வினா- 04/15: “பிராந்தியங்கள் நிர்வாக வசதிக்கானவையாக மாத்திரமல்லாது, செயலாற்றுகைக்கும் தீர்மானமெடுத்தலுக்கும் ; அடிப்படையானதாகவும் இருத்தல் வேண்டும்" (கிளாவல், 1993). பிராந்தியம் என்ற எண்ணக்கருவை மேற்கண்ட கூற்றின் துணையுடன் விமர்சன ரீதியாக ஆராய்க.
அறிமுகம்
புவியியலில், பிராந்தியம் எனப்படுவது ஒத்த பௌதீக, பொருளியல், தொழிற்பாட்டு ரீதியில் ஒத்த பண்புகளைக் கொண்டதும், ஏனைய பிரதேசங்களிலிருந்து தனித்து அடையாளம் காணக் கூடியதுமான பிரதேசம் ஆகும். பிராந்தியங்கள் முறையியல் ரீதியானதாகவோ, தொழிற்பாட்டு ரீதியானதாகவோ, அல்லது வட்டாரம் சார்ந்ததாகவோ காணப்படலாம். கிளாவலின் என்பவரின் கருத்துக்கமைய இவ்வாறு வரையறை செய்யப்படும் பிராந்தியங்களை, தீர்மானமெடுத்தலில் பயன்படுத்துவது, தனியே நிர்வாக எல்லை பிரதேசங்களை மாத்திரமே பயன்படுத்துவதை விடப் பயனுள்ளதாக அமையும். இம்மரபானது பாரம்பரிய ரீதியாக நிலவிவரும் ஆட்சி நிர்வாக முறைமைக்குச் சவால் விடுத்து, புதிய புவியியல் தகவல் திட்டமிடலைக் கோரி நிற்கின்றது.
புவியியலில் பிராந்தியம் எனும் எண்ணக்கரு
புவியியல் கற்கைகளில் பிராந்தியங்கள் பலவாக வகைப்படுத்தப் படுகின்றன. அவற்றினை கீழ்வருமாறு குறிப்பிடலாம்.
• முறைசார் பிராந்தியங்கள் - பொதுவான பௌதீக அல்லது கலாச்சார பண்புகளால் வரையறுக்கப்படும் பிரதேசங்கள் ஆகும். (எ.கா.- சஹேல், அமேசான் படுகை).
• தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள் - ஒரு மையப் பகுதியை சூழ்ந்ததாகத் தகவல் தொடர்பு அல்லது போக்குவரத்து கட்டமைப்புகளால் இணைக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்படும் பிரதேசங்கள் ஆகும். (எ.கா- கொழும்பு பெருநகரப் பகுதி).
• புலனுணர்வு பிராந்தியங்கள் - பொதுவான கலாச்சார, மொழி, பண்பாட்டு அடையாளங்களத்தை கொண்ட மக்களால் அடையாளப்படுத்தப்படும் பிரதேசம் ஆகும். இப்பிராந்தியங்கள் நிலவரைப்பட அடிப்படையை விட, மக்களின் உணர்வுகளிலேயே அதிகப்படியான இருத்தலைக் கொண்டிருக்கும். (எ.கா- இலங்கையில் மலையக பிராந்தியம்.)
மேற்கூறிய ஒவ்வொரு வகை பிராந்தியமும் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அர்த்தமுள்ள விளக்கங்களையும் புரிதல்களை வழங்குகிறது.
முடிவெடுப்பதில் ‘பிராந்தியங்கள்;’ வழிகாட்டுபவையாக அமைய வேண்டியதின் அவசியம்
1. சுற்றுச்சூழல் அமைவுக்கு உரிய வகையில் திட்டமிட முடிகின்றமை
ஆற்றப் படுகைகள், கடலோர மண்டலங்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக எல்லைகளுக்கு அப்பாற் பட்டவையாகக் காணப்படுகின்றன. மேலும், சூழல் அமைப்புகளும் கூறுகளும் முழு தொகுதியாகவே தொழிற்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவை காணப்படும் அரசியல் நிர்வாக எல்லை பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான தொழிற்பாட்டை கொண்டிராது. எனவே, திட்டமிடல்களின் போது அவற்றினை பிராந்திய நோக்கில் அணுகுவதே முழுமையான பலனைத் தருவதாக அமையும்.
உதாரணமாக, இலங்கையின் மகாவலி ஆற்றுப் படுகை பல மாகாணங்களை உள்ளடக்கியதாகும், இது நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் போன்ற நிலைமைகளை எதிர்கொள்வதில் பிராந்திய அடிப்படையிலான திட்டமிடலை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது. இதனைப் போலவே பாகிஸ்தான், இந்திய நாடுகளில் பாயும் சிந்து நதிப் படுகையையும், ஆபிரிக்க கண்டத்தில் பல நாடுகளுடாக பாயும் நைல் நதிப் படுகையையும் நோக்கலாம்.
2. கலாச்சார மற்றும் இன ரீதியான பிணக்குகளைத் தவிர்த்தல்
ஒரே இனத்தைச் சேர்ந்த அல்லது ஒரே மொழியைப் பேசும் மக்கள் சமூகங்கள் பெரும்பாலும் ஒரே அரசின் கீழ் வாழ்ந்தாலும், சில சமயங்களில் அரசியல் ரீதியான எல்லைக் கோடுகளால் பிரிக்கப்படுகின்றனர், இது நிர்வாக ரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, பிராந்திய ரீதியான அணுகுமுறையானது மக்களிடையே ஏற்படக்கூடிய கலாச்சார மற்றும் இன ரீதியான பிணக்குகளைத் தவிர்க்கத் துணைபுரியும். எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவில், காலனித்துவ ஆட்சியாளர்கள் இன மற்றும் மொழி பண்புகளையும் ஒத்திசைவையும் கருத்தில் கொள்ளாமல் அரசியல் எல்லைகளை வகுத்துக் கொண்டார்கள். இதன் காரணமாக ஒரே இனத்தைச் சேர்ந்த அல்லது ஒரே மொழி பேசும் மக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் சிலர் மிகக் குறைந்தளவிலான ஒத்த பண்புகளைக் கொண்டிருந்தாலும் வலுக்கட்டாயமாக ஒன்றாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். உதாரணமாக சோமாலி இன மக்கள் சோமாலியா, எதியோப்பியா, கென்யா ஆகிய மூன்று நாடுகளில் வாழும் வகையில் அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளமை அப்பிராந்தியத்தில் பல்வேறு பிணக்குகளை ஏற்படுத்தி இருக்கின்றமையை குறிப்பிடலாம்.
3. பொருளாதார ரீதியான நன்மைகளை அடைந்து கொள்ளல்:
வேறுபட்ட பிரதேசங்கள் வர்த்தகம், மனித மற்றும் பிற வளங்கள், சேவைகள் என்பவற்றிற்காக ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. எனவே, திட்டமிடல்களின் போது, அரசியல் ரீதியாக எல்லைக் கோடுகள் வரையப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களை விட, தொழிற்பாட்டு ரீதியான பொருளாதார பிராந்தியங்கள் வினைதிறனான பலன்களைத் தரும். உதாரணமாக நமீபியா, தென்னாப்பிரிக்கா, சிம்பாபே, பொட்ஸ்வானா ஆகிய நாடுகளின் பகுதிகளை தொடர்புப்படுத்தும் தெற்கு ஆபிரிக்காவின் வளர்ச்சிக்கான நாற்கூட்டமைப்பானது, இந்நாடுகளின் குறிப்பிட்ட இணைப்பு பகுதியில் சுரங்கத் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாள்கின்றது. இதன் மூலம் இந்நாடுகள் வினைத்திறனான வகையில் வளங்களையும், போக்குவரத்து கட்டமைப்பையும் பகிர்ந்து பயன்படுத்திக் கொள்கின்றன.
இதனைப் போலவே ஐரோப்பிய ஒன்றியம் நாடுகடந்த பிராந்தியங்களை உருவாக்குவதன் மூலம் வரத்தக நடவடிக்கைகளிலும், உட்கட்டமைப்பு, மனிதவளம் என்பவற்றை பயன்படுத்துவதிலும் ஒத்துழைப்பையும் கூட்டுறவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
4. வினைத்திறனான திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கம்:
திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பாக்கத்தின் போது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையானது அபிவிருத்தி உபாயங்களை வேறுபட்ட பிரதேசங்களின் தனித்துவமான தேவைகளுக்கமைய பொருத்தமானதாகத் திட்டமிட வழியேற்படுத்துகின்றன. நிர்வாக ரீதியான பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடலையும், கொள்கை வகுப்பாக்கத்தையும் மேற்கொள்ளும் போது இவ் அனுகூலத்தைப் பெற முடியாததோடு, பல பிரதேசங்களுக்கு பொருத்தபாடு இல்லாத வகையிலும், விரயத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவை அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது.
எடுத்துக்காட்டாக, கடலோர பிராந்தியங்கள் காலநிலை மாற்றம் காரணமாகக் கடல் மட்ட உயர்வு, கடல்நீர் உள்வருகை, புயற்காற்றுகள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இவ் பிரச்சினைகள் பிரத்தியேகமான வகையில் அப்பிரதேசங்களுக்கே உரியவையாகும். அதே வேளை நிலப் பிரதேசங்கள் காடழிப்பு, வறட்சி, நிலச்சரிவு போன்ற வேறு பிரத்தியேகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன நிர்வாக பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடும் போது, அவை புவியியல் அல்லது சுற்றுச்சூழல் அடிப்படையில் அல்லாமல் அரசியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், இவ் பிரத்தியேகமான வேறுபாடுகள் புறக்கணிக்கபடலாம். எனவே, பிராந்திய அடிப்படையில் திட்டமிடும் போது அவ் அவ் பிராந்தியத்திற்கு உரிய வகையில், வினைத்திறனான முறையில் திட்டங்களையும் கொள்கையையும் வகுக்கலாம்.
நிர்வாக எல்லைகள் மீதான விமர்சனங்கள்
1. தன்னிச்சையானதாகக் காணப்படுகின்றமை
பெரும்பாலான நிர்வாக எல்லைகள் காலனித்துவ ஆட்சிக் காலங்களில் சுற்றுச்சூழலையும் கலாச்சார தன்மைகளையும் கருத்திலெடுக்காமல் ஆட்சியாளர்களால் தன்னிச்சையாக ஏற்படுத்தப் பட்டவை ஆகும். இதன் காரணமாக இவ் நிர்வாக எல்லைகள் பொருத்தப்பாடு இல்லாத ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புகளாகக் காணப்படுகின்றன.
2. நடைமுறைக்குப் பொருத்தப்பாடு இல்லாததாகக் காணப் படுகின்றமை
நிர்வாக எல்லை பிரதேசங்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக முறைமைகளை ஏற்ப உருவாக்கப்பட்டவை இருப்பதில்லை. இது பெரும்பாலும் முடிவெடுத்தல்களின் போது வினைத்திறனற்ற தன்மையையும், முழுமையற்ற நிலையினையும் ஏற்படுத்தி விடுகின்றது.
3. வினைத்திறனான ஆட்சி நிர்வாகத்திற்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைதல்
எல்லைகள் நெகிழ்வுத் தன்மை அற்றவையாகக் காணப்படுவதால் அரசாங்க கொள்கைகளையும், அபிவிருத்தி திட்டங்களையும் செயற்படுத்தும் போது குறிப்பிட்ட எல்லைகளுக்கு மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எடுத்துக்காட்டாக, அமேசன் மலைக்காடுகள் 9 நாடுகளின் எல்லைகளுக்குள் அமைந்திருப்பதாலும், ஒவ்வொரு நாடுகளின் கொள்கைகளும், சட்டதிட்டங்களும் வேறுப்பட்டனவாக காணப்படுவதால், எந்தவொரு நாட்டின் அரசாலும் வினைத்திறனான சுற்றுச் சூழல் கொள்கைகளையும், வனப்பாதுகாப்பு சட்டங்களையும் அமுல் படுத்த இயலாத நிலை காணப்படுகின்றது. உதாரணமாகப் பிரேசில் அரசு அமேசன் காட்டின் ஒரு பகுதியினை தமது சட்டங்கள் ஊடாக பாதுகாக்கும் அதேவேளை கொலம்பியா, பெரு நாடுகளின் எல்லைக்குள் அமெசன் காட்டுப் பகுதிகளில் சட்டவிரோத காடழித்தலும், அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் படுவதினை குறிப்பிடலாம்.
முடிவெடுத்தலில் பிராந்திய அணுகுமுறைகளுக்கான எடுத்துக்காட்டுகள்
• நீர் படுக்கை அடிப்படையிலான திட்டமிடல்:
ஆறுகளின் நீரேந்தல் பிராந்தியத்தை திட்டமிடலுக்கான அலகுகளாகக் கொள்ளும் போது நீர்வள மேலாண்மையை வினைத்திறனான மேற்கொள்ள முடிகின்றது. (எ.கா.- மகாவலி அபிவிருத்தி திட்டம்).
• ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய அபிவிருத்தி மண்டலங்கள்
ஜரோப்பிய ஒன்றியம் தமது பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுக்க எல்லைகள் கடந்த பிராந்தியங்களை ஏற்படுத்துகின்றமை. எ.கா – அல்பின் பிராந்தியம் - அல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்திருக்கும் ஒன்பது நாடுகள் மலைப்பிரதேசத்தில் கூட்டாகத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துகின்றமை.
• ஆப்பிரிக்காவின் இனக்குழுமங்களும் காலனிய எல்லை பிரிப்பும்
ஆப்பிரிக்காவின் இனக்குழுக்கள் வாழும் பிராந்தியங்கள் காலனிய ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப தன்னிச்சையான எல்லை பிரிக்கப்பட்டமையானது நீண்டகால முரண்பாடுகளுக்கு வழிவகுத்தமை. எ.கா- பாக்சி குடா உரிமை பிணக்கு – நைஜீரிய பழங்குடியின சமூகம் வாழும் எண்ணெய் வளமும், மீன் வளமும் நிறைந்த பாக்சி குடா, காலனித்துவ ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் காரணமாக கெமருன் நாட்டுக்கு வழங்கப்பட்டதால் நைஜிரியா – கெமருன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்கு.
முடிவெடுத்தலில் பிராந்திய அணுகுமுறையைப் பிரயோகிப்பதில் காணப்படும் சவால்கள்
• அரசியல் ரீதியான தடைகள்
நாடுகளின்; தேசிய ஒருமைப்பாட்டுக்கோ நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் அரசுகள் முடிவெடுத்தல்களில் பிராந்திய ரீதியான அணுகுமுறைகளைக் கைக்கொள்ள மறுக்கின்றன. அச்சுறுத்தினால் (எ.கா., ஸ்பெயின் நாடு கட்டலோனியா தனிநாடு கோரிக்கை காரணமாகும், சிறிலங்கா தமிழ் ஈழக் கோரிக்கை காரணமாகவும் பிராந்திய ரீதியான அணுகுமுறைகளை மறுக்கின்றமை)
• பிராந்திய எல்லைகளை வரையறுப்பதில் சிக்கல் தன்மை காணப்படல்
பிராந்தியங்கள் தெளிவாக வரையறுக்கக் கூடிய எல்லைகளைக் கொண்டிராத காரணத்தாலும், வேறுபட்ட பண்புகள் மேற்பொருந்தி அமைவதாலும், நிலையான திட்டமிடல் அலகு பிரதேசங்களைக் கண்டறிவது கடினமாகின்றது. (எ.கா - காஸ்மீர் பிரதேசத்தை இந்திய பாகிஸ்தான் அரசுகள் உரிமை கோரி வருகின்றமை)
• ஆட்சி நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்படல்
எல்லைப்பிரிப்புகள் அநேகமாக நிரந்தரமான வகையில் அமைவதால் பிராந்திய ரீதியான திட்டங்களை முன்னெடுக்கும் போது, தமது ஆட்சி நிர்வாகம் அல்லாத பிற நிர்வாக பிரதேசங்களில் செயற்படுத்துவதற்கு அப்பிரதேச ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. ( எ.கா - இந்திய பாகிஸ்தான் ஆட்சி நிர்வாக பகுதி ஊடாக பாயும் சிந்து நதி தொடர்பான திட்டமிடல்களுக்கு இருநாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகின்றமை.)
முடிவுரை
திட்டமிடல்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் போது முடிவெடுப்பதற்குப் பிராந்தியங்களை அடிப்படையாகக் கொள்வது , மிகவும் பயனுள்ளதும், வினைத்திறனானதும், நெகிழ்வுத்தன்மை உடையதுமான பிரதிபலன்களைத் தருவதாக அமைகின்றது. எனவே, கிளாவல் (1993) அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் வகையில், பிராந்தியத்தை அடிப்படையாகக் கொள்ளும் அணுகுமுறையானது, நெகிழ்வுத்தன்மை அற்ற நிர்வாக எல்லைகளை அடிப்படையாகக் கொள்ளும் முடிவெடுத்தல்களை விடவும், வினைத்திறனான வகையில் சுற்றச்சூழலுடனும், பொருளாதார மற்றும் கலாச்சார விடங்களுடனும் ஒத்துழைத்து அதிக பயனைத் தருகின்றது. இவ் அணுகுமுறையைப் பிரயோகிப்பதில் நடைமுறை ரீதியான சவால்கள் காணப்பட்டாலும், நிர்வாகக் கட்டமைப்புகளில் பிராந்தி பகுப்பாய்வு அணுகுமுறையைக் கைக்கொள்வது நீடித்த நிலையான முழு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
No comments:
Post a Comment