Post Top Ad

பின்கதவால் உயர்கல்வியை வியாபாரமாக்க முயலும் கூட்டாட்சி #பகுதி-08



இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் பொதுத்துறைகளைத் தனியார் மயமாக்க முயற்சி செய்திருந்தார்கள். அதில் கல்வித்துறையும், சுகாதார சேவையும் முக்கிய துறைகளாக இருந்தன.

கல்வியை பொருத்தவரை மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக் கூடிய துறையாகும். ஆனால், சகலதையும் விற்பனை செய்தல், நுகர்தல் என்ற அடிப்படையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் உலக முதலாளி வர்க்கத்தால் கல்வியை எல்லா இடங்களிலும் வியாபாரமாக்க முடிந்ததில்லை.

சமவுடைமை சோவியத் அரசின் கீழ் பொதுக்கல்வி அரசால் வழங்கப்படும் நலன்புரி சேவையாக முன்னெடுக்கப்பட்டதன் சாதகமான விளைவுகளினால் உலக கூடிக் குறைந்த அளவில் அரசால் வழங்கப்படும் இலவச கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் அரசு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வேலையையும், நீதி பரிபாலனத்தையும் கவனித்துக் கொண்டு, ஏனைய அனைத்து துறைகளையும் முதலாளி வர்க்கத்தினர் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தாராளமய கொள்கை திணிக்கப்பட்டு வருகின்றது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலம் கடன் வழங்கல், நிதி வழங்கல் திட்டங்களின் போது கல்வியை தனியார்மயமாக்குவதை நிபந்தனையாக முன்வைத்து வருகின்றார்கள்.

இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஐதேக ஆட்சியில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனங்கள் பட்டப்படிப்பு கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கல்வியை தனியார் மயமாக்க முயற்சி செய்தார்கள். எனினும், மாணவர் அமைப்புக்கள் கல்வி தனியார் மயமாக்கலை எதிர்த்துப் போராடி வருவதால் நினைத்தபடி காரியம் சாதித்துக் கொள்ள முடியவில்லை.

தனியார் மயமாக்கலை ஊக்கவிக்கும் முயற்சி நடந்த போதெல்லாம் மாணவர் கடுமையான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இது வரை ஏராளமான மாணவர்கள் இந்த போராட்டங்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

பிரேமதாச காலத்தில் மாணவர் சங்கத் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இன்றும் பேராதனை பல்கலைக்கழக விடுதிகளுக்குப் படுகொலை செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவர்களின் பெயர்கள் (நிஸ்மி ஹொல், ரஞ்சிதம் ஹொல்) சூட்டப்பட்டிருப்பதையும், தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் உயிர்த்தியாகம் செய்த மாணவர்களின் நினைவுச்சின்னங்கள் இருப்பதையும் காணலாம். மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக இது வரை உயர் கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவில்லை.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் உயர் கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டத்திருத்தங்களைச் செய்ய முயற்சி செய்கின்றது.

இந்த முயற்சியில் ஒரு கட்டமாக கடந்த சூன் மாதம் ;உயர்கல்வி - தரப்படுத்தல் மற்றும் அங்கீகாரம்’ சட்ட மூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார்கள். ஐதேக கட்சி வெற்றிபெற்றால் இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்படும்.

இலங்கையின் குறித்த ஒரு துறைசார் தொழில்முறையாளர்களின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது, அவ் அவ் துறைசார் தொழில் நிபுணர்களின் சட்ட ரீதியிலான அமைப்புகளினால் ஆகும்.

உதாரணமாக இலங்கையின் வைத்திய தொழிலின் தரபிரமானம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தரபிரமானங்களை நிர்ணயிப்பது இலங்கை வைத்திய சங்கமாகும். இச்சங்கம் 1929 ஆம் ஆண்டு வைத்திய கட்டளைச் சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இச்சங்கமே வைத்தியர்களைப் பதிவு செய்வது, வைத்தியர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது, மருத்துவ பட்டப்படிப்பை அங்கீகரிப்பது போன்றவற்றை முடிவு செய்யும்

இது போலவே கட்டிட கலைஞர்கள் தொடர்பாக இலங்கை கட்டிட நிர்மாண நிறுவனமும், பொறியியலாளர்கள் தொடர்பாக இலங்கை பொறியியல் துறை நிறுவனமும் ஆயுர்வேத வைத்திய சங்கத்தால் ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பாகவும் தரநிர்ணயங்கள் செய்யப்படும்.

கடந்த காலங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்ட போதெல்லாம் இந்த தொழில்துறைசார் அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.

உதாரணமாக அரசாங்கத்தின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட சைட்டம் மருத்துவ படிப்பு பல்கலைக்கழகத்தை அங்கீகரிக்க மறுத்திருந்தது. இலங்கை பொறியியல் துறை அமைப்புகளால் பேராதனை, மொரட்டுவ, ருகுனு பல்கலைக்கழக பொறியியல் பட்டப்படிப்பை மாத்திரமே இதுவரை அங்கீகரித்துள்ளது. வேறெந்த தனியார் நிறுவனங்கள் வழங்கும் பொறியியல் பட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை.

இந்த துறைசார் நிபுணர்களின் சங்கங்கள் அத்துறையிலிருப்பவர்களின் வாக்களிப்பினால் அமைக்கப்படுவதாகும். துறைக்குப் பொறுப்பான அமைச்சரினால் மிகச்சிறிய எண்ணிக்கையில் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும்.

முதலில், அமைச்சர்கள் தமக்குச் சார்பானவர்களைச் சங்க நிர்வாக குழுக்களுக்கு நியமித்து தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள முனைந்தார்கள். ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களும் தரம் குறைந்த தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கவில்லை.

பின்னர் அமைச்சர்களின் கையாள்களை நியமித்து சங்கத்தின் செயல்பாடுகளை குழுப்ப முனைந்தார்கள். உதாரணமாகச் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது கையாளான கொல்வின் குணரத்ன இலங்கை வைத்திய சபைக்கு தலைவராக நியமித்திருந்தார், கொல்வின் குணரத்ன சிறிது காலத்தில் வைத்திய சபையிலிருந்து விலகி, இச்சபை ஒழுங்காக வேலை செய்யவில்லை, கலைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி வந்தார். இதன் பின்னர் அரசாங்க தரப்பும் வைத்திய சபையைக் கலைக்க வேண்டும் எனச் சொல்லி வந்தார்கள்.

ஆனால், கூட்டாட்சி அரசாங்கத்தின் அனைத்து உள்ளடி வேலைகளும் முறியடிக்கப்பட்டது.

எனவே, இந்த சங்கங்களின் அதிகாரங்களை ஒழித்துக் கட்டும் வகையில், உயர்கல்வி - தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார்கள்.

இதன் மூலம் தொழில்துறைகளின் தரத்தை நிர்ணயம் செய்யும் அங்கீகாரம் செய்யும் அதிகாரங்களைப் பறித்துத் தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும். இதுவரை தொழில் நிபுணர் சங்கங்களில் தமக்கு சார்பானவர்களை நியமித்தும், அச்சங்களின் செயல்பாட்டு வியூகங்களில் ஊடுருவியும், சங்கங்களை இல்லாதொழித்தும் செய்ய நினைத்த எதுவும் கைகூடாத நிலையில் ஐதேக தலைமையிலான கூட்டாட்சி பின்கதவால் தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை அமைக்க இருக்கும் தடையை உடைக்க முனைகிறது.

புதிதாக ஸ்தாபிக்க்படவுள்ள ஆணைக்குழுவுக்கு உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், தேசிய ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோ முன்மொழியும் தலா ஒவ்வொருவரை கொண்ட பதவி வழி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், கல்வி அமைச்சர் முன்மொழியும் 15 பேரிலிருந்து சனாதிபதியினால், 9 உறுப்பினர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள்.

பதவி வழி நியமிக்கப்படும் நான்குபேரைத் தவிர மிகுதியானவர்களின்; தகுதிகள், தராதரங்கள் தொடர்பாக எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவில் அரசியல்வாதிகளினால் நியமிக்கப்படுவர்களே அதிகமாகும்.

இதுவரையும் வைத்திய துறை தொடர்பான தரநியமனம் செய்தவர்கள் வைத்தியர்கள் மாத்திரமே. ஏனைய துறைக்கும் அத்துறை சார்ந்தவர்களே தரநிர்ணயங்களை வகுத்தார்கள். ஆனால், புதிய ஆணைக்குழு மூலம் அத்துறைசாராத அரசியல்வாதிகளின் கையாள்கள் தரநிர்ணயம் செய்யும் அவலமான நிலை உருவாகும்.

மேலும், முன்வைக்கப்பட்ட சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால், பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவும் அதிகாரம் அற்றதாக மாறும். உதாரணமாக மானியங்கள் ஆணைக்குழு ஏதேனும் புதிய பாடநெறிகளை, புதிய பீடங்களை உருவாக்கும் போது, உத்தேச தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழுவினால் அனுமதி மறுக்கப்படலாம். தரமற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளை உத்தேச ஆணைக்குழு அரசியல்வாதிகளின் பணிப்புக்கு அமைய அங்கீகரிக்கும் நிலை உருவாகும்.

முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை வரி வரியாக ஆராய்ந்தால் இலங்கையின் நிபுணத்துவ தொழில்துறையின் தரம் வீழ்ச்சியடைந்து அதிபயங்கரமான சீரழிவு ஏற்படப் போவதை உணரலாம். வரிவரியாக ஆராயாமல் கடந்த கால அனுபவங்கள் இரண்டை சொல்வதன் மூலம் அந்த அவலத்தை உணர வைக்க முடியும்.

சுகாதார அமைச்சர் இராஜித்த சேனாரத்தனவின் திட்டத்தின் படி மருந்துகளின் தரத்தைப் பாதுகாக்கும் அதிகார சபை ஒன்றை அமைத்தார்கள். ஆனால், அதிகார சபையின் தலைவர், பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர்கள் லாலஜெயக்கொடி, கிசாந்த விஜேசூரிய ஆகியோர் தரமற்ற மருந்துகளைப் பாவனைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததால் அமைச்சரினால் பதவி இராஜனமா செய்ய வைக்கப்பட்டார்கள். பின்னர்,இராவுத்த சேனாரத்தன தான் சொல்வதைச் செய்யக் கூடியவர்களை அதிகார சபைக்கு நியமித்திருந்தார். இதன் பின்னரே கர்ப்பிணி தாய்மார்களுக்குக் காலாவதியாகிய போலிக் எனப்படும் மருந்து வழங்கப்பட்ட சம்பவங்கள் நடந்தது. சிறுநீரக கல் நோயாளர்களுக்குத் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சைக்காக இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்குப் பதிலாக ஆசியாவிலிருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

இது போல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை நடத்தும் நெவில் பெர்னான்டோ தனக்குச் சொந்தமான நெவில் பெர்னான்டோ தனியார் வைத்தியசாலையை அனுமதி பெறாமல் போதனா வைத்தியசாலை எனப் பெயரிட்டு நடத்தி வந்தார். இந்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இறந்த உடலுக்கு வைத்தியம் பார்த்த சம்பவங்களும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் பயிற்சிகள் வழங்கியதால் மரணமடைந்த சம்பவங்கள் நடந்து. அதுபோலவே கூட்டாட்சி அரசாங்கம் உருவாக முக்கிய பங்களிப்பு வழங்கிய சோபித தேரர் இந்த வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையையும், சைட்டம் தனியார் மருத்துவ கல்வியையும் இலங்கை வைத்திய சங்கம் அங்கீகரிக்கவில்லை. அரசியல்வாதிகளின் அனுசரணையில் தான் இது வரை இயங்கி வந்தது. எனினும் வைத்திய சங்கத்தினதும், மாணவர் அமைப்புகளினதும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது.

உத்தேச தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டால் இது போன்ற தரமற்ற கல்லூரிகள், வைத்தியசாலைகள் அங்கீகாரத்தைப் பெறும். இது எத்தகைய சீரழிவைத் தரும் என்பதை இந்தியாவில் நடந்திருப்பதை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

பிரபு வர்க்கத்தினதும், செல்வந்தர்களினதும் நலன்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் ஐதேக அதிகாரத்துக்கு வந்தால் எதிர்காலத்தில் இந்த அவலங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது.

நல்லாட்சி, சனநாயகம் போன்ற ஏமாற்று பிரச்சாரங்களைச் செய்தும், மக்களுக்குச் சலுகைகளை வழங்கியும், தந்திரமான வழியில் மக்களைச் சீரழிவுக்குத் தள்ளி பிரபு வர்க்கத்தின் நலன்களை மாத்திரம் கவனிப்பார்கள்.

நோய் வந்தால் சாதாரண மக்கள் இவர்கள் நடத்தும் தரம் குறைந்த மருத்துவ சேவையைத் தான் பெற வேண்டும். இவர்களோ சிங்கப்பூரில் சென்று நல்ல சிகிச்சை பெறுவார்கள். இந்த நிலை வர வேண்டுமா??

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram