Post Top Ad

இலங்கையை முறைசார் பிராந்தியங்களாக பிரித்தல்

வினா-06/15: பௌதீக, கலாச்சார, தொழிற்பாட்டு அளவு கோல்களைக் கவனத்திற் கொண்டு,இலங்கையை முறைசார் பிராந்தியங்களாகப் பிரிப்பதற்கான அடிப்படைகளைச் சுருக்க வரைப்படங்கள் மற்றும் பொருத்தமான உதாரணங்கள் மூலம் கலந்துரையாடவும்.

அறிமுகம்
புவியியலாளர்கள் முறைசார் பிராந்தியங்களை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த பௌதீக, கலாச்சார, தொழிற்பாட்டுப் பண்புகளால் ஒன்றிணைக்கப்பட்டதும், அப்பண்புகள் காரணமாகச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து வேறுபட்டிருப்பதுமான பரப்பியல் அலகுகள் என்று வரையறுக்கின்றனர். இலங்கையில் பிராந்தியமயமாக்கலானது வளங்களின் முகாமைத்துவம், கலாச்சார புரிந்துணர்வு, சிறப்பு திட்டமிடல்கள் என்பவற்றுக்குத் துணைபுரிவதாகக் காணப்படுகின்றது. பௌதீக புவியியல், கலாச்சார பண்புகூறுகள், தொழிற்பாட்டுப் பண்புகள் ஆகிய அளவுகோல்கள் இலங்கை தீவை முறைசார் பிராந்தியங்களாக வரையறை செய்வதற்கான அடித்தளத்தை அமைக்கின்றது.

1. பௌதீக அளவுகோல்கள்
பௌதீக அளவுகோல்கள் எனப்படுவது பிரதேசங்களைத் தனியான பிராந்தியங்களாக வேறுப்படுத்த பயன்படும், நிலஅமைப்பு, காலநிலை, கடல் மட்டத்திலிருந்தான உயரம், சூழல் தொகுதிகள் போன்ற பௌதீக பண்புகளைக் குறிக்கின்றன. இப்பண்புகள் அடிப்படையில் இலங்கையை கீழ்குறிப்பிடும் வகையில் பிராந்தியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றது .

• மத்திய மலைப் பிரதேசங்கள் - இது கடல் மட்டத்திலிருந்து 1000 மீற்றருக்கும் அதிக உயரமான நிலப்பகுதி ஆகும். நுவரெலியா , கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்கள் இதற்குள் உள்ளடங்குகின்றது. இவ் உயர்நில பிரதேசங்கள், மலைகள் (பீதுறுதாலகல மலைத்தொடர், நக்கிள்ஸ் மலைத்தொடர்), குளிர்ச்சியான வெப்பநிலை (12–20 செல்சியஸ்), அதிக மழைவீழ்ச்சி (ஆண்டுக்கு 2,500 மில்லி மீற்றரக்கும் அதிகம்) ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பௌதீக அம்சங்களால் இயற்கையான முறையில் உருவான மலைக்காடுகளையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேயிலைத் பெருந்தோட்டங்களையும் கொண்டுள்ளது. இவ் சூழற் பௌதீக (டீழை Phலளiஉயட) பண்புகள் உடன் அடுத்த பிரதேசமாகவிருக்கும் தாழ்நில பகுதிகளில் காணப்படுவதில்லை.

• தாழ்நில சமவெளிகள் - இது தென்மேற்கில் ஈர வலயத்திலிருந்து (காலி, இரத்தினபுரி ) வடக்கு மற்றும் கிழக்கு உலர் வலயம் (அனுராதபுரம், பொலன்னறுவை) வழியாக நீண்டு செல்லும் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். இந்தப் பகுதிகள் தட்டையான சமவெளி நிலப்பரப்பு, பருவகால காலநிலை என ஒத்த பௌதீக அம்சங்களைக் கொண்டுள்ளன. தென்மேற்கு பகுதியில் அதிக மழைவீழ்ச்சியை பயன்படுத்தியும், வட-கிழக்கு பகுதிகளில் பாய்ந்தோடு ஆறுகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட நீர்ப்பாசனம் மூலமும் நெல் பயிர்ச்செய்கை இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

• கடலோரப் வலயம் : இது கடல் மட்டத்திலிருந்து பெரும்பாலும் 30 மீற்றருக்கும் குறைவான உயரத்தைக் கொண்ட, சுமார் 1340 கிலோமீற்றர் நீளமான குறுக்கலான பிரதேசமாகும். இப்பிரதேசங்கள் மணற்கடற் கரைகள், களப்புக்கள், சதுப்பு நிலங்கள், கண்டல் தாவர காடுகள் ஆகிய பௌதீக அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இப்பகுதிகள் சீரான வெப்பமண்டல கடலோர காலநிலை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மீன்பிடி சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகள் இப்பகுதி முழுவதும் காணப்படுகின்றது.

மேற் கூறிய ஒத்த பௌதீக பண்பு தொகுதிகள் அடிப்படையில் இலங்கையை மத்திய உயர்நில பிராந்தியம், தாழ்நில சமவெளி பிராந்தியம், கடலோர வலயம் என மூன்று முறைசார் வலயங்களாக பிரித்து அடையாளம் காணலாம்.

[சுருக்க வரைபடம் மெல்லியதாக பென்சிலில் வர்ணம் தீட்டுதல், வரிகோடுகளை வரைதல் மூலம் மத்திய மலைநாடு, உலர் வலய சமவெளி மற்றும் குறுக்கலான கடலோர பகுதிகளை வேறுபடுத்திக் குறித்துக் காட்டவும்.]

2. கலாச்சார அளவுகோல்கள்
கலாச்சார அளவுகோல்கள் எனப்படுவது பிராந்தியம் ஒன்றில் பொதுவானதாக காணப்படும் மொழி, மதம், இனஅடையாளம், பண்பாட்டு நடைமுறைகள் போன்ற மனித காரணிகளைக் குறிக்கின்றது. இலங்கையின் கலாச்சார பன்மைத்துவத்தின் ஒழுங்கமைவைக் கொண்டு கீழ்வரும் ஒத்த பண்புகளைக் கொண்ட பிரதேசங்களை அடையாளப்படுத்தலாம்.

• சிங்கள - பௌத்த பிரதேசம் : இது கண்டி, குருநாகல், அநுராதபுரம், மாத்தளை போன்ற இலங்கையின் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். இப்பகுதிகளில் சிங்கள மொழி பேசும் சிங்கள இன மக்களைப் பெரும்பான்மையாகவும், தேரவாத பௌத்த மதத்தைப் பிரதான மதமாகவும் கொண்டிருக்கின்றது. தலாதா மாளிகை போன்ற பாரம்பரிய கலாச்சார அடையாளங்களும், தலதா பெரஹர போன்ற கலாச்சார நிகழ்வுகளும் முக்கிய வரலாற்றுக் கலாச்சார குறியீடுகளாகும். சிங்கள மொழியும், சிங்கள மொழிசார் பண்பாட்டு அடையாளங்களும் இப்பிரதேசங்களில் சீராகப் பரவிக் காணப்படுகின்றது.

•வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் : யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசமாகும். தமிழ் மொழி பேசும் தமிழின மக்களை பெரும்பாண்யாக கொண்டிருக்கின்றது. தமிழர் பண்பாட்டு நடைமுறைகள், வழக்காறுகள், தனித்துவமான நாட்டுப்புற கலைகள், சமய நிகழ்வுகள் என்பன இப்பகுதியின் பொதுவான கலாச்சார அம்சங்களாகக் காணப்படுகின்றன.

இவ் சமூக – கலாச்சார பண்புகளின் பிரகாரம் இலங்கையை வடக்கு – கிழக்கு தமிழர் பிராந்தியம், மத்திய – தெற்கு சிங்கள பௌத்த பிராந்தியம் என இரு பிராந்தியங்களாக வகைப்படுத்திக் காணலாம்.

[ சுருக்க வரைபடம்: வடக்கு – கிழக்கு மாகாணங்களை எல்லை குறித்து கோடு வரைவதின் மூலம் இரு பிராந்தியங்களையும் வேறுபடுத்திக் காட்டலாம். ]

3. தொழிற்பாட்டு அளவுகோல்கள்

தொழிற்பாட்டு அளவுகோல்கள் எனப்படுவது, மையப் பகுதி அல்லது முனை ஒன்றுடன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைக்கும், வர்த்தகம், நாளாந்த பயண நகர்வுகள், தொடர்பாடல், நிர்வாக கட்டுப்பாடு போன்ற அளவீடு செய்யக் கூடிய தொடர்புகளையும், இடைத்தொடர்புகளையும் குறிப்பதாகும். இலங்கையில் அவ்வாறான மையப்பகுதிகளுடன் இணைந்திருப்பது மூலம் பொதுத்தன்மையைப் பெறும் கீழ்வரும் பிரதேசங்களை இனம்காணலாம்.;

கொழும்பு பெருநகரப் பிரதேசம் : கொழும்பை மையமாகக் கொண்டு அருகிலுள்ள கம்பஹா, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி அமையும் பிரதேசம் ஆகும். அதிகப்படியான மக்களின் நாளாந்த பயண நகர்வுகள், பொதுவாக அமைந்த உட்கட்டமைப்பு வசதிகள், நிதி, அரச நிர்வாக மற்றும் துறைமுகம், விமானநிலையம் சார் நடவடிக்கைகள் செறிந்து காணப்படுகின்றமை போன்ற பொதுவான அம்சங்கள் இப்பிரதேசங்கள் பொதுத்தன்மை வாய்ந்ததாக இணைக்கப் படுகின்றது..

• மகாவலி அபிவிருத்தி வலயம் : இது மகாவலி ஆற்றுப் படுகையையும் அதன் நீரேந்தும் பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசம் ஆகும். துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நீர்ப்பாசனம், நீர் மின் உற்பத்தி, விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்புகள், அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்மைப்பு வசதிகள் போன்ற காரணங்களால் இப்பிரதேசங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

இவ் பொது தொழிற்பாடுகள் அடிப்படையில் இலங்கையில் கொழும்பை மையமாக கொண்ட கொழும்பு பெருநகர பிராந்தியம் மற்றும் மகாவலி ஆற்றுப் படுக்கையை மையமாக கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட மகாவலி அபிவிருத்தி பிராந்தியம் ஆகிய இரு தொழிற்பாட்டுப் பிராந்தியங்களை அடையாளப் படுத்தலாம்.

[ சுருக்க வரைபடம்: கொழும்பு மற்றும் மகாவலி ஆற்றுப் படுகைகள் பிரதேசத்தை பருமட்டாக வரையறை செய்து வேறுப்பட்ட குறியீட்டு அடையாளப்படுத்தல் மூலம் குறித்த காட்டலாம்.]

முடிவுரை
இலங்கை தீவினை பௌதீக, கலாச்சார மற்றும் தொழிற்பாட்டு அளவுகோல் களை அடிப்படையாகக் கொண்டு தெளிவா முறைசார் பிராந்தியங்களாக வகைப்படுத்த முடியும். இவ் பிராந்திய மயமாக்கமானது நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒவ்வொரு பிரதேசத்தின் தனித்துவத்தையும் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றது. நில அமைப்பு, காலநிலை மற்றும் கடல் மட்டத்திலிருந்தான உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய மலைநாடு, தாழ்நில சமவெளி, கடலோர வலயங்கள் எனும் பௌதீக பிராந்தியங்களை

அடையாளப் படுத்தலாம். அதேபோல், மொழி, மதம் மற்றும் இன அடையாளங்கள் அடிப்படையில் சிங்கள – பௌத்தப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு தமிழர் பிரதேசம் போன்ற கலாச்சார பிராந்தியங்களை அடையாளப் படுத்தலாம். வர்த்தகம், நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற தொடர்புகளின் அடிப்படையில் கொழும்பு பெருநகரப் பிராந்தியம் மற்றும் மகாவலி அபிவிருத்தி வலயம் போன்ற தொழிற்பாட்டுப் பிராந்தியங்களையும் இனம் காணலாம். இம்முறைசார் பிராந்தியமயமாக்கல் கல்வி, நிர்வாகம், வள முகாமைத்துவம் , கலாச்சாரப் புரிந்துணர்வு மற்றும் சமச்சீர் அபிவிருத்தி ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவும்.



1 comment:

Post Top Ad

My Instagram