Post Top Ad

கோட்டாவை கோட்டைக்குள் விடலாமா?

கோட்டபாய சனாதிபதியாகும் வாய்ப்புகள் ஏப்ரல் குண்டுவெடிப்புகளின் பின்னரே பிரகாசமாகியது. கோட்டபாயவுக்கோ, இராஜபக்ச குடும்பத்தினருக்கோ மீண்டும் சனாதிபதி வரப்பிரசாதங்களைப் பெற முடியும் என்ற எண்ணம் இருந்திருக்குமா என்பது நிச்சியமில்லை. ஆனால், ஐதேக வின் செயல்பாடுகள் அவர்களுக்கான வாய்ப்புகளை வலுவாக உருவாக்கிக் கொடுத்து விட்டிருக்கின்றது.

பொதுவாகச் சிங்கள சமூகத்தில் இரு பெரும்பான்மை கட்சிகள் இருக்கின்றன எனச் சொல்லிவந்தாலும், இரண்டு கட்சிகள் என்பதை விட இரண்டு தரப்புகள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

காலணி ஆட்சியின் வரப்பிரசாதங்களால் நகர்ப்புற பிரபு வர்க்கமாக மாறியவர்களின் கட்சி ஐதேக. தமிழர்களிலிருந்தும் காலணி ஆட்சி வரப்பிரசாதங்களால் தம்மை பிரபு வர்க்கமாக நிலைநிறுத்திக் கொண்ட சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் வர்க்க நலனின் அடிப்படையில் இணக்கம் கொள்வதை இலங்கை அரசியல் முழுவதும் பார்க்க முடியும்.

மேற்கத்திய பண்பாடுகளுடன் நெருக்கம் காட்டும் நகர்ப்புற பிரபு வர்க்கத்துக்கு எதிராக கிராமப்புறத்தைப் பின்புலமாகக் கொண்ட தேசியவாதிகளின் ஐதேக வுக்கு எதிரான தரப்பினர் ஆவர். மேற்கத்திய எதிர்ப்பு, விவசாயிகளை சார்ந்திருத்தல் என்பதன் காரணமாக இவர்களுக்கு, இடதுசாரிகளுடன் ஐதேக வை விட நெருங்கி உறவிருக்கின்றது.

மைத்திரிபாலவுக்கும், ரணிலுக்கும் இணக்கமாக அரசியலில் ஈடுபட முடியாமைக்கு இந்த வேறுபாடும் ஒரு காரணம். இந்த வேறுபாடே மகிந்த தரப்பைச் சீனாவின் பக்கம் நெருங்கி வரச் செய்வதற்கும் காரணமாக இருந்தது.

சீனாவின் பக்கம் செல்வதால் மகிந்தவின் குடும்பத்துக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த தரகு பணம், அபிவிருத்தி திட்டங்களுக்குக் கிடைத்த உதவிகள், சீன அரசால் ஊழல், சனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான நெருக்குவாரங்கள் தரப்படாமை எனச் சீனாவுடனான அரசியல்- பொருளாதார உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளப் பல காரணங்கள் இருந்தன.

மகிந்த குடும்பத்தில் சீனா பெரும் முதலீட்டைச் செய்திருக்கின்றது. 2015 இன் பின்னரும் மகிந்த அரசியலில் தீவிரமாக செயல்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த பின்னணியிலிருந்தே கோட்டபாய சனாதிபதி வேட்பாளராகி இருக்கின்றார்.

கோட்டபாய சனாதிபதியானால், எதிர்கொள்ளும் பெரிய சவால் அமெரிக்க – சீன அதிகார போட்டியைச் சமாளிப்பது தான். கோட்டாவால் நினைத்த படி சீன சார்பு நிலைப்பாட்டில் இயங்கமுடியாது.

கோட்டபாய திமிறினால், வழிக்குக் கொண்டு வர, 1990 இல் மாத்தளையில் ஜேவிபி தோழர்களைப் படுகொலை செய்தமை, 2009 போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறல், மனித உரிமை மீறல்கள் ஏலவே இருக்கும் பிடிகளுடன், அமெரிக்க பிரசாவுரிமை விவகாரத்தையும் அமெரிக்கா கையிலெடுக்கும்.

கோட்டபாய இந்த சவாலை எப்படிச் சமாளிப்பார் என்பதை வெற்றி பெற்றால் பார்க்க முடியும். ஆனால், இதுவரை செய்தது போல் சீனா, அமெரிக்கா என இரண்டு தரப்புடனும் இணக்கமாகச் செல்வது நீண்டகாலத்துக்குச் சாத்தியமில்லை. சீனா – அமெரிக்க மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது. இவர்களின் போட்டியில் இலங்கையின் அமைவிடம் மிக முக்கிய கேந்திர நிலையம். எனவே, இனிவரும் காலங்களில் இலங்கை அரசு ஒரு முடிவை எடுத்துச் செயல்பட வேண்டிய நிலை வரும்.

ஐதேக ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினை சிக்கலாக இருக்காது. தெளிவாக அமெரிக்கச் சார்பாக வேலை செய்வார்கள்.

ஒன்றில் கோட்டபாய அமெரிக்காவின் நலன்களுக்குச் சார்பாக வேலை செய்ய நேரிடும். ஐதேகவின் அரசாங்கம் இருக்குமாயின் கோட்டபாயவால் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து சீனாவை சமாளித்து கொண்டு அமெரிக்கச் சார்பாக வேலை செய்வது கடினமான விடயமாக இருக்காது.

ஜேவிபி தோழர்களை படுகொலை செய்ய கோட்டபாவை மாத்தளை பிரதேசத்துக்கு நியமித்தவரே அப்போதைய இளைஞர் விவகார அமைச்சராகவிருந்த ரணில் விக்ரமசிங்க தான். மகிந்த பிரமராக நியமிக்கப்பட்ட பிரச்சினையின் போது கூட கோட்டாவும், ரணிலும் அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். எனவே, இவர்களுக்கு இணைந்து வேலை செய்வது கடினமாகாது.

ஆனால், அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றால், சீன சார்பாக வேலை செய்ய வேண்டிய நிலை வரும். இதன் போது போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் விசாரணை நெருக்குவாரங்களை கோட்டபாய எதிர்நோக்க வேண்டிய நிலை வரும்.

எப்படியாயினும், கோட்டபாய சனாதிபதியானால், கடந்த நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழர் விவகாரத்தைச் சர்வதேசம் மீண்டும் கையிலெடுக்கும்.

தமிழ் பேசும் மக்களைப் பொருத்தவரை சர்வதேசம் தீர்வு தரும் என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. உரிமைக்கான வெகுசன போராட்டத்தை உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் தீவிரப் படுத்தினால் சாதகமான பலன்களை அறுவடை செய்ய முடியும்.

ஏனெனில், கோட்டபாய சனாதிபதியானால் இந்த பிரச்சினையை நீண்டகாலத்துக்கு இழுத்துச் செல்ல முடியாது. ஒன்றில் அமெரிக்காவுடன் இணங்கிப் போக நேரிடும். அப்படி நடந்தால் தமிழர் தரப்பு சர்வதேசம் எனப்படும் அமெரிக்க நலனுக்கு எதிரான போராட்டங்களின் பக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து வலுவான ஏகாதிபத்திய முன்னணியைக் கட்டியெழுப்பி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கோட்டபாய சீன சார்பான நிலைப்பாட்டில் சென்றால், சர்வதேசத்துக்கு தமிழர் பிரச்சினையைக் கையிலெடுக்க வேண்டிய நிலை வரும். தமிழர் தரப்பும் போராட்டங்களை தீவிரப்படுத்தினால், போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அது தமிழர் தரப்புக்குச் சாதகமானது என்பதால் கோட்டபாய அந்ந தீர்வை நாடும் சாத்தியம் குறைவு.

அப்படியாயின் தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் வென்றெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களைச் செய்வது தான் கோட்டபாயவுக்கு இருக்கும் சிறந்த தெரிவு. தமிழர்களால் தமது பூரண நலன்களை வெல்லும் நிலைக்குச் செல்ல முடியாது தான். ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய அந்தஸ்தை நிலைநாட்டுவதை நோக்கி ஓரடி முன்வைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

மகிந்த தரப்பால் கிராமத்துச் சிங்கள மக்களை இணங்க வைக்க முடியும். எனவே, மகிந்த தரப்பைத் தமிழர்கள் சார்பாக ஏதேனும் சாதகமான விடயங்களைச் செய்விக்க முடியுமானால் அது தமிழர் தரப்புக்குப் போரின் பின்னால் கிடைத்த வெற்றியாக அமையும்.

இதற்கு தமிழர் தரப்பில் விட்டுக்கொடுக்காத, உறுதிப்பாடான, அதே நேரம் சிங்கள மக்களுக்கும் விடயங்களைத் தெளிவுபடுத்தி, நம்பிக்கை கொடுக்கக் கூடிய அரசியல் தலைமையும் இயக்கமும் தேவை.

டக்ளஸ், கருணா, வரதர், தொண்டமான், திகாம்பரம். ஹக்கீம் போல் மக்களைக் காட்டிக்கொடுத்து தமது நலன்களை சாதித்துக் கொள்பவர்களாக இருக்கவும் கூடாது. அதே நேரம் கடும்போக்கு நிலைப்பாட்டிலிருந்து எதையும் இல்லமாக்கிக் கொள்ளவும் கூடாது. எனவே, எமக்குத் தேவை பரந்துபட்ட வெகுசன இயக்கமும், கூட்டுத்தலைமையும் ஆகும்.

கோட்டபாய சனாதிபதியானால் தமிழர் தரப்புக்கு இவ்வாறு சாதகமான நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனால், அதைச் சாதிப்பதும், இழப்பதும் எமது செயல்பாடுகளைப் பொருத்து தான் அமையும்.

முழு தமிழ் சமூகத்துக்கும் சாதகமான நிலைமை இருக்கின்றதே தவிர, தனித் தனியே தமிழர்களுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், தமிழ் பிரபு வர்க்கத்துக்கும், வியாபாரிகளுக்கும், அல்லது வேறு வர்க்க குழுக்களுக்கும் ஐதேக ஆட்சியில் கிடைப்பது போன்ற பிரத்தியேகமான நலன்கள் கிடைக்காது.

ஏனெனில், கடந்த காலத்தில் கோட்டபாய எவ்வாறான நிர்வாக பாணியைக் கடைப்பிடிப்பார் என்பதைக் கண்டுள்ளோம். கோட்டாவின் நிர்வாக பாணியை விளங்க போதைப் பொருள் வியாபாரத்தைக் கையாண்ட விதமே போதுமானது.

2009 இன் பின் கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை எல்லாம் அதிரடிப்படையைக் கொண்டு, பாதாள உலக கோஷ்டியை அழிக்கின்றோம் என்ற பெயரில் அழித்து ஒழித்திருந்தார் கோட்டபாய. இதனால், பல போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.

போதைப்பொருள் வியாபாரிகளை ஒழித்துக் கட்டிவிட்டு போதைப் பொருள் வியாபாரத்தை அரசாங்கத்தின் கீழ் (தனக்குக் கீழ்) கொண்டுவந்தார் இராஜபக்ச. என்னதான், போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்போம் என அரசியல்வாதிகள் முழக்கமிட்டாலும், இலங்கையின் அரசிறை நிதி நிலைமையையும், பொருளாதாரத்தின் நிலைமையையும் விளங்கிக் கொண்டவர்களுக்கு, போதைப்பொருள் வர்த்தகம், அதனுடன் இணைந்த கறுப்புப் பணத்தை அனுமதிக்காமல் தாக்குப்பிடிக்க முடியாது என்பது தெரியும்.

எம்மால் செய்யக்கூடியது, இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாத வகையில் முகாமை செய்வது தான். போதைப்பொருளை மக்களுக்கு விற்பதை தடுப்பதைக் கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால், இதை பொதுவான வழிமுறைகளால் செய்ய முடியாது. போதைப்பொருள் உலகம் என்பது, கடத்தல், கறுப்புப் பணம், பாதாள உலக கும்பல் , அரசியல் எனப் பரந்த வலையமைப்பை கொண்டது.

போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் கும்பலை அடக்க முடியும். கோட்டபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது வெலிக்கடை சிறையிலிருந்தவர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

அவர்கள் அனைவரும் கீழ்மட்ட போதைப் பொருள் விநியோகஸ்தர்கள். சிறையிலிருந்து கொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்துபவர்கள். இவர்களைக் கொல்வதற்கு முதலே திட்டம் தீட்டப்பட்டது. இதை தெரிந்து கொண்டு சிறை கைதிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் இடையில் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகச் சித்தரிக்கப்பட்டே அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஐதேக ஆட்சிக்கு வந்த பின்னர், அரசாங்கத்தின் பிடியிலிருந்த போதைப் பொருள் வியாபாரம் மீண்டும் போதைப் பொருள் வியாபாரிகளின் கைகளுக்கே சென்றது. இப்போது போதைப் பொருள் வியாபாரம் முன்பு போல் தாராளமாக நடப்பதை அனைவரும் அறிவோம்.

அண்மையில் மைத்திரிபால கூட போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சிறையிலிருந்தே கடத்தல் தொழிலை வழிநடத்துவதாகவும், அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் கூறியதும் இதனால் தான்.

கோட்டபாய சனாதிபதியானால் இந்த சனநாயக விரோத வழிமுறைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால்,போரின் பின்னரான உடனடிச் சூழலில் செய்தது போல் அராஜக வழியில் செல்ல முடியாது.

உதாரணமாக நெலுக்குளம் பகுதியில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஒருவனை கண்டி பகுதிக்குக் கடத்திக் கொண்டு சென்று கொலை செய்திருந்தார்கள். மகிந்தவுக்கு எதிராகச் செயல்பட்ட லசந்த போன்ற ஊடகவியலாளர்களைக் கடத்தி கொலை செய்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளிடமிருந்து கையகப்படுத்தி இருந்த தங்கத்தைக் கொள்ளையடித்தவர்களைக் கடத்தி சென்று விசாரணை செய்தாக சிலர் ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார்கள்.

எனக்கும் 2012 தனிபடப்ட அனுபவம் உள்ளது. கொட்டாவ பகுதியில், உபாலி நியுஸ் பேப்பர் நிறுவனத்துக்குப் பின்னால் முன்னிலை சோசலிச கட்சியின் மாணவர் அமைப்பின் தலைமையகம் இருந்தது. நான் கட்சியிலிருந்த போது இங்கிருந்து தான் அரசியல் வேலைகளில் ஈடுபடுவது வழக்கும். வழக்கமாக ஆண்கள் ,பெண்கள் எனக் கட்சியின் முழு நேரச் செயல்பாட்டாளர்கள் தங்குவார்கள். ஒரு நாள் இரவு நேரத்தில் 20 வரையிலான சிவில் உடையில் ஆயுதம் தரித்த குழு அலுவலகத்தைச் சுற்றிவளைத்து எம்மை விசாரணை செய்திருந்தது.

அலுவலகத்தில் மறைந்து கொள்வதற்குப் பிரத்தியேகமான இடங்கள் இருந்தது. எனக்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளராக இருந்த சஞ்ஜீவ பண்டாரவுக்கும் பிரத்தியேகமான ஏற்பாடுகள் இருந்தது. அன்றைய தினம் நாம் அவர்களிடம் சிக்கியிருக்கவில்லை.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கச் சென்ற போது பல்கலைக்கழகத்துக்குள் செல்ல விடாமல் புலனாய்வுத் துறையினர் களமிறங்கி அடையாள அட்டைகளை சோதனை செய்தார்கள். நிலைமை மோசமாக இருந்ததால், மாணவர்களை கல்முனை நகருக்கு வரவழைத்துச் சந்தித்திருந்தோம்.

சந்திப்பை முடித்துத் திரும்பி வரும் போது சிவில் உடையணிந்த இராணுவம் எம்மை துரத்தியது. நாம் வந்த பேருந்தில் 10 வரையிலானவர்கள் ஏறி இருந்தார்கள். பேருந்தின் முன்னாலும், பின்னாலும் இராணுவ வாகனங்கள் வந்தன.

அம்பாறை சிங்கள கிராமம் ஒன்றின் நடுவே, புலனாய்வு காரர்களை ஏமாற்றி வேறொரு வாகனத்தில் ஏறி கிராமத்துக்குள் சென்று தங்கியிருந்து, அடுத்த நாளே பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்த நாள் காலையில் பேருந்தில் ஏறும் வரை புலனாய்வாவார்கள் வீதியில் எமக்காகக் காத்துக் கிடந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். கடத்தி காணாமலாக்கப்பட்ட லலித் - குகன் தோழர்கள் முன்னரே யாழ்ப்பாணம் சென்று வேலைகளை ஆரம்பித்திருந்தார்கள்.

ஊடக சந்திப்பில் நானும் பங்குபற்றுவதாக இருந்தது. அன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் சென்ற போது ஓமந்தை சோதனை சாவடியில் அலைக்கழிக்கப்பட்டேன். அன்றே லலித்தும் குகனும் கடத்தப்பட்டிருந்தார்கள். தோழர்களுக்கு எனது தொடர்பு கிடைக்காததால் நானும் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்திருந்தார்கள்.

இது போல் தனிப்பட்டதும், தோழர்களுக்கு நேர்ந்ததுமாக நிறைய அனுபவங்கள் எனக்கே இருக்கின்றது எனில் அப்போதைய நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், அது போன்ற நிலைமை அதே வடிவில் இனியும் வருதற்கு சாத்தியமில்லை.

ஆனால், அமைதியான வழியில் அதை விட அராஜகமான நிலைமை வரலாம். கூட்டாட்சி அரசாங்கத்தின் கீழ் சிறு கதை எழுதிய சத்விக என்ற எழுத்தாளரும், அருவகாடு குப்பை தொட்டிக்கு எதிராகப் போராடிய டில்சாட் என்ற தோழரும் கைதுசெய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டார்கள். முன்பு நடந்ததை மக்கள் கண்டுகொண்ட அளவுக்குக் கூட இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

தொழிலாளர், சூழல் சட்டங்களைத் திருத்தி முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீர்திருத்தப் போவதாகச் சொல்லும் யார் வந்தாலும் இந்த அராஜக நிலைமைக்கு நாம் முகம் கொடுக்கத் தான் வேண்டும். அது கோட்டா – சஜித் - அணுர யாராக இருந்தாலும் இது நடக்கத் தான் போகின்றது.

ஆனால், நிறைவேற்று சனாதிபதியின் அதிகாரம் என்பது பதிவிலிருப்பவரின் ஆளுமையையும் பொறுத்தது. கோட்டா அந்த பதவியில் அமர்ந்தால் நிச்சியம் உச்சக் கட்ட அதிகாரத்தையும் பயன்படுத்துவார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தச் செய்தது போல் கடுமையான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். நாடு உட்கட்டமைப்பு, பொருளாதார அபிவிருத்தியில் முன்சொல்லும். ஆனால், சனநாயகம், சமூக நீதி என்பவற்றில் நாம் பின்னிலைக்குச் செல்வோம்.

ஒழுக்கம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பப் போவதாகக் கோட்டா இதைத் தான் சொல்கிறார்.

ஒப்பீட்டளவில் அணுர, சஜித்தை விடக் கோட்டாவால் பொருளாதார சீரமைப்பைச் செய்ய முடியும். அது கடுமையான நடவடிக்கைகளாகத் தான் இருக்கும். உதாரணமாக அரச வைத்தியர் சங்கம் போன்ற அமைப்புகள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. கொழும்பு பொது நூலகம் போன்ற அதிக முதலீட்டு பெறுமதியைக் கொண்டிருக்கும் இடங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டு முதலீட்டு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும்.

இருந்தபோதும், போர்க்குற்ற விசாரணைகளில் கோட்டாவைத் தப்பிக்க விடாமல் சிக்க வைக்க வேண்டும் என்றால், சனாதிபதி கதிரையில் அமர்த்தி விடுவது தான் சிறந்த முடிவு. வழியில் கணம் இல்லாவிட்டால், செயலில் திடம் இருக்கும் என்றால் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எதிரியை நுழைய விட்டுச் சிறைபிடித்து காரியம் சாதிக்கும் தந்திரம் தான் கோட்டாவைக் கதிரையில் அமர்த்துவது. ஆனால், அதற்கான திடமும் , செயல்திறனும் உள்ள அமைப்பு எமக்குத் தேவை. அது இல்லாமை தான் எமது பலவீனமும். அந்த பலவீனம் தான் சஜித்துக்கு நிபந்தனை இல்லாத ஆதரவைக் கொடுக்க நிர்ப்பந்திக்கின்றது. மக்களுக்குச் சனநாயக பூச்சாண்டி காட்டி, இல்லாத சனநாயக இடைவெளியைக் கோருகின்றது.

முடிவில் கோட்டா பாயவை சனாதிபதி கதிரையில் அமர்த்திவிடுவதானது, பின்விளைவுகள் நிறைந்த ஆபத்தான நல்ல முடிவாக அமையும் வாய்ப்புகளைக் கொண்டது தான்!

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram