Post Top Ad

அமெரிக்காவின் போர் வெறிக்கு இலங்கை மக்களை தாரைவார்த்து கொடுக்கும் ஐதேக #பகுதி 04

இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது(1939-1945) ஜப்பான் பேரரசு போர்விமானங்கள் திருகோணமலை எண்ணெய் குதங்கள் மீதும், கொழும்பிலும் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தது. ஜப்பான் பேரரசுக்கு எதிரான யுத்தத்துக்கு பின்தள விநியோக மையமாகவும், கட்டளை மையமாகவும் இலங்கை பயன்படுத்தப்பட்டதே இதற்கான காரணமாகும்.

யுத்தத்தின் போது 1942 இல் பிரித்தானியாவின் கிழக்காசியப் பகுதிக்கான படைதுறை மையமாக இருந்த சிங்கபுர் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்த பின்;, இலங்கை (அப்போது சிலோன்) பிரித்தானியாவின் கிழக்காசியப் பகுதி யுத்தத்துக்கான படைதுறை மையமாக மாறியது. 

இடதுசாரிகள், தேசியவாதிகளின் (தமிழ், சிங்கள தேசிய வாதிகள் ஓரளவிற்கு ஐக்கியமாக இருந்த காலம்) எதிர்ப்பையும் மீறி காலனியாட்சியாளர்களால் இலங்கை தீவு யுத்தத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாலேயே ஜப்பானின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
மீண்டும் இதுபோன்றதொரு நிலைக்கு இலங்கையைத் தள்ளிவிடும் வகையில் அமெரிக்காவுக்குப் போர் ஒத்துழைப்பு வழங்கும் ஒப்பமொன்றைக் கள்ளத்தனமாகச் செய்திருக்கின்றது ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம்.

அமெரிக்கத் தரப்புக்கும், சீன தரப்புக்கும் இடையிலான பொருளாதார ஆதிக்க போட்டி இன்னுமொரு உலக யுத்தமாக வெடிக்கும் அபாயம் எழுந்திருக்கும் நிலையில் தான் அமெரிக்காவுக்குச் சார்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரபு வர்க்கத்தினர் அமெரிக்க விசுவாசம் காரணமாக இலங்கை மக்கள் சம்பந்தமில்லாத இன்னுமொரு யுத்தத்துக்குப் பலிகொடுக்கத் தயாராகி விட்டார்கள். 

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ‘கையகப்படுத்தல் மற்றும் இடைநிலை சேவைகள் ஒப்பந்தம்’ எனப்படும் இந்த ஒப்பந்தமானது முதலில் 2007 ஆம் மகிந்த இராஜபக்வின் ஆட்சிக்காலத்தில் 10 வருட காலத்திற்குச் செய்யப்பட்டிருந்தது. உள்ளூரில் மக்கள் யுத்தம் ஒன்றை அடக்கும் முயற்சியிலிருந்த போது 10 வருட காலத்துக்குச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை, ரணில் - மைத்திரி கூட்டாட்சி காலவரையற்ற வகையில் நீடிக்கச் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பது இதுவரைக்காலமும் இலங்கை பாராளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ வெளிப்படுத்தப் படவில்லை. ஆனால், அமெரிக்கா பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளுடன் செய்துள்ள இதே ஒப்பந்தத்தை ஆதாரமாகக் கொண்டு இது எவ்வகையான ஒப்பந்தம் என்பதைச் சொல்ல முடியும்.

அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் யுத்தம் நடவடிக்கையில் ஈடுபடும் போது  இலங்கையின் துறைமுகங்கள், விமானநிலையங்கள், வைத்தியசாலைகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளையும், மனித வளத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும், அதே போல் இலங்கை அட்லாண்டிக் சமுத்திர பகுதியில் யுத்த நடவடிக்கையில் அமெரிக்காவின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே ஒப்பந்தமாகும்.

இது சரியாகக் குள்ளநரியும், கொக்கும் சமமாக மேசையிலிருந்து தட்டில் சூப் குடித்த கதை போன்றது. நரியால் தட்டிலிருக்கும் சூப்பைக் குடிக்க முடியும். கொக்கால் முடியாது. இலங்கைக்கு இந்த ஒப்பந்தம் மூலம் எந்த நன்மையையும் இல்லை என்பது சொல்லாமலேயே புரியும்.

2007 இல் செய்திருந்த இந்த ஒப்பந்தம் 2017 இல் காலாவதியாகியது. எனினும் ரணில் - மைத்திரி தலைமையிலான அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தை மீண்டும் காலவரையற்ற வகையில் செல்லுபடியாகும் வகையில் கைச்சாத்திடத் தீர்மானித்திருந்து. ஆனால், மக்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ இது குறித்து அனுமதி பெறப்படவில்லை.

ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சி2ஏ ஹெர்குயுலிஸ் சரக்கு காவி விமானத்தைச் சுங்க திணைக்கள அதிகாரிகள் சோதனையிட அனுமதி மறுக்கப்பட்டது. கட்டு நாயக்கா விமானநிலையத்திலிருந்து கொள்ளுபிட்டியில் அமைந்திருக்கும் தூதரகத்துக்குப் பொருட்களைச் சோதனை இல்லாமல் எடுத்துச் செல்லும் அனுமதி இருக்கின்றது.

ஆனால், சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட  பொருட்கள் அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான ஏ2ஏ கிரஹேவுண்ட் எனும் சிறியரக சரக்கு காவி விமானம் மூலம் திருகோணமலை கடல் பரப்புக்கு அருகில் தரித்து நின்ற யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்டெனிஸ் எனும் போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த விடயம் சுங்க திணைக்களத்தால் சர்ச்சையாக்கப்பட்டு ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரியவந்தது. இந்த சர்ச்சையின் போது சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராகவிருந்த  சரோஜினி சார்ள்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் நேர்மையான நிர்வாகி எனப் பெயரெடுத்தவர்.

இந்த விடயம் சர்ச்சையான பின்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஹெலைனா டப்ளிஸ் இலங்கைக்கும் , அமெரிக்காவுக்கும் இடையிலான கையகப்படுத்தல் மற்றும் இடைநிலை சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரமே பண்ட இடமாற்றமும் விநியோகமும் நடைபெற்றதாக அறிவித்தார். 

இதன் பின்னர் தான் இப்படி ஒரு ஒப்பந்தம் இருப்பதையும், அமெரிக்காவால் சோதனைகள் எதுவுமில்லாது படைகளுக்கான விநியோகங்களைச் செய்ய முடியும் என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள். அது மாத்திரமல்லாது 2018 ஆகஸ்ட் மாதம் இதுபோன்ற பண்ட பரிவர்த்தனை இரு தடவைகள் நடந்ததாகவும் ஜனவரியில் நடந்தது மூன்றாவது தடவை என்ற உண்மையையும் தூதுவர் அம்பலப்படுத்தி இருந்தார்.

யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்டெனிஸ் கப்பல் அணுசக்தியால் இயங்கும் கப்பலாகும். இந்த கப்பலில் 90 வகையான தாக்குதல் தாக்குதல் வானூர்திகளும், 6500  அமெரிக்கப் படையினரும் இருக்கின்றார்கள். இந்த கப்பலுக்கான விநியோகங்கள் இராணுவத்துக்கான விநியோகங்களே ஆகும்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ‘ஆசியாவில் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்’ சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் இந்து சமுத்திரத்தை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றது. 

அண்மையில் போர் நடவடிக்கைகளின் போது வைத்திய சேவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் யு.எஸ்.எஸ்.மேர்சி எனும் கப்பலும், யு.எஸ்.எஸ் ப்போல் ரிவர் எனும் போர் நடவடிக்கை கப்பலும் இலங்கைக்கு வந்து சென்றமை சில உதாரணங்களாகும்.

அதாவது, இலங்கையானது சீன- அமெரிக்க மோதலில் அமெரிக்காவுக்குச் சார்பான களமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டே அமெரிக்காவின் விசுவாசிகளால் ஆளுமை செய்யப்படும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மேற்குலகம் ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது.

எனவே தான் ஐதேகவிற்கு அளிக்கப்படும் ஆதரவானது இலங்கை மக்களை ஏகாதிபத்தியத்தின் தேவைக்காகப் பலிகொடுப்பதற்குக் கொடுக்கப்படும் ஆதரவாகும்.  அதன் அனர்த்தங்களைக் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மூலம் இலங்கை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு அளிக்கும் ஆதரவானது எம்மை நாமே அழிவுப் பாதையில் தள்ளிக் கொள்ளும் வேலையாகும். இடையில் கிடைக்கும் ஏமாற்று சனநாயகம், சலுகைகள் எல்லாம் நரகத்தில் கிடைக்கும் இடைவேளை போன்றதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram