Post Top Ad

அளவுசார் புரட்சியும் பிராந்திய புவியியலும்

வினா-12/15: அளவுசார் புரட்சி பிராந்திய புவியியலில் ஏற்படுத்திய தாக்கத்தை மைய இடக் கோட்பாட்டையும், அது யதார்த்த உலகில் எதிர்கொள்ளும் மட்டுபாடுகளையும் மதிப்பாய்வு செய்வது மூலமாக கலந்துரையாடுக.

அறிமுகம்
1950 – 60 களில் ஏற்பட்ட அளவுசார் புரட்சி புவியியலில் கருத்தோட்ட பெயர்வை (paradigm shift  – ஒரு துறையில் ஏலவே நிலவி வரும் சிந்தனைகள், அணுகுமுறைகள், அல்லது நம்பிக்கைகள் ஆகியவற்றில் முழுமையான அடிப்படை மாற்றம் ஏற்படல்) ஏற்படுத்தியது. இதன் விளைவாக அதுவரை பிராந்தியங்களை விளங்கப்படுத்துவதற்கு பின்பற்றிய அதன் பௌதீக, கலாச்சார பண்புகளை விவரிக்கும் அணுகுமுறையிலிருந்து, விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளின் மூலம் விளங்கப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறினார்கள். இவ்விஞ்ஞான அனுகுமுறைகள் தரவுகள் மற்றும் அவதானிப்புகளை மேற்கொண்டு பரப்பியல் கோலங்களை ஆராய்தல், கோட்பாட்டு மாதிரிகளை உருவாக்கி பரப்பியல் சார் நடத்தைகளை விளங்கப்படுத்துதல், புள்ளிவிபரங்கள் மற்றும் கணிதவியலை பயன்படுத்தி புவியியலை ஆராய்தல் ஆகிய வழிமுறைகளை கொண்டிருந்தது. இத்தகைய கருத்தோட்ட பெயர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக 1933 ஆம் ஆண்டு வால்டர் கிறிஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்ட மைய இடக் கோட்பாடு (Central Place Theory (CPT)) காணப்படுகின்றது. இதன் மூலம் வால்டர் கிறிஸ்டர் அவர்கள் பட்டிணங்கள், நகரங்கள், கிராமங்கள் என்பவற்றின் பண்புகளை விவரித்து கூறி வந்த அணுகுமுறைக்கு பதிலாக, அப் பட்டிணங்கள், நகரங்கள், கிராமங்கள் போன்ற குடியிருப்புக்கள் பரப்பியல் ரீதியாக ஒழுங்கமையும் விதத்தை விளக்கி கூறவும், எதிர்வு கூறுவதற்கும் உகந்ததொரு முறைசார் பொருளாதார மாதிரியை பயன்படுத்தினார். இவ் மைய-இடக் கோட்பாடு பரப்பியல் பகுப்பாய்வுகளை பெருமளவில் மேம்படுத்தி இருந்தாலும், யதார்த்த உலகின் சிக்கலான அமைப்புகளை கற்க இதனை பிரயோகிக்கும் போது குறிப்பிடதக்க அளவில் மட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது.

பிராந்திய புவியியலில் அளவுசார் புரட்சியின் தாக்கம்

1. பிராந்திய புவியியலை புறநிலை உண்மைகள் மற்றும் ஆய்வு முறையியல் தளுவிய கற்கையாக மாற்றியமை
அளவுசார் புரட்சி புவியியலில் ஒட்டுறவு ஆய்வு, பரப்பியல் புள்ளிவிபரங்கள் போன்ற புள்ளிவிபர முறைகளை அறிமுகப்படுத்தியது. இது கருதுகோள்களை பரிசோதித்தல், அளவிடக் கூடிய தரவுகளை பயன்படுத்துதல், விஞ்ஞான ரீதியான முடிவுகளை பெற்றுக்கொள்ளல் (வேறொருவர் ஒரே ஆய்வை அதே தரவுகளை கொண்டு செய்யும் போது ஒத்த முடிவை பெறுவதை உறுதிபடுத்தல்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இப் பெயர்வு (Shift) பிராந்திய புவியியலை புறநிலையில் காணப்படும் உண்மையும், தரவுகள் அடிப்படையிலான பகுப்பாய்வையும் ஆதாரமாக கொண்டமைந்த கற்கையாக மாற்றியமைத்தது. இதன் பிரதிபலனாக சனத்தொகை அடர்த்தி, காணி பயன்பாடு, பொருளாதார பலன்கள் போன்ற காரணிகளை பயன்படுத்தி பிராந்தியங்களை முறைசார் முறைகளில் ஒப்பிட்டு ஆராய முடிந்தது.

2. பரப்பியல் மாதிரிகள் அறிமுகப்படுத்ப் பட்டமை
அளவுசார் புரட்சியின் விளைவாக பரப்பியல் நிகழ்வுகளை விளக்குவதற்கு புவியியலாளர்கள் எளிமைபடுத்தப்பட்ட மாதிரிகளை உருவாக்கினார்கள். இம்மாதிரிகள் குடியேற்ற அமையும் விதம், வர்த்தக ஓட்டங்கள், புத்தாக்க முயற்சிகளின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான கற்றல் நுட்பங்கள் கிடைத்தன. இப்புரிதல்கள் நகரத்திட்டமிடல், போக்குவரத்து அபிவிருத்தி, பிராந்திய வளர்ச்சி என்பவற்றுக்கு உதவுவதாக அமைகின்றது.

3. தொழிற்பாட்டு அணுகுமுறைகளுக்கு மாறியமை
அளவுசார் புரட்சிக்கு முன்னர், பிராந்திய புவியியல் தனித்தனி இடங்களின் பண்புகளை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. அளவுசார் புரட்சியின் விளைவாக, அனைத்து இடங்களிலும் பிரயோகித்து ஆராய்வதற்கு பயன்படுத்தக் கூடிய பொதுவான விடயங்களும், விதிமுறைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பலனாக வெவ்வேறு இடங்களுக்கு இடையிலான தொடர்புகளையும், அவை இடைத்தொடர்பு கொள்ளும் மற்றும் தொழிற்படும் விதங்களை விளக்குவதற்கான மாதிரிகள் உருவாக்கப்பட்டன. இம்மாற்றத்தின் காரணமாக புவியியலாளர்கள் பிராந்தியங்களை அவை நாளாந்த வாழ்வியில் எத்தகைய தொழிற்பாட்டை கொண்டிருக்கின்றன என்பதின் அடிப்படையில் வரையறை செய்ய ஆரம்பித்தார்கள்.

4. தொழில்நுட்பம் மற்றும் தரவு பயன்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியமை
அளவுசார் புரட்சியானது பெருமளவில் விஞ்ஞான தரவு சேகரங்களை (எ.கா – சனத்தொகை கணக்கெடுப்பு) உருவாக்கியமையும், கணனி பயன்பாட்டின் வளர்ச்சியும்; சமகாலத்தில் இடம்பெற்றதன் காரணமாக ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து கொண்டன. எண்ணிம தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் காரணமாக புவியியல் தகவல் முறைமை போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட காரணமாகியது. இவ்வாறு அளவுசார் புரட்சி இன்றைய காலக்கட்ட கொள்கையாக்கம் மற்றும் திட்டமிடங்களில் பயன்படுத்தப்படும் தரவு சார் பரப்பியல் பகுப்பாய்வுகளுக்கு அடித்தளமிட்டது.

மைய இடக் கோட்பாடு (CPT)
வால்டர் கிறிஸ்டாலரின் மைய இடக் கோட்பாடானது, மனித குடியிருப்புக்கள் சுற்று வட்டாரத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களுக்கு பண்டங்களையும், சேவைகளையும் வழங்கும் ‘மைய இடங்களாக’ தொழிற்படுகின்றன என கூறுகின்றது.இக் கோட்பாடு பின்வரும் முக்கிய அனுமானங்களை முன்வைக்கின்றது:

• மக்களின் வாழ்விட நிலம் மலைகள், ஆறுகள், போக்குவரத்து தடைகள் எதுவுமற்ற தட்டையான சமவெளிகளாக காணப்படுகின்றது.

• மக்கள் தொகை சீரான அளவில் பரவி இருப்பதுடன், அனைவரும் ஒரேமாதிரியான கொள்வனவு சக்தியை கொண்டிருப்பார்கள்.

• மக்கள் அனைவரும் பண்டங்கள், சேவைகளை நுகரும் போது தமக்கு மிகவும் அருகிலுள்ள விநியோகஸ்தரை தேர்ந்தெடுக்கும் அறிவுதிறனை கொண்டிருப்பார்கள்.

• குடியிருப்புக்களிடையே படிநிலை அமைப்பு காணப்படும். அதாவது,சிறிய குடியிருப்புகள் அடிப்படை பண்;டங்கள் சேவைகளை வழங்குவதாகவும், பெரிய குடியிருப்புகள் பெரியளவிலான விசேட பண்டங்கள், சேவைகளை வழங்குவதாகவும் படிநிலை அமைப்பை கொண்டிருக்கும்.

மேற்கூறிய அனுமானங்களின் அடிப்படையிலான இலட்சிய நிலைமைகளி; குடியிருப்புகள் தெளிவான அறுகோண வடிவத்தில் அமைந்திருக்கும் என மைய இடக் கோட்பாடு அனுமானிக்கின்றது. இதன் மூலம் பண்டங்கள் சேவைகளின் விநியோகம் அநாவசியமான முறையில் ஒரே இடங்களில் குவிவது தடுக்கப்பட்டு வினைத்திறனான வகையில் பிராந்தியம் முழுவதும் விநியோக்கிப்படும். இவ்வகையில் படிநிலை அமைப்பு முறை (குடியிருப்புகளின் படிநிலை) மற்றும் இடைவெளி (மைய இடங்களுக்கு இடையிலான தூரம்) என்பன அடிப்பபடை பரப்பியல் பண்புகள் எனும் கருத்தை இக்கோட்பாடு முன்வைக்கின்றது.

மைய இடக் கோட்பாடு : விமர்சன மதிப்பாய்வு

1. யதார்த்தமற்ற அனுமானங்கள்
மக்களின் உண்மையான வாழிட நிலப்பரப்புகள் மலைகள், ஆறுகள் போன்ற பல பௌதீக தடைகளை கொண்டிருக்கும். இது மக்கள் போக்குவரத்து செய்வதில் வேறுப்பட்ட வகையான சிரமங்களையும், செலவீனங்களையும் ஏற்படுத்தும். மேலும், மக்கள் தொகை வாழிட நிலபரப்பில் சீரான அளவில் பரவியிருப்பதில்லை. வளங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகமாக கொண்ட பகுதிகளில் அதிக செறிவில் மக்கள் வாழ்வார்கள்.

2. அரசியல் மற்றும் வரலாற்று சூழலைப் புறக்கணிக்கிறது

மைய இடக் கோட்பாடு அரசியல் எல்லைகள், நில உரிமை முறைகள், காலனித்துவ மரபுகள் போன்ற விடயங்களை புறக்கணித்து மக்களின் வாழிட பரப்பை நடுநிலையான கட்டமைப்பாக நோக்குகின்றது. மேலும், குடியிருப்புக்கள் பொருளாதாரம் மற்றும் மக்களின் நுகர்வு நடத்தை என்பவற்றின் அடிப்படையில் மாத்திரமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றது. ஆனால், நடைமுறையில் அரசியல் முடிவுகளும், வரலாற்று நிகழ்வுகளும் அமைவிடங்களின் தேர்விலும், குடியிருப்புகளின் வளரச்சியில் தாக்கம் செலுத்துகின்றன. மேலும், காலனித்துவ மரபுகள், நில உரிமை நடைமுறைகளும் குடியிருப்புகளினதும், மக்கள் தொகையினதும் பரம்பலை சீரற்றதாக்கின்றது.

3. நுகர்வோர் நடத்தையை எளிமையானதாக்கி நோக்குதல்
இக்கோட்பாடு, நுகர்வோர்கள் தமக்கு மிக அருகிலிருக்கும் வழங்குநர்களை தெரிவு செய்யும் சிறந்த அறிவு திறனை கொண்டிருப்பார்கள் என அனுமானிக்கின்றது. ஆனால், நடைமுறையில் மக்கள் வியாபார குறியீடுகள், பண்டங்கள் சேவைகளின் தரம், நம்பகத்தன்மை, மத நம்பிக்கைகள், வருமான மட்டம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே தெரிவை மேற்கொள்கின்றார்கள்.

4. தொழில்நுட்ப முன்னேற்றம் விநியோகம் மற்றும் வழங்கலில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துகின்றமை
மின் - வணிகம், இணைய வழிசேவைகள், எண்ணிம தொழில்நுட்பம் போன்றவற்றின் காரணமாக மக்கள் பண்டங்கள், சேவைகளை பெற அருகாமை இடத்தை நாடுவார்கள் என்ற அனுமானம் பொய்த்து போயுள்ளது. மக்கள் எப்பகுதியிலிருந்தும் தமக்கான சேவைகளையும், பண்டங்களையும் இத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெற முடிகின்றது. இது குடியிருப்புகளின் தெளிவான அறுகோண அமைப்பு, மற்றும் படிநிலை அமைப்பு என்பவற்றை குலைப்பதாக அமைகின்றது.

5. பிராந்திய மட்டத்திலான நோக்கு
மைய இடக்கோட்பாடு பிராந்தி மட்ட அளவுகளியே பிரயோகத்தை கொள்கின்றது. இன்றைய பூகோளமயமாக்கப்பட்ட நகரங்கள், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்பட்ட பிராந்தியங்கள் போன்றவற்றை

6. நடைமுறைகளிலிருந்தான விலகல்கள்
இக்கோட்பாடு, குடியிருப்புகள் சீராக பரவி, சந்தைகளை ஒன்றொடொன்று மேற்பொருந்தாத வகையில் ஒழுங்கமைந்திருப்பதாக கருதுகின்றது. எனினும், நடைமுறையில் சீரற்ற குடிப்பரம்பலையும், சந்தைகள் மேற்பொருந்துகை அடைவதையும் பரவலாக காணமுடிகின்றது.

முடிவுரை
அளவுசார் புரட்சியானது, ஆய்வு முறையியல், எதிர்வுகூறும் மாதிரிகள், பரப்பியல் பகுப்பாய்வில் தொழிற்பாட்டு கண்ணோட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தியது மூலம் பிராந்திய புவியியலில் தலைகீழ் மாற்றமொன்றை ஏற்படுத்தியது.மைய இடக் கோட்பாடு இப்புரட்சியின் மைல்கல் கண்டுபிடிப்பாக காணப்படுகின்றது. இப் கோட்பாடு குடியிருப்புகளின் படிநிலை மற்றும் சந்தை பிரதேசங்கள் தொடர்பான விளங்களை தருகின்றது. எனினும், இக்கோட்பாடு முன்வைக்கும் வாழிட பரப்புகளும், குடிப்பரம்பலும் சீரானாவை, நுகர்வோர் நடத்தை நிலையானவை போன்ற நெகிழ்வு தன்மையற்ற அனுமானங்கள் காரணமாக, பன்முக தன்மை கொண்ட சமகால நடைமுறை உலகில் பிரயோக ரீதியான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கின்றது. எனினும், மைய இடக் கோட்பாட்டை நவீன புவியியல் தகவல் முறைமை, விமர்சன கண்ணோட்டம் என்பவற்றுடன் ஒருங்கிணைத்து பயன்படுத்துவது அரசியல், கலாச்சார, தொழில்நுட்ப காரணிகளால் வடிவமைக்கப்படும் இன்றைய சிக்கலான பிராந்திய அமைப்பை புரிந்து கொள்ள உதவுதாக அமையும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram