Post Top Ad

அனுர குமார - அவர்களின் நல்ல வேட்பாளர்!


அனுரகுமார திசாநாயக்கவை ஆதரிப்பவர்கள் முதலில் கட்டாயமாக சோசலிசம் என்பதை மறந்துவிட வேண்டும். வழமையாக இருவருக்கு இடையிலான போட்டியாக நடைபெறும் சனாதிபதி தேர்தல், இம்முறை மூவருக்கிடையிலான போட்டியாகி இருக்கின்றது.

மூவரும் முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீர்திருத்தி நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாகச் சொல்கின்றார்கள். ஒவ்வொருவரும் பிரச்சாரத்தில் முன்னுரிமை கொடுக்கும் விடயங்கள் தான் வேறுபடுகின்றது.

இந்த மூன்று வேட்பாளர்களிலும் அனுரகுமார திசாநாயக்கவினதும், அவரது கட்சியினதும் அரசியல் பண்பாடு, நேர்மை, அர்ப்பணிப்பு, நேர்த்தி மிகச் சிறந்ததாகும். அனுரகுமார சனாதிபதியானால் நிச்சியமாக அரச நிர்வாகத்தில் ஊழலும், வீண் விரயமும் தவிர்க்கப்படும், சாதாரண மக்கள் விரும்பும் பல மாற்றங்கள் நிகழும், ஆனால், எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி கிடைக்குமா என்பது சந்தேகமே?

மறுபக்கம் அனுரகுமார சனாதிபதியானால் எல்லோரும் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிப்பதுக்கு முண்டியடிப்பார்கள் என்பது மாத்திரம் நிச்சியம்.

அனுரகுமார ஜேவிபி இன் தலைவராவதற்கு அவருக்கிருக்கும் அபார ஞாபக சக்தியும் ஒரு காரணம். ஜேவிபி க்கு புதிய தலைவர் வேண்டும் என்ற பேச்சு எழுந்த போது தோழர் லால்காந்தவும், தோழர் ரில்வின் சில்வாவும் தலைவராகும் எதிர்பார்ப்பிலிருந்தார்கள்.

ஜேவிபி இன் மாணவர் அணி கட்சியில் இருந்து பிரிந்து சென்றிருந்ததால், தொழிற்சங்க பிரிவும், ஆரம்பக்கால உறுப்பினர்களும் தான் பலமான அணியாக இருந்தார்கள். தோழர் லால்காந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். எனவே, தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் லால்காந்த தலைவராக வேண்டும் என விரும்பியிருந்தார்கள். ஆரம்பக்கால உறுப்பினர்கள் நீண்டகாலம் கட்சியின் செயலாளராக இருக்கும் ரில்வின்சில்வாவை தலைவராக்க விரும்பினார்கள்.

ஆனால், ஜேவிபி அரசாங்கம் மீதான விமர்சனங்கள் மூலம் மத்திய தரவர்க்கத்தை ஈர்ப்பதை உபாயமாகத் தேர்ந்தெடுத்திருந்தது. அனுரகுமார இரண்டுக்கும் பொருத்தமானவராக இருந்தார். தலைவரான பின் அனுரவின் உடை அலங்காரங்கள் கூட மத்தியத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் மாற்றம் கண்டிருப்பது அவரை தொடர்ந்து அவதானித்திருந்தவர்களுக்குத் தெரியும்.

அனுரகுமாரவுக்கு சராசரி மனித ஞாபகசக்தியை விட அதிகமான ஞாபக சக்தி திறன் இயற்கையாகவே இருக்கின்றது. ஏராளமான புள்ளிவிவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடியவர். அரசாங்கத்தை புள்ளிவிவரங்களுடன் விமர்சிப்பதற்கு அவரின் இந்த திறன் அருமையாகக் கைகொடுத்திருந்தது.

ஜேவிபி எப்போதும் இப்படியான விம்பங்களை உருவாக்கி கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள். ரோகன விஜேவீர அவரின் தோற்றத்தை சேகுவேரா போல் மாற்றிக் கொண்டிருந்தார். விமல் வீரவன்சவின் தாடியை வட்டமாக வெட்டி, தலைமுடியை ஸ்ரேட்டிங் செய்து ஊடகங்களில் கதைக்க வைத்தே கட்சியை வளர்த்தார்கள்.

ஜேவிபி அண்மைக்காலமாகக் கண்டிருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கது. 2011 இல் ஜேவிபி இன் மாணவர் அணி தனியாகப் பிரிந்து செல்ல தீர்மானித்தார்கள். இருதரப்பும் கட்சியுடன் தொடர்பு பட்டவர்களைச் சமரசம் படுத்தி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள்.

சுனில் ஹெந்துன்நெத்தி தோழரும், சந்திரசேகரன் தோழரும் பல்கலைக்கழகத்துக்கு வந்து என்னைச் சந்தித்திருந்தார்கள். ஜேவிபியின் சஞ்சிகை ஒன்றில் மாணவர் அணி பக்கம் இருந்த தோழர் உதுல்பிரேமரத்ன ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்றைக் காட்டி நாம் எங்குச் செல்கின்றோம், இதெல்லாம் எமக்குச் சரிவருமா? இப்படி பிழையாகச் செல்வதைக் கேள்வி கேட்டதால் தான் கட்சியிலிருந்து பிரிந்து செல்கின்றார்கள் என்றார்.

அதே ஜேவிபியும், சுனில் ஹெந்துன் நெத்தியும் இன்று அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று சொல்லியுள்ளார்கள்.

எல்லாவற்றில் மாறி இருந்தாலும் தேசிய இனப்பிரச்சினையில் இன்னும் மாறவே இல்லை. பௌத்த மதத்துக்கும் சிங்கள தேசியவாதத்துக்கும் முதலிடம் கொடுத்து அனைத்து மக்களும் சமமாக(?) வாழும் இலங்கை தேசியத்தை உருவாக்குவதே தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து அங்குலம் கூட மாறவில்லை. அதாவது

அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தேசியம் என்பதின் கீழ், அனைவருக்கும் 1000 ரூபாய் தினக் கூலியை உறுதி செய்வோம் எனச் சொல்லியுள்ளார்கள்.

இவ்வளவு தான் தேசிய இனங்கள் தொடர்பான இவர்களது நிலைப்பாடு. உண்மையில் இனவாதத்தை வெகுசனமய இயக்கமாக்கியதில் ஜேவிபியின் பங்கு முதன்மையானது.

சமாதான ஒப்பந்த காலத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தைக் கூடாது, யுத்தம் மூலம் அழிக்க வேண்டும் என்று சிங்கள கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து மக்களை யுத்தம் நோக்கி தள்ளியவர்கள் ஜேவிபியினர் தான்.

ஏனைய பெரும்பான்மை கட்சிகள் தேர்தலுக்காக, அதிகாரத்துக்காகத் தான் இனவாதத்தைப் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், ஜேவிபியினர் தத்துவார்த்த அடிப்படையில் மக்களிடம் இனவாதத்தைப் பரப்புபவர்கள்.

ஆனால், அனுரகுமார சனாதிபதியானால், தமிழர் தரப்பு உண்மையான இனவாத கருத்தியல் வாதிகளுடன் தத்துவார்த்த விவாதத்தை வெகுசன வெளியில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தீவிரமான வெகுசன போராட்டங்களை நடத்தக் கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

மக்கள் போராட்டங்களை ஜேவியினர் அடக்க நினைத்தால், தென்னிலங்கையிலிருந்தும், ஜேவிக்குள்ளிருந்தும் தமிழர் தரப்புக்கு ஆதரவு கிடைக்கும்.

மேலும், ஜேவிபி ஏனைய கட்சிகள் போல் ஏகாதிபத்தியத்தின் நெருக்குவாரங்களுக்கு அடி பணியாது. எனவே, சர்வதேச ரீதியிலும் அவர்களுக்கு நெருக்குவாரங்கள் அதிகரிக்கும். எனவே, தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் சமாந்தரமாக சமாளித்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இது தமிழர்களை பொறுத்தவரையில் மிகச் சாதகமான நிலைமையாகும்.

ஜேவிபி அதிகாரத்திலிருக்கும் காலப்பகுதியில் சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் என்பவற்றுக்குத் தற்காலிக விடுதலை கிடைக்கும் என நம்பலாம்.

கல்வி,சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளிலும், அரச சேவைகளிலும் மக்கள் விரும்பக் கூடிய மாற்றங்கள் நிகழும். அனைத்து துறைகளிலும் இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ஆனால், ஜேவிபியினால் வெற்றி பெற முடியாது, அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் விரயம், முதலில் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெறட்டும், பின்னர் தமிழ் மக்கள் ஆதரிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

வாக்கு என்பது வெற்றி பெறுபவர்களுக்காக அளிக்கப்படுவதற்குத் தேர்தல் ஒன்றும் சூதாட்டம் அல்ல. அது  எமது கருத்தையும், தெரிவையும் வெளிப்படுத்துவதாகும்.

ஜேவிபிக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் விரயமாகாது. அவர்களுக்கு நாம் அளிக்கும் வாக்குகள் எமக்காக அவர்களைக் குரல் எழுப்பச் செய்யும் கடப்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அவர்கள் அந்த கடப்பாட்டிலிருந்து விலக மாட்டார்கள் எனத் தாராளமாக நம்பலாம்.

ஆனால், தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜேவிபி தமிழர்களுக்கு எதிரான சக்தி தான். ஏனையவர்களைப் போல் அரசியல் அதிகாரத்துக்காகத் தேசியவாதத்தைக் கையிலெடுத்திருப்பவர்கள் அல்ல. சிங்கள சமூகத்தின் உண்மையான உளகிடக்கையை பிரதிபலிப்பவர்கள். எனவே, ஜேவிபி அதிகாரத்தில் அமர்ந்தால் சிங்கள பேரினவாத கருத்தியலுடனான உண்மையான போராட்டம் ஆரம்பமாகும்.

அந்தவகையில் அனுரகுமாரவை பேரினவாதிகளின் சிறந்த வேட்பாளர் ஆவார். அவரை ஆதரிப்பதால் எமக்கு (சோசலிசத்தை தவிர) இழப்பதற்கு எதுவுமில்லை. பெறுவதற்கே நிறைய உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram