பின் நடப்பவைதான் திரைப்படம்.
தமிழ்நாட்டின் 24 முஸ்லிம் அமைப்புக்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பை தெரிவிக்க ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் உடனே திரைப் படத்தினை தடை செய்திருந்தது. உண்மையாக இஸ்லாமியர்களை புண்படுத்தும் காட்சிகள் ஏதேனும் திரைப்படத்தில் இருக்கின்றனவா என்று ஆராயாமலே தடை விதித்தது தமிழ் நாட்டு அரசாங்கம். இவ்விடயம் நீதிமன்றில் அம்பலப்படவே அத் தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. திரைப் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமான காட்சிகள் எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. சகலருக்கும் தெரிந்த தலிபான் அமைப்புத் தொடர்பான காட்சிகளே காட்டப்பட்டுள்ளன. தலிபான் அமைப்பின் வன்முறைகளை திரையிடுவதும் இஸ்லாமியர்களை புண்படுத்துவதும் ஒரே விடயங்களல்ல. இந்திய இஸ்லாமியனாக நடித்த கமலஹாசன் பாத்திரம் எந்த இடத்திலும் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக இல்லை. உண்மையாகவே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் விஸ்வரூபத்தை தடைசெய்யக் கோரிய அமைப்புக்கள் இஸ்லாமியர்கள் புண்படுத்தப்படக் கூடாது என்ற ஆதங்கம் உள்ளவர்களாக இருந்தால் தலிபான் அமைப்பையும், இலங்கையில் இஸ்லாமியர்கள் கீழ்த் தரமாக நடத்தி அவமானப்படுத்தும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் அமைப்புகளை அல்லவா தடைசெய்யக் கோரவேண்டும்?
சில மாதங்களுக்கு முன் இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பா.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கமல்ஹாசன் சிதம்பரம் இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என உரையாற்றினார். பிரதமராகும் கனவில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு இது பெரும் கோபத்தை ஏற்படுத்த அவர் விஸ்வரூபமெடுத்துவிட்டார். சினிமா நடிகை என்ற மாயாஜாலக் கவர்ச்சியை பயன்படுத்தி முதல்வரான ஜெயலலிதாவிற்கு கமலஹாசன் எனும் நடிகனின் கருத்தும் வகிபாகமும்; அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது நன்கு தெரியும். இதுதான் விஸ்வரூபம், விஸ்வ ரூபமானதிற்கு காரணம். தன் பழிவாங்கலிற்கு இஸ்லாமிய அமைப்புக்களை துணையாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. இந்த விடயத்தில் இலங்கை இஸ்லாமிய அமைப்புகளும் தடைவிதிக்கக் கோரிக்கை விடுக்க இலங்கை அரசாங்கமும் தடைவிதித்தது, இலங்கையில் பொது பலசேனா, ஹெல உறுமய போன்ற அமைப்புகளினால் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களிற்கு பூரண ஆதரவை வழங்கி அதன் பயன்களை அறுவடை செய்யும் இலங்கை அரசாங்கம், தனக்கு எதிரான பக்கம் இஸ்லாமிய மக்கள் சொல்வதைத் தடுக்கும் முகமாக இவ் விவகாரத்தைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால் அது கைகூடவில்லை. இஸ்லாமியர்களை புண்படுத்துகின்றது என்பதற்காக திரைப் படத்தை தடைசெய்யும் மகிந்த அரசாங்கம் இஸ்லாமியர்களை கொன்றொழிக்கத் துடிக்கும், கேவலப்படுத்தும் இஸ்லாமியச் சமூகம் மீது இனவாதத்தினை முன்னெடுக்கும் ஹெல உறுமய மற்றும் பொது பல சேனா போன்ற அமைப்புகளை ஆதரித்து அனுசரணை வழங்கி நிற்பது அதன் உண்மை முகத்தைக் காட்டுகின்றது.

விஸ்வரூபம் ஜெயலலிதாவிற்கு விஸ்வரூபமாகத் தெரிய இன்னுமொரு காரணமும் இருக்கின்றது. விஸ்வரூபம் படத்தில் அணுவாயுதங்கள், அணுக் கதிரியக்கம், அணு கதிரியக்கம் புற்று நோயை எடுபடுத்துவது மற்றும் அணு மூலப் பொருட்கள் தொடர்பாக காண்பிக்கின்றார்கள். கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவி தன் அரசு மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் முடியுமான அளவு காசு பார்த்துவிடவும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு கூடங்குளத்தில் மக்கள் நடாத்தும் போராட்டங்கள் சவாலாய் அமைந்துள்ள நேரத்தில், அணுக் கதிர் வீச்சு தொடர்பாக மக்களிடம் இலகுவாக சென்றடையக் கூடிய சினிமாத் திரைப் படத்தில் காட்சிகள் இடம் பெறுவது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியும். அதன் காரணமாகத்தான் தடையும் அதன் பின்பான சில காட்சி நீக்கமும் இடம்பெற்றது. 

இடை வேளைக்குப் பின்புதான் படத்தில் அணுக் கதிர் தொடர்பாகக் கதைக்கின்றார்கள். ஆனால் இடைவேளைக்கு பின்பு இடம்பெற்ற சில காட்சிகள்தான் இதில் நீக்கப்பட்டுள்ளன. இப் படத்தை இடை வேளையின் பின்பான கதையமைப்பில் தொய்வு ஏற்படும் வகையில் அணுக்கதிர் தொடர்பான சில காட்சிகளும் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் தடைசெய்யும் அளவிற்கு இதுவொன்றும் மக்கள் கலைப் படைப்பல்ல. இருநூற்று முப்பது கோடி ரூபாய் முதலீடுசெய்து இலாபத்தை நோக்காகக் கொண்ட தயாரிப்பு. சகலதையும் விலை பேசும் முதலாளித்துவத்தில் கமலஹாசன் முதல் கந்தப்பு ஜெயந்தன் வரைக்கும் இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. உழைப்பின் சாரத்தை இழந்து முதலாளித்துவத்தில் மரணித்துக் கிடக்கும் கலையை மீட்க உழைக்கும் வர்க்கம் கலைப் புரட்சியை நடத்த வேண்டும். உழைப்புடன் பிணைக்கப்பட்ட கலையே உழைக்கும் வர்க்கத்தின் கலையாகும். இதுவே எமக்கு பயன்படும் கலையாகும். புரட்சிகர கலைஞர்களும், புரட்சிகர கலைச் சங்கங்களும் கலையை மீட்டெடுக்கும் புரட்சியை நடாத்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழுங்கமைய வேண்டும். அதாவது மக்களின் கலையுடன் இணைந்திடாத புரட்சியும் விடுதலையும் இருட்டறைக்குள் இருக்கும் கண்ணாடிக்குச் சமமானதாகும். 
 –போராட்டம் இதழ் 3 ல் வெளிவந்த கட்டுரை-

Post Top Ad

My Instagram