Post Top Ad

6:11 PM

பிராந்திய புவியியலும் பிராந்திய திட்டமிடலும்

by , in
வினா-10/15:  பிராந்திய புவியியல் மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் பற்றி கலந்துரையாடி, வினைத்திறனான பிராந்திய அபிவிருத்;தி கொள்கைகளை உருவாக்குவதற்கு பிராந்திய புவியியல் அறிவு எவ்வாறு பங்களிக்கிறது என்பதை விளக்கவும்.

அறிமுகம்
பிராந்திய புவியியல் மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட துறைகளாகும். இவை இரண்டும் பிராந்;தியங்களின் அபிவிருத்தியை; புரிந்துகொள்வதற்கும் முகாமை செய்வதற்கும் அத்தியாவசியமானவையாக உள்ளன. பிராந்திய புவியியலானது பிராந்தியங்களின் பரப்பியல் பண்புகள், பன்முகத்தன்மை, அமைப்பு கோலங்கள் என்பவற்றை பகுப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்தும் அதேவேளை, பிராந்திய திட்டமிடலானது, இப்பகுபாய்வையும், புரிதலையும் பிராந்தியங்களின் கட்டமைக்கப்பட்ட, சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வழிக்காட்டிகளாக பிரயோகின்றது. எனவே, பிராந்திய திட்டமிடலாளர்கள், பரப்பியல் தொடர்பான அறிவை உள்வாங்கி ஒருங்கிணைத்து பயன்படுத்துவது மூலம் உள்ளுர் தேவைககளுக்கு ஏற்றவாறான நியாயமானதும், நீடித்து நிலைக்க கூடியதுமான கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க இயலும்.

பிராந்திய புவியியல் மற்றும் பிராந்திய திட்டமிடல் இடையேயான உறவு
பிராந்திய புவியியலானது, பிராந்திய திட்டமிடலுக்கு அடிப்படையாக அமையும் பரப்பியல் பகுப்பாய்வுகளை வழங்குகிறது. இது ஒரு பிராந்தியத்தின் பௌதீக சூழல், குடிப்பரம்பம், கலாச்சார பண்புகள், பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விரிவான அறிவை வழங்குகிறது. இந்த கூறுகள் திட்டமிடலாளர்களுக்கு ஒரு பிராந்தியம் திட்டங்கள் சார்பாக கொண்டுள்ள சாதக பாதக அம்சங்களை மதிப்பிட உதவுகின்றன.

இவ்வறிவைக் கொண்டு, பிராந்திய திட்டமிடலின் போது உள்கட்டமைப்பு வசதிகள், வள மேலாண்மை, பொருளாதார அபிவிருத்து, வாழ்க்கை தர மேம்பாடு என்பவற்றை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட உத்திகளை வகுக்க முடிகின்றது. எடுத்துக்காட்டாக, இலங்கை முழுவதும் அடிப்படை சேவைகளை அணுகுவதில் உள்ள பரப்பியல் ஏற்றத்தாழ்வுகளை பிராந்திய புவியியல் எடுத்துக்காட்டுகிறது. இது திட்டமிடுபவர்களை குறிப்பிட்ட பிரதேசங்களை இலக்கு வைத்து திட்டங்களை வகுக்க துணை புரிகின்றது. எனவே, பிராந்திய புவியியல் திட்டமிடலுக்கான தரவுகளை வழங்குகின்றது, பிராந்திய திட்டமிடல் அவற்றை திட்டமிடலுக்கு பயன்படுத்துகின்றது, அத்திடமிடலின் விளைவாக புவியியல் ரீதியான மாறுதல்கள் ஏற்படுகிறது, இது சுழற்சியாக இடம்பெற்று இவ்விரு துறைகளுக்கும் இடையிலான உறவுமுறையை கட்டமைக்கின்றது.

கொள்கை வகுப்பாக்கத்தில் பிராந்திய புவியியலின் பங்களிப்பு
1. தரவுகள், தகவல்கள் அடிப்படையிலான உள்ளுர் மயமாக்கப்பட்ட முடிவெடுத்தல்:
பிராந்திய புவியியல் பகுப்பாய்வுகள், கொள்கை வகுப்பாளர்களுக்கு இடங்கள் சார்ந்த தீர்மானமெடுத்தல்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, இலங்கையின் வறண்ட மண்டலத்தில், பிராந்திய புவியியல் நீர் பற்றாக்குறையை அடையாளம் கண்டு, வறட்சியைத் தாங்கும் விவசாயம், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு ஆகியவற்றை செயல்படுத்த படுகின்றது.

2. நீடித்து நிலைக்கும் வளர்ச்சியை ஊக்குவித்தல்:
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் அல்லது கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற சுற்றுச்சூழல் ரீதியாக அபாயங்களை எதிர்நோக்கி இருக்கும் பிராந்தியங்களை அடையாளம் காண பிராந்திய புவியியல் உதவுகிறது. இது அப்பகுதிகளுக்கான விசேட விதிமுறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பேரிடர் முகாமைத்துவம் போன்றவற்றை திட்டமிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவுகின்றது. (எ.கா., இலங்கையின் தெற்கு கடற்கரையில் சுனாமி அனர்த்த முன்னேற்பாடு திட்டங்கள்).

3. பிராந்திய ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்:
புவியியல் பகுப்பாய்வு நகர்ப்புற மையங்களுக்கும் கிராமப்புற புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்துகிறது. உதாரணமாக இலங்கையில், கொழும்பு அபிவிருத்தியில் முன்னிலையில் இருக்கும் அதேவேளை,; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பின்தங்கியுள்ளன. இவ் புரிதல் காரணமாக, கிராமப்புறப் பகுதிகளை இணைக்கவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் "100,000 கி.மீ பாதை மேம்பாட்டுத் திட்டம்" போன்ற பிராந்திய அபிவிருத்தி; கொள்கைகள் வகுக்கப்பட்டன.

4. தொழிற்பாட்டு பிராந்திய அடிப்படையிலான திட்டமிடல்:
திட்டவியலாளர்கள் நிர்வாக எல்லைகளை மட்டுமே கருத்தில் கொள்வதற்கு பதிலாக, பொருளாதார இணைப்புகள், நாளாந்த போக்குவரத்துகள் மற்றும் சேவைப் பிரதேசங்களால வரையறுக்கப்படும் தொழிற்பாட்டுப் பிராந்தியங்களை அடிப்படையாக கொள்கின்றார்கள். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இலங்கையின் மகாவலி அபிவிருத்தி திட்டம் காணப்படுகின்றது. ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, மின் உற்பத்தி மற்றும் விவசாயத்திற்காக பல மாவட்டங்களின் பிரதேசங்களை நீர்வளத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிராந்தியங்களாக அடையாளம் காண பிராந்திய புவியியல் உதவியது.

5. கலாச்சார உணர்த்திறன் கொண்ட திட்டமிடல்:
இலங்கை போன்ற பல்லின நாடுகளில் பிராந்தியங்களின் கொண்டுள்ள இன,கலாச்சார பரவலைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். ஏனெனில், அவ்வவ் பிராந்தியங்களின் கலாச்சாரம், இனவிகிதாசாரம், பண்பாடு என்பவற்றின் தன்மைகளை உள்வாங்கிய அபிவிருத்;தி திட்டங்களை வடிவமைப்பதற்கு பிராந்திய புவியியல் உதவுகிறது, இதனால் அமைதி மற்றும் சகவாழ்வு ஊக்குவிக்கபடுவதோ, முரண்பாடுகள் தவிர்க்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:
மகாவலி அபிவிருத்தி திட்டம்

இலங்கையின் மிகப்பெரியதும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதுமான ஸ்ரீ பிராந்திய திட்டமிடல் முன்;னெடுப்பான மகாவலி அபிவிருத்தி திட்டம், அபிவிருத்தி திட்டமிடல்களில் பிராந்திய புவியியலின் முக்கியத்துவத்தையும், ஆற்றலையும் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. 1970 களில் ஆரம்பிக்;கப்பட்ட இத்திட்டம், மகாவலி ஆற்றுப் படுகையை பகுதிகளை பரந்த பன்முக தொழிற்பாட்டு பிராந்தியங்களாக மாற்றி அமைத்தது. புவியியலாளர்கள் இவ் ஆற்றுப் படுகை பகுதி விவசாயத்திற்கு எவ்வளவு சாதகாமான தன்மையை கொண்டிருக்கின்றது, எவ்வளவு நீர்வளத்தை கொண்டிருக்கின்றது, குடியேற்றங்களுக்கு எவ்வளவு பொருத்தமானது போன்ற விடயங்களை கண்டறிந்தார்கள். இப் பரப்பியல் புரிதல் காரணமாக, தி;ட்டமிடலாளர்களுக்கு சுற்றுசூழலை முகாமை செய்தவாறே, நீர்பாசன திட்டங்கள், குடியேற்ற திட்டங்கள் நடைமுறை படுத்தி விவசாய நடவடிகடகைகளின் அபிவிருத்தியை ஏற்படுத்த இயலுமானதாக இருந்தது.

திட்டமிடல்களில் பிராந்திய புவியியலை பிரயோகிப்பதில் காணப்படும் மட்டுப்பாடுகள்
பிராந்திய புவியியல் முக்கியமான புரிதல்களை வழங்கும் அதே வேளையில், அதன் பிரயோக பயன்பாட்டில் பல முரண்பாடுகளும் உள்ளன. அவற்றை கீழ்வருமாரு வரிசைப் படுத்தலாம்.

• அரசியல் மற்றும் நிர்வாகத் ரீதியான தடைகள்: தொழிற்பாட்டு புவியியலை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் கடும் போக்கு நிர்வாகப் அலகுகளுடன் முரண்படக்கூடும்.

• தரவு தொடர்பான வரம்புகள்: சில பிராந்தியங்களில், குறிப்பாக பின்தங்கிய அல்லது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தரவு காலாவதியானதாகவோ அல்லது போதுமானதாகவோ இல்லாமல் இருக்கலாம்.

• செயல்படுத்தல் ரீதியான சவால்கள்: நேர்த்தியான பிராந்திய திட்டங்கள் கூட மோசமான நிர்வாகம், நிதி பற்றாக்குறை அல்லது குறைந்த அளவிலான பொது மக்கள் பங்கேற்பு காரணமாக தோல்வியடையக்கூடும்.

இவ் வரம்புகளை அங்கீகரிப்பதானது, புவியியலை ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை என்பவற்றுடன் இணைத்து பலதுறைத் திட்டமிடலை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது.

முடிவுரை
பிராந்திய புவியியலும் பிராந்திய திட்டமிடலும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. புவியியல் பரப்பியல் தொடர்பாக தர்க்க ரீதியானதும், கோட்பாட்டு ரீதியானதுமான புரிதலை வழங்கும் அதே வேளையில், திட்டமிடல் இந்த அறிவை செயல்பாடுகளில் பிரயோகிக்கின்றது. இலங்கையில், மகாவலிஅபிவிருத்தி திட்டம் போன்ற வெற்றிகரமான பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள்;, புவியியல் தொடர்பான அறிவு எவ்வாறு விளைத்திறனான கொள்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகின்றன. சில நடைமுறைக் மட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பிராந்தியங்களின் பல்வேறு தேவைகளுக்கு உரியவகையிலான, தகவல்கள் தரவுகள் அடிப்படையிலான, நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி கொள்கைகளை வகுப்பதற்கு பிராந்திய புவியியல் இன்றியமையாததாகவே உள்ளது.

8:30 AM

அளவுசார் புரட்சியும் பிராந்திய புவியியலும்

by , in
வினா-12/15: அளவுசார் புரட்சி பிராந்திய புவியியலில் ஏற்படுத்திய தாக்கத்தை மைய இடக் கோட்பாட்டையும், அது யதார்த்த உலகில் எதிர்கொள்ளும் மட்டுபாடுகளையும் மதிப்பாய்வு செய்வது மூலமாக கலந்துரையாடுக.

அறிமுகம்
1950 – 60 களில் ஏற்பட்ட அளவுசார் புரட்சி புவியியலில் கருத்தோட்ட பெயர்வை (paradigm shift  – ஒரு துறையில் ஏலவே நிலவி வரும் சிந்தனைகள், அணுகுமுறைகள், அல்லது நம்பிக்கைகள் ஆகியவற்றில் முழுமையான அடிப்படை மாற்றம் ஏற்படல்) ஏற்படுத்தியது. இதன் விளைவாக அதுவரை பிராந்தியங்களை விளங்கப்படுத்துவதற்கு பின்பற்றிய அதன் பௌதீக, கலாச்சார பண்புகளை விவரிக்கும் அணுகுமுறையிலிருந்து, விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளின் மூலம் விளங்கப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறினார்கள். இவ்விஞ்ஞான அனுகுமுறைகள் தரவுகள் மற்றும் அவதானிப்புகளை மேற்கொண்டு பரப்பியல் கோலங்களை ஆராய்தல், கோட்பாட்டு மாதிரிகளை உருவாக்கி பரப்பியல் சார் நடத்தைகளை விளங்கப்படுத்துதல், புள்ளிவிபரங்கள் மற்றும் கணிதவியலை பயன்படுத்தி புவியியலை ஆராய்தல் ஆகிய வழிமுறைகளை கொண்டிருந்தது. இத்தகைய கருத்தோட்ட பெயர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக 1933 ஆம் ஆண்டு வால்டர் கிறிஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்ட மைய இடக் கோட்பாடு (Central Place Theory (CPT)) காணப்படுகின்றது. இதன் மூலம் வால்டர் கிறிஸ்டர் அவர்கள் பட்டிணங்கள், நகரங்கள், கிராமங்கள் என்பவற்றின் பண்புகளை விவரித்து கூறி வந்த அணுகுமுறைக்கு பதிலாக, அப் பட்டிணங்கள், நகரங்கள், கிராமங்கள் போன்ற குடியிருப்புக்கள் பரப்பியல் ரீதியாக ஒழுங்கமையும் விதத்தை விளக்கி கூறவும், எதிர்வு கூறுவதற்கும் உகந்ததொரு முறைசார் பொருளாதார மாதிரியை பயன்படுத்தினார். இவ் மைய-இடக் கோட்பாடு பரப்பியல் பகுப்பாய்வுகளை பெருமளவில் மேம்படுத்தி இருந்தாலும், யதார்த்த உலகின் சிக்கலான அமைப்புகளை கற்க இதனை பிரயோகிக்கும் போது குறிப்பிடதக்க அளவில் மட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது.

பிராந்திய புவியியலில் அளவுசார் புரட்சியின் தாக்கம்

1. பிராந்திய புவியியலை புறநிலை உண்மைகள் மற்றும் ஆய்வு முறையியல் தளுவிய கற்கையாக மாற்றியமை
அளவுசார் புரட்சி புவியியலில் ஒட்டுறவு ஆய்வு, பரப்பியல் புள்ளிவிபரங்கள் போன்ற புள்ளிவிபர முறைகளை அறிமுகப்படுத்தியது. இது கருதுகோள்களை பரிசோதித்தல், அளவிடக் கூடிய தரவுகளை பயன்படுத்துதல், விஞ்ஞான ரீதியான முடிவுகளை பெற்றுக்கொள்ளல் (வேறொருவர் ஒரே ஆய்வை அதே தரவுகளை கொண்டு செய்யும் போது ஒத்த முடிவை பெறுவதை உறுதிபடுத்தல்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இப் பெயர்வு (Shift) பிராந்திய புவியியலை புறநிலையில் காணப்படும் உண்மையும், தரவுகள் அடிப்படையிலான பகுப்பாய்வையும் ஆதாரமாக கொண்டமைந்த கற்கையாக மாற்றியமைத்தது. இதன் பிரதிபலனாக சனத்தொகை அடர்த்தி, காணி பயன்பாடு, பொருளாதார பலன்கள் போன்ற காரணிகளை பயன்படுத்தி பிராந்தியங்களை முறைசார் முறைகளில் ஒப்பிட்டு ஆராய முடிந்தது.

2. பரப்பியல் மாதிரிகள் அறிமுகப்படுத்ப் பட்டமை
அளவுசார் புரட்சியின் விளைவாக பரப்பியல் நிகழ்வுகளை விளக்குவதற்கு புவியியலாளர்கள் எளிமைபடுத்தப்பட்ட மாதிரிகளை உருவாக்கினார்கள். இம்மாதிரிகள் குடியேற்ற அமையும் விதம், வர்த்தக ஓட்டங்கள், புத்தாக்க முயற்சிகளின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான கற்றல் நுட்பங்கள் கிடைத்தன. இப்புரிதல்கள் நகரத்திட்டமிடல், போக்குவரத்து அபிவிருத்தி, பிராந்திய வளர்ச்சி என்பவற்றுக்கு உதவுவதாக அமைகின்றது.

3. தொழிற்பாட்டு அணுகுமுறைகளுக்கு மாறியமை
அளவுசார் புரட்சிக்கு முன்னர், பிராந்திய புவியியல் தனித்தனி இடங்களின் பண்புகளை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. அளவுசார் புரட்சியின் விளைவாக, அனைத்து இடங்களிலும் பிரயோகித்து ஆராய்வதற்கு பயன்படுத்தக் கூடிய பொதுவான விடயங்களும், விதிமுறைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பலனாக வெவ்வேறு இடங்களுக்கு இடையிலான தொடர்புகளையும், அவை இடைத்தொடர்பு கொள்ளும் மற்றும் தொழிற்படும் விதங்களை விளக்குவதற்கான மாதிரிகள் உருவாக்கப்பட்டன. இம்மாற்றத்தின் காரணமாக புவியியலாளர்கள் பிராந்தியங்களை அவை நாளாந்த வாழ்வியில் எத்தகைய தொழிற்பாட்டை கொண்டிருக்கின்றன என்பதின் அடிப்படையில் வரையறை செய்ய ஆரம்பித்தார்கள்.

4. தொழில்நுட்பம் மற்றும் தரவு பயன்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியமை
அளவுசார் புரட்சியானது பெருமளவில் விஞ்ஞான தரவு சேகரங்களை (எ.கா – சனத்தொகை கணக்கெடுப்பு) உருவாக்கியமையும், கணனி பயன்பாட்டின் வளர்ச்சியும்; சமகாலத்தில் இடம்பெற்றதன் காரணமாக ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து கொண்டன. எண்ணிம தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் காரணமாக புவியியல் தகவல் முறைமை போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட காரணமாகியது. இவ்வாறு அளவுசார் புரட்சி இன்றைய காலக்கட்ட கொள்கையாக்கம் மற்றும் திட்டமிடங்களில் பயன்படுத்தப்படும் தரவு சார் பரப்பியல் பகுப்பாய்வுகளுக்கு அடித்தளமிட்டது.

மைய இடக் கோட்பாடு (CPT)
வால்டர் கிறிஸ்டாலரின் மைய இடக் கோட்பாடானது, மனித குடியிருப்புக்கள் சுற்று வட்டாரத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களுக்கு பண்டங்களையும், சேவைகளையும் வழங்கும் ‘மைய இடங்களாக’ தொழிற்படுகின்றன என கூறுகின்றது.இக் கோட்பாடு பின்வரும் முக்கிய அனுமானங்களை முன்வைக்கின்றது:

• மக்களின் வாழ்விட நிலம் மலைகள், ஆறுகள், போக்குவரத்து தடைகள் எதுவுமற்ற தட்டையான சமவெளிகளாக காணப்படுகின்றது.

• மக்கள் தொகை சீரான அளவில் பரவி இருப்பதுடன், அனைவரும் ஒரேமாதிரியான கொள்வனவு சக்தியை கொண்டிருப்பார்கள்.

• மக்கள் அனைவரும் பண்டங்கள், சேவைகளை நுகரும் போது தமக்கு மிகவும் அருகிலுள்ள விநியோகஸ்தரை தேர்ந்தெடுக்கும் அறிவுதிறனை கொண்டிருப்பார்கள்.

• குடியிருப்புக்களிடையே படிநிலை அமைப்பு காணப்படும். அதாவது,சிறிய குடியிருப்புகள் அடிப்படை பண்;டங்கள் சேவைகளை வழங்குவதாகவும், பெரிய குடியிருப்புகள் பெரியளவிலான விசேட பண்டங்கள், சேவைகளை வழங்குவதாகவும் படிநிலை அமைப்பை கொண்டிருக்கும்.

மேற்கூறிய அனுமானங்களின் அடிப்படையிலான இலட்சிய நிலைமைகளி; குடியிருப்புகள் தெளிவான அறுகோண வடிவத்தில் அமைந்திருக்கும் என மைய இடக் கோட்பாடு அனுமானிக்கின்றது. இதன் மூலம் பண்டங்கள் சேவைகளின் விநியோகம் அநாவசியமான முறையில் ஒரே இடங்களில் குவிவது தடுக்கப்பட்டு வினைத்திறனான வகையில் பிராந்தியம் முழுவதும் விநியோக்கிப்படும். இவ்வகையில் படிநிலை அமைப்பு முறை (குடியிருப்புகளின் படிநிலை) மற்றும் இடைவெளி (மைய இடங்களுக்கு இடையிலான தூரம்) என்பன அடிப்பபடை பரப்பியல் பண்புகள் எனும் கருத்தை இக்கோட்பாடு முன்வைக்கின்றது.

மைய இடக் கோட்பாடு : விமர்சன மதிப்பாய்வு

1. யதார்த்தமற்ற அனுமானங்கள்
மக்களின் உண்மையான வாழிட நிலப்பரப்புகள் மலைகள், ஆறுகள் போன்ற பல பௌதீக தடைகளை கொண்டிருக்கும். இது மக்கள் போக்குவரத்து செய்வதில் வேறுப்பட்ட வகையான சிரமங்களையும், செலவீனங்களையும் ஏற்படுத்தும். மேலும், மக்கள் தொகை வாழிட நிலபரப்பில் சீரான அளவில் பரவியிருப்பதில்லை. வளங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகமாக கொண்ட பகுதிகளில் அதிக செறிவில் மக்கள் வாழ்வார்கள்.

2. அரசியல் மற்றும் வரலாற்று சூழலைப் புறக்கணிக்கிறது

மைய இடக் கோட்பாடு அரசியல் எல்லைகள், நில உரிமை முறைகள், காலனித்துவ மரபுகள் போன்ற விடயங்களை புறக்கணித்து மக்களின் வாழிட பரப்பை நடுநிலையான கட்டமைப்பாக நோக்குகின்றது. மேலும், குடியிருப்புக்கள் பொருளாதாரம் மற்றும் மக்களின் நுகர்வு நடத்தை என்பவற்றின் அடிப்படையில் மாத்திரமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றது. ஆனால், நடைமுறையில் அரசியல் முடிவுகளும், வரலாற்று நிகழ்வுகளும் அமைவிடங்களின் தேர்விலும், குடியிருப்புகளின் வளரச்சியில் தாக்கம் செலுத்துகின்றன. மேலும், காலனித்துவ மரபுகள், நில உரிமை நடைமுறைகளும் குடியிருப்புகளினதும், மக்கள் தொகையினதும் பரம்பலை சீரற்றதாக்கின்றது.

3. நுகர்வோர் நடத்தையை எளிமையானதாக்கி நோக்குதல்
இக்கோட்பாடு, நுகர்வோர்கள் தமக்கு மிக அருகிலிருக்கும் வழங்குநர்களை தெரிவு செய்யும் சிறந்த அறிவு திறனை கொண்டிருப்பார்கள் என அனுமானிக்கின்றது. ஆனால், நடைமுறையில் மக்கள் வியாபார குறியீடுகள், பண்டங்கள் சேவைகளின் தரம், நம்பகத்தன்மை, மத நம்பிக்கைகள், வருமான மட்டம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே தெரிவை மேற்கொள்கின்றார்கள்.

4. தொழில்நுட்ப முன்னேற்றம் விநியோகம் மற்றும் வழங்கலில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துகின்றமை
மின் - வணிகம், இணைய வழிசேவைகள், எண்ணிம தொழில்நுட்பம் போன்றவற்றின் காரணமாக மக்கள் பண்டங்கள், சேவைகளை பெற அருகாமை இடத்தை நாடுவார்கள் என்ற அனுமானம் பொய்த்து போயுள்ளது. மக்கள் எப்பகுதியிலிருந்தும் தமக்கான சேவைகளையும், பண்டங்களையும் இத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெற முடிகின்றது. இது குடியிருப்புகளின் தெளிவான அறுகோண அமைப்பு, மற்றும் படிநிலை அமைப்பு என்பவற்றை குலைப்பதாக அமைகின்றது.

5. பிராந்திய மட்டத்திலான நோக்கு
மைய இடக்கோட்பாடு பிராந்தி மட்ட அளவுகளியே பிரயோகத்தை கொள்கின்றது. இன்றைய பூகோளமயமாக்கப்பட்ட நகரங்கள், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்பட்ட பிராந்தியங்கள் போன்றவற்றை

6. நடைமுறைகளிலிருந்தான விலகல்கள்
இக்கோட்பாடு, குடியிருப்புகள் சீராக பரவி, சந்தைகளை ஒன்றொடொன்று மேற்பொருந்தாத வகையில் ஒழுங்கமைந்திருப்பதாக கருதுகின்றது. எனினும், நடைமுறையில் சீரற்ற குடிப்பரம்பலையும், சந்தைகள் மேற்பொருந்துகை அடைவதையும் பரவலாக காணமுடிகின்றது.

முடிவுரை
அளவுசார் புரட்சியானது, ஆய்வு முறையியல், எதிர்வுகூறும் மாதிரிகள், பரப்பியல் பகுப்பாய்வில் தொழிற்பாட்டு கண்ணோட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தியது மூலம் பிராந்திய புவியியலில் தலைகீழ் மாற்றமொன்றை ஏற்படுத்தியது.மைய இடக் கோட்பாடு இப்புரட்சியின் மைல்கல் கண்டுபிடிப்பாக காணப்படுகின்றது. இப் கோட்பாடு குடியிருப்புகளின் படிநிலை மற்றும் சந்தை பிரதேசங்கள் தொடர்பான விளங்களை தருகின்றது. எனினும், இக்கோட்பாடு முன்வைக்கும் வாழிட பரப்புகளும், குடிப்பரம்பலும் சீரானாவை, நுகர்வோர் நடத்தை நிலையானவை போன்ற நெகிழ்வு தன்மையற்ற அனுமானங்கள் காரணமாக, பன்முக தன்மை கொண்ட சமகால நடைமுறை உலகில் பிரயோக ரீதியான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கின்றது. எனினும், மைய இடக் கோட்பாட்டை நவீன புவியியல் தகவல் முறைமை, விமர்சன கண்ணோட்டம் என்பவற்றுடன் ஒருங்கிணைத்து பயன்படுத்துவது அரசியல், கலாச்சார, தொழில்நுட்ப காரணிகளால் வடிவமைக்கப்படும் இன்றைய சிக்கலான பிராந்திய அமைப்பை புரிந்து கொள்ள உதவுதாக அமையும்.
3:34 AM

தெற்காசிய பிராந்தியத்தின் அபிவிருத்தியும் நகரமயமாக்களும்

by , in
வினா-11/15: தெற்காசியாவில் பிராந்திய வளர்ச்சியை வடிவமைப்பதில் நகரமயமாக்கலின் பங்கை மதிப்பிடுக.

அறிமுகம்
நகரமயமாக்கல், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகையின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் செயல்முறையாகும். இது பிராந்திய அபிவிருத்தியில் முக்கியமான செல்வாக்கு செலுத்தும் காரணியாகும். பிராந்திய வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொருளாதார, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அம்சங்களின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில், விரைவான நகரமயமாக்கலானது பொருளாதார மாற்றத்தின் விளைவாகளில் ஒன்றாகவும், சமவேளையில் பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்தும் இயக்குவிசையாகவும் காணப்படுகின்றது. நகரங்கள் இயல்பாக வளர்ச்சியடைவதும், நகர்ப்புறங்களை நோக்கிய இடம்பெயர்வு என்பவற்றின் காரணமாக நகரங்கள் விரிவடைந்து செல்வதானது, பிராந்திய பொருளாதார கட்டமைப்புகள், மக்கள்தொகை பரம்பல் மற்றும் சேவை வழங்கல் அமைப்புகளை மறுவடிவம் செய்வதில் அவற்றின் பங்கிற்கு சான்றாகின்றது. இப்பத்தியானது தெற்காசிய பிராந்திய வளர்ச்சியில் நகரமயமாக்கல் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அது ஏற்படுத்தும் நன்மைகள் மற்றும் முகம் கொடுக்கும் சவால்களை ஆராய்கின்றது.

தெற்காசியாவில் நகரமயமாக்கல் போக்குகள்
தெற்காசியா உலகின் மிக விரைவான நகரமயமாக்கல் ஏற்பட்டு வரும் பிராந்தியங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. மும்பை, டெல்லி, டாக்கா, கராச்சி மற்றும் கொழும்பு போன்ற நகரங்கள், பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து வேலைவாய்ப்பு, வாழ்க்கை தர உயர்வு போன்றவற்றிற்காக மக்கள் குடிப்பெயர்ந்து வரும் பொருளாதார வலுமையங்களாக மாறியுள்ளன. இந்தியாவில் மட்டும், 34 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் டாக்கா உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரங்களில் ஒன்றாகி இருக்கினறது. இப் பிராந்தியத்தில் உள்ள நகர்ப் புற பகுதிகளின் அளவும் அவற்றின் செல்வாக்கும் தொடர்ச்சியாக விரிவடைந்து வருகின்றன. சில பிரதேசங்களில் நகரமயமாக்கல் திட்டமிடப்படாமல் நடக்கின்றது. இதன் விளைவாக முறைசாரா குடியேற்றங்களுக்கும், நெருக்கடிக்குள்ளான நகர்புற சேவைகளுக்கும் காரணமாகின்றது. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், நகரங்கள் பொருளாதார அபிவிருத்தி உத்திகளின் மையமாகவே காணப்படுகின்றன.

நகரமயமாக்கல் தெற்காசிய பிராந்திய வளர்ச்சியில் ஏற்படுத்தும் சாதகமான தாக்கங்கள்

1. பொருளாதார அபிவிருத்தியின் மையப்புள்ளியாக தொழிற்படல்
தெற்காசியாவில் பிராந்திய வளர்ச்சிக்கு நகரமயமாக்கல் பல வழிகளில் நன்மைகளைக் செய்துள்ளது. முதலாவதாக, நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் இயக்குவிசைகளாக மாறியுள்ளன. பெங்களுரு (இந்தியா) மற்றும் கொழும்பு (இலங்கை) போன்ற நகர்ப்புற மையங்கள் தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட வளமான சேவைத் துறைகளைக் கொண்டுள்ளன நகரங்களாக எழுச்சி கண்டுள்ளன. இதன் காரணமாக இந்நகரங்களில் தொழில்துறைகள் குவிவடைந்து வளர்ச்சியடைந்து வருகின்றன, அதனால் இப்பிரதேசங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றது. இவ்வாறாக இந்நகரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகி, பிராந்தியத்தின் பொருளாதார போக்கை வடிவமைக்கும் முக்கிய காரணி ஆகின்றது.

2. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் பின்தங்கிய பிரதேசங்களுடனான இணைப்பும் ஏற்படல்
நகர்ப்புறங்கள் பகுதிகளிலே போக்குவரத்து, பாடசாலைகள், மருத்துவமணைகள், எண்ணிம சேவைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்காக அதிக முதலீடு செய்யப்படுகின்றது. உதாரணமாக புதுதில்லி, டாக்கா போன்ற நகரங்கள் அதிவிரைவு பாதைகள், மேம்பாலங்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக நகரங்களில் வாழ்க்கை தரம் மேம்பட்டதாகவும், சந்தை வசதிகள் பெருகியதாகவும் காணப்படுகின்றது. சூழவுள்ள பிரதேசங்களுடன் வலுவான இணைப்புகள் ஏற்படுகின்றது. இவற்றின் மூலமாக பின்தங்கிய பிரதேச உற்பத்தியாளர்கள் சந்தைகளை இலகுவாக அணுகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இது சூழவுள்ள பிரதேசங்களில் குறிப்பிடதக்க அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றது.

3. புத்தாக்க முயற்சிகளுக்கும், தொழில்முனைவுகளுக்கும் தளமாக அமைதல்
நகரபகுதிகள் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள் போன்ற நிறுவனங்களுடன் பல்வேறு திறமை படைத்தவர்கள், அறிவாந்தவர்களும் அதிகளவில் மையம் கொள்ளும் பகுதிகளாக காணப்படுவதால், புத்தாக்க முயற்சிகளையும், தொழில்முனைவுக்கும் ஆதரவளிக்கும் தளமாகவும், ஊக்குவிக்கும் களமாகவும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் அதிகரித்த சனத்தொகை, திறன்வாய்ந்த தொழில் படை, வலுவான உட்கட்டமைப்பு என்பவற்றின் காரணமாக எண்னிம சேவைத் தொழில்களுக்கான மையங்கள் ஆகியுள்ளன. இதனை தளமாக பயன்படுத்திப பல்வேறு தொழில் முனைவார்களும், புத்தாக்க முயற்சியாளர்களும் எண்ணிமசார் சேவை தொழில்துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

4. பிராந்திய ஒருங்கிணைப்பும் வர்த்தக வளர்சியும்
நகர்ப்புற மையங்கள் பிராந்திய மற்றும் தேசிய வர்த்தக வலையமைப்பின் மூலோபாய முனையங்களாக தொழிற்படுகின்றன. எடுத்துக்காட்டாக கொழும்பு, மும்பை, சிட்டகாங் ஆகிய துறைமுக நகரங்கள் வர்தகத்திற்கும் விநியோகத்திற்குமான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம், தெற்காசிய பொருளாதாரத்தை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் மையங்களாக தொழிற்படுகின்றன. அத்துடன் சுற்றுவட்டார் பிரதேசங்களை உட்கட்டமைப்பு வசதிகள் மூலமாக ஒருங்கிணைத்து, இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்துக்கான நுழைவாய்களாகவும் செயற்படுகின்றன. இதன் காரணமாக நகரமயமாக்கல் புறநகர் உலகளாவிய பொருளாதார சந்;தையில் தெற்காசியாவின் பங்கை வலுப்படுத்துகிறது.

நகர மயமாக்கல் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள்
1. நகர – கிராம வேறுப்பாடுகளை அதிக படுத்துகின்றமை
நகரமயமாக்கல் காரணமாக நகரங்கள் பொருளாதார ரீதியாக அதிக வளர்ச்சியை பெறும் அதே வேளை, கிராம புறங்கள் அடிக்கடி பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்வதுடன், குறைந்த முதலீடுகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் பெறுகின்ற. இவ் சமத்துவமின்மை சமூக ஏற்றத் தாழ்வுகளை மென் மேலும் அதிகப்படுத்துகின்றது. சில நேரங்களில் இது பிராந்தியங்களில் அதிருப்தியின்மைக்கும், அமைதியின்மைக்கும் வழிவகுக்கின்றது.

2. முறையற்ற குடியிருப்புகள் அதிகரிக்கின்றமை
திட்டமிடப்படாத நகர விரிவாக்கம் சேரிப்பகுதிகள் மற்றும் முறைசார வீடுகளின் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது. உதாரணமாக மும்மையில் நீண்டகால திட்டமிடப்படாத நகரமயமாக்கல் காரணமாக 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சேரிப்பகுதிகளில் வாழ்கின்றார்கள். டாக்கா, கராச்சி ஆகிய இவ்வாறான நகரங்களும் முறைசாரா குடியிருப்புகளின் பெருக்கத்தினால் நெருகடிகளை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக சுத்தமான குடிநீர் இன்மை, சுகாதார குறைப்பாடுகள் , குறைந்த வாழ்க்கை தரம் போன்ற நிலைமைகள் ஏற்பட்டு பிராந்தியத்தில் சமத்துவமற்ற நிலையை அதிகப்படுத்துகின்றது.

3. சுற்றுச் சூழல் சீர்குலைவு
தொடர்ச்சியான நகர விரிவாக்கம் பாரிய அளவுகளில் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தெற்காசிய நகரங்கள் நகரமயமாக்கல் காரணமாக காற்று மற்றும் நீர் மாசடைதல், போக்குவரத்து நெரிசல், குப்பை கழிவுகள் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. எடுத்தக்காட்டாக முறையற்ற தொழிற்சாலை கழிவு வெளியேற்றத்தால் டாக்கா நகரின் புரிகங்கா நதி அதிகபடியாக மாசடைந்து சூழல் தொகுதி அழிவுக்குள்ளாகியுள்ளமையை குறிப்பிடலாம். இவ்வாறு நகரமயமாக்கம் பிராந்தியத்தின் சுற்றுச் சூழல் சீர்குலைவை ஏற்படுத்தி சுகாதாரம், விவசாயம் என்பவற்றையும் , பிராந்தியத்தின் ஸ்திர தன்மையையும் பாதிப்படைய செய்கின்றது.

நகரமாயமாக்கல் எதிர்கொள்ளும் சவால்கள்
தெற்காசியாவில் நகரமயமாக்கம் அநேகமான சந்தர்ப்பங்களில் திட்டமிடல், கொள்கை வகுப்பாங்களை விஞ்சும் அளவுக்கு வேகமாக இடம்பெறுகின்றது. இதன் காரணமாக ஒழுங்கற்ற வளர்ச்சியும் உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது, பலவீனமான வினைத்திறனற்ற ஆட்சி நிர்வாகம், ஸ்தாபனங்களிடையே ஒருங்கிணைப்பு இன்மை, நிதிதட்டுப்பாடுகள் ஆகியவை நகரமயமாக்கலை திறம் பட நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துகின்றன. மேலும், மக்கள் இயல்பாகவே நகரங்களை நோக்கி அதிகளவில் குடிப்பெயர்ந்து வருகின்றமை இந்நிலைமைகளை மேலும் மோசமாக்கின்றது.

சவால்களுக்கான எதிர்வினை
தெற்காசிய அரசுகள் நகரமயமாக்கலின் சவால்களை நிலை பேண் கொள்கை வகுப்பாக்கம் மற்றும் திட்டமிடல் மூலம் எதிர்கொள்கின்றன. உதாரணமாக இந்திய அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், இலங்கை அரசாங்கத்தின் மெகாபோல்ஸ் திட்டம் என்பன குறைந்தளவான சுற்றுச் சூழல் தாக்கத்துடன் நவீன நகரங்களை வடிவமைப்பதை இலக்காக கொண்டிருக்கின்றன. மேலும், கிராம புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இரண்டாம், மூன்றாம் நிலை புறநகர்களை விருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமும் பிராந்தியத்தின் சீரான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுகின்றன.

முடிவுரை
தெற்காசியாவில் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் ஆனது பிராந்தியத்தின் அபிவிருத்திக்கான ஆற்றல்மிக்க இயக்குவிசையாக தொழிற்பட்டு, பொருளாதார வளர்ச்சி, புத்தாக்க முயற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை வளர்க்கிறது. இது வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையானதாகும். எனினும், சரியாக திட்டமிடப்பட்டு முகாமை செய்யப்படாத நகரமயமாக்கல் பிராந்தியத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, சுற்றுச்சூழல் சீரழிவையும், சமூக அநீதியையும் வளர்த்து விடகூடும். எனவே, அனைத்து பிராந்தியங்களும் சீராக நியாயமான வகையில் பயனடைவதை உறுதிசெய்யும் பொருட்டு, நகர்ப்புற அபிவிருத்தியானது பிராந்திய திட்டமிடல் உத்திகளை உள்வாங்கி மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ்வாறாக, நகரமயமாக்கல் செயன்முறை வினைத்திறனான கொள்கை வகுப்பாக்கத்தின் பிரகாரம் செயற்படுத்தப்படும் போதே, அது சீரான நீடித்து நிலைக்க கூடிய பிராந்திய அபிவிருத்திக்கான திறவுக்கோலாக அமையும்.

3:30 AM

MENA ஓர் தொழிற்பாட்டுப் பிராந்தியமா?

by , in
வினா 14 / 15: எண்ணெய் வளங்களும் அரசியல் முரண்பாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவை (MENA – Middle East & North Africa ) ஒரு தொழிற்பாட்டுப் பகுதியாக எவ்வாறு வரையறுக்கின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்க.

அறிமுகம்
MENA என்றழைக்கப்படும் வடஆபிரிக்க – மத்திய கிழக்கு பிராந்தியமானது, ஆபிரிக்க கண்டத்தின் மேற்கே மொராக்கோ விலிருந்து கிழக்கு ஆசியாவின் ஈரான் வரை பரவியுள்ள பிராந்தியமாகும். இப்பிராந்தியம் அதன், எண்ணெய் மற்றும் எரிவாயு வள இருப்பு மற்றும் தொடர்ச்சியான அரசியல் முரண்பாடுகள் காரணமாகத் தனித்துவமான தொழிற்பாட்டுப் பிராந்தியமாக வகைப்படுத்தப்படுகின்றது. தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள் பிரதானமாக அரசியல், சமூக, பொருளாதார இடைத்தொடர்புகளின் பரவுகை அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. ஆநுNயு பொறுத்தவரையில், ஹைட்ரோகார்பனை பிரித்தெடுத்து வர்த்தகம் செய்தல், மற்றும் அது சார்ந்த புவிசார் அரசியல் என்பவற்றுடன், வரலாற்று ரீதியாகத் தொடரும் சமகால முரண்பாடுகளும் இணைந்து ஒன்றொடொன்று பிணைந்த சிக்கல் தன்மையுள்ள கூட்டுறவு, பகை, சார்ந்திருத்தல் என்பவற்றை ஏற்படுத்தியுள்ளது. இவை இப்பிராந்தியத்தை முழுமையான ஒத்திசைவான தொழிற்பாட்டைக் கொண்ட பிராந்தியமாகப் பிணைத்துள்ளது.

பிராந்தியமாக ஒருங்கிணைக்கும் முதன்மை காரணியாக எண்ணெய் வளம்
மெனா பிராந்தியம் ஒத்த தன்மையான வளப்பரவல், மக்கள், கருத்துகள், நிறுவனங்கள் என்பவற்றால் வடிவமைக்கப்பட்ட பிராந்தியமாகத் தொழிற்படுகின்றது. புவியியல் காரணிகளுக்கு அப்பாற் பட்ட பொருளாதார, கலாச்சார, அரசியல் ஊடாட்டங்கள் இப்பிராந்தியத்தை இணைப்பதாகக் காணப்படுவதால் இது ஓர் தொழிற்பாட்டுப் பிராந்தியமாக வடிவம் கொள்கின்றது. அவற்றினை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மெனா பிராந்தியத்தை ஒருங்கிணைக்கும் முதன்மை காரணியாகக் காணப்படுகின்றது. இதுவே இப்பிராந்தியத்தின் பொருளாதாரம், புவிசார் அரசியல் , பிராந்திய ஒத்துழைப்பு, சமூக பொருளாதார கட்டமைப்பு என்பவற்றை ஒத்த தன்மை உடையதாக வடிவமைக்கின்றது.

1. வளச்செறிவும் அதன் பரவுகையின் ஒத்த தன்மையும்
இதுவரையான கணிப்புகளின் பிரகாரம் உலக எண்ணெய் வள இருப்பில் 48 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு இருப்பில் 43 சதவீதத்தையும் MENA பிராந்திய நாடுகள் கொண்டிருக்கின்றன. இதில் வளைகுடா நாடுகளான சவுதி அராபியா, ஈராக், ஈரான், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளும், லிபியா, அல்ஜீரியா ஆகிய வட ஆப்பிரிக்க நாடுகளும் பிரதானமானவையாகக் காணப்படுகின்றன. இவ் வளப் படிவுகள் ஒரே காலகட்டத்தில் உருவான வண்டல் படுகைகளிலிருந்து தோன்றியதாகும். எனவே, இவ் வண்டல் படுகை பரவிக் காணப்படும் இப்பிராந்தியத்தில் ஒத்த இயற்கை சூழல் தன்மை ஏற்பட்டுள்ளதுடன், அது வள அகழ்வு தொழிற்துறையையும் தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக இப்பிராந்தியம் உலகின் பிரதான சக்தி வள மையமாகியுள்ளது.

2. பொருளாதார ரீதியாகவும், உட்கட்டமைப்பு வசதிக்காகவும் சார்ந்திருத்தல்
MENA பிராந்திய நாடுகள் பிரதானமாக ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதியைச் செய்கின்றன. இதற்கு விரிவான விநியோக குழாய் தொகுதி ( எ.கா : ட்ரான்ஸ் - அரேபியன் குழாய் வழி), மூலோபாய கடற்பாதைகள் (எ.கா : ஹார்மூஸ் ஜலசந்தி), துறைமுகங்கள் (எ.கா: ராஸ் டனுரா மற்றும் மினா-அல்-பகர்) என்பன அவசியமானதாகும். எனவே, MENA நாடுகள் உட்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்து கொள்வதோடு, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றார்கள்.

எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருவாய், அரசுகளுக்குச் சொந்தமான நிதியங்களுக்கு (எ.கா : சவுதி அரேபியாவின் பொதுத்துறை முதலீட்டு நிதியம், அபுதாபியின் முதலீட்டு ஆணையம்) அளிக்கப்படுகின்றன. இந்நிதி சர்வதேச முதலீடுகளுக்காகவும், உள்ளூர் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது MENA எண்ணெய் ஏற்றுமதியாளர்களிடையே ஒத்த இயல்புடைய பொருளாதார முறைமையை உருவாக்கி உள்ளது.

3. பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புகளை ஏற்படுத்தல்
பெற்றோலிய ஏற்றுமதியாளர்களின் நாடுகளின் ஒன்றியமான ஒபெக் அமைப்பு, மெனா நாடுகளுக்கும், MENA உறுப்பு நாடுகளுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் எனச் சந்தையைப் பங்கீட்டு கொடுத்துள்ளமையானது, பிராந்திய ஒத்துழைப்பையும் கூட்டமைப்பையும் ஸ்தாபன ரீதியானதாக்கி உள்ளது.

மேலும், ஆறு வளைகுடா முடியாட்சி நாடுகள் இணைந்து தமக்கிடையே எரிசக்தி கொள்கை, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய விடயங்களை ஒருங்கிணைக்கின்றது. இது ஹட்ரோகாபன் வளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பாட்டு பிராந்தியவாதத்துக்கு எடுத்துக் காட்டாகின்றது.

4. சமூக-பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தல்
எண்ணெய் ஏற்றுமதி மூலமான வருவாய் ஈட்டல் காரணமாக இப்பிராந்தியம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இப்பிராந்தியம் அதிக தனிநபர் வருமானம் கொண்டதாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. இப்பிராந்திய மக்கள் நகரமயமாகிய, உயர் தரத்திலான வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். அதே வேளை தொழிலாளர் இடப்பெயர்வு, ஏற்றுமதிக்காக இறக்குமதி நாடுகளைச் சார்ந்திருத்தல் போன்ற நிலைமைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ஹைட்ரோகாபன் சார் பொருளாதாரம் பொதுத்தன்மை உடைய சமூக – பொருளாதார நிலைமைகளை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

பிராந்தியத்தை வரையறுக்கும்; அம்சமாக அரசியல் முரண்பாடுகள்
நீண்டகால அரசியல் முரண்பாடுகள் மெனா பிராந்தியத்தின் கட்டமைப்பையும், அதன் அரசியல் உறவுமுறைகளையும் வடிவமைப்பதாகக் காணப்படுகின்றது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வகுக்கப்பட்ட எல்லைகள், குறிப்பாக முதலாம் உலகப் போரின் பின்னர் காலனிகளை பங்கிட்டுக் கொள்வதற்காகத் தன்னிச்சையாக வகுக்கப்பட்ட எல்லைகள் இப்பிராந்தியத்தில் நீண்டகால நிலத்தகராறுகளை தோற்றுவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பாலஸ்தீன - இஸ்ரேல் முரண்பாடு இதற்கு எடுத்துக் காட்டாகும்.

வளங்களுக்கான போட்டியும் இப்பிராந்தியத்தில் அரசியல் முரண்பாடுகளை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக எண்ணெய் வயல்களின் மீதான கட்டுப்பாட்டை இலக்காகக் கொண்டு 1990 ஆம் ஆண்டு குவைத் மீது ஈராக் படையெடுத்தமை வளைகுடா யுத்தத்துக்குக் காரணமாக அமைந்ததுடன், நீண்டகால அரசியல் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷியா-சுன்னி மதப்பிரிவுகளுக்கு இடையிலான மோதல் இப்பிராந்தியத்தில் அமைதியின்மையையும், பதட்ட நிலைமையையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகச் சவுதி அரேபியாவும், ஈரானும் எதிர் எதிர்த் தரப்புகளை ஆதரித்து மறைமுக மோதல்களிலும், போர்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

இம்மோதல்கள் பிராந்திய நாடுகளினதும், சர்வதேச சக்திகளினதும் மூலோபாய நலன்களுடன் பிணைக்கப்பட்டு, தொடர் அரசியல் பதட்டங்களையும், இராணுவ மூலோபாய கூட்டணிகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இது அமெரிக்க இராணுவ கூட்டுறவுகளையும், அமெரிக்க இராணுவ பிரசன்னத்தையும் பிராந்திய பாதுகாப்ப கட்டமைப்புக்குள் வரச் செய்துள்ளது.

இம்மோதல்கள் பிராந்தியம் முழுவதும் தொடர்புடைய அரசியல் நிலைமைகளையும், பதட்டத்தையும் ஏற்படுத்துவதுடன், பரந்தளவிலான பிராந்திய கூட்டுறவுக்குத் தடையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பிராந்திய நாடுகள் தேர்ந்தெடுத்த வகையில் கூட்டணிகளை அமைத்துக் கொண்டிருக்கின்றது. இம் முரண்பாடுகள் MENA நாடுகளைப் பிரித்தும் - இணைத்தும் வைப்பதோடு, இராணுவ மூலோபாய திட்டங்கள், கூட்டணிகள், இராஜதந்திர நடவடிக்கைகள் என்பவற்றையும் வடிவமைக்கின்றன. இவ்வாறு இப்பிராந்தியத்தின் பிரத்தியேக அரசியல் பிணக்குகள் இதனைத் தனித்த தொழிற்பாட்டுப் பிராந்தியமாக அiடாயாளப்படுத்த ஏதுவாகின்றது.

தொழிற்பாட்டுப் பிராந்தியமாக MENA
ஒத்த  வளங்கள், மக்கள், கருத்துக்கள் மற்றும் நிறுவனங்களால் வடிவமைக்கப்படும்  ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாக MENA பிராந்தியம்  தொழிற்படுகிறது. இது புவியியலுக்கு அப்பாற்பட்ட, பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ஊடாட்டங்களால்  வடிவமைக்கப்படுகின்றது. அவற்றைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1. மூலதனம் மற்றும் பண்டங்களின் ஊடாட்டம்
எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தொடர்ச்சியான ஏற்றுமதி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருளாதாரங்களை உருவாக்குகிறது. உலகளாவிய சந்தைகளில் விலை ஏற்ற இறக்கங்கள் MENA முழுவதும் அலைமோதுகின்றன, இது தேசிய பாதீடுகள், மானியங்கள் மற்றும்; சமூக ஸ்திரத்தன்மையைப் பாதிக்கிறது.

2. தொழிலாளர் மற்றும் மக்களின் ஊடாட்டம்
தெற்காசிய மற்றும் அரபு நாடுகளின் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்தலும், அரசியல் முரண்பாடுகள் காரணமாக சிரியா, யேமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏதிலிகளாக தஞ்சமடைதல் போன்றவற்றின் காரணமாகவும் MENA பிராந்தியத்தில் பல்வேறு மக்களையும் இணைக்கும் சமூக வலைப்பின்னல் உருவாக்கி உள்ளது. .

3. கலாச்சார மற்றும் கருத்தியல் வலையமைப்புகள்
ஒன்றிணைந்த அரேபியம், அரசியல் இசுலாம் போன்ற கலாச்சார முன்னெடுப்புகளும், அல்-ஜசீர போன்ற நாடு கடந்த ஊடகங்களும் இப்பிராந்தியத்தில் பொதுவான பொதுக் கருத்தை ஏற்படுத்துகின்றன. இது கருத்துவேறுபாடுகள், முரண்பாடுகளைக் கடந்து மக்களிடையே பிராந்திய உணர்வை வலுப்படுத்துகின்றது.

4. நிறுவன அடுக்குகள்
MENA பிராந்தியம் பல்வேறு நிறுவனங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றது.. அரபு லீக், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பிராந்தியத்தில் செயற்படுகின்றன. ஒபெக் மற்றும் ஜிசிசி அமைப்புக்கள் எண்ணெய் வர்த்தகம், பிராந்திய ஒத்துழைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. இவ் பல் மட்ட நிறுவனங்கள் பிராந்தியம் முழுவதும் சிக்கலான உறவுமுறைகளையும் இடைத்தொடர்புகளையும் ஏற்படுத்துகின்றது.

முடிவுரை
MENA பிராந்தியம் எண்ணெய் வளம் மற்றும் அரசியல் முரண்பாடுகளால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்பாட்டுப் பிராந்தியமாகக் காணப்படுகின்றது. எண்ணெய் வளம் வலுவான பொருளாதார பிணைப்பையும், பொதுவான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் ஏற்படுத்தும் அதே வேளை, கடந்தகால மற்றும் சமகால முரண்பாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் , அரசியல் பிரிவினைகளையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறாக மெனா பிராந்தியம் ஒரு பிராந்தியம் வளங்களால் இணைக்கப்பட்டு, அரசியலால் பிளவுபட்டிருப்பதற்கு எடுத்துக் காட்டாகவும், சக்தி வளமும், ஆதிக்கமும் நெருக்கமாக தொடர்பு பட்டவை என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைகின்றது.
2:43 AM

பிராந்தியத்தை சமூக கட்டமைப்பாக மறுவரையறை செய்தல்

by , in
வினா-13/15: மனிதநேய புவியியலாளர்களும், விமர்சன புவியியலாளர்களும் “பிராந்தியம்" என்பதை ஒரு சமூக கட்டமைப்பாக எவ்வாறு மறுவரையறை செய்தனர் என்பதைக் கலந்துரையாடவும். உமது விடையை இரண்டு புலணுர்வு பிராந்தியங்களை உதாரணங்களாகக் குறிப்பிடுவது மூலம் வலுப்படுத்தவும்.

அறிமுகம்
பிராந்திய புவியியலானது பாரம்பரியமாக, பிராந்தியங்களை ஒத்த பௌதீக அல்லது கலாச்சார பண்புகளால் புறநிலை ரீதியாக வரையறுக்கப்படும் பிரதேசங்களாகக் கருதியது. இருப்பினும், 1970கள் தொடக்கம், மனிதநேய புவியியலாளர்களும் விமர்சன புவியியலாளர்களும் அவ்வரையறையை விமர்சனத்திற்குள்ளாகி சவால் விடுக்க ஆரம்பித்தார்கள். அவ் விமர்சனங்கள், பிராந்தியங்கள் நிலையானவை என்பதை மறுத்து, அவை ஆதிக்க உறவுகள், அடையாளங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் என்பவற்றால் வடிவமைக்கப்பட்டு சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட “இடங்கள் / வெளிகள்" என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இவ் விமர்சனங்கள் எதிர்வினையாக உருவான மறுவரையறையின் பிரகாரம் அடையாளப் படுத்தப்படும் பிராந்தியங்களுக்கு ஸ்பெயினின் கட்டலோனியா, அமெரிக்காவின் ரஸ்ட் கரை - Rust Belt ஆகிய பிரதேசங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இப்பத்தியானது மேற்கூறிய இரு புலனுணர்வு பிராந்தியங்களை எடுத்துக்காட்டுகளாக முன்வைத்து இதனை விளக்குகின்றது.

மனிதநேய புவியியலின் பார்வையில் பிராந்தியம்
மனிதநேய புவியியலாளர்கள், நிகழ்வியல் (Phenomenology), இருத்தலியம் (Existentialism) ஆகிய இரு கோட்பாடுகளின் செல்வாக்கின் விளைவாக, இடங்கள், பிராந்தியம் தொடர்பான தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவங்களை கருத்திலெடுத்தனர். குறிப்பாக, யூ ஃபூ துவான் போன்ற புவியியலாளர்கள் மனிதர்கள் கொண்டுள்ள உணர்வுகள், பிணைப்புகள், மற்றும் உள்ளார்ந்த அர்த்தப்பாடுகள் வாயிலாகப் பிராந்தியங்கள் தோற்றம் பெறுகின்றன என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இப்போக்கு இடங்கள் மீது கொண்ட ‘இட உணர்வும் பற்றும்’, மற்றும் ‘மனச்சித்திரமும் அனுபவத்தின் புலப்பாடும்’ எனும் இரு முக்கிய பார்வைகளை முன்வைத்தது.

1. இட உணர்வும் பற்றும் (டோபோஃபிலியா – வுழிழிhடைய)
பிராந்தியங்கள் மனித உணர்வுகள் மற்றும் ஞாபகங்களால் ஏற்படுத்தப்படும் கட்டமைப்புகளாகும்;. மனிதர்கள் நிலத்தின் மீது தனிப்பட்ட மற்றும் கலாச்சார காரணங்களால் பற்றை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

எடுத்துக்காட்டு - ஈழத்திலிருந்து மக்கள் அரசியல் நெருக்கடிகள் காரணமாக உலகெங்கும் இடம்பெயர்ந்திருந்த போதும் அவர்களுக்கு ஈழமே தாயகமாக இருக்கின்றது. ஸ்கொட்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்னரே வேறு தேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டவர்கள் இன்றும் ஸ்கொட்லாந்தையே தமது தாயகமாகக் கொள்கின்றார்கள்.

2. மன சித்திரமும் அனுபவத்தின் புலப்பாடும்
மனிதர்கள் ஒவ்வொருவரும் இடங்கள் குறித்து தமது சொந்த மனச்சித்திரங்களை, அவர்களது அனுபவங்கள், ஞாபகங்கள், நாளாந்த செயற்பாடுகள் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையான இட வரைபடங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.

உதாரணமாக இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் தமது வாழிட பிரதேசங்களை தமது கலாச்சார அடையாளம், வாழ்வியல் அனுபவங்கள், சமூக கூட்டுணர்வு என்பவற்றின் அடிப்படையில் மலையகம் என அடையாளப்படுத்தி வருகின்றமையை கூறலாம். அதே போல் உலக நாடுகள் பலவற்றில் சீனர்கள் வியாபார ரீதியாகத் தொடர்பு கொண்டு புலம்பெயர்ந்திருக்கும் இடங்கள் சைனாடவுன் என அழைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு, மனிதநேய புவியியலாளர்கள் பிராந்தியங்களைத் தனிநபர்கள் மற்றும் சமூகங்களால் மாறுபட்ட வகையில் கருதப்பட; கூடிய, வாழ்வியல் அனுபவ மற்றும் உணர்வுகள் அடிபடையில் தோற்றம் பெறும் இடங்களே என்பதை வெளிப்படுத்தினார்கள்.

விமர்சன புவியியல் பார்வையில் பிராந்தியம்
மார்க்சியவாதம், பின் - அமைப்பியல்வாதம், பின் காலனித்துவ கோட்பாடு போன்றவற்றிலிருந்து தோற்றம் பெற்ற விமர்சன புவியியல், பிராந்தியங்களை ஆதிக்கம் மற்றும் கருத்தியலின் விளைப்பொருள் என வரையறை செய்தது. இவ் மறுவரையறை படுத்தலுக்குக் காரணமாக அமைந்த முக்கிய பங்களிப்புகளை கீழ்வருமாரு வரிசைப்படுத்தலாம்.

1. பிராந்தியங்கள் சமூக கட்டுமானத்தால் உருவாகுபவை
அன்சி பாசி அவர்கள் பிராந்தியங்கள் எனப்படுவது கருத்து பரிமாறல்கள், ஸ்தாபன உருவாக்கம், நீண்டகால நடைமுறைகள் மூலமாகக் கட்டமைக்கப்பட்டு, காலப்போக்கில் அங்கீகாரத்தினை பெறுகின்றன என்றார்.

அதாவது எல்லைகளை வகுத்தல், வரைபடங்கள், அரசாங்கங்களின் கொள்கையாக்கங்கள் என்பன பிராந்தியங்களை உத்தியோக பூர்வமானதாகின்றது. எனினும், இதன் காரணமாக சில தரப்பினர் அதிகாரத்தை அடைவதும், சிறுபான்மை இனங்கள் போன்ற சில தரப்பினர் ஒடுக்கப்படுவதும் நடக்கின்றது.

2. பிராந்தியங்கள் குறித்த நோக்கங்களுக்காக உருவாக்கப்படுபவை
பிராந்தியங்கள் வெறும் வரைபடங்களில் குறித்து வரையறுக்கப்பட்ட நிலையான பிரதேசங்கள் என்பதை மறுத்து, அவை பொருளாதார வளர்ச்சி, தேசிய ஒற்றுமை போன்ற குறிப்பிட்ட தேவைகளின் பொருட்டு நடைமுறை ரீதியாக உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்படும் பிரதேசங்கள் என்ற பார்வை முன்வைக்கப்பட்டது.

3.கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பிராந்திய உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன
விமர்சன புவியியலாளர்கள் பிராந்திய அடையாளங்களுக்கு எதிரான அல்லது ஆதரவான மக்களின் முன்னெடுப்புகள் பிராந்தியங்களின் உருவாக்கத்தை ஆதரிக்கவும் மறுக்கவும் செய்வதை ஆராய்ந்து, இதுவும் பிராந்திய உருவாக்கத்தில் ஓர் காரணியாகச் செயற்படுவதை எடுத்துக் காட்டினார்கள். எடுத்துக்காட்டாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்காகப் புலனுணர்வு பிராந்தியங்களைக் கட்டமைக்கின்றார்கள், அதே பிராந்தியமயமாக்கல் காரணமாக ஒடுக்கப்படும் மக்கள் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள்.

எடுத்துக் காட்டுகள்
பிராந்தியங்கள் புவியியல் அம்சங்களால் மாத்திரம் தோற்றம் கொள்பவை எனும் வரையறையை மறுத்து அவை கலாச்சார உணர்வு, ஆதிக்க உறவுகள் போன்ற சமூக காரணிகளாலும் வடிவமைக்கப் படுபவை என மானிட புவியியலாளர்களும், விமர்சன புவியியலாளர்களும் முன்வைத்த மறுவரையானது ஸ்பெயினின் கட்டலோனியா பிராந்தியத்தியமும், அமெரிக்காவின் ரஸ்ட் கரையும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ் இரு எடுத்துக்காட்டுகளும் மனிதர்களின் நோக்கும், அரசியல் முன்னெடுப்புகளும் பிராந்திய அடையாளங்களை வடிவமைப்பை வெளிக்காட்டுகின்றன. இக்காரணிகளை மனிதநேய அம்சங்கள் மற்றும் விமர்சன அம்சங்களாக வகைப்படுத்தி நோக்க முடியும்.

எடுத்துக்காட்டு 1: கட்டலோனியா (ஸ்பெயின்)

பின்னணி
கட்டலோனியோ என்பது ஸ்பெயின் நாட்டின் உத்தியோகப்பூர்வமான 17 தன்னாட்சி பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் தனித்துவமான கலாச்சாரம், வரலாறு என்பவற்றைக் கொண்ட கட்டலான் மொழி பேசும் சமூகத்தினரின் தாயகமாகும். இவர்கள் ஸ்பெயின் தேசிய அரசின் ஆளுகையிலிருந்தாலும் தம்மைத் தனித்துவமான தேசியமாகக் கருதி அரசியல் ரீதியாகப் பிரிந்து தனி தேசமாகும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றார்கள்.

மனிதநேய கண்ணோட்ட அம்சங்கள்
கலாச்சார பிணைப்பு - மொழி, கலாச்சார விழாக்கள், தேசிய சின்னங்கள் போன்றவற்றின் ஊடாக ஆழமான கலாச்சார பிணைப்பும், தேசிய கூட்டுணர்வும் வெளிப்படுத்தப்படுகின்றது.

தாயக பற்று – கட்டலோனிய பிராந்திய மக்கள் ஸ்பெயின் அரசின் அங்கமாக இருந்த போதிலும், கட்டலோனியாவை ஸ்பெயினில் இருந்து வேறுபட்ட பிராந்தியமாகவும், தமது தாயகமாகவும் கருதுகின்றார்கள். இது வரலாற்று ரீதியாக கட்டலோனியா பிரதேசம் தன ஆளுகை பிரதேசமாக இருந்த கடந்த கால பதிவுகளிலிருந்து மேலெழுந்த உணர்வாகும்.

விமர்சன கண்ணோட்ட அம்சங்கள்
ஸ்தாபன கட்டமைப்புக்கள் - கட்டாலான் பிராந்திய அரசு, பிராந்தியத்திற்குரிய கல்விக் கூடங்கள், ஊடகங்கள், கொள்கைகள் என்பன தனித்த கட்டாலான் பிராந்தியம் எனும் கருத்தை வலுப்படுத்துகின்றன.

அரசியல் முன்னெடுப்புக்கள் – 2017 ஆம் நடத்தப்பட்ட தனித்த கட்டலான் பிராந்தியத்திற்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசு சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தியமையானது, கட்டலான் மக்கள் தமது தனித்த பிராந்திய அபிலாசைக்காக அரசியல் முன்னெடுப்புகளில் ஈடுபடுகின்றமைக்கு எடுத்துக்காட்டாகும்.

ஆதிக்கமும் எதிர்வினையும் - ஸ்பெயின் அதிபராக பிராங்கோவின் இருந்த காலத்தில் கட்டலோனியாவின் பொருளாதார வளங்களும், மூலாதாரங்களும் ஸ்பெயினின் தலைநகரான மட்ரிட் நோக்கி நகர்த்தப்பட்டமை மற்றும் கட்டலோனியா மீது மேற்கொள்ளப்பட்ட கலாச்சார ஒடுக்குமுறைகள் அவர்களிடையே கட்டலோனிய பிராந்திய உணர்வை தூண்டுகிறது.

எடுத்துக்காட்டு 2: ரஸ்ட கரை (அமெரிக்கா)

பின்னணி
"ரஸ்ட் கரை" எனப்படுவது ஒரு காலத்தில் கனரக தொழில் மற்றும் இரும்பு உற்பத்தியால் ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு அமெரிக்காவின் பகுதியைக் குறிக்கிறது. இப்பிரதேசம் தற்காலத்தில் பொருளாதார சரிவு மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளையும் அனுபவித்து வருகிறது. இப்பகுதிக்கு அதிகாரப்பூர்வ எல்லை எதுவும் இல்லை, சர்ச்சைக்குரிய புலனுணர்வு பிராந்தியமாகவே காணப்படுகின்றது.

மனிதநேய கண்ணோட்ட அம்சங்கள்
• கூட்டு உணர்வு : கடந்த காலத்தில் உருக்கு தொழிற்துறையில் அடைந்திருந்த செல்வாக்கு, பெருமை என்பவற்றுடன் பொருளாதார சரிவு ஏற்படுத்திய இழப்புணர்வும், செழிப்பான கடந்த காலத்தின் மீதான ஏக்கமும் ரஸ்ட கரை பகுதி மக்களிடையே கூட்டு உணர்வை உருவாக்கி உள்ளது.

• மன சித்திரம் : ரஸ்ட் கரை உத்தியோகபூர்வ எல்லைகளைக் கொண்ட பிராந்தியம் அல்ல. இது மக்களிடையே நிலவும் கூட்டுப் புரிந்துணர்வினால் கட்டமைக்கப்பட்டதாகும். ரஸ்ட் கரை தொடர்பான கருத்தாக்கம் ஊடகங்கள் மற்றும், அனுபவ பகிர்வுகள் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது. சில நகரங்கள் (கிளீவ்லேண்ட், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட) அவற்றின் பொதுவான வரலாறு, கூட்டாகப் பொருளாதார சீரழிவுக்கு உள்ளானமை போன்ற காரணங்களால் ரஸ்ட் கரை பிராந்தியம் தொடர்பான கருத்தாக்கங்களில் முதன்மையாக அடையாளப்படுத்தப்படும் இடங்களாகி இருக்கின்றன.

விமர்சன கண்ணோட்ட அம்சங்கள்
• பொருளாதார மறுசீரமைப்பின் தாக்கம் : உலகமயமாக்கல் மற்றும் புதிய தாராளமயக் கொள்கைகள் மூலதன அசைவுகளை மறுசீரமைத்தன, இது இப்பகுதியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு வழிவகுத்தது. இதன் காரணமாக இப்பிரதேசங்கள் பொருளாதார ரீதியாகக் கைவிடப்பட்டுச் சீர்குலைந்து போன பிரதேசங்களாகின.

• கூட்டு எதிர்வினையாற்றல் : பொருளாதார ரீதியாகக் கைவிடப்பட்டுச் சீர்குலைந்தமைக்கு எதிர்வினையான இப்பிரதேசத்தின் கடந்த கால பெருமைகளையும் வளத்தையும் மறுமலர்ச்சி அடையச் செய்யும் முன்னெடுப்புகளை இப்பிராந்தியத்தில் காணமுடிகின்றது. குறிப்பாகப் புத்தாக்க முயற்சிகளையும், புதிய தொழில் நுட்பங்களை உள்வாங்குதலையும் பரவலாக அவதானிக்க முடிகின்றது.

• கொள்கை வகுப்பாக்கத் தாக்கங்கள் : ஐக்கிய அமெரிக்க அரசு இப்பிரதேசங்களை மீள் சரிசெய்வதை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்துள்ளவையானது, இப் பிரதேசம் தனியான பிராந்தியம் என்பதை அங்கீகரித்து வலுப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.

முடிவுரை
மனிதநேய புவியியலாளர்களும், விமர்சன புவியியலாளர்களும் பிராந்தியங்களை நிலையான, புறநிலை பகுதிகளாக அல்லாமல் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட, மாறும் தன்மையுடைய பிரதேசங்கள் என மறுவரையரை செய்துள்ளார்கள். உணர்வு ரீதியான பிணைப்பு, கருத்துருவாக்கம் மற்றும் பிரச்சாரம், ஆதிக்க நிலைமைகளும் உறவுகளும் போன்ற காரணங்களால் பிராந்தியங்கள் கட்டமைக்கப்படுகின்றன. கட்லோனியா மற்றும் ரஸ்ட கரை பிராந்திய வாதங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பொருளாதார நெருக்குவாரங்கள் காரணமாகப் புலனுணர்வு பிராந்தியங்கள் உருவாகின்றன என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகின்றன. இது பிராந்திய புவியியலை மனிதநேய மற்றும் விமர்சன கண்ணோட்டத்தில் அணுக வேண்டியதின் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இவ்வகையில் பிராந்தியங்கள் தொடர்பிலான மனிதநேய மற்றும் விமர்சன புவியியலாளர்களின் மறுவரையரையானது உலகமயமாக்கல் சூழலில் இடங்கள், அடையாளம், சமூக நீதி என்பன பற்றிய தெளிவான புரிதலுக்கு துணைபுரிகின்றது. இந்த மறுகருத்தாக்கம் உலகமயமாக்கப்பட்ட உலகில் இடம், அடையாளம் மற்றும் சமூக நீதி பற்றிய நமது புரிதலை வளப்படுத்துகிறது.

2:00 AM

ஆப்பிரிக்க கண்டத்தின் இயற்கைப் பிராந்தியங்கள்

by , in
வினா-10/15: ஆப்பிரிக்க கண்டத்தின் இயற்கைப் பிராந்தியங்களை புரிந்துகொள்வதில் காலநிலை; மற்றும் தாவரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுகள் மற்றும் சுருக்க வரைபடங்களை பயன்படுத்தி கலந்துரையாடவும்.


அறிமுகம்
உலகின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்பிரிக்கா, பல்வேறு காலநிலைகளால் உருவான பல்வேறான சுற்றுச் சூழல் தொகுதிகளையும், அவற்றுக்கேயுரிய தாவரவியல் மண்டலங்களையும் கொண்டிருக்கின்றது. ஆப்பிரிக்காவை இயற்கைப் பகுதிகளாக வகைப்படுத்துவதில் இக் காலநிலை மற்றும் தாவர மண்டலங்கள் பரவி இருக்கும் கோலங்களை புரிந்துகொள்வது அத்தியாவசியமானதாகும். இவ் இயற்கை பிராந்தியங்கள் சுற்றுசூழல் நிலைமைகளை பிரதிபலிப்பதாக மாத்திரம் இன்றி, மனித குடியிருப்புகள், விவசாய நடைமுறைகள், பொருளாதார நடவடிக்கைகள் என்பவற்றின் தாக்கத்தின் பிரகாரம் அமைந்ததாகவும் காணப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை பிராந்தியம் என்பதினை காலநிலை, தாவரவியல் பரவல், நில அமைப்பு மற்றும் மண்ணின் தன்மை போன்ற பௌதீக பண்புகளின் ஒப்பீட்டளவிலான ஒத்த தன்மையினால் வரையறை செய்யப்படும் புவியியல் பிரதேசமாகும்.

1. இயற்கைப் பகுதிகளை வரையறுப்பதில் காலநிலையின் முக்கியத்துவம்.

ஆப்பிரிக்காவின் காலநிலையானது கடலிலிருந்து அமைந்திருக்கும் தூரம், நிலமட்டத்தின் உயர்வு, பூமத்தியரேகை கோட்டிலிருந்து அமைந்திருக்கும் தூரம் என்பவற்றின் அடிப்படையில் வேறுப்படுகின்றது. இவ்வாறு வேறுப்படும் காலநிலை கோலங்களை அட்சரேகை, உயரம் மற்றும் பெருங்கடல்களுக்கு அருகாமையில் இருப்பதால் பாதிக்கப்படுகின்றன. இந்த காரணிகள் தனித்துவமான மண்டலங்களை உருவாக்குகின்றன:

அ) மத்தியக் கோட்டு காலநிலை - வெப்பமண்டல மழைக்காடுகள்
மத்தியக் கோட்டுக்கு அருகே, காங்கோ படுகை, லைபீரியா, நைஜீரியா நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு ஆபிரிக்காவின் கடலோரே பகுதிகள், மற்றும் உகாண்டானவின் சில பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியத்தில் காணப்படும் காலநிலையாகும். இப்பகுதி ஆண்டுமுழுவதும் 25-27 செல்சியஸ் வெப்பநிலை கொண்டதாகவும், 2000 மில்லிமீற்றர்க்கு அதிகமான சராசரி ஆண்டு மழைவீழ்ச்சியை பெறுவதாகவும் காணப்படுகின்றது. இக்காலநிலை என்றும் பசுமையான மரங்கள் எனப்படும் மகோனி, கருங்காலி போன்ற மரங்களால் நிறைந்த அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகளை உருவாக்கின்றது. இப்பகுதிகளில் மரம் வெட்டுதல், சேனை பயிர்ச்செய்கை ஆகியன பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக காணப்படுவதோ, வளமான உயிர்பல்வகைமையின் பொருளாதார பெறுமானங்கள் (காபன் வளம், மூலிகைகள்) காரணமான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

எடுத்துக் காட்டு – காங்கோ வெப்ப மண்டல மழைக்காடு

ஆ) வெப்பமண்டல ஈர மற்றும் உலர் காலநிலை – சவன்னா புல்வெளிகள்
இக்காலநிலை மேற்கு, கிழக்கு, தெற்கு ஆபிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றது. இங்கு ஒர் ஆண்டில 4 – 6 மாதங்கள் பருவ மழையையும்;, எஞ்சிய மாதங்களில் வரட்சியும் நிலவுகின்றது. சவான்னா புல்வெளிகளும், அவற்றில் ஆங்காங்கு பரவியிருக்கும் அகாசியா, பாபாப் மரங்களும் இப்பகுதியின் தாவரவியல் மண்டலத்தை உருவாக்கின்றது. இக்காலநிலை மேய்ச்சல் தொழில், வறட்சி காலநிலையில் தாக்கு பிடிக்க கூடிய சோளம், திணை போன்ற பயிர்ச்செய்கை போன்ற பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது.

எடுத்துக்காட்டு காட்டு - சூடானிய சவன்னா புல்வெளி பகுதி


இ) பாலைவனம் மற்றும் அரை வறண்ட காலநிலை
வடக்கே சஹாரா, தெற்கே கலஹாரி மற்றும் நமீப்) மற்றும் சஹேல் பகுதியில் காணப்படும் காலநிலையாகும். இப்பகுதி ஆண்டுக்கு 250 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியையே பெறுகின்றது. வருடம் முழுவதும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கின்றது. அரிதாக காணப்படும் ஜெரோஃபைட்டுகள், முட் புதர்கள், வரள் நில புற்கள் தாவரங்களால் செறிவற்ற தாவரவியல் மண்டலம் ஆக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பாலைவனமாகல், நீர் பற்றாக்குறை, விவசாய நடவடிக்கைகளுக்கான மிக குறைவான வாய்ப்புகள் போன்ற சவால்களை சந்தித்து வருவதால் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன.

எடுத்துக்காட்டு - சஹாரா பாலைவனம், சஹேலியன் பிரதேசம்

ஈ) மத்திய தரைக்கடல் காலநிலை

இக் காலநிலையை மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா நாடுகளை உள்ளடக்கிய ஆபிரிக்காவின் வடக்;கு பகுதியிலும், தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு முனை பகுதியிலும் காணலாம். குறைந்தளவில் மழைபொழியும் குளிர்காலமும், வெப்பமான வறண்ட கோடைக்காலமும காணப்படுகின்றது. மாக்விஸ், சாப்பரல் போன்ற மத்தியதரைக்கடல் புதர்காடுகள் இப்பகுதியின் தாவரவியல் மண்டலத்தை உருவாக்கும் பிரதான தாவரங்களாகும். இப்பகுதி திராட்சை, ஓலிவ், ஆரஞ்சு பழ உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பிரசித்தமானதாகும். எனவே இவற்றின் பயிர்ச்செய்கையும், ஏற்றுமதியும் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக காணப்படுகின்றது.

இ) உயர்நிலக் காலநிலை - மலைக் காடுகள்
இக்காலநிலையை எத்தியோப்பியன் உயர் நிலங்கள், கென்யா, தன்சானியா நாடுகளின் பிரதேசங்களை உள்ளடக்கிய கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு பகுதி போன்ற அதிக நிலமட்ட உயரத்தை கொண்ட பிராந்தியத்தில் காணலாம். நிலமட்ட உயர்வுக்கு ஏற்ப இப்பகுதியின் வெப்பநிலையும், மழைவீழ்ச்சியும் வேறுப்படுகின்றது. பொதுவாக அயிலில் இருக்கும் தாழ்நிலப் பகுதியை விட குளிர்ந்த , ஈரமான நிலைமைகளை கொண்டிருக்கும். இப்பகுதி மலைக் காடுகளையும், மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்பட் கோப்பி, தேயிலை பெருந்தோட்டங்களையும், அடர்த்தியான மனித குடியிருப்புக்களையும் கொண்டிருக்கின்றது. பெருந்தோட்ட பயிர்ச்செய்iகை, தோட்டக்கலை (பழங்கள், பூக்கள், மரக்கறிகள்) போன்ற பிரதான பொருளாதார நடவடிக்கைகளாகும்.

எடுத்துக்காட்டு - கிழக்கு ஆப்பிரிக்க மலைப்பகுதிகள் .

2. தாவரவியல் மண்டலங்களும் பிராந்திய வகைப்பாடும்
தாவரவியல் மண்டலங்கள் காலநிலை நிலைமைகளின் தெளிவான பிரதிபலிப்பாக காணப்படுகின்றன. இது ஆபிரிக்காவின் இயற்கை பிராந்தியங்களை அடையாளப்படுத்தி வகைப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. வெவ்வேறான தாவர மண்டலங்கள் ஈரப்பதன், வெப்பநிலை, நிலமட்ட உயரம் என்பவற்றின் வேறுப்பாடுகளை பிரதிபலிப்பதால் இயற்கை பிராந்தியங்களை துல்லியமாக வகுக்க முடிகின்றனது. அதனடிப்படையில் ஆபிரிக்காவின் இயற்கை பிராந்தியங்களை கீழ்வருமாரு வகுக்கலாம்.

1) மழைகாடுகள் தாவரமண்டல்- மத்தியக் கோட்டு கால பகுதிகளில் மழைக்காடு தாவரங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் ஈரப்பதத்தைக் கொண்டிருக்கின்றது. உயிர் பல்வகைமை அதிகமாக கொண்டது.

2) சவன்னா புல்வெளிகள் - இது மழைக்காடுகளுக்கும் பாலை வனத்திற்கும் இடையிலான இடைநிலை வலயம் ஆகும்.

3) பாலைவன தாவர மண்டலம் - தாவரங்கள் அரிதான வறண்ட பகுதியாகும்.

4) மலைக்காடுகள் தாவர மண்டலம் - மலைப்பகுதிகளில் மலைத் பகுதி தாவரங்களால் உருவாகின்றது.

5) மத்தியதரைகடல் புதர்காடு தாவர மண்டலம் - புதர் நிலங்கள் கோடை வறட்சியுடன் கூடிய பருவகால காலநிலையில் தோன்றுகின்றன.

3. மனித மற்றும் பொருளாதார புவியியலில் பங்கு
காலநிலை மற்றும் தாவரங்களைப் புரிந்துகொள்வது பின்வருவனவற்றில் உதவுகிறது:

நில பயன்பாட்டு திட்டமிடல் - எ.கா., சவன்னாக்களில் கால்நடை வளர்ப்பு , நைல் பள்ளத்தாக்கில் நீர்ப்பாசன விவசாயம்.

பல்லுயிர் பாதுகாப்பு - எ.கா.- மழைக்காடு அழிவை நிர்வகித்தல்.

பேரிடர் மேலாண்மை - எ.கா., சஹேலில் வறட்சியைத் எதிர்கொள்வதற்கான தயார்நிலைகள்.

மக்கள்தொகை பரவல் - மலைப்பகுதிகள் மற்றும் சவன்னாக்களில் அடர்த்தியானது, பாலைவனங்களில் அரிதானது.

முடிவுரை
காலநிலை மற்றும் தாவரவியல் மண்டல அடிப்படையில் ஆப்பிரிக்கா கண்டத்தை வெப்பமண்டல மழை காடுகள், பாலைவன மற்றும் அறை வறண்ட வலயம், மத்திய தரை  முற்பதற்காடுகள், உயர்நில மலைக்காடுகள்  என பிராந்தியங்களாக பிரிக்கலாம்.

இவ் வகையில் ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிராந்தியங்களை புரிந்து கொள்வதற்கும் வரையறுப்பதற்கும் காலநிலை வடிவங்களும் தாவர மண்டலங்களும் முக்கியமானவையாகும். அவை பௌதீக புவியியல் பற்றி புரிதலையும், கலாச்சார மற்றும் பொருளாதாரத்தின் அமைவையும் பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பரம்பல் கோலங்களை புரிந்து கொள்வது மூலம் ஆபிரிக்க கண்டத்தில் வினைத்திறனான திட்டமிடல், வள முகாமைத்துவம், நிலைபேண் அபிவிருத்தி என்பவற்றுக்கு வழிவகுக்கும். இவ்வகையில் ஆபிரிக்க கண்டத்தை தாவரவியல் மண்டலங்கள் மற்றும் காலநிலை கோலங்கள் வழியாக இயற்கை பிராந்தியங்களாக வகைப்படுத்தி புரிந்துக் கொள்ள வேண்டியது பிராந்திய புவியியலின் அடித்தள பணிகளில் ஒன்றாக அமைகின்றது.

8:30 PM

பரப்பியல் கட்டமைப்பை விளங்கப்படுத்துவதில் புவியியலாளர்களின் பங்களிப்பு

by , in
வினா-07/15: பிராந்தியங்களின் பரப்பியல் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் புவியியலாளர்கள் நல்கியுள்ள பங்களிப்பைப் பற்றி கலந்துரையாடுக.

அறிமுகம்
பரப்பியல் கட்டமைப்பு எனப்படுவது பௌதீக மற்றும் மனித புலப்பாடுகள் புவியியல் வெளியில் ஒழுங்கமைந்துள்ள விதத்தினை குறிக்கின்றது. பிராந்தியங்கள் பற்றிய பகுப்பாய்வினை செய்வதற்கு பரப்பியல் கட்டமைப்புகளை புரிந்துக் கொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமாதாகும். இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள பரப்பியல் கட்டமைகளை விளங்கப்படுத்துவதற்காக ஆரம்பகாலம் தொட்டே புவியியலாளர்கள் கோட்பாட்டு ரீதியாகவும், பிரயோக ரீதியாகவும் காத்திரமான பங்களிப்பை நல்கி வந்துள்ளார்கள். இப்பங்களிப்புக்கள் பிராந்தியங்கள் பற்றிய பகுப்பாய்விலும், புவியியலின் விடயப்பரப்பிலும் பரிணமான வளர்ச்சியை ஏற்பட காரணமாக அமைந்திருக்கின்றன.

பரப்பியல் கட்டமைப்பின் வகைப்பாடும் புரிந்துக் கொள்வதற்கான அணுகுமுறைகளும்
புவியியலாளர்களின் பங்களிப்பை ஆராயும் போது, பரப்பியல் கட்டமைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ள மற்றும்; புரிந்துக் கொள்ளப்பட்ட விதத்தின் பின்னணியில் ஆராய்வது முக்கியமானதாகும். புவியலாளர்கள் பரப்பியல் கட்டமைப்புகளை ஆராய பல்வேறுப்பட்ட அணுகுமுறைகளை கைக்கொண்டு வந்திருக்கின்றார்கள். இவ் அணுகுமுறைகளை ஆரம்பகால அல்லது புராதான பிராந்திய புவியியல் அணுகுமுறை, பரப்பியல் விஞ்ஞான மற்றும் அளவுசார் வழிமுறை, நடத்தைவாத மற்றும் மனிததேய புவியியல் கண்ணோட்டம், மார்க்சிய மற்றும் விமர்சன கண்ணோட்டம், பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார அணுகுமுறை, புவியியல் தகவல் முறைமை போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்திய அணுகுமுறை என வரிசைப்படுத்தி ஆராயலாம்.

ஆரம்பகால புவியியலாளர்கள் பௌதீக மற்றும் மானிட பண்புகளை கொண்டு பிராந்தியங்களை விவரிப்பதில் முதன்மையான கவனத்தை செலுத்தினார்கள். இடங்கள் கொண்டுள்ள தனித்துவமான அடையாளங்களை புரிந்துக் கொள்வதே இவர்களின் நோக்கமாக இருந்தது. இதன் பின்னராக புவியியலில் ஏற்பட்ட அளவுசார் புரட்சியின் விளைவாக புள்ளிவிபரவியல் மற்றும் மாதிரி (அழனநட) நுட்பங்களை உள்வாங்கி பரப்பியல் கட்டமைப்புக்கள் பற்றிய துல்லியமான பகுப்பாய்வும், கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நேர்மாறாக நடத்தைவாத மற்றும் மனிதநேய புவியியலாளர்கள் நடைமுறை அனுபவங்கள் மற்றும் மனித - சூழல் இடைத்தொடர்புகளிலும் கவனம் செலுத்தி பரப்பியல் கட்டமைப்புகளை விளங்கப்படுத்த முற்பட்டார்கள். இதனை தொடர்ந்து புவியியலில் ஏற்பட்ட விமர்சன அணுகுமுறை, குறிப்பாக மார்க்சிய கண்ணோட்டம், பரப்பியல் கட்டமைப்புக்கள் ஆதிக்கம், முதலாளித்துவம், சமத்துவின்மை போன்ற அரசியல் காரணிகளினால் வடிவமைக்கப்படுகின்றது எனும் பார்வையை முன்வைத்தார்கள். பின் வந்த , பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார புவியியலாளர்கள் இடங்கள், பிராந்தியங்கள், சுற்றுச் சூழல் போன்ற வெளிகள் சமூக ரீதியாக கட்டமைக்கப்படுவதையும், வெவ்வேறு மக்கள் குழுக்கள் ஒரே வெளியை கூட வெவ்வேறாக புரிந்துக் கொள்வதினையும் விளங்கப்படுத்தி விமர்சன அணுகுமுறையாளர்களின் கண்ணோட்டத்தை வலுப்படுத்தினார்கள். சமகாலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணடாக புவியிலாளர்களால் சிக்கலான பரப்பியல் உறவுகளை நிகழ் நேரத்தில் காட்சி வடிவில் நோக்கி பகுப்பாய்வு செய்வது மூலம் பரப்பியல் கட்டமைப்புகளை விளங்கப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள்.

ஆரம்பக்கால பங்களிப்புகள்

ஆரம்பகால புவியியலாளர்கள் பிராந்தியங்களின் பரப்பியல் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை அமைத்து பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். இவர்கள் இடங்கள் பற்றிய முழுமையான ஆய்வை நடத்தினார்கள்.

எடுத்துக்காட்டாக, விடல் டி லாபிளாச், காலவோட்டத்தில் இயற்கையாக அபிவிருத்தி அடைந்த சிறிய பிராந்தியங்கள், மனிதர்களுக்கும் பௌதீக சூழலுக்கும் இடையேயான இடைத்தொடர்பினால் தோன்றியதை என்பதை விளங்கப்படுத்தும் ‘ஊழnஉநிவ ழக Pயல’ எண்ணக்கருவை முன்வைத்தார். இவர் புவியியலை மனிதர்களுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பை புரிந்துக் கொள்ள அவசியமானதாக இருக்கும், இடங்கள் பற்றிய விஞ்ஞானமாக நோக்கினார்.

இதனை போலவே, ரிச்சர்ட் ஹார்ட்ஷோர்ன் தனது கோரோலோஜி – ஊhழசழடழபல அணுகுமுறை மூலம் பிராந்தியங்களின் தனித்துவம் பற்றி புரிந்து கொள்வதற்கு அப்பிராந்தியத்தின் மானிட புவியியல் மற்றும் பௌதீக புவியியல் ஆகிய இரண்டின் அம்சங்களையும் இணைத்து கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இவ் ஆரம்பக்கால மரபு தற்கால நவீன பிராந்திய திட்டமிடலிலும் செல்வாக்கு செலுத்தும், நில அமைப்பு, காலநிலை, கலாச்சாரம், காணி பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான பிராந்திய வகைப்படுத்தலுக்கான அடித்தளத்தை இட்டது.

அளவுசார் புரட்சிக் மற்றும் பரப்பியல் விஞ்ஞான எழுச்சி கால பங்களிப்புகள்.
1950 மற்றும் 1960களில் ஏற்பட்ட அளவுசார் புரட்சியின் விளைவாக ஆய்வு நெறிமுறைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. வால்டர் கிறிஸ்டாலர் போன்ற புவியியலாளர்கள் பிரதேசம் ஒன்றில் குடியேற்றங்களின் பரம்பல் அமைந்திருக்கும் விதத்தினை விளக்க மாதிரிகளை உருவாக்கினார்கள். அவரின் மைய இடக் கோட்பாட்டு – ஊநவெசசயட pடயஉந வுhநழசல – பொருட்களும் சேவைகளும் விநியோகம் செய்யப்படும் திறனின் அடிப்படையில் குடியிருப்புக்கள் அறுகோன அமைப்பு வடிவத்தில் ஒழுங்கமைக்க பட்டுள்ளன என முன்மொழிந்தது. இதன் அடிப்படையில் பெரிய நகரங்கள் அதிகளவான பொருட்களையும் சேவைகளையும் வழங்க கூடியதாகவும், அதனை சூழ அமையும் சிறய நகரங்கள் குறைந்த அளவிலான பொருட்கள் சேவைகளை வழங்குவதாகவும் படிநிலை அமைப்பை கொண்டிருக்கின்றன. இது நகரங்களின் படிநிலை அமைப்பு முறையை விளக்கியது.

இதனை போலவே ஈர்ப்பு மாதிரி – புசயஎவைல அழனநடள - மற்றும் வலையமைப்பு பகுப்பாய்வு – நேவறழசம யயெடலளளை- ஆகியன புவியியலாளர்களுக்கு வர்த்தகம், இடப்பெயர்வு, நாளாந்த பயண முறைகள் போனடற பரப்பியல் இடைத்தொடர்புகளை அளவிட உதவியது. இம்மாதிரிகள் பரப்பியல் கட்டமைப்புக்கள் உள்ளுர், பிராந்திய மற்றும் பூகோள பரிமானங்களில் எத்தகைய தொழிற்பாட்டை கொண்டுள்ளன என்பதை புரிந்துக் கொள்ள உதவியதோடு, அவை நகர போக்குவரத்து திட்டமிடலில் முக்கிய பங்கை வகிப்பதாகவும் மாறியது.

நடத்தை மற்றும் மனிதநேய புவியியல் கால பங்களிப்புகள்
பரப்பியல் விஞ்ஞானம் புற பௌதீக விடயங்கள் மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகளிலேயே அதிக கவனம் குவித்திருந்தமையால் மட்டுப்பாடுகளை கொண்டிருந்தது. இதற்கு எதிர்வினையாக மனிதநேய புவியியலாளர்கள் இடங்கள் அல்லது வெளிகள் தொடர்பில் மனிதர்கள் கொண்டிருக்கு உணர்வுகள், அனுபவங்கள் போன்ற அகவிடயங்களையும் கருத்திலெடுத்து ஆராயும் அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார்கள்.

இவற்றில் டோர்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண் முன்வைத்த கால - புவியியல் மாதிரி முக்கியமானதாகும். இம்மாதிரி மனிதர்களின் நாளாந்த நடவடிக்கைகள் காலம் மற்றும் இடம் அல்லது வெளி என்பவற்றால் மட்டுப்படுத்தப் படுத்தப் படுகின்றது அல்லது வடிவமைக்கப் படுகின்றது என்பதை விளக்கியது. இம்மாதிரி , ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்க இயலாத உயிரியல் ரீதியான மட்டுபாடுகள் (திறன் மட்டுபாடுகள்), வேலை நேரம், கூட்டத்தில் பங்கெடுக்கும் அவசியம் போன்ற இணை சேர வேண்டிய தேவைகள் (இணைப்பு மட்டுபாடுகள்), சில இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப் படாமை போன்ற சமூக விதிமுறைகள் - சட்டங்கள் (அதிகார மட்டுப்பாடுகள்) ஆகிய மூன்று வகையான மட்டுபாடுகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பரப்பியல் கட்டமைப்புகளால் வடிவமைக்கப்படும் காலம், இடம் சார்ந்த மட்டுப்பாடுகளுடனனே மனிதர்கள் தமது வாழ்வில் இடங்களை கண்டறிகிறார்கள் என்ற புரிதல் ஏற்பட்டது.

மேலும், மனிதர்கள் இடங்களை எவ்வாறு உணர்கின்றார்கள் என்பது பற்றிய மனப்படிவ – அநவெயட அயி ஆய்வுகளும், மனிதர்களின் கலாச்சாரம், ஞாபகங்கள், அடையாளம் ஆகியன அவர்கள் இடங்களை உணரும் விதத்தில் செல்வாக்கு செலுத்துவதை எடுத்துக்காட்டின.

இவ் அணுகுமுறைகள் இடம் எனப்படுவது வெறும் புவியல் அமைப்புகள் மாத்திரமல்ல, அவை மனிதர்களின் அனுவங்களாலும், சமூக காரணிகளாலும் உருவாகுபவை என்பதை வலியுறுத்தின. இது பரப்பியல் கட்டமைப்புகள் பற்றி புரிதலில்; புதிய பரிமாணங்களை ஏற்படுத்தியது.

மார்க்சிய மற்றும் விமர்சன புவியியல்
மார்க்சிய மற்றும் விமர்சன புவியியலாளர்கள் அரசியலும், பொருளாதாரமும் இடங்கள் ஒழுங்கமைக்கப்படும் விதத்தை ஆராய்ந்தார்கள். டேவி ஹார்வி போன்ற சிந்தனையாளர்கள், முதலாளித்துவ முறைமையில் இடங்கள் இலாப நோக்கில் வடிவமைக்கப்படுவதையும், அதன் காரணமாக சில பிராந்தியங்கள் வளர்ச்சி அடைவதையும் சில இடங்கள் பின் தங்கி இருப்பதையும் எடுத்துக்காட்டினார்கள். ;ளுழயவயைட கiஒ, வெளிகளை சரிசெய்தல்’ எண்ணக்கரு, பொருளாதார நடவடிக்கைகள் இலாபமீட்டும் இடங்களை நோக்கி நகர்வதையும்,‘கையகப்படுத்தி ஒன்றுசேர்த்தல்’ யஉஉரஅரடயவழைn டில னiளிழளளநளளழைn எண்ணக்கரு அதிகாரம் அற்ற சமூகங்கள் தமது நிலங்களையும், வளங்களையும் இழந்து வருவதையும் விளங்கப்படுத்தின. இவ் அணுகுமுறைகள் நியாயமற்ற முறைகளை அம்பலப்படுத்தி, சமூகநீதிக்காகவும், நீதியான கொள்கைகளுக்காகவும் போராடும் வழிமுறைகளை முன்மொழிந்தன.

பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார கண்ணோட்டங்களின் பங்களிப்பு
பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார புவியியலாளர்கள் பரப்பியல் கட்டமைப்புகளை நெகிழ்வு தன்மையுடனும், பல்பரிமான பார்வையுடனும் அணுகினார்கள். டோரின் மாஸி பிராந்தியங்கள் தனித்தனியானவையோ நிலையானவையோ அல்ல, அவை உலகளாவிய ரீதியிலான வலையமைப்பில் இணைக்கப்பட்ட பகுதிகள் ஆகும் என்பதை வலியுறுத்தினார். மேலும், கலாச்சார புவியியலாளர்கள் இடங்கள் பற்றிய பார்வையும், அனுபவங்களும் பாலினம், இனம், வர்க்கம், போன்ற காரணங்களால் மாற்றத்திற்குள்ளாவதை எடுத்துக் காட்டினார்கள். இக்கண்ணோட்டம் புவியியலாளர்களுக்கு இடங்களின் மாறும் மற்றும் சிக்கல் தன்மையை புரிந்துக் கொள்ள உதவியது.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்: GIS மற்றும் தொலை உணர்தல் தொழில்நுட்பம்

அண்மைக்கால கணினி சார் தொழில்நுட்பங்களின் வரவானது, பரப்பியல் பகுப்பாய்வுகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் எழுச்சி இடஞ்சார்ந்த பகுப்பாய்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. புவியியல் தகவல் முறைமையானது (GIS) புவியியலாளர்களுக்கு சிறந்த விளக்கத்தை தரும் வகையில் சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு வகையான தரவுகளை ஒரே வரைப்படத்தில் உள்ளடக்கி ஆராயயும் வாய்ப்பை தந்துள்ளது.

தொலைவு உணர் தொழில்நுட்பமானது நிகழ்நேர செய்மதி படங்கள் மூலம், நில பயன்பாடு, காடழிப்பு, நகர்ப்புற வளர்ச்சி, பேரழிவு தாக்கம் போன்றவற்றை கண்காணிக்கின்றது. இத் தொழில் நுட்பங்கள் பாரம்பரிய புவியியல் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வகையில் துல்லியமான தரவுகளை வழங்குவது மூலம், பிராந்திய திட்டமிடல், சுற்றுச்சூழல் மேலாண்மை, கொள்கை வகுப்பாக்கம் போன்றவற்றில் இன்றியமையாததாகிவிட்டன,

முடிவுரை
நாம் புவியியல் கட்டமைப்புகளை புரிந்துக் கொள்ளும் பொருட்டு, புவியியலாளர்கள் பரந்தளவிளாலனதும் பல்வகைப்பட்டதுமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இப்பங்களிப்புக்கள் தொடர்ச்சியாக பரினாம வளர்ச்சியை கண்டு வருகின்றது. புவியியலாளர்களின் பங்களிப்புகள் இப் பங்களிப்புகள், பிராந்திய அடையாளத்தை முதன்மை படுத்திய ஆரம்பகால காலகட்டத்திலிருந்து, சமகால தொழில்நுட்ப யுகம் வரையிலும் இடங்களின் வேறுப்பாடுகளை விளக்கி, வினைத்திறனான திட்டமிடல்களை மேற்கொள்ளவற்கு துணைபுரிந்து வருகின்றன. சமகால வேகமான நகரமயமாக்கல், காலநிலை மாற்றங்கள், மற்றும் பூகோள மயமாதல் சூழல்களில் பரப்பியல் கட்டமைப்புகள் பற்றிய புவியியல் அறிவானது முன்னெப்போதையும் அதிக தேவையுள்ளதாக மாறி இருக்கின்றது.
6:30 PM

இலங்கையை முறைசார் பிராந்தியங்களாக பிரித்தல்

by , in
வினா-06/15: பௌதீக, கலாச்சார, தொழிற்பாட்டு அளவு கோல்களைக் கவனத்திற் கொண்டு,இலங்கையை முறைசார் பிராந்தியங்களாகப் பிரிப்பதற்கான அடிப்படைகளைச் சுருக்க வரைப்படங்கள் மற்றும் பொருத்தமான உதாரணங்கள் மூலம் கலந்துரையாடவும்.

அறிமுகம்
புவியியலாளர்கள் முறைசார் பிராந்தியங்களை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த பௌதீக, கலாச்சார, தொழிற்பாட்டுப் பண்புகளால் ஒன்றிணைக்கப்பட்டதும், அப்பண்புகள் காரணமாகச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து வேறுபட்டிருப்பதுமான பரப்பியல் அலகுகள் என்று வரையறுக்கின்றனர். இலங்கையில் பிராந்தியமயமாக்கலானது வளங்களின் முகாமைத்துவம், கலாச்சார புரிந்துணர்வு, சிறப்பு திட்டமிடல்கள் என்பவற்றுக்குத் துணைபுரிவதாகக் காணப்படுகின்றது. பௌதீக புவியியல், கலாச்சார பண்புகூறுகள், தொழிற்பாட்டுப் பண்புகள் ஆகிய அளவுகோல்கள் இலங்கை தீவை முறைசார் பிராந்தியங்களாக வரையறை செய்வதற்கான அடித்தளத்தை அமைக்கின்றது.

1. பௌதீக அளவுகோல்கள்
பௌதீக அளவுகோல்கள் எனப்படுவது பிரதேசங்களைத் தனியான பிராந்தியங்களாக வேறுப்படுத்த பயன்படும், நிலஅமைப்பு, காலநிலை, கடல் மட்டத்திலிருந்தான உயரம், சூழல் தொகுதிகள் போன்ற பௌதீக பண்புகளைக் குறிக்கின்றன. இப்பண்புகள் அடிப்படையில் இலங்கையை கீழ்குறிப்பிடும் வகையில் பிராந்தியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றது .

• மத்திய மலைப் பிரதேசங்கள் - இது கடல் மட்டத்திலிருந்து 1000 மீற்றருக்கும் அதிக உயரமான நிலப்பகுதி ஆகும். நுவரெலியா , கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்கள் இதற்குள் உள்ளடங்குகின்றது. இவ் உயர்நில பிரதேசங்கள், மலைகள் (பீதுறுதாலகல மலைத்தொடர், நக்கிள்ஸ் மலைத்தொடர்), குளிர்ச்சியான வெப்பநிலை (12–20 செல்சியஸ்), அதிக மழைவீழ்ச்சி (ஆண்டுக்கு 2,500 மில்லி மீற்றரக்கும் அதிகம்) ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பௌதீக அம்சங்களால் இயற்கையான முறையில் உருவான மலைக்காடுகளையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேயிலைத் பெருந்தோட்டங்களையும் கொண்டுள்ளது. இவ் சூழற் பௌதீக (டீழை Phலளiஉயட) பண்புகள் உடன் அடுத்த பிரதேசமாகவிருக்கும் தாழ்நில பகுதிகளில் காணப்படுவதில்லை.

• தாழ்நில சமவெளிகள் - இது தென்மேற்கில் ஈர வலயத்திலிருந்து (காலி, இரத்தினபுரி ) வடக்கு மற்றும் கிழக்கு உலர் வலயம் (அனுராதபுரம், பொலன்னறுவை) வழியாக நீண்டு செல்லும் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். இந்தப் பகுதிகள் தட்டையான சமவெளி நிலப்பரப்பு, பருவகால காலநிலை என ஒத்த பௌதீக அம்சங்களைக் கொண்டுள்ளன. தென்மேற்கு பகுதியில் அதிக மழைவீழ்ச்சியை பயன்படுத்தியும், வட-கிழக்கு பகுதிகளில் பாய்ந்தோடு ஆறுகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட நீர்ப்பாசனம் மூலமும் நெல் பயிர்ச்செய்கை இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

• கடலோரப் வலயம் : இது கடல் மட்டத்திலிருந்து பெரும்பாலும் 30 மீற்றருக்கும் குறைவான உயரத்தைக் கொண்ட, சுமார் 1340 கிலோமீற்றர் நீளமான குறுக்கலான பிரதேசமாகும். இப்பிரதேசங்கள் மணற்கடற் கரைகள், களப்புக்கள், சதுப்பு நிலங்கள், கண்டல் தாவர காடுகள் ஆகிய பௌதீக அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இப்பகுதிகள் சீரான வெப்பமண்டல கடலோர காலநிலை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மீன்பிடி சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகள் இப்பகுதி முழுவதும் காணப்படுகின்றது.

மேற் கூறிய ஒத்த பௌதீக பண்பு தொகுதிகள் அடிப்படையில் இலங்கையை மத்திய உயர்நில பிராந்தியம், தாழ்நில சமவெளி பிராந்தியம், கடலோர வலயம் என மூன்று முறைசார் வலயங்களாக பிரித்து அடையாளம் காணலாம்.

[சுருக்க வரைபடம் மெல்லியதாக பென்சிலில் வர்ணம் தீட்டுதல், வரிகோடுகளை வரைதல் மூலம் மத்திய மலைநாடு, உலர் வலய சமவெளி மற்றும் குறுக்கலான கடலோர பகுதிகளை வேறுபடுத்திக் குறித்துக் காட்டவும்.]

2. கலாச்சார அளவுகோல்கள்
கலாச்சார அளவுகோல்கள் எனப்படுவது பிராந்தியம் ஒன்றில் பொதுவானதாக காணப்படும் மொழி, மதம், இனஅடையாளம், பண்பாட்டு நடைமுறைகள் போன்ற மனித காரணிகளைக் குறிக்கின்றது. இலங்கையின் கலாச்சார பன்மைத்துவத்தின் ஒழுங்கமைவைக் கொண்டு கீழ்வரும் ஒத்த பண்புகளைக் கொண்ட பிரதேசங்களை அடையாளப்படுத்தலாம்.

• சிங்கள - பௌத்த பிரதேசம் : இது கண்டி, குருநாகல், அநுராதபுரம், மாத்தளை போன்ற இலங்கையின் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். இப்பகுதிகளில் சிங்கள மொழி பேசும் சிங்கள இன மக்களைப் பெரும்பான்மையாகவும், தேரவாத பௌத்த மதத்தைப் பிரதான மதமாகவும் கொண்டிருக்கின்றது. தலாதா மாளிகை போன்ற பாரம்பரிய கலாச்சார அடையாளங்களும், தலதா பெரஹர போன்ற கலாச்சார நிகழ்வுகளும் முக்கிய வரலாற்றுக் கலாச்சார குறியீடுகளாகும். சிங்கள மொழியும், சிங்கள மொழிசார் பண்பாட்டு அடையாளங்களும் இப்பிரதேசங்களில் சீராகப் பரவிக் காணப்படுகின்றது.

•வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் : யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசமாகும். தமிழ் மொழி பேசும் தமிழின மக்களை பெரும்பாண்யாக கொண்டிருக்கின்றது. தமிழர் பண்பாட்டு நடைமுறைகள், வழக்காறுகள், தனித்துவமான நாட்டுப்புற கலைகள், சமய நிகழ்வுகள் என்பன இப்பகுதியின் பொதுவான கலாச்சார அம்சங்களாகக் காணப்படுகின்றன.

இவ் சமூக – கலாச்சார பண்புகளின் பிரகாரம் இலங்கையை வடக்கு – கிழக்கு தமிழர் பிராந்தியம், மத்திய – தெற்கு சிங்கள பௌத்த பிராந்தியம் என இரு பிராந்தியங்களாக வகைப்படுத்திக் காணலாம்.

[ சுருக்க வரைபடம்: வடக்கு – கிழக்கு மாகாணங்களை எல்லை குறித்து கோடு வரைவதின் மூலம் இரு பிராந்தியங்களையும் வேறுபடுத்திக் காட்டலாம். ]

3. தொழிற்பாட்டு அளவுகோல்கள்

தொழிற்பாட்டு அளவுகோல்கள் எனப்படுவது, மையப் பகுதி அல்லது முனை ஒன்றுடன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைக்கும், வர்த்தகம், நாளாந்த பயண நகர்வுகள், தொடர்பாடல், நிர்வாக கட்டுப்பாடு போன்ற அளவீடு செய்யக் கூடிய தொடர்புகளையும், இடைத்தொடர்புகளையும் குறிப்பதாகும். இலங்கையில் அவ்வாறான மையப்பகுதிகளுடன் இணைந்திருப்பது மூலம் பொதுத்தன்மையைப் பெறும் கீழ்வரும் பிரதேசங்களை இனம்காணலாம்.;

கொழும்பு பெருநகரப் பிரதேசம் : கொழும்பை மையமாகக் கொண்டு அருகிலுள்ள கம்பஹா, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி அமையும் பிரதேசம் ஆகும். அதிகப்படியான மக்களின் நாளாந்த பயண நகர்வுகள், பொதுவாக அமைந்த உட்கட்டமைப்பு வசதிகள், நிதி, அரச நிர்வாக மற்றும் துறைமுகம், விமானநிலையம் சார் நடவடிக்கைகள் செறிந்து காணப்படுகின்றமை போன்ற பொதுவான அம்சங்கள் இப்பிரதேசங்கள் பொதுத்தன்மை வாய்ந்ததாக இணைக்கப் படுகின்றது..

• மகாவலி அபிவிருத்தி வலயம் : இது மகாவலி ஆற்றுப் படுகையையும் அதன் நீரேந்தும் பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசம் ஆகும். துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நீர்ப்பாசனம், நீர் மின் உற்பத்தி, விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்புகள், அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்மைப்பு வசதிகள் போன்ற காரணங்களால் இப்பிரதேசங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

இவ் பொது தொழிற்பாடுகள் அடிப்படையில் இலங்கையில் கொழும்பை மையமாக கொண்ட கொழும்பு பெருநகர பிராந்தியம் மற்றும் மகாவலி ஆற்றுப் படுக்கையை மையமாக கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட மகாவலி அபிவிருத்தி பிராந்தியம் ஆகிய இரு தொழிற்பாட்டுப் பிராந்தியங்களை அடையாளப் படுத்தலாம்.

[ சுருக்க வரைபடம்: கொழும்பு மற்றும் மகாவலி ஆற்றுப் படுகைகள் பிரதேசத்தை பருமட்டாக வரையறை செய்து வேறுப்பட்ட குறியீட்டு அடையாளப்படுத்தல் மூலம் குறித்த காட்டலாம்.]

முடிவுரை
இலங்கை தீவினை பௌதீக, கலாச்சார மற்றும் தொழிற்பாட்டு அளவுகோல் களை அடிப்படையாகக் கொண்டு தெளிவா முறைசார் பிராந்தியங்களாக வகைப்படுத்த முடியும். இவ் பிராந்திய மயமாக்கமானது நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒவ்வொரு பிரதேசத்தின் தனித்துவத்தையும் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றது. நில அமைப்பு, காலநிலை மற்றும் கடல் மட்டத்திலிருந்தான உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய மலைநாடு, தாழ்நில சமவெளி, கடலோர வலயங்கள் எனும் பௌதீக பிராந்தியங்களை

அடையாளப் படுத்தலாம். அதேபோல், மொழி, மதம் மற்றும் இன அடையாளங்கள் அடிப்படையில் சிங்கள – பௌத்தப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு தமிழர் பிரதேசம் போன்ற கலாச்சார பிராந்தியங்களை அடையாளப் படுத்தலாம். வர்த்தகம், நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற தொடர்புகளின் அடிப்படையில் கொழும்பு பெருநகரப் பிராந்தியம் மற்றும் மகாவலி அபிவிருத்தி வலயம் போன்ற தொழிற்பாட்டுப் பிராந்தியங்களையும் இனம் காணலாம். இம்முறைசார் பிராந்தியமயமாக்கல் கல்வி, நிர்வாகம், வள முகாமைத்துவம் , கலாச்சாரப் புரிந்துணர்வு மற்றும் சமச்சீர் அபிவிருத்தி ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவும்.



Post Top Ad

My Instagram