Post Top Ad

இலங்கையை அமெரிக்காவின் இராணுவ காலணியாக்கும் ஐதேக #பகுதி - 05

2016ம் ஆண்டு அமெரிக்க அரசு சர்வதேச இராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலான விடயங்களை ஆராய “சர்வதேச பாதுகாப்பு ஆலோசனை சபை” எனும் நிபுணர் குழுவை நியமித்திருந்தது. ஆலோசனை சபை, முன்பு கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை எல்லாம் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப வலுப்படுத்த வேண்டும் எனவும், எதிர்ப்பு நிலவும் நாடுகளில், அரசியல் குழப்பங்கள் நிலவும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட வேண்டும் எனவும் முன்மொழிவை வைத்திருந்தது.

இந்த முன்மொழிவின் அடிப்படையில் 2018 ஆகஸ்ட் மாதம் அமெரிக்கத் தூதரகம், 15 விடயங்களை முன்வைத்து “அமெரிக்கப் போர்ப் படைகளின் படித்தரம் தொடர்பான ஒப்பந்தம்” எனப்பெயரிடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல் ஒன்றை இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பி வைத்திருந்தது.

இது தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, வெளிநாட்டு அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் ஒப்பந்தமொன்று தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டிருப்பதை ஒத்துக் கொண்டிருந்தார்கள்.

குறித்த ஒப்பந்தமானது, அமெரிக்க நாட்டின் படைத்தரப்பினர், ஒன்றிணைந்த அல்லது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வரும் போது உயர் ராஜதந்திர மட்ட சலுகைகளையும் , வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதுக்கான ஒப்பந்தமாகும்.

ஒப்பந்தத்தின் பிரகாரம், அமெரிக்க பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பிரிவுக்கு ஒப்பந்த சேவை வழங்குபவர்கள் அல்லது ஒப்பந்த சேவை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்த எவரும் இராஜதந்திர வரப்பிரசாதங்களுடன் , வெறும் அடையாள அட்டையுடன் இலங்கையின் எந்த பிரதேசத்துக்கும் பிரவேசிக்க முடியும்.

தேவையான ஆயுதங்களையும், உபகரணங்களையும் அனுமதி பெறாமல் வைத்திருக்கவும், எந்த இடத்துக்கும் காவிச் செல்லவும் முடியும். அவசியமான சந்தர்ப்பங்களில் அவர்களின் சீருடையுடனும் உலாவலாம். அதே போல், அமெரிக்க பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள், விமானங்கள், கப்பல்கள், வாகனங்களைச் சோதனையிடவும் முடியாது. 

தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கையின் பௌதீக வளங்களையும், ஆளணி வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் இலங்கையின் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளை அமெரிக்க பாதுகாப்பு படைத்தரப்பின் தேவைக்குப் பயன்படுத்தலாம், அல்லது எந்த அனுமதியும் இல்லாமல் தனியான ஒலி - ஒளி பரப்பு சேவைகளை நடத்தலாம் ( தற்போதும் அமெரிக்கா கியூபாவின் தொலைக்காட்சி அலைவரிசைகளை இடைமறித்து, அமெரிக்கத் தொலைக்காட்சி சேவைகளைப் பலவந்தமாக ஒளிபரப்பி வருகின்றது).

மேலும், அமெரிக்க பாதுகாப்பு படைத்தரபைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் அவர்கள் அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரமே விசாரணை செய்யப்பட வேண்டும். ஆனால், ஏற்படும் எல்லா விதமான பாதிப்புகளை இருநாட்டு அரசாங்கங்களும் கூட்டாகவே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு, குறித்த ஒப்பந்தம் அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்காக இலங்கையைத் திறந்துவிடும் வகையில் ஒரு பக்கச் சார்பான அடிமைச் சாசனமாகவே அமைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய ஆவணத்துக்கு வெளி நாட்டு அமைச்சு பதில் அனுப்பினாலேயே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வகையிலேயே ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. வெளி நாட்டு அமைச்சு ஒப்பந்தத்துக்குப் பதில் அனுப்பியுள்ள நிலையில், தற்சமயம் ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பது குறித்துத் தெளிவில்லை. 

ஆனால், ரணில் விக்கரமசிங்கவும், அமெரிக்க ராஜதந்திரிகளும் தேர்தலின் பின் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூரிவருகின்ரார்கள்.

1995 இல் மூல ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது அமெரிக்கா தனிப்பெரும் சக்தியாக இருந்தது. சீனா தற்போது போல் பலமிக்க நாடாக இருக்கவில்லை. ருசியாவும், சீனாவும் அமெரிக்காவுக்குச் சவாலாகவும் இருக்கவில்லை. இந்து சமுத்திர ஆதிக்க போட்டியும் தற்போது போல் சிக்கலானதாக இல்லை.

ஆனால், தற்சமயம் இந்நாடுகளுக்கு இடையிலான போட்டி காரணமாகப் பல நாடுகளில் போரும், அரசியல் ஸ்திரமற்ற நிலையும், குழப்பங்களும் நிலவுகின்றது. அமெரிக்கா உலகில் எந்நேரமும் யுத்தம் செய்து கொண்டிருக்கும் நாடாகும். சீனாவுடனான போட்டியின் காரணமாக, சீனாவைச் சூழவுள்ள நாடுகளில் தமது ஆதிகத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயன்று வருகிறது. இதனாலேயே வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் படைகளில் 60 வீதம் ஆசியாவில் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக, இராணுவ - பொருளாதார மோதல்களிலும் அரசியல் இழுபறியிலும் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பில், ஒரு தரப்புக்கு இராணுவ ரீதியாக உதவும் நிலைப்பாட்டை எடுப்பதானது, எதிர்த்தரப்பின் பகையைத் தேடிக்கொள்ளும் வேலையாகும். 

அமெரிக்கா உலகிலேயே பலமிக்க நாடு. அந்நாட்டை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பது கடினம். அதன்காரணமாகவே, அமெரிக்காவின் எதிரிகள் அமெரிக்காவை நேரடியாகத் தாக்காமல், அவர்களுக்கு ஆதரவான நாடுகளுக்கு அடி கொடுப்பது மூலம் பழி தீர்த்துக் கொள்கிறார்கள். மேலும், அமெரிக்காவை அமெரிக்காவில் வைத்து எதிர்கொள்வதை விட , வேறு இடங்களில் உள்நாட்டு மக்களைக் கொண்டே அடிப்பது இலகுவானது. இந்த நோக்கத்திலும், அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டைக் கைவிடச் செய்யவும் எதிர்த்தரப்பு எல்லா வித சதிகளிலும் ஈடுபடலாம். இலங்கையில் அதற்கான தளங்கள் தாராளமாகவே உள்ளது. உயிர்த்த ஞாயிரு தின தாக்குதல்களும் இந்த பின்னணியைக் கொண்டுள்ளது.

எனவே, தற்போதைய ஐதேக பிரபு வர்க்கம் பிழையான ஏகாதிபத்திய சார்பு கொள்கையைப் பின்பற்றி இலங்கை தீவு வாழ் மக்களை அழிவுக்குள் தள்ளி விடும் வேலையையே செய்து வருகின்றார்கள். பரஸ்பர நட்புறவுளைப் பேணுவதற்குப் பதிலாகப் போர் ஒத்துழைப்பு வழங்குவதானது, எமது அரசியல் வாதிகளின் பலவீனமும், மக்களைப் பேராபத்துக்குள் தள்ளி நிம்மதியைக் குலைக்கும் வேலையுமாகும். ஒரு பெரும் யுத்தத்தின் கொடூரங்களை அனுபவித்தார்கள் என்ற வகையில், உலகில் எப்போதும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்கும் கொள்கைக்கு ஒருபோதும் ஆதரவளிக்கக் கூடாது. ஐதேக வுக்கும், சஜீத்துக்கும் அளிக்கும் ஆதரவு யுத்தத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் அமையும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram