கேள்வி 5: ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்த அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டத்தை விளக்கி, இக் கண்ணோட்டம் சுகாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிவர்த்தி செய்கிறது எனக் கூறுக.
அறிமுகம்
மருத்துவ சமூகவியலில் அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டமானது, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை தொடர்பில் பொருளாதார முறைமைகள், சமூக வர்க்க அமைவுகள், அரசியல் கட்டமைப்புகள் என்பன எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்கிறது. அரசியல்-பொருளாதார அணுகுமுறையானது சுகாதாரத்தை அதிகாரம், செல்வம், தொழில் நிலைமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ள ஒன்றாக நோக்குகின்றது. மார்க்சிய சிந்தனைகளிலிருந்து தோற்றம் கொண்ட இக் கண்ணோட்டமானது, முதலாளித்துவ முறைமையின் கீழ் நோய் நிலையானது சமூகம் முழுவதும் பரவிய ஒன்றாக இல்லாத போதும் கூட, ஒட்டுமொத்த பொருளாதார ஒழுங்கமைப்பையும் பாதிக்கக் கூடியதாக காணப்படுகின்றமையை எடுத்துக் காட்டுகின்றது. அவ்வகையில் இக்கண்ணோட்டமானது சுகாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைப்பதற்கும், அதற்கமைந்த சமூக சீர்திருத்தங்களைக் கோருவதற்குமான சிறப்பானதொரு அணுகுமுறையாகக் காணப்படுகின்றது.
அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மைய உள்ளடக்கம்
1. ஆரோக்கியம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உருவாக்கப் படுகிறது
இக் கண்ணோட்டம், சுகாதாரத்தைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அல்லது உடலின் உயிரியல் நிலைமைகளின் விளைவாக அமைவதாக மாத்திரம் நோக்காது, ஒருவர் சார்ந்துள்ள வர்க்க நிலை, பணிச்சூழல், வாழ்வியல் நிலைமைகள் என்பவற்றின் விளைவாகவும் நோக்குகின்றது. எடுத்துக் காட்டாக, பித்தளை பொருள் தயாரிப்பு தொழில் செய்யும் ஒருவர் அல்லது இராசாயண புகை வெளிவரும் தொழிற்சாலையில் பணி செய்யும் ஒருவர், அலுவலக பணியில் ஈடுபடும் ஒருவரை விடவும் அதிக உடல்நல அபாயங்களை எதிர்கொள்பவராகக் காணப்படுவார்.
2. முதலாளித்துவ முறைமையில் சுகாதார சேவைகள் வர்த்தக பண்டமாக்கப்படல்
முதலாளித்துவ சமூக அமைப்பில் ஏனைய பண்டங்களைப் போலவே, சுகாதார சேவைகளும் பணத்திற்காகப் பரிவர்தனை செய்யப்படும் வர்த்தக பண்டமாக்கப்படுவதால், பணக்காரர்களால் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளைப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள இயலும். ஆனால், ஏழைகளால் அநேகமான சந்தர்ப்பங்களில் தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளை பெற இயலாது போகின்றது, அல்லது, அவை கிடைக்காமலேயே போய் விடுகின்றது. மேலும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும், தனியார் வைத்தியசாலைகளும் இலாபமீட்டுவதனையே முதன்மையானதாகக் கொண்டு செயற்படுகின்றன.
3. தொழிலாளர் நிலைமைகள் மற்றும் வர்க்க சமத்துவமின்மை
கீழ்வர்க்க அடுக்கினை சேர்ந்தவர்கள் ஈடுபடும் தொழில்கள் அநேகமாக நீண்ட நேர உடல் உழைப்பு, மனஅழுத்தம், பாதுகாப்பற்ற பணிச்சூழல் போன்ற மோசமான தொழில் நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமைகள் அவர்கள்; நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்படுவதால், காயங்களுக்கும் மனவழுத்தத்துக்கும் ஆளாதல் போன்ற பாதிப்புகளை அதிகளவில் ஏற்படுத்துகின்றன. மேலும், முறைசாரா தொழில்களில் ஈடுபடுவார்கள் தொழில் பாதுகாப்பையோ, காப்பீடுகளையோ பெறுவதும் இல்லை.
4. உலகளாவிய சுகாதார சமத்துவமின்மை
சர்வதேச அளவில் வறுமையான நாடுகள் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையோ, நிதிவசதிகளையோ கொண்டிருப்பதில்லை. பணக்கார நாடுகள் மருத்துவ ஆய்வுகள், நோய்த்தடுப்பு மருந்துகள், மருத்துவம் சார் வர்த்தக பரிவர்த்தனை என்பவற்றில் மேலாதிக்கம் செலுத்துகின்றமையால்;, வறுமையான நாடுகள் அந்நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
சுகாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளும் அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டமும்
அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டம் சுகாதார சேவைகளும் அதன் பலாபலன்களும் சமூகத்தில் அனைவருக்கும் போதுமான அளவில் கிடைக்காமைக்கும், அவை சமத்துவமற்ற முறையில் பரவிக் காணப்படுவதற்குமான தெளிவான விளக்கங்களைத் தருகிறது.
1. போதுமான வளங்கள் கிடைக்காமை
பின்தங்கிய சமூகப் பொருளாதார வகுப்பைச் சேர்ந்த மக்களுக்குப் போசாக்கான உணவு, சுத்தமான நீர், பாதுகாப்பான வீடு என்பனவும், தரமான சுகாதார சேவைகளும் கிடைப்பது சவாலானதாகக் காணப்படுகின்றது.. இந்தக் குறைபாடுகள் நோய் நிலை ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகின்றது.
2. சுகாதார பராமரிப்பு சேவைகள் அனைத்து இடங்களிலும் சமமான அளவில் காணப்படாமை
பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகள் காணப்படுகின்றன. பின்தங்கிய பிரதேசங்களில் அடிப்படை சுகாதார வசதிகளுக்குக் கூட பற்றாக்குறை காணப்படுகின்றது. இல்லை. இதனால், மக்கள் தாம் சார்ந்துள்ள வர்க்கம் மற்றும் புவியியல் வசிப்பிடம் அடிப்படையில் அச்சமத்துவத்தை எதிர்கொள்கின்றார்கள்.
3. தனியார்மயமாக்கல்
பல நாடுகளில் தனியார் மருத்துவமனைகளின் தோற்றம் காரணமாக, பணக்காரர்களுக்கு உயர்தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளும், ஏனையவர்களுக்கு நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கும் பொதுத்துறை சுகாதார சேவைகள் என அமைந்த இரட்டை முறைமை ஏற்பட்டுள்ளது. இது சமூகத்தில் சுகாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகப்படுத்துகின்றது.
4. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான இரட்டைச் சுமை
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்கள், வீட்டுப்பணி மற்றும் கூலி உழைப்பு என இரட்டைச் சுமையை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. அதேபோல் இன சிறுபான்மையினரும் மீதும் சுகாதார அமைப்பில் பாகுபாடு அல்லது புறக்கணிப்பு நிகழ்த்தப்படும் போது இரட்டை சுமையை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இலங்கை மற்றும் தெற்காசியா சூழலிலிருந்து எடுத்துக்காட்டுகள்
1. இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
பெரும்பாலும் விளிம்புநிலை சமூகங்களாக அடையாளப்படுத்தப்படும் இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளின் பெருந்தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்ட மக்கள், ஏனைய பிரதேச மக்களை விட, நெரிசலான வீடுகளிலும், மருத்துவ சேவைகளை அணுகும் வசதிகள் குறைவாகக் கொண்ட நிலைமைகளிலுமே வாழ்கின்றார்கள். மேலும், அவர்களது பணியிலும் உடல் ரீதியான பாதிப்புக்கள், பூச்சிக் கடிகளுக்கு ஆளாகுதல் மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்ற நிலைமைகளை எதிர்கொள்கின்றார்கள். இது நாட்பட்ட சுகாதார பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகின்றது.
2. சுகாதாரத் துறையை தனியார்மயமாக்குதல்
மருத்துவ சேவை தனியார் மயமாக்கப்படுவதால், இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலர், அதிக செலவீனங்களை எதிர்கொள்ள இயலாமல் மருத்துவச் சிகிச்சைகளைத் தவிர்க்கின்றனர் அல்லது தாமதப் படுத்துகின்றனர், மேலும், பொதுத்துறை மருத்துவமனைகள் அதிக சனநெரிசலும், வளப்பற்றாக்குறையும் கொண்டதாக இயங்குகின்றன. இதன் காரணமாகச் சமமானதும் , போதுமானதுமான சுகாதார பராமரிப்பு சேவைகள் பணவசதி அற்றவர்களுக்குக் கிட்டாமல் போகின்றது.
3. கோவிட்-19 பெருந்தொற்று நிலைமை
கொவிட் பெருந்தொற்று காலம் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் சுகாதார விடயங்களில் ஏற்படுத்தியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்து எடுத்துக்காட்டியது. ஊரடங்கு காலங்களில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தனர் எனினும், தினசரி கூலி பெறும் உழைப்பாளர்கள் தமது வருமான மார்க்கங்களை இழந்தார்கள். இவ் பொருளாதார நெருக்கடியின் காரணமாக முகக்கவசம், கிருமிநாசினி போன்ற நோய்த் தடுப்புப் சாதனங்களைக் கொள்வனவு செய்ய இயலாத நிலையை எதிர்நோக்கினார்கள்.
4. மருந்து உற்பத்தியாளர்களின் ஆதிக்கம்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த மருந்து உற்பத்திகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கின்றன. டெங்கு அல்லது காசநோய் போன்ற நோய்களுக்கான குறைவான இலாபத்தைப் பெற்றுத் தரக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நோய்கள் பெரும்பாலும் பின்தங்கிய வறிய மக்களைத் தாக்குவதால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டத்தின் சாதகமான அம்சங்கள்
• சுகாதார பிரச்சினைகளை அரசியல் பிரச்சினையாக நோக்குதல்
அரசியல் - பொருளாதார கண்ணோட்டமானது சுகாதாரத்தைத் தனிநபர்கள் சார்ந்த பிரச்சினையாக நோக்குவதை எதிர்த்து, அதனை அரசியல் தீர்மானங்களால் ஏற்படும் பிரச்சினையாக நோக்குகின்றது.
• சமூக முறைமை மாற்றத்தைக் கோருகின்றமை
பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்;டு தனிநபர் நடத்தை மாற்றத்தை மாத்திரம் முன்மொழியாது, நியாயமான ஊதியம், தொழில் நிலைமைகளில் மேம்பாடு, சுகாதார வசதிகளின் அதிகரிப்பு போன்ற பரந்தளவிலான சமூக மாற்றத்தையும் கோருகின்றது.
• பிரச்சினைகளுக்கான அடிப்படை மூல காரணத்தை இனங் காண்கின்றமை
மோசமான சுகாதார நிலைமைகளுக்குத் தனிநபர்களின் நடத்தைகளைக் காரணமாகக் குறிப்பிடாமல், வறுமை, மோசமான வாழ்விட நிலைமைகள், பாதுகாப்பற்ற பணிச்சூழல், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமூக காரணிகளை மூலகாரணமாக இனங்கண்டு, அவற்றைச் சரி செய்வதை அரசியல் - பொருளாதார கண்ணோட்டம் முன்வைக்கின்றது.
• நியாயமானதும் சமமானதுமான சுகாதார சேவை கொள்கைகளை ஊக்குவிக்கின்றமை
உலகளாவிய ரீதியில் சுகாதார பராமரிப்பு கொள்கைகள், தொழிலாளர்களின் மேம்பட்ட பாதுகாப்பு, நியாயமான வகையில் சுகாதார சேவைகள் கிடைக்கின்றமை என்பவற்றை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக வருமானம், அந்தஸ்து என்பவற்றைக் கடந்து நியாயமான சுகாதார சேவைகளைப் பெற இயலும்.
முடிவுரை
அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டமானது, சுகாதாரத்தை வெறும் உயிரியல் சார்ந்த விடயமாக அல்லாமல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ளுவதற்கான அடிப்படையைத் தருகின்றது. அதாவது முதலாளித்துவம், வர்க்க அமைவு, ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை கருத்திலெடுத்து, குறிப்பிட்ட தரப்பு மக்கள் மோசமான சுகாதார பராமரிப்பு சேவைகளை அனுபவிப்பதற்கான காரணங்களை விளக்குகின்றது. அவ்வகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாகத் தெரியக் கூடிய இலங்கை போன்ற நாடுகளில், ஏழைகள், பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரதேச மக்கள் அதிகளவில் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கான காரணங்களை இக்கண்ணோட்டம் வெளிப்படுத்துகின்றது. அவ்வாறாக, சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு, சிறந்த மருத்துவமனைகளுடன், நியாயமான பொருளாதார அமைப்புகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் சுகாதாரத் துறையில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான அரசியல் முன்னெடுப்பு ஆகியவற்றின் அவசியப்பாட்டை அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டம் கோடிட்டுக் காட்டுகின்றது.
No comments:
Post a Comment