Post Top Ad

சஜீத்தும் சானிட்ரி நெப்கினும்

சனாதிபதி தேர்தல் சந்தை வாக்காளர்களை ஏமாற்றும் வாக்குறுதிகளால் நிறைந்து வழிகின்றது.

கடந்த தேர்தலில் சனநாயகம், நல்லாட்சி தொடர்பாக கதைத்தாவது இருந்தார்கள். இந்த தேர்தலில் மருந்துக்குக் கூட அந்த கதைகள் இல்லை.

பிரதான வேட்பாளர்கள் தீவிரமான நடைமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீரமைக்கப் போவதாகச் சொல்கின்றார்கள். சனநாயகம் இல்லாத முதலாளித்துவம் கொடூரமானது. இதை மறைக்கக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றார்கள்.

சஜீத் பிரேமதாசா பெண்களுக்கு சானிட்ரி நெப்கின் எனப்படும் விடாய் கால அணையாடைகளை இலவசமாக வழங்கப் போவதாகச் சொல்லிய தேர்தல் வாக்குறுதியும் இந்த வகையைச் சேர்ந்தது தான்.

2015 தேர்தலில் ஐதேக கட்சியின் தலைவர் தலவாக்கலை - ஹட்டன் கூட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவதாகச் சொன்னார். இந்த தேர்தலில் சஜீத் அதை 1500 ரூபாயாக அதிகரித்து விட்டார். இது போன்ற ஏமாற்றும் அறிவிப்பு தான் சானிட்ரி நெப்கின் இலவசமாக வழங்கும் அறிவிப்பும்.

தேர்தலில் பெண்களின் ஆதரவு மிக முக்கியமானதாகும். வாக்காளர்களில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். முன்னர் போல் பெண்கள் வீட்டு ஆண்கள் சொல்பவர்களுக்கு வாக்களித்து விட்டு வரும் நிலை இப்போது இல்லை. முடிவெடுப்பதில் பெண்கள் முன்னரை விட அதிகமாகப் பங்குபற்றுகின்றார்கள்.


நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை வீட்டில் நேரடியாக எதிர்கொள்பவர்கள் பெண்கள் தான். கடந்த நான்கு வருடங்களில் விலைவாசி உயர்வு, பாடசாலைகளில் அதிகரித்த கட்டணங்கள், வைத்திய செலவுகள் அதிகரித்தது முதல் தற்போதைய எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வரை அனைத்து நெருக்கடிகளையும் நேரடியாக எதிர் கொண்டவர்கள் பெண்கள் தான்.

விலைவாசி மாத்திரம் அல்ல, உணவுப் பொருட்கள் உட்பட நுகர்வு பொருட்களின் தரமும் மோசமானதாகி உள்ளது.

நீண்ட காலம் ஆட்சியில் இருக்காத ஐதேக, அதிகாரத்துக்கு வந்த பின் அவர்களது பிரபுவர்க்க சகாக்கள் பொருளாதார ரீதியாக விருத்தியடைய அனைத்து ஏற்பாடுகளையும் சலுகைகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள்.

முதலாளித்துவத்தில் மோசடி செய்யாமல், மக்களைச் சுரண்டாமல் விரைவாகப் பணக்காரர் ஆவது சாத்தியமில்லை.

ஐதேகவின் சகாக்களின் இலாப வெறியினால் தான் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மோசமானதாகியது. இதன் விளைவுகளை அனுபவித்து வருபவர்கள் பெண்கள் தான்.

நாம் அன்றாடம் பயன்படுத்த உப்பையும், சீனியையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

சமையலில் கைதேர்ந்த எம் அம்மாக்கள் அண்மைக்காலங்களில் சாப்பாட்டுக்குச் சேர்க்கும் உப்பு, சீனியின் அளவுகள் பிழைத்துப் போவது, அநேகமாக அனைத்து குடும்பங்களிலும் நடக்கும் விடயம்.

எங்கள் அம்மாக்களின் கைப்பக்குவம் பிழைத்துப் போனது எப்படி?

அவர்கள் முன்பு பயன்படுத்திய அதே அளவு சீனியையும், உப்பையும் தான் பயன்படுத்துகின்றார்கள்.

ஆனால், விற்பனை செய்யப்படும் உப்பில், முன்பு போல் உப்பின் செறிவு இருப்பதில்லை. சீனியில் முன்பு இருந்தது போல் சீனியின் செறிவு இருப்பதில்லை. இது சரியாகப் பாலுக்குத் தண்ணீர் கலந்தது போன்ற மோசடி.

இவை கலப்படம் அல்லது தரமானது இல்லை என்பதால், இனிப்பு, உவர்ப்பு சுவைகளின் செறிவுகள் ஒரே அளவில் இருப்பதும் இல்லை.

முன்பு ஒரு மேசைக்கரண்டி சேர்த்துப் பெறும் இனிப்பு சுவையை, இப்போது விற்கப்படும் சீனியின் ஒரு மேசைக்கரண்டியிலிருந்து பெற முடிவதில்லை. உப்புக்கும் இதே நிலை தான். கடைக்குக் கடை, கம்பனிக்கு கம்பனி இது வேறுபடுகின்றது.

தேநீர் தயாரிக்கும் போது பால் மாவைத் கொஞ்சம் வாயில் போட்டுக் கொள்ளும் பழக்க உள்ளவர்களாக இருந்தால், சில பால் மாக்களில் சீனி கடிபடுவது தெரிந்திருக்கும். பால் மாவில் சீனியை கலந்து விற்பனை செய்கின்றார்கள்.

இதனால், முன்னரை விட அதிகமான சீனியையும், உப்பையும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கலப்படங்களால் அல்லது தரமற்ற பொருட்களினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைத் தனியாகப் பார்க்க வேண்டும்.

இப்படியாகக் கடந்த ஆட்சியின் மோசடிகளால் வீட்டில் பெண்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்பும் வகையில் சஜீத் பிரேமதாசா சானிட்ரி நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சஜீத் பிரதி தலைவராக இருக்கும் கட்சியின் ஆட்சியில் தான் சானிட்ரி நெப்கின்களுக்காக மறைமுக வரி 102 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. அதாவது உண்மையான விலைக்குச் சமமான வரி வசூலிக்கப்பட்டது.

அப்போதெல்லாம் சஜீத் பி குரல் எழுப்பவில்லை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் இருக்கின்றார்கள்.

சானிட்ரி நெப்கின்கள் வாங்க முடியாததால் பாடசாலை மாணவிகள் பலர் மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்குச் செல்வதில்லை என சஜித் கூறியுள்ளார். உண்மையில் இதற்கான பிரதான காரணம் பாடசாலைகளில் சுகாதாரமான மலசலக் கூட வசதிகளும், தண்ணீர் வசதியும் இல்லாதது தான்.

நான் பல்கலைக்கழகத்துக்கு சென்ற காலத்தில் பீடத்தில் 80 வீதம் பெண் மாணவிகள் தான். ஆனால்இ பெண்களுக்கான கழிப்பறை இருக்கவில்லை. இதற்காக போராட நேர்ந்தது. அநேகமான பொது ஸ்தானங்களின் நிலைமை இது தான்

பாடசாலைக்குக் கல்வியை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் குறைத்துள்ளது, எனவே, பாடசாலைகளில் புதிதாக அபிவிருத்திகள் செய்வதும் குறைந்து விட்டது. இதன் போது சஜீத் வாய் திறக்கவில்லை.

வரவு செலவு திட்டத்தில் மலசலக் கூடங்கள் அமைப்பதற்காக நிதி ஒதுக்குவதாகச் சொன்னார்கள். ஆனால், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வாக்கு சேகரிக்கப் பிரச்சாரம் பெற்றுதரக் கூடிய கண்காட்சி அபிவிருத்தி திட்டங்களை மட்டும் தான் செய்தார்கள்.

சஜீத் இந்த பிரச்சினைக்கு உண்மையாகத் தீர்வு காண விரும்புவார் ஆயின், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் பெண்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தரமான மலசலக் கூட வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.. ஆனால், சஜித்தின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் இதைச் செய்ய முயன்றதாக வரலாறு இல்லை.

ஆனால், அவரின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 1000 பெரிய புத்தர் சிலைகளை அமைக்கும் வேலையைச் செய்து வருகின்றார். மலசலக் கூடம் அமைத்தால் வாக்கு கிடைக்காது. புத்தர் சிலைகள் அமைத்தால் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறலாம்.

இவர்கள் அறிவிக்கும் இலவசங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதும் கேள்வி தான். இலவச இணையச் சேவை எனச் சொன்னார்கள். ஆனால் நடந்தது தொலைப்பேசி அட்டைகளுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்திவிட்டது தான்.

இதுவரை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிய இலட்சணத்தையும் விவசாயிகள் அறிவார்கள்.

காலம் காலமாக விவசாயம் செய்து வருபவர்கள் தாம் விவசாயிகள் என நிரூபிப்பதற்கும், உரமானியம் பெறுவதற்கும் நாய் படாத பாடு பட வேண்டி இருந்தது. இதற்கே இந்த நிலை என்றால் சஜீத்தின் இலவச சானிட்ரி நெப்கின் திட்டத்தைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த இலவச அறிவிப்பின் பின் வாக்கு பொறுக்கும், வியாபார நோக்கமும் உள்ளது. சஜீத்தின் மனைவி வழி சொந்தக்காரர்கள் 2016 இல் சானிட்ரி நெப்கின் தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்திருந்தார்கள். அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் தம்மிக்க பெரேராவும் இதே தொழிலை ஆரம்பித்திருக்கின்றார். எனவே, இலவசமாகக் கொடுக்கப் போகின்றோம் என்ற பெயரில் இந்த இருவரில் ஒருவரின் தயாரிப்பைத் தான் விளம்பரப்படுத்தப் போகின்றார். இதற்கும் மக்களின் வரிப்பணம் தான் பயன்படுத்தப்படும்.

உண்மையில் தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசங்கள், அபிவிருத்தி திட்டங்களின் பின்னால் தெளிவான வியாபார திட்டமும் இருக்கும்.

சஜித்தின் அமைச்சின் கீழ் இருந்த பொறியியல் திணைக்களத்திலும், வீடமைப்பு சார்ந்த அரச திணைக்களங்களும் நட்டத்தில் இயங்க, சஜித்துக்கு நெருக்கமான கட்டுமான தொழில் செய்யும் கம்பனிகள் இலாபகரமாக இயங்குவதின் இரகசியமும் சஜித்தின் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட 5000 வரையிலான வீட்டுத்திட்டங்கள் தான்.

சஜித், பெண்களின் மாதவிடாய் கால பிரச்சினையைக் கதைக்கும் போது, ரைகம் போன்ற அவரின் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்கும் கம்பனிகள் விற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள்(கோழி இறைச்சி, முட்டை, செயற்கை உணவுகள், சில மரக்கறிகள்….) தொடர்பாக வாய் திறப்பதில்லை. இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டதன் விளைவாகத் தான், இப்போதெல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே சிறுமிகளுக்கு மாதவிடாய் ஆரம்பித்து விடுகின்றது.

தனது உடல் தொடர்பாக, பிள்ளைப் பேறு தொடர்பாகத் தெளிவு ஏதும் இல்லாத நிலையில், மனமுதிர்ச்சி அடைந்திருக்காத காலத்தில் இந்த நிலை பாரிய சிக்கலுக்குரியது.

சானிட்ரி நெப்கின் வாங்க முடியாதது தான் பிரச்சினை எனச் சொல்லும் சஜித் இந்த பிரச்சினை தொடர்பாக வாய்திறப்பதில்லை. இதைக் கதைத்தால் முதலாளிகளின் நிதி அனுசரணை இல்லாமல் போய்விடும்.

நடைமுறையில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக, பிரச்சினைகள் தொடர்பாக ஏதுவும் செய்யாது, வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காகப் பரபரப்பான வாக்குறுதிகளை அள்ளி வீசுவது அயோக்கியத் தனமான அரசியல் பண்பாடாகும். மக்கள் இதற்கு ஒரு போதும் ஆதரவளிக்கக் கூடாது,

பெண்களின் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பான உண்மையான கரிசனை கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாயின், அதற்கான அரசில் பண்பாட்டையும், கொள்கையையும் கொண்டவர்கள், பெண்களின் உரிமைகளுக்காகவும் நீண்ட காலமாகக் குரல் எழுப்பிப் போராடுபவர்கள் தேர்தலில் போட்டி இடுகின்றார்கள். அவர்களுக்கு வாக்களிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram