வினா-13/15: மனிதநேய புவியியலாளர்களும், விமர்சன புவியியலாளர்களும் “பிராந்தியம்" என்பதை ஒரு சமூக கட்டமைப்பாக எவ்வாறு மறுவரையறை செய்தனர் என்பதைக் கலந்துரையாடவும். உமது விடையை இரண்டு புலணுர்வு பிராந்தியங்களை உதாரணங்களாகக் குறிப்பிடுவது மூலம் வலுப்படுத்தவும்.
அறிமுகம்
பிராந்திய புவியியலானது பாரம்பரியமாக, பிராந்தியங்களை ஒத்த பௌதீக அல்லது கலாச்சார பண்புகளால் புறநிலை ரீதியாக வரையறுக்கப்படும் பிரதேசங்களாகக் கருதியது. இருப்பினும், 1970கள் தொடக்கம், மனிதநேய புவியியலாளர்களும் விமர்சன புவியியலாளர்களும் அவ்வரையறையை விமர்சனத்திற்குள்ளாகி சவால் விடுக்க ஆரம்பித்தார்கள். அவ் விமர்சனங்கள், பிராந்தியங்கள் நிலையானவை என்பதை மறுத்து, அவை ஆதிக்க உறவுகள், அடையாளங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் என்பவற்றால் வடிவமைக்கப்பட்டு சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட “இடங்கள் / வெளிகள்" என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இவ் விமர்சனங்கள் எதிர்வினையாக உருவான மறுவரையறையின் பிரகாரம் அடையாளப் படுத்தப்படும் பிராந்தியங்களுக்கு ஸ்பெயினின் கட்டலோனியா, அமெரிக்காவின் ரஸ்ட் கரை - Rust
Belt ஆகிய பிரதேசங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இப்பத்தியானது மேற்கூறிய இரு புலனுணர்வு பிராந்தியங்களை எடுத்துக்காட்டுகளாக முன்வைத்து இதனை விளக்குகின்றது.
மனிதநேய புவியியலின் பார்வையில் பிராந்தியம்
மனிதநேய புவியியலாளர்கள், நிகழ்வியல் (Phenomenology), இருத்தலியம் (Existentialism) ஆகிய இரு கோட்பாடுகளின் செல்வாக்கின் விளைவாக, இடங்கள், பிராந்தியம் தொடர்பான தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவங்களை கருத்திலெடுத்தனர். குறிப்பாக, யூ ஃபூ துவான் போன்ற புவியியலாளர்கள் மனிதர்கள் கொண்டுள்ள உணர்வுகள், பிணைப்புகள், மற்றும் உள்ளார்ந்த அர்த்தப்பாடுகள் வாயிலாகப் பிராந்தியங்கள் தோற்றம் பெறுகின்றன என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இப்போக்கு இடங்கள் மீது கொண்ட ‘இட உணர்வும் பற்றும்’, மற்றும் ‘மனச்சித்திரமும் அனுபவத்தின் புலப்பாடும்’ எனும் இரு முக்கிய பார்வைகளை முன்வைத்தது.
1. இட உணர்வும் பற்றும் (டோபோஃபிலியா – வுழிழிhடைய)
பிராந்தியங்கள் மனித உணர்வுகள் மற்றும் ஞாபகங்களால் ஏற்படுத்தப்படும் கட்டமைப்புகளாகும்;. மனிதர்கள் நிலத்தின் மீது தனிப்பட்ட மற்றும் கலாச்சார காரணங்களால் பற்றை வளர்த்துக் கொள்கின்றார்கள்.
எடுத்துக்காட்டு - ஈழத்திலிருந்து மக்கள் அரசியல் நெருக்கடிகள் காரணமாக உலகெங்கும் இடம்பெயர்ந்திருந்த போதும் அவர்களுக்கு ஈழமே தாயகமாக இருக்கின்றது. ஸ்கொட்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்னரே வேறு தேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டவர்கள் இன்றும் ஸ்கொட்லாந்தையே தமது தாயகமாகக் கொள்கின்றார்கள்.
2. மன சித்திரமும் அனுபவத்தின் புலப்பாடும்
மனிதர்கள் ஒவ்வொருவரும் இடங்கள் குறித்து தமது சொந்த மனச்சித்திரங்களை, அவர்களது அனுபவங்கள், ஞாபகங்கள், நாளாந்த செயற்பாடுகள் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையான இட வரைபடங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.
உதாரணமாக இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் தமது வாழிட பிரதேசங்களை தமது கலாச்சார அடையாளம், வாழ்வியல் அனுபவங்கள், சமூக கூட்டுணர்வு என்பவற்றின் அடிப்படையில் மலையகம் என அடையாளப்படுத்தி வருகின்றமையை கூறலாம். அதே போல் உலக நாடுகள் பலவற்றில் சீனர்கள் வியாபார ரீதியாகத் தொடர்பு கொண்டு புலம்பெயர்ந்திருக்கும் இடங்கள் சைனாடவுன் என அழைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு, மனிதநேய புவியியலாளர்கள் பிராந்தியங்களைத் தனிநபர்கள் மற்றும் சமூகங்களால் மாறுபட்ட வகையில் கருதப்பட; கூடிய, வாழ்வியல் அனுபவ மற்றும் உணர்வுகள் அடிபடையில் தோற்றம் பெறும் இடங்களே என்பதை வெளிப்படுத்தினார்கள்.
விமர்சன புவியியல் பார்வையில் பிராந்தியம்
மார்க்சியவாதம், பின் - அமைப்பியல்வாதம், பின் காலனித்துவ கோட்பாடு போன்றவற்றிலிருந்து தோற்றம் பெற்ற விமர்சன புவியியல், பிராந்தியங்களை ஆதிக்கம் மற்றும் கருத்தியலின் விளைப்பொருள் என வரையறை செய்தது. இவ் மறுவரையறை படுத்தலுக்குக் காரணமாக அமைந்த முக்கிய பங்களிப்புகளை கீழ்வருமாரு வரிசைப்படுத்தலாம்.
1. பிராந்தியங்கள் சமூக கட்டுமானத்தால் உருவாகுபவை
அன்சி பாசி அவர்கள் பிராந்தியங்கள் எனப்படுவது கருத்து பரிமாறல்கள், ஸ்தாபன உருவாக்கம், நீண்டகால நடைமுறைகள் மூலமாகக் கட்டமைக்கப்பட்டு, காலப்போக்கில் அங்கீகாரத்தினை பெறுகின்றன என்றார்.
அதாவது எல்லைகளை வகுத்தல், வரைபடங்கள், அரசாங்கங்களின் கொள்கையாக்கங்கள் என்பன பிராந்தியங்களை உத்தியோக பூர்வமானதாகின்றது. எனினும், இதன் காரணமாக சில தரப்பினர் அதிகாரத்தை அடைவதும், சிறுபான்மை இனங்கள் போன்ற சில தரப்பினர் ஒடுக்கப்படுவதும் நடக்கின்றது.
2. பிராந்தியங்கள் குறித்த நோக்கங்களுக்காக உருவாக்கப்படுபவை
பிராந்தியங்கள் வெறும் வரைபடங்களில் குறித்து வரையறுக்கப்பட்ட நிலையான பிரதேசங்கள் என்பதை மறுத்து, அவை பொருளாதார வளர்ச்சி, தேசிய ஒற்றுமை போன்ற குறிப்பிட்ட தேவைகளின் பொருட்டு நடைமுறை ரீதியாக உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்படும் பிரதேசங்கள் என்ற பார்வை முன்வைக்கப்பட்டது.
3.கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பிராந்திய உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன
விமர்சன புவியியலாளர்கள் பிராந்திய அடையாளங்களுக்கு எதிரான அல்லது ஆதரவான மக்களின் முன்னெடுப்புகள் பிராந்தியங்களின் உருவாக்கத்தை ஆதரிக்கவும் மறுக்கவும் செய்வதை ஆராய்ந்து, இதுவும் பிராந்திய உருவாக்கத்தில் ஓர் காரணியாகச் செயற்படுவதை எடுத்துக் காட்டினார்கள். எடுத்துக்காட்டாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்காகப் புலனுணர்வு பிராந்தியங்களைக் கட்டமைக்கின்றார்கள், அதே பிராந்தியமயமாக்கல் காரணமாக ஒடுக்கப்படும் மக்கள் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள்.
எடுத்துக் காட்டுகள்
பிராந்தியங்கள் புவியியல் அம்சங்களால் மாத்திரம் தோற்றம் கொள்பவை எனும் வரையறையை மறுத்து அவை கலாச்சார உணர்வு, ஆதிக்க உறவுகள் போன்ற சமூக காரணிகளாலும் வடிவமைக்கப் படுபவை என மானிட புவியியலாளர்களும், விமர்சன புவியியலாளர்களும் முன்வைத்த மறுவரையானது ஸ்பெயினின் கட்டலோனியா பிராந்தியத்தியமும், அமெரிக்காவின் ரஸ்ட் கரையும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ் இரு எடுத்துக்காட்டுகளும் மனிதர்களின் நோக்கும், அரசியல் முன்னெடுப்புகளும் பிராந்திய அடையாளங்களை வடிவமைப்பை வெளிக்காட்டுகின்றன. இக்காரணிகளை மனிதநேய அம்சங்கள் மற்றும் விமர்சன அம்சங்களாக வகைப்படுத்தி நோக்க முடியும்.
எடுத்துக்காட்டு 1: கட்டலோனியா (ஸ்பெயின்)
பின்னணி
கட்டலோனியோ என்பது ஸ்பெயின் நாட்டின் உத்தியோகப்பூர்வமான 17 தன்னாட்சி பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் தனித்துவமான கலாச்சாரம், வரலாறு என்பவற்றைக் கொண்ட கட்டலான் மொழி பேசும் சமூகத்தினரின் தாயகமாகும். இவர்கள் ஸ்பெயின் தேசிய அரசின் ஆளுகையிலிருந்தாலும் தம்மைத் தனித்துவமான தேசியமாகக் கருதி அரசியல் ரீதியாகப் பிரிந்து தனி தேசமாகும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றார்கள்.
மனிதநேய கண்ணோட்ட அம்சங்கள்
கலாச்சார பிணைப்பு - மொழி, கலாச்சார விழாக்கள், தேசிய சின்னங்கள் போன்றவற்றின் ஊடாக ஆழமான கலாச்சார பிணைப்பும், தேசிய கூட்டுணர்வும் வெளிப்படுத்தப்படுகின்றது.
தாயக பற்று – கட்டலோனிய பிராந்திய மக்கள் ஸ்பெயின் அரசின் அங்கமாக இருந்த போதிலும், கட்டலோனியாவை ஸ்பெயினில் இருந்து வேறுபட்ட பிராந்தியமாகவும், தமது தாயகமாகவும் கருதுகின்றார்கள். இது வரலாற்று ரீதியாக கட்டலோனியா பிரதேசம் தன ஆளுகை பிரதேசமாக இருந்த கடந்த கால பதிவுகளிலிருந்து மேலெழுந்த உணர்வாகும்.
விமர்சன கண்ணோட்ட அம்சங்கள்
ஸ்தாபன கட்டமைப்புக்கள் - கட்டாலான் பிராந்திய அரசு, பிராந்தியத்திற்குரிய கல்விக் கூடங்கள், ஊடகங்கள், கொள்கைகள் என்பன தனித்த கட்டாலான் பிராந்தியம் எனும் கருத்தை வலுப்படுத்துகின்றன.
அரசியல் முன்னெடுப்புக்கள் – 2017 ஆம் நடத்தப்பட்ட தனித்த கட்டலான் பிராந்தியத்திற்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசு சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தியமையானது, கட்டலான் மக்கள் தமது தனித்த பிராந்திய அபிலாசைக்காக அரசியல் முன்னெடுப்புகளில் ஈடுபடுகின்றமைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஆதிக்கமும் எதிர்வினையும் - ஸ்பெயின் அதிபராக பிராங்கோவின் இருந்த காலத்தில் கட்டலோனியாவின் பொருளாதார வளங்களும், மூலாதாரங்களும் ஸ்பெயினின் தலைநகரான மட்ரிட் நோக்கி நகர்த்தப்பட்டமை மற்றும் கட்டலோனியா மீது மேற்கொள்ளப்பட்ட கலாச்சார ஒடுக்குமுறைகள் அவர்களிடையே கட்டலோனிய பிராந்திய உணர்வை தூண்டுகிறது.
எடுத்துக்காட்டு 2: ரஸ்ட கரை (அமெரிக்கா)
பின்னணி
"ரஸ்ட் கரை" எனப்படுவது ஒரு காலத்தில் கனரக தொழில் மற்றும் இரும்பு உற்பத்தியால் ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு அமெரிக்காவின் பகுதியைக் குறிக்கிறது. இப்பிரதேசம் தற்காலத்தில் பொருளாதார சரிவு மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளையும் அனுபவித்து வருகிறது. இப்பகுதிக்கு அதிகாரப்பூர்வ எல்லை எதுவும் இல்லை, சர்ச்சைக்குரிய புலனுணர்வு பிராந்தியமாகவே காணப்படுகின்றது.
மனிதநேய கண்ணோட்ட அம்சங்கள்
• கூட்டு உணர்வு : கடந்த காலத்தில் உருக்கு தொழிற்துறையில் அடைந்திருந்த செல்வாக்கு, பெருமை என்பவற்றுடன் பொருளாதார சரிவு ஏற்படுத்திய இழப்புணர்வும், செழிப்பான கடந்த காலத்தின் மீதான ஏக்கமும் ரஸ்ட கரை பகுதி மக்களிடையே கூட்டு உணர்வை உருவாக்கி உள்ளது.
• மன சித்திரம் : ரஸ்ட் கரை உத்தியோகபூர்வ எல்லைகளைக் கொண்ட பிராந்தியம் அல்ல. இது மக்களிடையே நிலவும் கூட்டுப் புரிந்துணர்வினால் கட்டமைக்கப்பட்டதாகும். ரஸ்ட் கரை தொடர்பான கருத்தாக்கம் ஊடகங்கள் மற்றும், அனுபவ பகிர்வுகள் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது. சில நகரங்கள் (கிளீவ்லேண்ட், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட) அவற்றின் பொதுவான வரலாறு, கூட்டாகப் பொருளாதார சீரழிவுக்கு உள்ளானமை போன்ற காரணங்களால் ரஸ்ட் கரை பிராந்தியம் தொடர்பான கருத்தாக்கங்களில் முதன்மையாக அடையாளப்படுத்தப்படும் இடங்களாகி இருக்கின்றன.
விமர்சன கண்ணோட்ட அம்சங்கள்
• பொருளாதார மறுசீரமைப்பின் தாக்கம் : உலகமயமாக்கல் மற்றும் புதிய தாராளமயக் கொள்கைகள் மூலதன அசைவுகளை மறுசீரமைத்தன, இது இப்பகுதியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு வழிவகுத்தது. இதன் காரணமாக இப்பிரதேசங்கள் பொருளாதார ரீதியாகக் கைவிடப்பட்டுச் சீர்குலைந்து போன பிரதேசங்களாகின.
• கூட்டு எதிர்வினையாற்றல் : பொருளாதார ரீதியாகக் கைவிடப்பட்டுச் சீர்குலைந்தமைக்கு எதிர்வினையான இப்பிரதேசத்தின் கடந்த கால பெருமைகளையும் வளத்தையும் மறுமலர்ச்சி அடையச் செய்யும் முன்னெடுப்புகளை இப்பிராந்தியத்தில் காணமுடிகின்றது. குறிப்பாகப் புத்தாக்க முயற்சிகளையும், புதிய தொழில் நுட்பங்களை உள்வாங்குதலையும் பரவலாக அவதானிக்க முடிகின்றது.
• கொள்கை வகுப்பாக்கத் தாக்கங்கள் : ஐக்கிய அமெரிக்க அரசு இப்பிரதேசங்களை மீள் சரிசெய்வதை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்துள்ளவையானது, இப் பிரதேசம் தனியான பிராந்தியம் என்பதை அங்கீகரித்து வலுப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.
முடிவுரை
மனிதநேய புவியியலாளர்களும், விமர்சன புவியியலாளர்களும் பிராந்தியங்களை நிலையான, புறநிலை பகுதிகளாக அல்லாமல் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட, மாறும் தன்மையுடைய பிரதேசங்கள் என மறுவரையரை செய்துள்ளார்கள். உணர்வு ரீதியான பிணைப்பு, கருத்துருவாக்கம் மற்றும் பிரச்சாரம், ஆதிக்க நிலைமைகளும் உறவுகளும் போன்ற காரணங்களால் பிராந்தியங்கள் கட்டமைக்கப்படுகின்றன. கட்லோனியா மற்றும் ரஸ்ட கரை பிராந்திய வாதங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பொருளாதார நெருக்குவாரங்கள் காரணமாகப் புலனுணர்வு பிராந்தியங்கள் உருவாகின்றன என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகின்றன. இது பிராந்திய புவியியலை மனிதநேய மற்றும் விமர்சன கண்ணோட்டத்தில் அணுக வேண்டியதின் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இவ்வகையில் பிராந்தியங்கள் தொடர்பிலான மனிதநேய மற்றும் விமர்சன புவியியலாளர்களின் மறுவரையரையானது உலகமயமாக்கல் சூழலில் இடங்கள், அடையாளம், சமூக நீதி என்பன பற்றிய தெளிவான புரிதலுக்கு துணைபுரிகின்றது. இந்த மறுகருத்தாக்கம் உலகமயமாக்கப்பட்ட உலகில் இடம், அடையாளம் மற்றும் சமூக நீதி பற்றிய நமது புரிதலை வளப்படுத்துகிறது.
No comments:
Post a Comment