Post Top Ad

யுத்தத்தை விடப் பேரழிவைத் தரப்போகும் சிங்கப்பூர் ஒப்பந்தம் #பகுதி 03

நான்கு தசாப்த கால 'மக்கள் யுத்தம்' பெரும் உயிரழிவுகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான இந்த மோதல் இலங்கை தீவில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் ஏற்படுத்திய சீர்கேடுகள் சொல்லி மாளாதவை.

இலங்கையில் மக்கள் வாழ்வின் வரலாறு இப்படியிருக்கும் போது, மக்கள் யுத்தம் ஏற்படுத்தியதை விடப் பல மடங்கு சீரழிவைத் தரப் போகும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை  சிங்கப்பூருடன் கைச்சாத்திட்டு பெரும் அழிவுக்கு முகவுரை எழுதியது ரணில் - மைத்திரி கூட்டாட்சி. 

சிங்கப்பூரை தளமாக கொண்ட யாரும் இலங்கைக்கு வந்து தொழில் செய்வதற்கு இருந்த தடைகளை நீக்குவது தான் ஒப்பந்தம். 

இது நல்லது தானே என தோன்றலாம். சிங்கப்பூர் நல்ல நாடு. பிரச்சினைகளுக்குப் போகாத நாடு. எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான நாடு.

ஆனால், அதில் தான் ஆபத்து ஒழிந்திருக்கின்றது.

சிங்கப்பூர் அங்குலம் அளவிலேனும் விவசாயம் செய்யாத நாடு. பாரிய கைத்தொழில்களில் ஈடுபடும் நாடும் அல்ல. வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிருக்கும் நாடாகும். (சிங்கப்பூரின் பரப்பளவு  கொழும்பு மாவட்ட அளவேயானது .)

உலக முதலாளிகளும், பெரும் வணிகர்களும் சிங்கப்பூரில் தாராளமாய் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இந்நாடு தான் உலகில் வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கட்டுப்பாடுகள் குறைந்ததும், வசதிகள் கூடியதுமான தராளாமய கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாகும். 

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின்  7000த்துக்கும் அதிகமான கம்பனிகளின் கிளைகளும்,  சீன, இந்திய நாடுகளின் 1500க்கும் மேற்பட்ட  கம்பனிகளின் கிளைகளும் சிங்கப்பூரில் இயங்கி வருகின்றது.

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை தாராளமயமாக்கும் போது சிங்கபூரிவ் இயங்கும் உலக நாடுகளின் கம்பனிகள் அனைத்தும் இலங்கையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடலாம். எனவே, சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்வதானது உலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது தான், உலக நாடுகளுக்கு இலங்கையை வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் திறந்து விடுவதாகும்.. 

தாராளமயமாக்கலினால் என்ன நடக்கும்?

சர்வதேச அளவில் அதியுயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாரிய அளவில் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மிகக் குறைவு. எனவே, இவர்களால் உள்ளூர் உற்பத்தியாளர்களை விடக் குறைந்த விலையில் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள். 

இது நடந்தால் உள்ளூரில் அரிசி, வெங்காயம், மிளகாய் உற்பத்தி செய்பவர்களிலிருந்து, முட்டை. ஐஸ்கீறிம் உற்பத்தி செய்பவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். இந்த அபாயத்தைத் தடுப்பதற்காகத் தான் இறக்குமதிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகிறது. வரிகள் விதிப்பது மூலம் இறக்குமதி செய்யப்படும் பெர்ருட்களின் விலை உள்ளூர் உற்பத்திகளை விட கூடியதாகப் பேணப்படுகிறது.

ஆனால், சிங்கப்பூர் ஒப்பந்தம் மூலம்  இறக்குமதி செய்யப்படும் 7200 பொருட்களுக்கான வரியும் கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் வருவாய் இழந்து வேறு வேலைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் பண்டங்கள் மாத்திரமல்லாது சேவைத்துறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடை சிப்பந்தி வேலை, கட்டுமானத்துறை வேலை, மீன்பிடி தொழில், விவசாயம், பொறியியல் துறை, முகாமைத்துவ வேலைகள், மருத்துவதுறை எனச் சகல துறைகளுக்கும் வெளிநாட்டவர்களை வேலைக்கமர்த்த முடியும். 

சிங்கப்பூர் மக்கள் குறைந்த வேதனத்துக்கு வேலை செய்ய இங்கு வர மாட்டார்கள் தான். ஆனால்,  குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யகூடியவர்களை நேபாளம், பங்களாதேஸ் போன்ற எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சிங்கப்பூரில் கம்பனி ஒன்றைப் பதிவு செய்வது மூலம் அழைத்து வர முடியும்.

இப்போதும் கூட கொழும்பு நகரில் கட்டுமானத் துறைகளில் குறைந்த சம்பளத்துக்கு இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். இதனால், இலங்கையில் வேலைக்கான சம்பளம் பாரிய அளவில் வீழ்ச்சியடைவதோடு, தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுவது நடக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்  சிங்கப்பூர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வீதியோர கடைகளிலிருந்து, பெரிய விடுதிகள் வரை இலங்கையில் ஆரம்பிக்க முடியும்.

மேலும், சிங்கப்பூரில் கம்பனி ஒன்றைப் பதிவு செய்வது மூலம் உலகின் எந்த பகுதியிலிருந்தும் மனித கழிவுகள், மலசல கழிவுகள், பழுதடைந்த உணவுப் பொருட்கள், வைத்தியசாலை கழிவுகள், இரசாயன கழிவுகள், குப்பைகள் தொடக்கம் அணுக்கழிவுகள் வரை இறக்குமதி செய்ய முடியும்.

இப்போதும் கூட பெரிய நாடுகள் தமது நாடுகளின் கழிவுகளை பங்களாதேஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி அந்நாடுகளில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கி இருக்கின்றன.

வைத்தியசாலை கழிவுகள் பாரிய அளவில் நோய்கள் பரவ வழிவகுக்கும். அணுக்கழிவுகள் சர்வநாசத்துக்கு வழி வகுக்கும். இப்படியாக இலங்கையை உலகின் குப்பைத் தொட்டியாக்கி அழிக்கும் ஒப்பந்தமொன்றை ரணில் - மைத்திரி ஆட்சி கைச்சாத்திட்டுள்ளது.

அவசரகதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்

இப்படியான ஆபத்து மிக்க ஒப்பந்தத்தை நாட்டுமக்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல், உள்நாட்டு சட்டதிட்டங்களை எல்லாம் மீறியே கைச்சாத்திட்டுள்ளார்கள்.

ரணில் விக்ரமசிங்கா, 2016 ஆம் ஆண்டு சிங்கபூருக்கு சென்ற போது இப்படியான ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேண்டும் எனக் கூறினார். கூறியது போல் ஒரு மாதத்திலேயே குழுவொன்று அமைக்கப்பட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழுவுக்கு சிங்கபூர் அரசே தானே பெருந்தன்மையாக முன்வந்து பயிற்சிகளை வழங்கியது.

இந்த குழுவினர்  சிங்கபூர் அரசின் வழிக்காட்டலில் 2017/12/22 ஆம் திகதி ஒப்பந்தத்தை முழுமைப்படுத்தி அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தார்கள்.

2018/சனவரி/02 ஆம் திகதி அமைச்சரவையில் ஒப்பந்தம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2018/சனவரி/02 ஆம் திகதி அமைச்சரவையினால் ஒப்பந்தம் சட்டமா அதிபரின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. (ஆங்கிலத்தில் மாத்திரம், 1083 பக்கங்களிலிருந்த ஒப்பந்தத்தை அமைச்சரவை வெறும்  ஒரு வாரக் காலத்தில் கலந்துரையாடி முடித்ததாம்).

சட்டமா அதிபரும் வெறும் ஏழு நாட்களில், ஜனவரி 16 ம் திகதி அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார்.

அன்றைய தினமே அமைச்சரவையினால் ஜனவரி 23 ம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திட முடிவு செய்தது.

2018 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை சட்டத்துக்கு முரணாக கைச்சாத்திடப்பட் ஓப்பந்தம்

எனினும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சில சட்டத்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ( நாட்டில் இல்லாத சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் கைச்சாத்திட சட்டமா அதிபர் ஒப்புதல் வழங்கியிருந்தார்).

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி  நிறைவேற்றிய ‘மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு” சட்டத்தில் தேவையான திருத்தங்களை உள்ளடக்கி காரியம் சாதித்துக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட காலத்திலிருந்து கைச்சாத்திட்ட காலப்பகுதி வரை பிரதேச சபை தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தது. (அமைச்சர்கள் தேர்தல் வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு....!!!)

மேலும், ஒப்பந்தமானது இலங்கையில் ஏலவே இயங்கி வரும் 119 சிங்கப்பூர் கம்பனிகளுக்கும் செல்லுபடியாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்தமானது கடந்த காலத்துக்கும் தாக்கம் செலுத்தும். இலங்கை சட்டங்களின் பிரகாரம் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் கடந்த காலத்துக்கும் செல்லுபடியாகும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய முடியாது, 

பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவில்லை என்பதோடு, இதுவரை ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை. .
ஏன் இந்த அவசரம்?

சமவுடைமை பொருளாதார கொள்கையைப் பின்பற்றிய சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், உலகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை மையப்படுத்தி இயங்க ஆரம்பித்தது. அமெரிக்க அரசைத் தளமாகக் கொண்ட உலக முதலாளிகள் வர்க்கம் உலகெங்கும் வர்த்தக நடவடிக்கைகள் தாராளமயமாக்க வேண்டும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த எத்தனித்தார்கள். 

முதலாளி வர்க்கம் உற்பத்தி செய்யும் பண்டங்களை விற்பனை செய்யவும், அவர்கள் எந்த நாட்டில் நுழைந்தும் உற்பத்தியில் ஈடுபடவும், உலக நாடுகள் திறந்துவிடப்பட்ட தாராளமய கொள்கையை  நடைமுறைப்படுத்த  வேண்டும் என்பதே அமெரிக்க ஏகாதிபத்தியனதும், உலக முதலாளி வர்க்கத்தின்  கொள்கையாகும்.

ஆனால், எந்த நாடும் கட்டுப்பாடுகள் இல்லாமல் தமது நாட்டில் தாராளமய கொள்யை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால், தாராளமய வாதியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நண்பர்களுமான ஐதேகவினர் கட்டுப்பாடுகள் இல்லாமல் நாட்டை வெளியாருக்குத் திறந்துவிடும் வேலையையே சிங்பூருடனான ஒப்பந்தம் மூலம் செய்துள்ளார்கள்.

இராஜபக்சவின் காலத்தில், இந்தியாவுடன் இதே போன்ற ஒப்பந்தத்தை ( எக்டா ஒப்பந்தம்) கைச்சாத்திடும் முயற்சி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இந்தியா தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்புணர்வு இதற்குக் காரணமாகியது. ஆனால், சிங்கப்பூர் தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் நல் அபிமானம் காரணமாக எதிர்ப்புகள் ஏற்படாது . அத்துடன் சிங்கப்பூர் ஊடாக இந்தியா மாத்திரமல்ல எந்த நாடும் காரியம் சாதித்துக் கொள்ளும்.

ஐக்கிய தேசிய கட்சியின்  ஏகாதிபத்திய விசுவாச பிரபு வர்க்கத்தின் கொள்கையின் காரணமாகவே யுத்தத்தை விடப் பேரழிவுகளை ஏற்படுத்தி முழு நாட்டை சகல வழிகளிலும் அழிவை நோக்கித் தள்ளிவிடும் அழிவுப் பாதையில் அனைத்து மக்களும் இழுத்து விடப்பட்டுள்ளார்கள். இனி வரும் காலங்களிலும் இதுவே நடைபெறும். 

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram