வினா-10/15: ஆப்பிரிக்க கண்டத்தின் இயற்கைப் பிராந்தியங்களை புரிந்துகொள்வதில் காலநிலை; மற்றும் தாவரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுகள் மற்றும் சுருக்க வரைபடங்களை பயன்படுத்தி கலந்துரையாடவும்.
அறிமுகம்
உலகின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்பிரிக்கா, பல்வேறு காலநிலைகளால் உருவான பல்வேறான சுற்றுச் சூழல் தொகுதிகளையும், அவற்றுக்கேயுரிய தாவரவியல் மண்டலங்களையும் கொண்டிருக்கின்றது. ஆப்பிரிக்காவை இயற்கைப் பகுதிகளாக வகைப்படுத்துவதில் இக் காலநிலை மற்றும் தாவர மண்டலங்கள் பரவி இருக்கும் கோலங்களை புரிந்துகொள்வது அத்தியாவசியமானதாகும். இவ் இயற்கை பிராந்தியங்கள் சுற்றுசூழல் நிலைமைகளை பிரதிபலிப்பதாக மாத்திரம் இன்றி, மனித குடியிருப்புகள், விவசாய நடைமுறைகள், பொருளாதார நடவடிக்கைகள் என்பவற்றின் தாக்கத்தின் பிரகாரம் அமைந்ததாகவும் காணப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை பிராந்தியம் என்பதினை காலநிலை, தாவரவியல் பரவல், நில அமைப்பு மற்றும் மண்ணின் தன்மை போன்ற பௌதீக பண்புகளின் ஒப்பீட்டளவிலான ஒத்த தன்மையினால் வரையறை செய்யப்படும் புவியியல் பிரதேசமாகும்.
1. இயற்கைப் பகுதிகளை வரையறுப்பதில் காலநிலையின் முக்கியத்துவம்.
ஆப்பிரிக்காவின் காலநிலையானது கடலிலிருந்து அமைந்திருக்கும் தூரம், நிலமட்டத்தின் உயர்வு, பூமத்தியரேகை கோட்டிலிருந்து அமைந்திருக்கும் தூரம் என்பவற்றின் அடிப்படையில் வேறுப்படுகின்றது. இவ்வாறு வேறுப்படும் காலநிலை கோலங்களை அட்சரேகை, உயரம் மற்றும் பெருங்கடல்களுக்கு அருகாமையில் இருப்பதால் பாதிக்கப்படுகின்றன. இந்த காரணிகள் தனித்துவமான மண்டலங்களை உருவாக்குகின்றன:
அ) மத்தியக் கோட்டு காலநிலை - வெப்பமண்டல மழைக்காடுகள்
மத்தியக் கோட்டுக்கு அருகே, காங்கோ படுகை, லைபீரியா, நைஜீரியா நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு ஆபிரிக்காவின் கடலோரே பகுதிகள், மற்றும் உகாண்டானவின் சில பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியத்தில் காணப்படும் காலநிலையாகும். இப்பகுதி ஆண்டுமுழுவதும் 25-27 செல்சியஸ் வெப்பநிலை கொண்டதாகவும், 2000 மில்லிமீற்றர்க்கு அதிகமான சராசரி ஆண்டு மழைவீழ்ச்சியை பெறுவதாகவும் காணப்படுகின்றது. இக்காலநிலை என்றும் பசுமையான மரங்கள் எனப்படும் மகோனி, கருங்காலி போன்ற மரங்களால் நிறைந்த அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகளை உருவாக்கின்றது. இப்பகுதிகளில் மரம் வெட்டுதல், சேனை பயிர்ச்செய்கை ஆகியன பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக காணப்படுவதோ, வளமான உயிர்பல்வகைமையின் பொருளாதார பெறுமானங்கள் (காபன் வளம், மூலிகைகள்) காரணமான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
எடுத்துக் காட்டு – காங்கோ வெப்ப மண்டல மழைக்காடு
ஆ) வெப்பமண்டல ஈர மற்றும் உலர் காலநிலை – சவன்னா புல்வெளிகள்
இக்காலநிலை மேற்கு, கிழக்கு, தெற்கு ஆபிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றது. இங்கு ஒர் ஆண்டில 4 – 6 மாதங்கள் பருவ மழையையும்;, எஞ்சிய மாதங்களில் வரட்சியும் நிலவுகின்றது. சவான்னா புல்வெளிகளும், அவற்றில் ஆங்காங்கு பரவியிருக்கும் அகாசியா, பாபாப் மரங்களும் இப்பகுதியின் தாவரவியல் மண்டலத்தை உருவாக்கின்றது. இக்காலநிலை மேய்ச்சல் தொழில், வறட்சி காலநிலையில் தாக்கு பிடிக்க கூடிய சோளம், திணை போன்ற பயிர்ச்செய்கை போன்ற பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது.
எடுத்துக்காட்டு காட்டு - சூடானிய சவன்னா புல்வெளி பகுதி
இ) பாலைவனம் மற்றும் அரை வறண்ட காலநிலை
வடக்கே சஹாரா, தெற்கே கலஹாரி மற்றும் நமீப்) மற்றும் சஹேல் பகுதியில் காணப்படும் காலநிலையாகும். இப்பகுதி ஆண்டுக்கு 250 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியையே பெறுகின்றது. வருடம் முழுவதும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கின்றது. அரிதாக காணப்படும் ஜெரோஃபைட்டுகள், முட் புதர்கள், வரள் நில புற்கள் தாவரங்களால் செறிவற்ற தாவரவியல் மண்டலம் ஆக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பாலைவனமாகல், நீர் பற்றாக்குறை, விவசாய நடவடிக்கைகளுக்கான மிக குறைவான வாய்ப்புகள் போன்ற சவால்களை சந்தித்து வருவதால் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன.
எடுத்துக்காட்டு - சஹாரா பாலைவனம், சஹேலியன் பிரதேசம்
ஈ) மத்திய தரைக்கடல் காலநிலை
இக் காலநிலையை மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா நாடுகளை உள்ளடக்கிய ஆபிரிக்காவின் வடக்;கு பகுதியிலும், தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு முனை பகுதியிலும் காணலாம். குறைந்தளவில் மழைபொழியும் குளிர்காலமும், வெப்பமான வறண்ட கோடைக்காலமும காணப்படுகின்றது. மாக்விஸ், சாப்பரல் போன்ற மத்தியதரைக்கடல் புதர்காடுகள் இப்பகுதியின் தாவரவியல் மண்டலத்தை உருவாக்கும் பிரதான தாவரங்களாகும். இப்பகுதி திராட்சை, ஓலிவ், ஆரஞ்சு பழ உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பிரசித்தமானதாகும். எனவே இவற்றின் பயிர்ச்செய்கையும், ஏற்றுமதியும் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக காணப்படுகின்றது.
இ) உயர்நிலக் காலநிலை - மலைக் காடுகள்
இக்காலநிலையை எத்தியோப்பியன் உயர் நிலங்கள், கென்யா, தன்சானியா நாடுகளின் பிரதேசங்களை உள்ளடக்கிய கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு பகுதி போன்ற அதிக நிலமட்ட உயரத்தை கொண்ட பிராந்தியத்தில் காணலாம். நிலமட்ட உயர்வுக்கு ஏற்ப இப்பகுதியின் வெப்பநிலையும், மழைவீழ்ச்சியும் வேறுப்படுகின்றது. பொதுவாக அயிலில் இருக்கும் தாழ்நிலப் பகுதியை விட குளிர்ந்த , ஈரமான நிலைமைகளை கொண்டிருக்கும். இப்பகுதி மலைக் காடுகளையும், மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்பட் கோப்பி, தேயிலை பெருந்தோட்டங்களையும், அடர்த்தியான மனித குடியிருப்புக்களையும் கொண்டிருக்கின்றது. பெருந்தோட்ட பயிர்ச்செய்iகை, தோட்டக்கலை (பழங்கள், பூக்கள், மரக்கறிகள்) போன்ற பிரதான பொருளாதார நடவடிக்கைகளாகும்.
எடுத்துக்காட்டு - கிழக்கு ஆப்பிரிக்க மலைப்பகுதிகள் .
2. தாவரவியல் மண்டலங்களும் பிராந்திய வகைப்பாடும்
தாவரவியல் மண்டலங்கள் காலநிலை நிலைமைகளின் தெளிவான பிரதிபலிப்பாக காணப்படுகின்றன. இது ஆபிரிக்காவின் இயற்கை பிராந்தியங்களை அடையாளப்படுத்தி வகைப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. வெவ்வேறான தாவர மண்டலங்கள் ஈரப்பதன், வெப்பநிலை, நிலமட்ட உயரம் என்பவற்றின் வேறுப்பாடுகளை பிரதிபலிப்பதால் இயற்கை பிராந்தியங்களை துல்லியமாக வகுக்க முடிகின்றனது. அதனடிப்படையில் ஆபிரிக்காவின் இயற்கை பிராந்தியங்களை கீழ்வருமாரு வகுக்கலாம்.
1) மழைகாடுகள் தாவரமண்டல்- மத்தியக் கோட்டு கால பகுதிகளில் மழைக்காடு தாவரங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் ஈரப்பதத்தைக் கொண்டிருக்கின்றது. உயிர் பல்வகைமை அதிகமாக கொண்டது.
2) சவன்னா புல்வெளிகள் - இது மழைக்காடுகளுக்கும் பாலை வனத்திற்கும் இடையிலான இடைநிலை வலயம் ஆகும்.
3) பாலைவன தாவர மண்டலம் - தாவரங்கள் அரிதான வறண்ட பகுதியாகும்.
4) மலைக்காடுகள் தாவர மண்டலம் - மலைப்பகுதிகளில் மலைத் பகுதி தாவரங்களால் உருவாகின்றது.
5) மத்தியதரைகடல் புதர்காடு தாவர மண்டலம் - புதர் நிலங்கள் கோடை வறட்சியுடன் கூடிய பருவகால காலநிலையில் தோன்றுகின்றன.
3. மனித மற்றும் பொருளாதார புவியியலில் பங்கு
காலநிலை மற்றும் தாவரங்களைப் புரிந்துகொள்வது பின்வருவனவற்றில் உதவுகிறது:
• நில பயன்பாட்டு திட்டமிடல் - எ.கா., சவன்னாக்களில் கால்நடை வளர்ப்பு , நைல் பள்ளத்தாக்கில் நீர்ப்பாசன விவசாயம்.• பல்லுயிர் பாதுகாப்பு - எ.கா.- மழைக்காடு அழிவை நிர்வகித்தல்.• பேரிடர் மேலாண்மை - எ.கா., சஹேலில் வறட்சியைத் எதிர்கொள்வதற்கான தயார்நிலைகள்.• மக்கள்தொகை பரவல் - மலைப்பகுதிகள் மற்றும் சவன்னாக்களில் அடர்த்தியானது, பாலைவனங்களில் அரிதானது.
முடிவுரை
காலநிலை மற்றும் தாவரவியல் மண்டல அடிப்படையில் ஆப்பிரிக்கா கண்டத்தை வெப்பமண்டல மழை காடுகள், பாலைவன மற்றும் அறை வறண்ட வலயம், மத்திய தரை முற்பதற்காடுகள், உயர்நில மலைக்காடுகள் என பிராந்தியங்களாக பிரிக்கலாம்.
இவ் வகையில் ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிராந்தியங்களை புரிந்து கொள்வதற்கும் வரையறுப்பதற்கும் காலநிலை வடிவங்களும் தாவர மண்டலங்களும் முக்கியமானவையாகும். அவை பௌதீக புவியியல் பற்றி புரிதலையும், கலாச்சார மற்றும் பொருளாதாரத்தின் அமைவையும் பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பரம்பல் கோலங்களை புரிந்து கொள்வது மூலம் ஆபிரிக்க கண்டத்தில் வினைத்திறனான திட்டமிடல், வள முகாமைத்துவம், நிலைபேண் அபிவிருத்தி என்பவற்றுக்கு வழிவகுக்கும். இவ்வகையில் ஆபிரிக்க கண்டத்தை தாவரவியல் மண்டலங்கள் மற்றும் காலநிலை கோலங்கள் வழியாக இயற்கை பிராந்தியங்களாக வகைப்படுத்தி புரிந்துக் கொள்ள வேண்டியது பிராந்திய புவியியலின் அடித்தள பணிகளில் ஒன்றாக அமைகின்றது.
No comments:
Post a Comment