Post Top Ad

தெற்காசிய பிராந்தியத்தின் அபிவிருத்தியும் நகரமயமாக்களும்

வினா-11/15: தெற்காசியாவில் பிராந்திய வளர்ச்சியை வடிவமைப்பதில் நகரமயமாக்கலின் பங்கை மதிப்பிடுக.

அறிமுகம்
நகரமயமாக்கல், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகையின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் செயல்முறையாகும். இது பிராந்திய அபிவிருத்தியில் முக்கியமான செல்வாக்கு செலுத்தும் காரணியாகும். பிராந்திய வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொருளாதார, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அம்சங்களின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில், விரைவான நகரமயமாக்கலானது பொருளாதார மாற்றத்தின் விளைவாகளில் ஒன்றாகவும், சமவேளையில் பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்தும் இயக்குவிசையாகவும் காணப்படுகின்றது. நகரங்கள் இயல்பாக வளர்ச்சியடைவதும், நகர்ப்புறங்களை நோக்கிய இடம்பெயர்வு என்பவற்றின் காரணமாக நகரங்கள் விரிவடைந்து செல்வதானது, பிராந்திய பொருளாதார கட்டமைப்புகள், மக்கள்தொகை பரம்பல் மற்றும் சேவை வழங்கல் அமைப்புகளை மறுவடிவம் செய்வதில் அவற்றின் பங்கிற்கு சான்றாகின்றது. இப்பத்தியானது தெற்காசிய பிராந்திய வளர்ச்சியில் நகரமயமாக்கல் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அது ஏற்படுத்தும் நன்மைகள் மற்றும் முகம் கொடுக்கும் சவால்களை ஆராய்கின்றது.

தெற்காசியாவில் நகரமயமாக்கல் போக்குகள்
தெற்காசியா உலகின் மிக விரைவான நகரமயமாக்கல் ஏற்பட்டு வரும் பிராந்தியங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. மும்பை, டெல்லி, டாக்கா, கராச்சி மற்றும் கொழும்பு போன்ற நகரங்கள், பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து வேலைவாய்ப்பு, வாழ்க்கை தர உயர்வு போன்றவற்றிற்காக மக்கள் குடிப்பெயர்ந்து வரும் பொருளாதார வலுமையங்களாக மாறியுள்ளன. இந்தியாவில் மட்டும், 34 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் டாக்கா உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரங்களில் ஒன்றாகி இருக்கினறது. இப் பிராந்தியத்தில் உள்ள நகர்ப் புற பகுதிகளின் அளவும் அவற்றின் செல்வாக்கும் தொடர்ச்சியாக விரிவடைந்து வருகின்றன. சில பிரதேசங்களில் நகரமயமாக்கல் திட்டமிடப்படாமல் நடக்கின்றது. இதன் விளைவாக முறைசாரா குடியேற்றங்களுக்கும், நெருக்கடிக்குள்ளான நகர்புற சேவைகளுக்கும் காரணமாகின்றது. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், நகரங்கள் பொருளாதார அபிவிருத்தி உத்திகளின் மையமாகவே காணப்படுகின்றன.

நகரமயமாக்கல் தெற்காசிய பிராந்திய வளர்ச்சியில் ஏற்படுத்தும் சாதகமான தாக்கங்கள்

1. பொருளாதார அபிவிருத்தியின் மையப்புள்ளியாக தொழிற்படல்
தெற்காசியாவில் பிராந்திய வளர்ச்சிக்கு நகரமயமாக்கல் பல வழிகளில் நன்மைகளைக் செய்துள்ளது. முதலாவதாக, நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் இயக்குவிசைகளாக மாறியுள்ளன. பெங்களுரு (இந்தியா) மற்றும் கொழும்பு (இலங்கை) போன்ற நகர்ப்புற மையங்கள் தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட வளமான சேவைத் துறைகளைக் கொண்டுள்ளன நகரங்களாக எழுச்சி கண்டுள்ளன. இதன் காரணமாக இந்நகரங்களில் தொழில்துறைகள் குவிவடைந்து வளர்ச்சியடைந்து வருகின்றன, அதனால் இப்பிரதேசங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றது. இவ்வாறாக இந்நகரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகி, பிராந்தியத்தின் பொருளாதார போக்கை வடிவமைக்கும் முக்கிய காரணி ஆகின்றது.

2. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் பின்தங்கிய பிரதேசங்களுடனான இணைப்பும் ஏற்படல்
நகர்ப்புறங்கள் பகுதிகளிலே போக்குவரத்து, பாடசாலைகள், மருத்துவமணைகள், எண்ணிம சேவைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்காக அதிக முதலீடு செய்யப்படுகின்றது. உதாரணமாக புதுதில்லி, டாக்கா போன்ற நகரங்கள் அதிவிரைவு பாதைகள், மேம்பாலங்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக நகரங்களில் வாழ்க்கை தரம் மேம்பட்டதாகவும், சந்தை வசதிகள் பெருகியதாகவும் காணப்படுகின்றது. சூழவுள்ள பிரதேசங்களுடன் வலுவான இணைப்புகள் ஏற்படுகின்றது. இவற்றின் மூலமாக பின்தங்கிய பிரதேச உற்பத்தியாளர்கள் சந்தைகளை இலகுவாக அணுகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இது சூழவுள்ள பிரதேசங்களில் குறிப்பிடதக்க அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றது.

3. புத்தாக்க முயற்சிகளுக்கும், தொழில்முனைவுகளுக்கும் தளமாக அமைதல்
நகரபகுதிகள் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள் போன்ற நிறுவனங்களுடன் பல்வேறு திறமை படைத்தவர்கள், அறிவாந்தவர்களும் அதிகளவில் மையம் கொள்ளும் பகுதிகளாக காணப்படுவதால், புத்தாக்க முயற்சிகளையும், தொழில்முனைவுக்கும் ஆதரவளிக்கும் தளமாகவும், ஊக்குவிக்கும் களமாகவும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் அதிகரித்த சனத்தொகை, திறன்வாய்ந்த தொழில் படை, வலுவான உட்கட்டமைப்பு என்பவற்றின் காரணமாக எண்னிம சேவைத் தொழில்களுக்கான மையங்கள் ஆகியுள்ளன. இதனை தளமாக பயன்படுத்திப பல்வேறு தொழில் முனைவார்களும், புத்தாக்க முயற்சியாளர்களும் எண்ணிமசார் சேவை தொழில்துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

4. பிராந்திய ஒருங்கிணைப்பும் வர்த்தக வளர்சியும்
நகர்ப்புற மையங்கள் பிராந்திய மற்றும் தேசிய வர்த்தக வலையமைப்பின் மூலோபாய முனையங்களாக தொழிற்படுகின்றன. எடுத்துக்காட்டாக கொழும்பு, மும்பை, சிட்டகாங் ஆகிய துறைமுக நகரங்கள் வர்தகத்திற்கும் விநியோகத்திற்குமான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம், தெற்காசிய பொருளாதாரத்தை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் மையங்களாக தொழிற்படுகின்றன. அத்துடன் சுற்றுவட்டார் பிரதேசங்களை உட்கட்டமைப்பு வசதிகள் மூலமாக ஒருங்கிணைத்து, இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்துக்கான நுழைவாய்களாகவும் செயற்படுகின்றன. இதன் காரணமாக நகரமயமாக்கல் புறநகர் உலகளாவிய பொருளாதார சந்;தையில் தெற்காசியாவின் பங்கை வலுப்படுத்துகிறது.

நகர மயமாக்கல் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள்
1. நகர – கிராம வேறுப்பாடுகளை அதிக படுத்துகின்றமை
நகரமயமாக்கல் காரணமாக நகரங்கள் பொருளாதார ரீதியாக அதிக வளர்ச்சியை பெறும் அதே வேளை, கிராம புறங்கள் அடிக்கடி பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்வதுடன், குறைந்த முதலீடுகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் பெறுகின்ற. இவ் சமத்துவமின்மை சமூக ஏற்றத் தாழ்வுகளை மென் மேலும் அதிகப்படுத்துகின்றது. சில நேரங்களில் இது பிராந்தியங்களில் அதிருப்தியின்மைக்கும், அமைதியின்மைக்கும் வழிவகுக்கின்றது.

2. முறையற்ற குடியிருப்புகள் அதிகரிக்கின்றமை
திட்டமிடப்படாத நகர விரிவாக்கம் சேரிப்பகுதிகள் மற்றும் முறைசார வீடுகளின் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது. உதாரணமாக மும்மையில் நீண்டகால திட்டமிடப்படாத நகரமயமாக்கல் காரணமாக 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சேரிப்பகுதிகளில் வாழ்கின்றார்கள். டாக்கா, கராச்சி ஆகிய இவ்வாறான நகரங்களும் முறைசாரா குடியிருப்புகளின் பெருக்கத்தினால் நெருகடிகளை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக சுத்தமான குடிநீர் இன்மை, சுகாதார குறைப்பாடுகள் , குறைந்த வாழ்க்கை தரம் போன்ற நிலைமைகள் ஏற்பட்டு பிராந்தியத்தில் சமத்துவமற்ற நிலையை அதிகப்படுத்துகின்றது.

3. சுற்றுச் சூழல் சீர்குலைவு
தொடர்ச்சியான நகர விரிவாக்கம் பாரிய அளவுகளில் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தெற்காசிய நகரங்கள் நகரமயமாக்கல் காரணமாக காற்று மற்றும் நீர் மாசடைதல், போக்குவரத்து நெரிசல், குப்பை கழிவுகள் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. எடுத்தக்காட்டாக முறையற்ற தொழிற்சாலை கழிவு வெளியேற்றத்தால் டாக்கா நகரின் புரிகங்கா நதி அதிகபடியாக மாசடைந்து சூழல் தொகுதி அழிவுக்குள்ளாகியுள்ளமையை குறிப்பிடலாம். இவ்வாறு நகரமயமாக்கம் பிராந்தியத்தின் சுற்றுச் சூழல் சீர்குலைவை ஏற்படுத்தி சுகாதாரம், விவசாயம் என்பவற்றையும் , பிராந்தியத்தின் ஸ்திர தன்மையையும் பாதிப்படைய செய்கின்றது.

நகரமாயமாக்கல் எதிர்கொள்ளும் சவால்கள்
தெற்காசியாவில் நகரமயமாக்கம் அநேகமான சந்தர்ப்பங்களில் திட்டமிடல், கொள்கை வகுப்பாங்களை விஞ்சும் அளவுக்கு வேகமாக இடம்பெறுகின்றது. இதன் காரணமாக ஒழுங்கற்ற வளர்ச்சியும் உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது, பலவீனமான வினைத்திறனற்ற ஆட்சி நிர்வாகம், ஸ்தாபனங்களிடையே ஒருங்கிணைப்பு இன்மை, நிதிதட்டுப்பாடுகள் ஆகியவை நகரமயமாக்கலை திறம் பட நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துகின்றன. மேலும், மக்கள் இயல்பாகவே நகரங்களை நோக்கி அதிகளவில் குடிப்பெயர்ந்து வருகின்றமை இந்நிலைமைகளை மேலும் மோசமாக்கின்றது.

சவால்களுக்கான எதிர்வினை
தெற்காசிய அரசுகள் நகரமயமாக்கலின் சவால்களை நிலை பேண் கொள்கை வகுப்பாக்கம் மற்றும் திட்டமிடல் மூலம் எதிர்கொள்கின்றன. உதாரணமாக இந்திய அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், இலங்கை அரசாங்கத்தின் மெகாபோல்ஸ் திட்டம் என்பன குறைந்தளவான சுற்றுச் சூழல் தாக்கத்துடன் நவீன நகரங்களை வடிவமைப்பதை இலக்காக கொண்டிருக்கின்றன. மேலும், கிராம புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இரண்டாம், மூன்றாம் நிலை புறநகர்களை விருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமும் பிராந்தியத்தின் சீரான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுகின்றன.

முடிவுரை
தெற்காசியாவில் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் ஆனது பிராந்தியத்தின் அபிவிருத்திக்கான ஆற்றல்மிக்க இயக்குவிசையாக தொழிற்பட்டு, பொருளாதார வளர்ச்சி, புத்தாக்க முயற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை வளர்க்கிறது. இது வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையானதாகும். எனினும், சரியாக திட்டமிடப்பட்டு முகாமை செய்யப்படாத நகரமயமாக்கல் பிராந்தியத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, சுற்றுச்சூழல் சீரழிவையும், சமூக அநீதியையும் வளர்த்து விடகூடும். எனவே, அனைத்து பிராந்தியங்களும் சீராக நியாயமான வகையில் பயனடைவதை உறுதிசெய்யும் பொருட்டு, நகர்ப்புற அபிவிருத்தியானது பிராந்திய திட்டமிடல் உத்திகளை உள்வாங்கி மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ்வாறாக, நகரமயமாக்கல் செயன்முறை வினைத்திறனான கொள்கை வகுப்பாக்கத்தின் பிரகாரம் செயற்படுத்தப்படும் போதே, அது சீரான நீடித்து நிலைக்க கூடிய பிராந்திய அபிவிருத்திக்கான திறவுக்கோலாக அமையும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram