கேள்வி 8: மருத்துவர் - நோயாளர் உறவின் சமூகவியல் முக்கியத்துவத்தை ஆராய்க.
அறிமுகம்
மருத்துவர்-நோயாளி உறவானது சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற மிக மையமான இடைத் தொடர்புகளில் ஒன்றாகும். இது பொதுவான முறையில் அறிவார்ந்த மருத்துவருக்கும் நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளருக்கும் இடையிலான மருத்துவ ரீதியிலான பரிமாற்றமாக நோக்கப்படுகின்றது. எனினும், சமூகவியலில் இவ் உறவானது அதிகாரம், தொடர்பாடல், நம்பகத்தன்மை, கலாச்சார நெறிமுறைகள் என்பவற்றால்; ஆளப்படும், சமூக இடைத்தொடர்பாக நோக்கப்படுகின்றது. மருத்துவர்களும் நோயாளர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதமானது நோயைக் கண்டறிதல், சிகிச்சை தொடர்பில்hன தீர்மானமெடுத்தல், நோயாளரின் சேவை திருப்தி,; சுகாதார பிரதி பலன்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, இவ் உறவினை சமூகவியல் நோக்கில் விளங்கிக்கொள்வதானது, சுகாதார பராமரிப்பு சேவையில் நிலவும் பரந்துபட்ட அதிகாரத்தின் இயங்கியலையும், அதனால் வெவ்வேறு சமூகக் குழுக்கள் பாதிக்கப்படும் விதத்தினையும் புரிந்துக் கொள்வதற்கு வழிவகுப்பதாக அமையும்.
மருத்துவர்-நோயாளர் உறவின் தன்மை
மருத்துவருக்கும் நோயாளருக்கும் இடையிலான உறவானது பாரம்பரிய ரீதியாகவே சமனிலை தன்மையற்ற, ஒருபக்க சார்பு கொண்டதாகவே காணப்படுகின்றது. அதாவது, மருத்துவரானவர் சிறப்பான அறிவையும், அதிகாரத்தையும் கொண்டிருப்பவராகவும், நோயாளர் வெறுமனே எதிர்வினையற்ற, சுகாதார பாரமரிப்பை பெற்றுக் கொள்ளும் சார்புத்தன்மை கொண்டவராகவும் இருக்கின்றார்கள். இங்கு மருத்துவர் அறிவுறுத்தல்களை வழங்குபவராகவும், நோயாளர் கேள்விகள் இன்றி அவற்றைப் பின்பற்றுபவராகவும் இருப்பர்.
எனினும், அண்மைய காலங்களில், இந்நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. நோயாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி மருத்துவர் - நோயாளர் உறவுமுறை நகர்ந்து வருகின்றது. இதன் காரணமாக நோயாளர்கள் சிகிச்சை தொடர்பான முடிவெடுத்தல்களில் பங்கெடுக்கவும், அது தொடர்பான கேள்விகளை கேட்கவும், தமது கரிசனைகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறானதொரு சாதகமான மாற்றம் நிகழ்ந்து வருகின்ற போதிலும், சமூக ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார நெறிமுறைகள், நிறுவன கட்டமைப்புகளின் தாக்கம் என்பன காரணமாக போதுமான முன்னேற்றத்தை அடையவில்லை.
மருத்துவர் - நோயாளர் உறவு தொடர்பான சமூகவியல் கண்ணோட்டங்கள்
1. குறியீட்டு இடைத்தொடர்புவாதம்
இந்தக் கண்ணோட்டம் மருத்துவருக்கும் நோயாளருக்கும் இடையிலான இடைத்தொடர்பை மிக நுணுக்கமாகக் கவனம் செலுத்தி வடிவமைக்கின்றது. நோயாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நிலையை சரிவர புரிந்துக்கொள்வதானது, அவர்களுடனான தொடர்பாடலின் போது மருத்துவர்களள் பயன்படுத்தும் வார்த்தைகள், கைக்கொள்ளும் தொனி, வெளிப்படுத்தும் சைகைகள், முகபாவனைகள்; என்பவற்றினால் தாக்கத்திற்கு உள்ளாகின்றது.
மரியாதையாக உரையாடுதல், கவனத்தை வெளிப்படுத்திச் செவிமடுத்தல் என்பவற்றின் மூலமாக மருத்துவரால், நோயாளரை தன்மதிப்பும், சுயகௌரவமும் கொண்டவராக உணரச் செய்ய இயலும். அவ்வாறில்லாத, அவசரகதியிலான, சிரத்தையற்ற தொடர்பாடல் முறையினால் தவறான புரிதல்கள் ஏற்படலும், நோயாளர் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்படுதலும் நிகழும்.
2. (மிக்கேல் ஃபூக்கோவின்) பின்நவீனத்துவ கோட்பாடு
பின்நவீனத்துவ கோட்பாடானது மருத்துவர்களை வெறுமனே நோய்நிலையை குணப்படுத்துபவர்களாக மாத்திரம் கருதாது, மனித வாழ்க்கை மீதும், மனிதர்களின் உடல்கள் மீதும் அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பவர்களாகவும் பார்க்கின்றது.; ஒருவர் சுகாதார ரீதியாகச் சாதாரணமான நிலையில் இருக்கின்றாரா அல்லது அசாதாரணமான நிலையில் இருக்கின்றாரா என்பதை வரையறுப்பது மூலம் மனித உடல்கள் மீது தமது அதிகாரத்தை நடைமுறைப்படுத்துகின்றார்கள். மேலும், பரிசோதித்தல், தொடர்ச்சியான கண்காணித்தல், மருத்துவ அறிக்கைகளை ஆராய்தல் மூலமாக நோயாளர்களைக் கவனித்து ஒழுங்குபடுத்துவது காரணமாக, மருத்துவர் – நோயாளர் உறவானது விஞ்ஞான ரீதியானதாகவும், குறியீட்டு ரீதியானதாகவும் அமைகின்றது.
3. பெண்ணிய மற்றும் முரண்பாட்டுவாத கோட்பாடுகள்
இக் கண்ணோட்டங்கள் பாலினம், வர்க்கம், சாதி,; இனம் ஆகியவை மருத்துவர் - நோயாளர் இடைத்தொடர்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, பெண்கள் ஆண் மருத்துவர்களுடன் இனப்பெருக்கம் தொடர்புபட்ட சுகாதார விடயங்களை உரையாடுவதற்குச் சங்கடமாக உணரலாம். அதேபோல் பொதுத்துறை சுகாதார சேவைகளில் ஒடுக்கப்பட்ட சாதிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோயாளிகள் குறைவான கவனிப்பைப் பெறலாம்;.
மருத்துவர் - நோயாளர் உறவில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
1. தொடர்பாடல்
நம்பகத் தன்மையையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு வினைத்திறனான தொடர்பாடலில் ஈடுபடுவது முக்கியமானதாகும். நிலைமைகளைத் தெளிவாக விளக்குதல்;, மிக எளிமையான மொழிநடையைப் பயன்படுத்தல், தீர்மானம் எடுப்பதில் நோயாளர்களையும் பங்கெடுக்கச் செய்தல் மூலமாகச் சிகிச்சை நோக்கில் வலுவான மருத்துவர் – நோயாளர் உறவினை ஏற்படுத்த இயலும்.
2. கலாச்சார உணர்திறன்
சிறந்த மருத்துவர் - நோயாளர் உறவினை ஏற்படுத்த நோயாளரின் மதம், நம்பிக்கைகள், மொழி, பாலினம் சார்ந்த நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு அவசியமானதாகும். உதாரணமாக, தெற்காசியக் கலாச்சாரங்களை சேர்ந்த பெண் நோயாளர்கள் கலாச்சார அல்லது மத காரணங்களுக்காகப் பெண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதை விரும்பலாம்.
3. நம்பகத்தன்மையும் மரியாதையும்
அநேகமான நோயாளர்கள் தற்போதும் கூட மருத்துவர்களை அதிகாரம் படைத்த பிரமுகர்களாகவே பார்க்கிறார்கள், இதன் காரணமாக அவர்களிடம் கேள்விகளை எழுப்பத் தயக்கம் கொள்கின்றார்கள். இதனால் நோயாளரின் எண்ணங்கள் கேட்கப்படாது, அதிகார சமனிலையற்ற தன்மை உருவாக்கக்கூடும். அதேவேளை, பரஸ்பர மரியாதையும், சமத்துவமும் சிறந்த ஒத்துழைப்பிற்கு வழிவகுத்து சாதகமான நல்; விளைவுகளை ஏற்படுத்தும்.
4. நிறுவன கட்டமைப்புக்குள் உருவாகும் அழுத்தங்கள்
அதிக நோயாளர்கள், நிதி மற்றும் வளப் பற்றாக்குறையுடைய மருத்துவமனைகள், அதிக வேலைப்பளு போன்ற நிறுவன கட்டமைப்புக்குள் தோன்றும் அழுத்தங்கள் காரணமாக அர்த்தமுள்ள மருத்துவர் - நோயாளர் உறவை உருவாக்க மருத்துவர்களுக்கு நேரமோ வளமோ இல்லாமல் போகலாம். இது சுகாதார பராமரிப்பு சேவையின் தரத்தைக் குறைத்து, நோயாளர்களுக்குத் தாம புறக்கணிக்கப்பட்டதாக அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதான உணர்வை ஏற்படுத்திவிடலாம்.
இலங்கை சூழல் மருத்துவர் – நோயாளர் உறவு பாதிக்கப்படும் முறைகள்
இலங்கையில், மருத்துவர்-நோயாளர் உறவு பின்வருவனவற்றினால் பாதிக்கப்படுகிறது:
• மருத்துவமனைகளை அதிக நோயாளர்கள் அணுகுவதால், மருத்துவர்களுக்கு அதிகப்படியான நோயாளர்களைப் பார்வையிட நேர்கின்றது. இதன் காரணமாக அவசரமான சிகிச்சைகளும், வரையறுக்கப்பட்ட ரீதியான விளக்கங்களும் வழங்கப்படும் நிலைமை ஏற்படுகின்றது.• மருத்துவர்கள் மருத்துவ கலைச்சொற்களைப் பயன்படுத்துவதனால் அல்லது கேள்விகளைத் தவிர்ப்பதால் நோயாளர்கள் தாம் அவமரியாதை செய்யப்பட்டதாக உணரும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.• பின்தங்கிய பிரதேசங்களில் மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகள் காரணமாகத் தொடர்பாடல் இடைவெளிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.• தனியார் மருத்துவமனைகளில் தொடர்பாடல் முறைகளும், பராமரிப்பு சேவையின் தரமும் மேம்பாடுடையதாகக் காணப்பட்டாலும், அவை அதற்கான கொடுப்பனவுகளை செய்யக் கூடியவர்களுக்கே கிடைக்கக் கூடியதாகக் காணப்படுகின்றது.
மருத்துவர் - நோயாளர் உறவின் முக்கியத்துவம்
மருத்துவர் நோயாளர் உறவில் ஏற்படும் சிறு முன்னேற்றமும் மிகபரந்தளவிலான நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். ஏனெனில், இவ் உறவானது வினைத்திறனான சுகாதார பராமரிப்பு சேவைக்கான அடித்தளமாக அமைகின்றது. நோயாளர்கள் தமது பிரச்சினைகளைச் செவிமடுக்கப்படுவதையும், தாம் கௌரவமாக நடத்தப்படுவதையும் உணரும் போதே, மருத்துவர் மீதான நம்பகத்தன்மை உருவாகி, சிகிச்சைகளை செயலூக்கத்துடன் பின் தொடர்வார்கள். எனவே, வலுவான மருத்துவர் – நோயாளர் உறவானது கீழ்வரும் வகையில் முக்கியத்துத்துடையதாகின்றது.
• நோயாளர்கள் சிகிச்சைகளைப் பின்பற்றுவதையும், நோயாளரின் திருப்திகர நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது.• சரியான தகவல்களைத் துல்லியமாகப் பெற்றுக் கொள்ள இயலுமானதாக இருப்பதால், மருத்துவர்களால் மிகவும் சரியாக நோய்களை இனங்கண்டறிய முடியும்.• கடுமையான அல்லது நீண்டகால நோய் நிலைமைகளுக்கு ஆளாகும் போது ஏற்படக்கூடிய மனபதற்றம்ஃபதகளிப்பு( யுnஒநைவல) மற்றும் பயத்தைக் குறைவடையச் செய்கின்றது.• நோயாளர் வலுவூட்டலும், சுகாதாரம் தொடர்பான அறிவூட்டலும் ஊக்குவிக்கப் படுகின்றது.
மேற்கூறியதற்கு நேர்மாறாக, மோசமான மருத்துவர் – நோயாளர் உறவானது தவறான நோயறிதல், சிகிச்சை முறைகளில் இணக்கமின்மை மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைத்துறையில் நம்பிக்கையின்மை என்பவற்றுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாகச் சுகாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமான நிலையை அடையலாம். குறிப்பாக விளிம்பு நிலை சமூகங்களில் இதன் பாதகமான தாக்கம் அதிகரிக்கும்.
முடிவுரை
மருத்துவர் - நோயாளர் உறவானது வெறுமனே மருத்துவ ரீதியான பரிமாற்றம்(சுஒஉhயபெந) மாத்திரமாக அல்லாது, தொடர்பாடல், கலாச்சாரம், நம்பகத்தன்மை, அதிகாரம் என்பவற்றால் வடிவமைக்கப்பட்ட சமூகரீதியாகக் கட்டமைக்கப்பட்ட இடைத்தொடர்பாகவும் காணப்படுகின்றது. இவ் இடைத்தொடர்பின் தன்மையில் மொழி, பாலினம், வர்க்கம், ஸ்தாபன சூழல்கள் போன்ற காரணிகள் தாக்கம் செலுத்தும் விதத்தினை புரிந்து கொள்வதற்கு சமூகவியல் கண்ணோட்டங்கள் துணை புரிகின்றன. இதன் பிரகாரம் மருத்துவர் – நோயாளர் உறவை மேம்படுத்துவதற்கு, மருத்து திறன்கள் மாத்திரமல்லாது, கலாச்சார உணர்திறன், பரிந்துணர்வு (Empathy), சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான புரிதல் என்பனவும் அவசியமாகின்றது. அவ்வகையில் வினைத்திறனானதும், மனிதநேயமிக்கதுமான சுகாதார பாரமரிப்பு சேவையைக் கட்டியெழுப்புவதற்கு, கௌரமானதும், நோயாளர் மையநோக்குடையதுமான மருத்துவர் – நோயாளர் உறவு இன்றியமையாததாக காணப்படுகின்றது.


No comments:
Post a Comment