Post Top Ad

சஜித் தவிர்க்கப்பட வேண்டிய முதல் வேட்பாளர்


சஜித் பிரேமதாசாவுக்கே தமிழ் பேசும் கட்சிகளின் ஆதரவு அதிகமாக இருக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை ஆதரவும் சஜித்துக்கு தான். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் சிங்கள கிராமிய மக்களின் மனோபாவம் என்ன என்பதை அறிவதில் தவறு விட்டுவிடுகின்றார்கள்.

இலங்கையில் 37000 வரையிலான சிங்கள கிராமங்களும், அத்தனை கிராமங்களையும் இணைக்கும் விகாரைகளும் இருக்கின்றது. இவர்களுடன் ஏதேனும் வகையில் ஊடாடாமல் இவர்களின் எண்ணங்களை அறிய முடியாது.

தமிழர்களும், தமிழ் தரப்பும் பெரும்பாலும் ஐதேக வுக்கு ஆதரவான நகர்ப்புற சிங்கள மக்களுடன் தான் தொடர்புகள் இருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் தமிழ், சிங்கள பிரபு வர்க்கத்தினரால் நடத்தப்படுவதால் இந்த நிலை உருவாகியிருக்கின்றது.

சிங்கள கிராம மக்களை பொறுத்தவரையில் பெரும்பான்மையான ஆதரவு கோட்டபாய இராஜபக்சவுக்கு இருந்து வருகின்றது. 2002 காலப்பகுதியில் ஐதேக ஆட்சியின் மீது சிங்கள மக்கள் மத்தியில் ஜேவிபியின் வழிந்த பங்களிப்புடன் பகையுணர்வு பரப்பப்பட்டது. அதே போன்றதொரு நிலை ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் உருவாகி உள்ளது.

ஐதேக கடந்த நான்கு வருட ஆட்சியில் நகர்ப்புற மக்களுக்கு வேலை செய்ததே தவிர, கிராம மக்களுக்கான வேலைத்திட்டங்களை செய்யவில்லை. இதுவும் ஐதேக வின் வீழ்ச்சிக்குக் காரணமாகும். கடந்த தேர்தலில் ஐதேக மகிந்த தரப்பின் மீது முன்வைத்த ஊழல், மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை. கிராமப்புறங்களில் மகிந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைக் கூட முன்னெடுக்க வில்லை. மகிந்த காலத்தில் அமைக்கப்பட்ட பாலங்களை பராமரிக்கக் கூட ரணில் - மைத்திரி கூட்டாட்சியால் முடியவில்லை.

மகிந்த தரப்பு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐதேக அதைவிடப் பெரிய ஊழல்களை செய்தது.

இந்த காரணங்களினால், ஐதேக மீது சிங்கள மக்களின் விரக்தி முன்பைவிட அதிகமாக இருக்கின்றது. இந்த தேர்தலின் முடிவுகளில் நாம் அதைக் காணமுடியும். கிராமப்புறங்களைப் போல் அல்லாவிடினும், நகர்ப்புறங்களிலும் ஐதேக மீதான குறிப்பிடத்தக்க விரக்தி தெரிகிறது.

பாரம்பரிய ஐதேக ஆதரவாளர்களைத் தவிர்ந்த நகர்ப்புறவாசிகள் சஜித்துக்கு வாக்களிப்பார்களாயின் அதற்கு ஒரே காரணம் வெற்றிபெறக் கூடிய வேறு வேட்பாளர்கள் இல்லை என்பது மாத்திரம் தான் இருக்க முடியும். ஆனால், இம்முறை அனுரகுமார திசாநாயக்க மாற்று வேட்பாளராக கணிசமான நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

எனவே, சிங்கள கிராமப்புறங்களில் ஐதேகவின் படுதோல்வியை எதிர்பார்க்கலாம். சிங்கள நகர்ப்புறங்களிலும் பின்னடைவை எதிர்கொள்வார்கள். சில இடங்களில் அனுரகுமாரவிடம் தோற்று மூன்றாம் இடத்துக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

இதற்குக் காரணம் தவிர்க்கப்பட வேண்டிய முதல் வேட்பாளராக ஜதேக வை சிங்கள மக்கள் இனம் கண்டிருப்பது தான்.

எனவே தான் இம்முறை சிங்கள தேசியவாத முகம் கொண்ட ஒரு வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்து ஜதேக தரப்பில் வலுப்பெற்றது. ரணில் விக்ரமசிங்க தவிர்க்கப்பட்டு, கருஜெயசூரிய, சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது இதனால் தான்.

தமிழ் பேசும் மக்கள் சஜித்தை ஆதரிக்க கோட்டபாய ஆட்சிக்கு வரக் கூடாது என்பதைத் தவிர குறிப்பான காரணம் எதுவும் இல்லை. அப்படி ஏதும் காரணம் இருப்பின் சஜித் பிரதி தலைவராக இருக்கும் கடந்த நான்கு வருட ஆட்சியிலிருந்து காரணங்களை முன்வைத்திருக்க வேண்டும்.

ஐதேக வுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகளுக்கு கோட்டபாயவை ஆதரிக்கும் தார்மீக உரிமை இல்லை. அவர்களே தற்போதைய ஆட்சியை உருவாக்கவும், காப்பாற்றவும் காரணமாக இருந்தார்கள்.

மாற்றுத் தெரிவை நாட வேண்டுமென்றால், இவ்வளவு காலம் அனுபவித்து வந்த வரப்பிரசாதங்களை இழக்க நேரிடும். அணுரவை அல்லது வேறு யாரையும் ஆதரித்தால் மீண்டும், போராட்ட அரசியலில் இறங்க வேண்டும்.

எனவே, கோட்டபாயா மீதான போர்க்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைப் பிரச்சாரம் செய்து தமிழ் பேசும் மக்களில் பயத்தை உருவாக்கி சஜித்தக்கு வாக்களிக்கக் கோருவதை தவிர வேறு வழியில்லை.

கேப்பாபுலவில் 1000 நாட்களை அண்மிக்கும் மக்களின் போராட்டத்துக்கும், அனைத்து வெகுசனங்களின் ஆதரவையும் பெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதன போராட்டத்தையும் கண்டுகொள்ளாத ஐதேக வுக்கு வேறு எதைக் கூறி வாக்களிக்கக் கோர முடியும்?

ஆனால், கோட்டபாயவை நிராகரித்து, சஜித்தை ஆதரிக்கத் தமிழ் தரப்பு கூறும் காரணம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும், தேசிய இருப்புக்கும் சாவு மணி அடிக்கும் விடயங்களாகும்.

‘போர்க்குற்றம் புரிந்த கோட்டாவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்’. ‘தமிழ் மக்களை அழித்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்” எனும் சொல்லும் போது தமிழ் பேசும் மக்களின் அவலங்களுக்கு ஒரு நபர், ஒரு குடும்பம், ஒரு அரசியல் கட்சி காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு விடுகின்றோம்.

எமது பிரச்சினை பேரினவாதத்துடன் தான். கோட்டபாய எனும் தனி நபருடனோ, மகிந்த குடும்பத்துடனோ அல்ல. தமிழ் பேசும் மக்களை அழிப்பதில் பேரினவாதிகள் எவரும் முரண்பட்டவர்கள் அல்ல.

இதுவரை யுத்தம் நடத்திய இருதரப்புமே தமிழ் பேசும் மக்களை அழிக்கத் தான் யுத்தம் நடத்தினார்கள். அனைத்துப் பேரினவாதிகளும் தமிழ் பேசும் மக்கள் மீதான இனவழிப்பை நடத்தி வந்திருக்கின்றார்கள்.

கோட்டபாயவை எதிர்த்து சஜித்தை ஆதரிக்கும் போது, சிங்கள பேரினவாத்தை காப்பாற்றி விடும் வேலையைச் செய்து விடுகின்றோம். இம்முறை தேர்தலில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக யாரும் கதைக்கவில்லை. காரணம். தமிழர் தரப்பு தேசிய அபிலாசைக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது தான்.

இப்போது கோட்டபாயவை இனவழிப்பு செய்தார் எனக் காரணம் காட்டி, சஜித்தை ஆதரிப்பதானது எமது தேசிய விடுதலை அபிலாசையை நல்லடக்கம் செய்யும் வேலை தான். நாம் இனவழிப்பு, போர்க்குற்றம் போன்ற காரணங்களுக்காக வேட்பாளர்களை எதிர்க்க வேண்டுமாயின், சஜித், கோட்டா இருவரையுமே ஆதரிக்க முடியாது,

தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அல்லது தேசிய அந்தஸ்தை நிலைநாட்டும் வகையிலான தீர்வு திட்டங்களை முன்வைப்பவர்களைத் தான் ஆதரித்திருக்க வேண்டும். அல்லது தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும்.

சஜித் பிரேமதாசா நீண்ட காலமாகவே சனாதிபதி ஆகும் கனவுகளுடன் காய் நகர்த்தி வந்தவர். தந்தை சனாதிபதியாக இருந்த காரணத்தால் சனாதிபதியாகும் ஆசை இருந்திருக்கலாம். எனவே, சஜித் சிங்கள சமூகத்தில் தன்னை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் தேசிய வாதியாக முன்னிலை படுத்தியிருந்தார்.

சஜித்தின் அரசியல் பிரவேசம் 1993 தந்தை ரணசிங்க பிரேமதாசா கொலை செய்யப்பட்ட பின்னர் நடந்தது. அப்போது 26 வயது. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 2000 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாசாவின் செல்வாக்கே சஜித்தின் அரசியல் வெற்றிகளுக்கு மூலதனமாக இருந்து வந்தது. சனாதிபதி வேட்பாளரானதுக்கு தந்தையின் செல்வாக்கே காரணம்.

ரணசிங்க பிரேமதாசா இலங்கையின் சீரழிவுக்குக் காரணமான தாராளமய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டிலிருந்து 1989 வரை பிரதமராக பதவியிலிருந்தார். மக்களுக்கு விரோதமான தாராளமய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் கட்டாயமாக எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்காகத் தான் ஐதேக நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை உருவாக்கினார்கள்.

ஜேஆர் சனாதிபதியாக இருந்த காலத்தில் ரணசிங்க பிரேமதாசாவே பிரதமராக இருந்து எல்லா எதிர்ப்புகளையும் கொடூரமாக அடக்கியவர். சனாதிபதி ஆன பின்னும் இது தொடர்ந்தது.

ஆட்சியை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள் எல்லாம் இரகசியமாகக் கடத்தப்பட்ட பின்னர் களனி ஆற்றில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள், சக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமே திகதி இடப்படாத இராஜினமா கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். இவரது காலத்தில் ஜேவிபி உறுப்பினர்கள் தெருக்களில் டயர்கள் மாட்டப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

பிரேமாதாசா இந்த அராஜகங்களைச் செய்த காலத்தில் அவருடன் ரணில் விக்ரம சிங்கா இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார். ஜேவிபி உறுப்பினர்களைச் சித்திரவதை செய்த முகாம்கள் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

ரணசிங்க பிரேமதாசா தாராளமய கொள்கையை அமுல்படுத்த முயன்ற 15 வருட கொடூர ஆட்சியின் விளைவுகளை விமர்சித்து, தாராளமய பொருளாதார கொள்கைக்கு மனித நேய முகம் கொடுப்பேன் எனும் கோசத்தை முன்வைத்தே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதி தேர்தலில் வென்றார்.

இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவேன் எனக் கூறிய ரணசிங்க பிரேமதாசாவின் சனநாயக விரோத அடக்குமுறை ஆட்சி நடத்தியிருந்தாலும், மக்களுக்கான நலன்புரி சேவைகளை விஸ்தரித்திருந்தார். இதனால் கிராமிய மக்களின் ஆதரவும் இருந்தது.

சஜித் பிரேமதாசாவும் தந்தையின் வழிமுறையையே பின்பற்றப் போவதைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி உள்ளார். மக்களுக்கான சமூக நலன்புரி சேவைகளை விஸ்தரித்தால், தனிநபர்களின் கொள்வனவு சக்தி அதிகரிக்கும். எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இது தான் சஜித்தின் திட்டம்.

ஆனால், இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வர விரும்பாமைக்கு காரணம், இங்குத் தொழிலாளர் நலன் பாதுகாப்பு சட்டங்களும், சூழல் பாதுகாப்பு சட்டங்களும் கடுமையானது. சூழலைச் சேதப்படுத்தாமல், தொழிலாளர்களைச் சுரண்டாமல் மூலதன உரிமையாளர்களால் கொள்ளை இலாபம் சம்பாதிக்க முடியாது. எனவே, மக்களுக்கு விரோதமான சட்டத்திருத்தங்களைச் செய்ய வேண்டும். எதிர்ப்புகளை அடக்க வேண்டும்.

சஜித் மாத்திரமல்ல கோட்டாவும், அனுரவும் கூட இதை தான் செய்யப் போவதாகச் சொல்கின்றார்கள். இவர்களின் வழிமுறைகள் தான் வித்தியாசம். யாருக்கும் முன்னர் போல் அராஜக வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது. எனவே. தந்திரமான வழிகளில் செய்வார்கள்.

ஐதேக இந்த தந்திரங்களில் தேர்ந்தவர்கள் என்பதை நாடு அறியும். அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு ஐதேக ஆட்சி மக்கள் விரோதமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சஜித் சனாதிபதியானால், அவர்களின் அமெரிக்கச் சார்பு காரணமாக, போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல் போன்ற சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து விடுபடுவார்கள்.

ஆனால், தமிழ் பேசும் மக்கள் போராட்டங்களில் இறங்காத வண்ணம் ஏமாற்று வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கு ஒரு கதையும், சிங்களவர்களுக்கு ஒரு கதையும் கூறி ஏலவே,ஏமாற்று வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

சஜித் வேட்பாளராக்கப்படும் காரணமும் தமிழர்களுக்கு எதிரானதாகும். ரணில் விக்ரமசிங்க தமிழர் தரப்புக்குச் சாதகமான வேட்பாளர் என்ற எண்ணம் சிங்கள மக்களிடம் உண்டு. சிங்கள பேரினவாதத்துக்குத் தமிழ் பேசும் மக்களைக் கூட்டில் அடைத்து சிங்களவர்களுடன் இணைத்து வைக்கும் தலைமை தான் தேவை.

இந்த பேரினவாத சிந்தனைக்கு உரம் போடக்கூடிய சிங்கள தேசிய முகம் கொண்ட வேட்பாளர் சஜித் என்பதாலேயே ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கப்பட்டு, சஜித் வேட்பாளரானார்.

சஜித் சனாதிபதியாக வேண்டும் எனத் திட்டமிட்டுக் காய்நகர்த்தி வந்தவர். கடந்த காலங்களில் நாடு முழுவதும் 1000 புத்தர் சிலைகள், 2000 விகாரைகள் அமைக்கும் வேலைகளைச் செய்திருந்தார்.

இவ்வாறு சஜித் சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்கு மாத்திரம் அல்ல, வேட்பாளராவதற்கும் பெருந்தொகை நிதியை செலவழித்துள்ளார். இந்த நிதி எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது?

சஜித் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் எதிலும் தனது பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகக் காய் நகர்த்தி வந்திருக்கின்றார். அவரது மனைவியின் குடும்ப வியாபாரம், தனது வியாபாரங்கள் தொடர்பான தகவல்களைக் கூட வெளியே தெரியாத வகையில் இரகசியமாகக் காத்து வந்துள்ளார். ஐதேகவின் ஏனைய தலைவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

சஜித்தின் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை வலியுறுத்தவில்லை. சனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக சொல்கின்றார். கட்சியைப் பற்றிக் கதைக்காமல், ‘நான், நான்’ எனத் தன்னையே சஜித் முதனிலை படுத்துகின்றார்.

எனவே, இவர் இரண்டு தடவை சனாதிபதி ஆக முயற்சிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இது வரை திட்டம் போட்டு சனாதிபதி வேட்பாளரானவர், வெற்றி பெற்றால் அடுத்த தடவை சனாதிபதியாவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.

எனவே, சிங்கள மக்களை வென்றெடுக்க பேரினவாதத்தை போசித்து தீனி போடும் வேலையைச் செய்வதைத் தவிர சஜித்துக்கு எந்த தெரிவும் இல்லை.

எனவே, தான் சஜித்தை ஆதரிப்பதானது, தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் கோவணத்தையும் அவிழ்த்துக் கொடுத்துவிடும் முடிவாகும்.

இனிவரும் காலங்கள் அனைத்து தமிழ் பேசும் மக்களின் நலன்களைக் கட்டிக் காப்பதற்கான வழி, பரந்துபட்ட வெகுசன போராட்ட அரசியலுக்குள் செல்வது தான். இந்த தேர்தலில் வேறு தெரிவுகளுக்குச் செல்ல முடியவில்லை எனில், குறைந்த பட்சம் எமது போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகளையாவது ஆதரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram