Post Top Ad

ஹிஸ்புல்லாவின் முறைகேடான பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றும் கூட்டாட்சி #பகுதி - 07

ஒரு நாட்டில் வாழும் சமூகத்தின் சிந்தனையைத் தீர்மானிப்பதில் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.  சிங்கள சமூகத்தில் விதைக்கப்பட்ட மகாவம்ச நூலை அடிப்படையாகக் கொண்ட கருத்தியலின் விளைவுகளைப் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆகவே, ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் கல்வி நிறுவனங்களைக் கொள்கை ரீதியாகக்  முகாமை செய்ய வேண்டும். ஆனால், 100 மில்லியன் டொலர்கள் இலங்கைக்குக் கிடைக்கும் என்றால், எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஐதேக, ஹிஸ்புல்லாவினால மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட சட்டவிரோத, அடிப்படைவாத கருத்துகளை ஸ்தாபன ரீதியாகப் பரப்பும் அனைத்து சந்தர்ப்பங்களையும் கொண்டிருக்கும் பெட்டிக்கெலோ கெம்பஸ் எனும் தனியார் பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றிக் கொடுக்கும் வேலையைச் செய்துவருகின்றது.

அரச பல்கலைக்கழகங்கள் 1978 ஆம் ஆண்டு 16ஆம் இலக்க  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த சட்டத்தில் (ஜேஆர் சனாதிபதியாக இருந்த காலத்தில்) 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் மூலம் தனியாரும் பட்டம் வழங்கும் கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டாலும், பட்டப்படிப்பு கற்கைநெறிகளை நடத்துவதற்கு உயர்கல்வி அமைச்சிலும், இலங்கை முதலீட்டுச் சபையிலும் அனுமதி பெறவேண்டும். சில கற்கைகளுக்கு துறைசார்ந்த நிறுவனங்களில் அனுமதி பெறவேண்டும். உதாரணமாக மருத்துவ பட்டப்படிப்பை நடத்தச் சுகாதார அமைச்சிலும், பொறியியல் பட்டப்படிப்பை நடத்த இலங்கை பொறியியல் நிறுவனத்திலும் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இந்த செயன்முறை முறையாக மத்தியப்படுத்தப்பட்ட பொறிமுறை ஊடாக .ஒழுங்குப்படுத்தப்படவில்லை. சட்டத்திலிருக்கும் இந்த ஓட்டையை பயன்படுத்தியே  தனியார்களினால் முறைகேடாக வியாபார கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த ஓட்டையினுள் அரசியல் அதிகாரமும் நுழையும் போது முறைகேடுகளின் உச்சம் அரங்கேறும் என்பதற்கு  ஹிஸ்புல்லாவும். பெட்டிக்கெலொ கெம்பசும் நல்ல உதாரணமாகும்.

2013/06/11 அன்று சிறிலங்கா - SRI Lanka ஹிரா பவுண்டேசன், இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சுக்கும் இடையில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை - யுனிவர்சிட்டி கொலேஜ் ஒப் பெட்டிக்கெலோ எனும் கல்வி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளுக்கு இலவசமாகத் தொழில் பயிற்சி கற்கைகளை வழங்குவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டிலிருந்து SHRI lanka - ஸ் ரீ லங்கா ஹிரா பவுண்டேசன் எனும் அமைப்பு இயங்கியுள்ளது. 2008 ஆம் ஆண்டு இந்த அமைப்பு பொது நோக்கு கருதிய சங்கமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் நாட்டின் பெயரை தேசிய நலன் கருதாத விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது எனும் காரணத்தால் சிறி என்பதை ஸ்ரி என பயன்படுத்தி உள்ளார்கள். 2016 இல் சிறிலங்கா ஹிரா பவுண்டேசன் என மாற்றி உள்ளார்கள்.

எனவே, சிறி லங்கா ஹிரா பவுண்டேசன் எனும் பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டது மோசடியானதாகும்.  மோசடியான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே பெட்டிக்கெலோ கம்பஸ் என இன்று அழைக்கப்படும் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்வைத்து இலங்கை வங்கியில் மலிக் அப்துல்லா பின் அசீஸ் (குறிப்பு - இது சவுதி மன்னரின் பெயர்) யுனிவர் சிட்டி கொலேஜ் - பெட்டிக்கெலோ எனும் பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்துள்ளார்கள். இந்த கணக்கு அச்சமயம் பிரதி அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாவினால் சிறிலங்கா ஹிரா பவுண்டேசன் தலைவர் என்ற அடிப்படையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்த்தில் யுனிவர்சிட்டி கொலேஜ் ஒப் பெட்டிக்கெலோவை ஆரம்பிப்பதுவே நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக பெட்டிக்கெலோ கெம்பஸ் எனும் தனியுடமை வியாபாரம் ஒன்றுக்கும் வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தனியுடைமை வியாபாரம் 2016 இல் பெட்டிக்கெலோ கெம்பஸ் வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது

இங்கு முறைகேடாக கணக்கு ஆரம்பிக்க ஹிஸ்புல்லா அவரின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமையை ஊகித்து கொள்ளலாம்

ஹிஸ்புல்லாவும், அவரின் மகன் ஹிரா ஹிஸ்புல்லாவுமே, ஹிரோ  பவுண்டேசனின் பங்குதாரர்கள் ஆவர்.

2014.12.10 அன்று  ஹிரா பவுண்டேசன் எனும் அமைப்பை பதிவு செய்திருந்தார்கள். 2016.05.10 அன்று ஹிரா பவுண்டேசன் இலங்கை முதலீட்டுச் சபையுடன் பட்டப்படிப்பு கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான  ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

எனினும், அதற்கு முன்னரே 2013.06.24 அன்று மட்டக்களப்பு கோரளைபற்று வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ்வரும் புனானி கிராம அலுவலர் பிரிவில் 35 ஏக்கர் காணியை பொது நோக்கிலான வேலைக்கு என 35 வருடக் குத்தகைக்கு ஹிரா நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 14340 ரூபாய் வருடக் குத்தகை என்ற அடிப்படையில் இக்காணிக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காணி மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்வரும் மகாவலி பி திட்டத்துக்குரிய காணியாகும். மகாவலி திட்டத்தின் கீழ் சித்தப்புரம் எனும் நகர் இப்பகுதியில் அமைக்கப்படவிருந்தது. எனவே, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த இக்காணி முறையான அனுமதி இல்லாமல் அரசியல் ஆதரவு மூலம் குத்தகைக்குப் பெறப்பட்டு பல்கலைக்கழகம் அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கட்டிடங்கள் அமைப்பதற்குப் பிரதேச சபையின் எந்த அனுமதியும் பெறப்பட்டிருக்கவும் இல்லை. 

காணிக் குத்தகைக்குப் பெறப்பட்டு, கட்டிடங்களும் அமைக்கப்பட்ட பின்னரே, 2018.01.01 அன்று மகாவலி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அவர்களால் குறித்த 35 ஏக்கர் காணி மகாவலி அதிகார சபையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.

சனாதிபதியால்  35 ஏக்கர் விடுவிக்கப்பட்டதுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக 8 ஏக்கர் காணியில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது, மேலதிகமாக 15 ஏக்கர் காணி துப்பரவு செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.

ஹிரா நிறுவனம் முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்டு, முறைகேடாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட இடைப்பட்ட காலப்பகுதியில்,  இசுலாமிய வங்கியியல் மற்றும் நிதியியலில் விஞ்ஞானமானி பட்டம் மற்றும் ஷரியா சட்டத்தில் கலைமானி பட்டத்தையும் வழங்கும் கற்கை நெறிகளை நடத்தும் அனுமதியைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து பெற்றுக் கொண்டிருந்தார்கள். மேலும், உயர் கல்வி அமைச்சில் சவுதி அரேபியாவின் உமல்குரா பல்கலைக்கழகத்திலிருந்து விரிவுரையாளர்களை வேலைக்கமர்த்தி கொள்வதற்கு அனுமதியும் பெறப்பட்டிருந்தது. 

உயர்கல்வி ஸ்தாபனம் ஒன்றை பதிவு செய்ய விண்ணப்பிப்பவர்கள்  கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டும். பணம் செலுத்த வேண்டுமென மானியங்கள் ஆணைக்குழு சூலை 07 ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், கடிதம் அனுப்புவதற்கு முதலே 06 ஆம் திகதி பணம் செலுத்தி விண்ணப்பம் பெற்ெள்ளார்கள். 

குறித்த பணம். யுனிவர் சிட் ஓப் பெட்டிக்கெலோ என்ற பெயருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்ப கடிதததில் உயர்கல்வி நிறுவனம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

இதே காலப்பகுதியில் பெட்டிகலோ கெம்பஸ் வரையறுக்கப்பட்ட கம்பனி என்ற பெயரிலும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த காலத்தில் அவசர அவசரமாக பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி இந்த விடயம் நகர்த்தப்பட்டது மோசடி நோக்கம் கொண்டது என பொதுக்கணக்கு குழுவின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில்  ஹிஸ்புல்லாவினால் பாராளுமன்ற கடித தலைப்பில் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உயர்கல்வி அமைச்சின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கடித்த்தில் திகதியும், பல்கலைக்கழக்கத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

கடிதம் கிடைத்ததாக மானியங்கள் ஆணைக்குழு 2015-07-03 ஆம் திகதி முத்திரை குத்தியுள்ளது. இக்காலப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்க்ப்பட்டிருந்தது. எனவே, தனிப்பட்ட விடயத்துக்காக முறைகேடாக பாராளுமன்ற கடிததலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு மானியங்கள் ஆணைக்குழுவில் அனுமதி தெரிவிலும் மோசடியான அணுகுமுறையே பின்பற்றுள்ளது.

பல்கலைக்கழகம் அமைப்பதற்காக 360 கோடி ரூபாய் நிதி அமெரிக்காவில் வசிக்கும் சவுதியைச் சேர்ந்த  அலி அப்துல்லா அலியுப்பாலி என்பவரின்  மூலம் 2016 மார்ச். சூலை மாதக் காலப்பகுதியில் ஹிரா நிறுவத்தின் இலங்கை வங்கிக் கணக்குக்கு தனிப்பட்ட பரிவர்த்தனையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..  

எனினும் குறித்த பணம் பரிமாற்றம் தொடர்பாக இலங்கை முதலீட்டுச் சபைக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. முதலீட்டுச் சபைக்கு அறிவிக்காமல் நிதி பெற்றது முறை கேடானதாகும்.

இந்த நிதி வட்டியில்லாக் கடனாகப் பெறப்பட்டதாக ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவு குழுவின் விசாரணைகளில் கூறியிருந்தார். இவ்வாறு கடனாக நிதியைப் பெற்றிருந்தால், கடன் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை வங்கிக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும். மேலும் இவ்வாறான கடன்கள் மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக் கடன் கணக்கு ஒன்றினூடாக பெறப்பட்டால் மாத்திரமே திருப்பி செலுத்த முடியும். இல்லை எனில் ,சட்டரீதியாக இலங்கையிலிருந்து நிதியைக் கடன் மீளச் செலுத்துவதற்காகப் பரிமாற்றம் செய்ய முடியாது.

எனவே,பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நிதி கடனாகப் பெறப்பட்டதா, நன்கொடையாகப் பெறப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. பாராளுமன்ற தெரிவு குழுவின் விசாரணைகளின் போது ஹிரா நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த ஹிஸ்புல்லாவின் மகன் இந்நிதி நன்கொடையாகப் பெறப்பட்டதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பலத்த சந்தேகங்களும் ,கேள்விகளும் எழுப்பப்பட்ட பின்னர் ஹிஸ்புல்லா கடனாகப் பெறப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும், ஹிரா நிறுவனம் 1980 ஆம் ஆண்டு 31 ம் இலக்க சங்கக் கட்டளைச் சட்டங்களின் பிரகாரம் அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இது சட்டவிரோதமானதாகும்.

இவ்வாறு பெட்டிகளோ கெம்பஸ் அமைக்கப்பட்ட பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டதாகவும், சட்டங்களுக்கு விரோதமானதாகவும் அமைந்ததுள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படும் நடவடிக்கைகள் நடந்த காலப்பகுதி முழுவதும் ஹிஸ்புல்லா அரசாங்கத்தில் பொறுப்பிலிருக்கும் அமைச்சராகவோ, பிரதி அமைச்சராகவோ இருந்தார். எனவே, தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதும், அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளாததும் வெளிப்படையாகத் தெரியும் விடயம்.

இது தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்த பின்னர், குறித்த விடயத்தை விசாரணை செய்யப் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரணைகளை நடத்தி பெட்டிகெலோ கெம்பசை அரசு கையகப்படுத்தி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகமாக நடத்த வேண்டும் என அமைச்சரவைக்கு முன்மொழிவை முன்வைத்தது.

எனினும் அமைச்சரவையில் இவ்விடயம் எதிர்ப்புக்குள்ளாகிறது. இதனால் ரணில் விக்ரம சிங்கவால் அமைச்சரவைக்கு இவ்விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உபகுழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் மங்கள சமரவீர, சகல ரத்நாயக்க, மனோகணேசன், லக்கி ஜெயவர்த்தன ஆகியோர் இருந்தார்கள்.

இதில் மங்கள சமரவீரவும், சாகல ரத்நாயக்கவும் பல்கலைக்கழகம் முறைகேடாக அமைக்கப்பட்டதுடன் தொடர்பு பட்ட முதலீட்டுச் சபைக்கும், மத்திய வங்கிக்கும் பொறுப்பான அமைச்சுகளில் இருப்பவர்கள். எனவே,இவர்கள் தம்மைத் தாமே குற்றவாளிகளாகக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை. இந்த குழு ஹிஸ்புல்லாவுக்கு சார்பான முடிவையே எடுக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஹிஸ்புல்லாவுக்கும், அரசாங்கத்துக்கும் நேர்மையான நோக்கமிருந்திருந்தால், இந்த பல்கலைக்கழக்தை நேர்மையான வழியில் அமைத்திருக்க முடியும். ஆனால், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடியான, முறைகேடான வழிகளில் தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது,

சிவில் சமூகத்தின் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும் இலவசமாகத் தொழிற்பயிற்சி வழங்குவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையகப்படுத்தி, இலவசமாகக் கல்வி வழங்குவதைச் செய்ய முடியும். ஆனால், அதைச் செய்யாமல் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாகவே ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.

சமூகத்துக்கு என்ன நடந்தாலும் சரி, பல்கலைக்கழக கல்வி வழங்கும் பொறுப்பை அரசிடமிருந்து, இலாப வெறி கொண்ட முதலாளிகளிடம் கொடுத்துவிட வேண்டும் எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஐதேக அதனால் எவ்வளவு சீர்கேடுகள் நடந்தாலும் பரவாயில்லை எனும் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றது.

பிரபு வர்க்கத்தின் நலன்களையே முதன்மைப் படுத்தும் ஐதேக மக்கள் சார்பாகச் செயல்படாமை ஆச்சரியமானது அல்ல. ஆனால், பாதிக்கப்படும் சாதாரண மக்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பதே அபத்தமானதாகும்.



No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram